Saturday, July 20, 2013

நடிகர் திலகத்தின் குறும்படம்

தற்செயலாக யூடியூப்பில் இந்த வீடியோவை பார்க்கமுடிந்தது. எப்படியும் 20 வருடங்களுக்கு முந்தையதாக இருக்கும். எயிட்ஸ் விழிப்புணர்வு பற்றிய ஒரு தொலைக்காட்சி விளம்பரம். கமலகாஸன், பிரபு போன்றோர் தோன்றுகின்றனர். எயிட்ஸ் பற்றிய பாதிப்பு மற்றும் அதிலிருந்து தப்பிக்க கையாளவேண்டிய தீர்வு போன்றதை நடிகர்கள் எடுத்துகூறுவதாக அமைந்த ஒரு வீடியோதான். ஆனால் இதை நாம் அனைவரும் பாரக்கவேண்டிய ஒரு வீடியோவாக மாற்றிச்சென்றவர் நம் நடிகர்திலகம். நரைத்த வயதிலும் அந்த கம்பீரம் குறையாமல் அவரைப் பார்க்க திகட்டவேயில்லை.

அந்த காலகட்டத்திற்கேயுண்டான தொழில்நுட்பம். அதில் ஒரு கதிரையில் அமர்ந்திருந்து மக்களுக்கு அறிவுரை சொல்வதாக ஒரு அமைப்பு. நடிகர் திலகத்தை விட யார் இதற்கு பொருத்தமாக இருக்கமுடியும்? அவரது காந்த கண்களில் தெரியும் அந்த பரவசம் ஏற்படுத்திய சிலிர்ப்பு அடங்க சற்று நேரமானது. ஒழுக்கத்தை பற்றி அவர் பேசியபோது தெரிந்த அந்த பெருமையும் புரிகிறதா என்று தலையாட்டிய விதமும் ஒரு வார்த்தைக்குள் அடக்கமுடியாத பிரம்மாண்டம். தமிழில் ஒழுக்கம் காத்த நிடகர்களில் முதன்மையானவர் என்பதை நாடறியும். நடிகர்திலகம் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தமிழர்களும் பார்ரகவேண்டிய ஒரு காட்சி. சாதாரண ஒரு எயிட்ஸ் விழிப்புணர்வு வீடியோ என்றில்லாமல் தமிழ்சினிமாவை ஹாலிவுட்டுக்கு கொண்ட சென்ற முதல் நடிகனின் கம்பீரத்தை பறைசாற்றும் ஒரு காணோளியாக பாருங்கள்.





Friday, July 19, 2013

எப்படி மனசுக்குள் வந்தாய்?

கல்நெஞ்சக்காரி, பிடிவாதக்காரி, எதற்கும் வளைஞ்சு கொடுக்காத திமிரு... இதல்லாம் எங்க போச்சு? காதலா? நிச்சயமா கூடவே கூடாதுனு வெறுத்த காதலா? அது எப்படி வரும்? ஏன் பொண்ணா பொறந்தா காதலிச்சுதான் ஆகணுமா? சகஜமா ஒரு பையன்கூட பேசக்கூடாதா? அதுவும் ஏன் எல்லா பசங்களுமே ஒரு பொண்ணு சிரிச்சு பேசினவுடனே காதல்னு நினைக்குறாங்க... ஒருவேளை எல்லா மீனுக்கும் தூண்டில் போட்டு பாப்போம், எது சிக்குதோ அத அறுத்தடலாம்ற திட்டமா? சஹானா நீ நல்லாதானே இருந்த.. இப்பிடி புலம்ப வச்சிட்டானே.

காலம். ஒரு நல்ல மருந்து, ஒரு நல்ல பள்ளிக்கூடம், புதுமைவிரும்பிகளின் முன்னோடி. எப்போதும் புதிய விடயங்களை தன்னுள் சேர்த்துக்கொண்டேயிருக்கும். எந்த சலசலப்பிற்கும் அஞ்சாது. எந்த கட்டுப்பாடும் அதற்கு கிடையாது. காற்றைப்போல காலமும் எத்தனை சுதந்திரமானது... அப்படிப்பட்ட காலத்தின் மாற்றத்திற்குள் உட்பட்டு புதுமைகளின் ரசிகையாகி இளமையின் கொண்டாட்டமே வாழ்வின் குறிக்கோளாய் வாழும் நான். என்னுடைய அடையாளம் நான்தான். சஹானா. யாரையும் பின்பற்றி நான் கருத்துக்களை உட்கொண்டதில்லை. எனக்கு என்ன தேவை எந்தளவு தேவை என்று நன்றாக உணர்ந்து அதில் மட்டுமே வாழ்ந்து எந்தவிதமான பிச்சல்பிடுங்கலும் இல்லாமல் அலையில்லா ஆற்றில் ஓடமென அமைதியான வாழ்க்கை.

எனக்கு என்ன தேவை, என்ன வரையறை, என்ன கருத்து அப்படின்ற என்னோட அளவுகோல்ல இடம்பொறாத முக்கிய வார்த்தை காதல். அட ஏன்பா காதலிக்குறீங்க? அத வீட்ல ஒத்துக்கொள்ளன்னதும் தற்கொலை. அதுவும் இதுக்காகவே பத்திரிக்கை நடத்துறமாதிரி அவனுக வேற இதே செய்தியா போட்டு கழுத்தறுப்பாங்க... சஹானா நீ எஸ்கேப்டி.. நல்ல வேளை தப்பிச்ச. ஏற்கனவே நல்லா போயிட்டுறுக்குற வாழ்க்கையில ஏதோ ஒன்னு குறையுதுன்னு சொல்லி காதலிக்கப்போனாலிப்ப ஒழுங்கா சாப்பிட்ற மாதிரி நல்லா தூங்குறமாதிரி எந்த விதமான பிரச்சினையும் இல்லாத மாதிரி வாழமுடியுமா? அதுவும் அம்மா அப்பாட செல்லப்பொண்ணுவேற. அவங்கள கலங்கவச்சு ஒரு காதல் தேவைதானா?

அதுக்காக எந்த பையனோடயும் பேசாத நட்புனா ஓடிப்போய் ஒழிஞ்சுக்கற டைப் இல்ல நான். எனக்கு எத்தனேயோ நண்பர்கள் இருக்காங்க.. நல்லா பேசுவாங்க. குடும்ப நலன், படிப்பு இதப்பத்தி பேசுறதோட சம்பாசனை முடிஞ்சுடும். ஆனா சில பேரு ரொம்ப ஆழமா நோட்டமிடுவாங்க. முக்கியமா முகப்புத்தகத்துல... ஹை, ஹலோனு ஆரம்பிப்பாங்க... சும்மா ஃப்ரண்ட்லியா பேசுவோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அவங்க சுயரூபம் தெரியவரும். அட அதாங்க... காதல் பண்றாங்களாம் காதல். சொல்லி பாப்பேன். ரொம்ப தொல்லை பண்ணா ஃப்ரண்ட் லிஸ்ட்ல இருந்து தூக்கிட்டு போய்ட்டே இருப்பேன். சஹானா.. என்ன மாதிரி தைரியசாலிடி நீ? அதுவும் இத்தனை பேர் இப்பிடி விழுந்து விழுந்து லவ் பண்ணியும் அசராம இருக்கியே.. ஐயோ நோபல் பரிசு கொடுக்குறவங்களுக்கு மட்டும் தெரிஞ்சா அடுத்தவருசம் நீதான்டி ஹைலைட்டு... எப்பிடியெல்லாம் கர்வமா இருந்தேன்... எல்லாம் போச்சே. கடவுளே அந்த படுபாவியோட ஏன்தான் பேசினேனோ?

ஒரு பொண்ணு அதுவும் அழகான பொண்ணுன்னா.. அட நம்புக்கப்பா.. அழகான பொண்ணுன்னா முகப்புத்தகத்துல ஏகப்பட்ட பேர் ரிகுவஸ்ட் கொடுப்பாங்க. அப்பிடி ஒருத்தனாத்தான் அவனையும் நினைச்சேன். விச்சு. விஸ்வநாதன். பேசினான். நானும் பேசினேன். ஒரு பையனோட சும்மா நாலுவார்த்தை பேசுறதுல என்ன உலகமா அழிஞ்சிடும்? அப்பிடி அழிஞ்சிடும்னா அழிஞ்சிட்டு போகட்டும். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சிறகுகளையும் கொடுத்து அதுக்கு பூட்டும் போட்டு வைப்பீங்க? என்னோட கருத்துக்கு நான் எப்பயும் மாறா நடக்கமாட்டேன். அதனால அவன்கூட பேசினேன். அவனோட முதல்தடவை பேசும்போது ரொம்ப பாவம் மாதிரி இருந்திச்சி. பொதுவா நான் எல்லாருக்கும் பாவம் பாப்பேன். நல்லா நண்பனா பேசிட்டு இருந்துட்டு திடீர்னு ஒருத்தன் காதலிக்குறேன்னு சொல்லுவான். கோபமா வரும். இருந்தாலும் பாவமா இருக்கும். எங்கூட பேசினதுல அவனுக்கு காதல் வந்தா அவன் என்ன பண்ணுவான். அதுக்காக எல்லாரையும் காதலிச்சிடமுடியுமா? சொல்லி சொல்லி கேட்காதவங்கள ரொம்ப கவலையோட ஃப்ரண்ட்ல இருந்து தூக்கிடுவேன். அப்பகூட அடச்சே எவ்ளோ பாவம். இனி எவ்ளோ நாள் இதுக்காக கவலைப்படபோறானோ அப்பிடினு தோணும். ஒருவேளை மத்தவங்கமேல பாவம் பாக்குறது பொண்ணுங்களோட இயற்கையோ என்னவோ...   

அட என்மேல எதுவும் தப்பில்லீங்க.. அந்த விச்சுதான். முதல்ல நல்லாத்தான் பேசினான். நானும் மத்த ஃப்ரண்ட்ஸுக்கு என்ன இடம் கொடுத்தேனோ அதே அளவுலதான் இவனோடயும் பேசினேன். அப்புறம் என்ன ஆச்சுனு தெரியில முழுநாளும் உன்னைப்பத்தியே நினைச்சிட்டு இருக்கேன்னு சொன்னான்... ஆஹா ஆரம்பிச்சட்டான்யா. இவனுகள திருத்தவே முடியாது. இவனும் உன்னை லவ் பண்றேன்னு வந்து சொல்லப்போறான். அட கடவுளே இன்னொன்னா? Block பண்ணவங்க லிஸ்ட்டு ஏற்கனவே தாறுமாறா ஏறிப்போய் இருக்கு. சரி இவனுக்கு சொல்லியாவது புரியவப்போம்னு நினைச்சு சூசகமா பேசினேன். ‘இங்க பாரு விச்சு, ஃபேஸ்புக்ல நல்ல ஃப்ரண்டா நினைச்சு நான் பேசின சிலபேரு லவ் பண்றதா சொல்லி என்னை ரொம்ப ஹர்ட் பண்றாங்க. நீயே சொல்லு விச்சு. ஃப்ரண்டா இருந்துட்டு இப்பிடி காதல் கீதல்னு சொல்லி நட்ப கேவலப்படுதலாமா?’ அவன்கிட்ட இருந்து அப்பிடி என்னதான் பதில் வரும்னு பாத்துட்டே இருந்தேன். அவன் என்னடான்னா ஏதோ ஒரு லிங்க் அனுப்பி படிக்கசொன்னான். மிருதங்கம் பிளாக்ல இருக்குற சௌபாக்யா அப்பிடின்ற கதை.. அதுவே ஒரு மொக்கை கதை. அதயேன் வாசிக்க குடுத்தான்னு கேட்க அதுல கடைசியில ஒரு வசனம் வரும் ‘நல்ல நண்பர்கள் காதலிச்சா அந்த காதல் தாய்மையோடயும் இருக்கும். தூய்மையோடயும் இருக்கும்’. ஒரு நண்பன் உன்னை காதலிச்சா அவன் எந்தளவு உன்னை சந்தோசமா வச்சிருக்கணும்னு ஆசைப்பட்றான்னு புரிஞ்சிக்கோ, உன்னோட நட்பு எந்த தடங்கலும் இல்லாம வாழ்நாள் முழுக்க அவனுக்கு கிடைக்கணும்னு அவன் ஆசைப்பட்றதுல என்ன தப்பு? அப்பிடி இப்படினு காதுல ரத்தம் வாற அளவுக்கு அறிவுரையா சொல்லி அறுத்துட்டான். உனக்கு தேவையா சஹானா இது? அவன் உன்னை லவ் பண்ணா பேசாம block பண்ணிட்டு போ.. இப்ப பாரு! யார் காது கிழிஞ்சுது?

ஆனாலும் அவனை பார்க்க ரொம்ப பாவமா இருக்கே.. இப்பிடித்தான் ஒருநாள் உனக்கு ஃபேஸ்புக்ல நிறைய ஃப்ரண்ட்ஸ் இருக்காங்களா? எல்லாரோடயும் பேசுவியானு கேட்டான். அவன் லவ்க்கு நான் இன்னும் ஓகேயே சொல்லல. அதுக்குள்ள சந்தேகமா? எப்பிடி கோபம் வந்திச்சு தெரியுமா.. அன்னிக்கு முழுக்க அவன்கூட போசவேயில்ல.. ஸாரி ஸாரினு ஆயிரம் மெசேஜ்.. நான் அத பாக்கவேயில்லயே.. ஆனா ரொம்ப பாவமா இருந்திச்சா.. இனி இப்பிடி பேசாதனு சொல்லி மன்னிச்சிட்டேன்.. ஆனா நானா மன்னிச்சேன்? எத்தனை ஆணழகன் வந்து நின்னாலும் மனசு மாறாத சஹானாவா? ஆனா அவன்கிட்ட ஒரு உண்மை இருக்கு.. அவன் குடும்ப போட்டோ, அவங்களப் பத்தின விவரம் நடந்தது, நடக்கிறது, நடக்கப்போறது எல்லாத்தையும் ஒண்ணுவிடாம சொல்லிட்டான் தெரியுமா? என்னைபத்தியும் கேட்டான்... என்னதான் இருந்தாலும் ஒரு பையனைப்போல ஒரு பொண்ணால குடும்ப விவரங்கள எல்லார்கிட்டயும் சொல்லமுடியுமா.. அப்பிடித்தானே நினைப்பீங்க.. அப்பிடித்தான் நானும் இருந்தேன். ஆனா இவங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்.

பார்க்கலாம்னு கூப்பிட்டான். அவன்மேல நம்பிக்கை இருந்திச்சு. இருந்தாலும் அது வேணாம்னு பட்டிச்சு. முடியாதுனு சென்னேன். ‘என்ன சஹானா இது? நீ எவ்ளோ முற்போக்கான தைரியமான துணிச்சலான பொண்ணு... இப்பிடி சாதாரணமா பார்க்குறதுக்கு பயப்புடுறியே? அப்ப உன் புரட்சிகரமான சிந்தனையெல்லாம் அவ்ளோதானா? எப்பிடியோ மடக்கிட்டான். பார்க்கபோனேன். முதல்சந்தப்பே முத்தான சந்திப்பானதே.. என்ன சஹானா கவிதையெல்லாம்.. நீயும் லவ் பண்றியானு பயமா இருந்திச்சு... அவன்கிட்ட நேரா சொல்லிட்டேன் என்னால லவ் எல்லாம் பண்ணமுடியாது வேணும்னா வீட்ட வந்து பேசுனு.. ஒரு பக்கம் ஓரமா சிரிச்சு சரின்னு சொன்னான். நான் எழும்பி வந்துட்டேன். போகும்போது ஒருக்கா திரும்ப பார்த்தேன் சும்மா ஸ்டைலா உட்கார்ந்துகிட்டு என்னையே பார்த்துட்டு இருந்தான். மொழி படத்துல வாற மாதிரி தலைக்கு மோல பல்ப் எரிஞ்சுசுங்க.. தூரத்துல ஏதோ சர்ச்சில மணி அடிக்குற சத்தமும் கேட்டிச்சு.. முதல்முறையா வெட்கப்பட்டு அங்க நிக்கமுடியாம வந்துட்டேன்.


அவனே வீட்ட வந்து பேசினான். அப்பா அம்மாக்கு சின்ன அதிர்ச்சிதான். ஆனா அவன் ஸ்மார்ட்டா பேசினவிதமும் என்னை எந்தளவுக்கு காதலிக்குறான்னு புரியவச்சதிலயும் ரெண்டு பேருமே ஓகே சொல்லிட்டாங்க. கடைசியில எல்லாமே சுபம். கல்யாணத்துக்கு மறக்காம வந்திடுங்க... ஆனா எனக்குத்தான் ஒண்ணு புரியல. நீ எப்பிடி சஹானா லவ் பண்ண? வாழைமரத்த சாய்க்கமுடியும் ஆலமரத்த சாய்க்கமுடியுமா? இப்பிடி காதல்ல மாட்டிகிட்டியே... அவன் என்னதான் செஞ்சான்? அப்பாவி மாதிரியே முகத்த வச்சு மயக்கிட்டானா? இத வச்சு வேற பொண்ணு மயங்கிட வாய்ப்பிருக்கு.. கவனம் சஹானா.. எவ்வளவு புத்திசாலியா இருந்த என்னை இப்பிடி பேதையாக்கிடிச்சே இந்த காதல். ஆனா ஒண்ணு.. தப்பி தவறிக்கூட இனி எவன் மேலயும் பாவம் பார்க்ககூடாது. எல்லாமே திருட்டுப் பசங்க...