Monday, May 7, 2012

கவிதையானவளுக்கொரு கவிதை...!

வெள்ளைநிலா மாநிறமாய் மாறியமுகம்- விடி
வெள்ளியினை குங்குமமாய் தீட்டிய பொட்டும்
மடியினிலே எனைசாய்த்து மயங்கவைத்து- சிறு
மழலையினை கற்றுதரும் அவள் முத்தம்…!

குறும்புகள் ஓரக்கண்ணில் குதூகலிக்கும்
குறுநகையும் இதழோரம் கவிவடிக்கும்…!
கூந்தலிலே மல்லிகையும் குதித்தாடும்- அவள்
கூச்சமுமே எனைக்கொஞ்சம் கொலைசெய்யும்…!

இடியின்மீது எனக்கு பயமில்லை- அவள்
இடைமேல் பிழைப்பேனா தெரியவில்லை…!
வணங்கும் தேவியேயென் பத்தினியானபின்
படியேறி கோவிலுக்கு செல்லவுமில்லை…!

என் மகிழ்ச்சியை சிரிப்பாய்க் காட்டிடுவாள்
என் கவலையை கண்ணீராய் சிந்திடுவாள்
மனதிலே நானொன்றை நினைத்தேனானால்
மறுகணம் அதனை செய்துமுடிப்பாள்…!

என்னைவிட எனைமிக நேசிக்கும்- ஒரு
அன்னையை மனைவியாய் நான் பெற்றேன்
எண்ணங்களை எதிரொளிக்கும் கண்ணாடியாய்
எதிரிலே என்னுயிரை நான் கண்டேன்..!

No comments:

Post a Comment