Saturday, June 29, 2013

தெருவில் ஒரு சிறுவன்...

அதே அண்ணாச்சி கடை வாசலில் அவனை இன்றும் பார்த்தேன். கடந்தசில நாட்களைப்போலவே... ஒருவேளை அவனைப் பார்ப்பதற்காகத்தான் எனக்கு பிடிக்கவே பிடிக்காத மளிகை வாங்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறேனோ? இருக்கலாம். மகிழ்ச்சியாக ஓடி விளையாடி விரும்பியதை சாப்பிட்டு பஞ்சுமெத்தையில் பொசுபொசுவென்று முயல்குட்டிபோல போல கண்ணுறங்கும் குழந்தைகளைத்தான் நான் அதிகம் பார்த்திருக்கிறேன்... ஆனால் இவன்? இவனை வைத்து ஒரு கதை எழுதினால் என்ன....

சனங்களின் பரபரப்பிற்கு குறைவில்லாத அந்த சந்தையின் கோடியில் விசாலமான ஒரு மளிகைக்கடை.. அதன் இடதுபக்கமூலையில் ஒரு சுமாரான அளவுகொண்ட ஒருத்தருக்கு மட்டுமே நிழல்தரக்கூடியதாக நின்ற ஜாம் மரம்... அதன் கீழ் ஒரு சாக்கை விரித்துவிட்டு உட்கார்ந்துகொண்டு செருப்பு தைத்துக்கொண்டிருந்தான் ஒரு தொழிலாளி. பெயர்.... முருகேசன் என்று வைத்துக்கொள்வோம். முப்பதுகளின் இறுதியான தோற்றம். கறுத்த மெலிந்த தேகம். அவன்மேல் பாவப்பட்டாவது யாராவது செருப்புதைக்க வருவார்கள் என்பதான தோற்றம்... தினமும் கைக்கும் வாய்க்குமான சீவியம். மனைவி கண்ணம்மா... மகன்... குமார். மனைவியின் சிக்கனத்தால் ஒரு வேளையாவது உருப்படியாக சாப்பிடமுடிந்த வாழ்க்கை.

தினமும் காலையிலேயே தனக்கென்று ஆதரவுகாட்டும் அந்த மரத்தின் அடியில் மகன் குமாரையும் கூட்டிக்கொண்டு வந்து உட்கார்ந்து தொழிலை கவனிக்க துவங்கிவிடுவான் முருகேசன். பிஞ்ச செருப்போடு யாராவது வருவார்களா என்று பார்ப்பான். வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் குப்பைகளில் கண்டெடுத்த பழைய செருப்புகளை தைத்துக்கொண்டிருப்பான். எல்லா நாளுமே நல்ல கூட்டம் என்றாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையென்பதால் நிற்கக்கூட இடமின்றி சனம் அலைமோதும்... எப்போதாவது சிலவேளைகளில் யாருடைய செருப்பாவது பிய்யும். அப்போது நம் முருகேசன்தான் அவர்களுக்கு உற்றதுணை. சப்பாத்து போட்டுக்கொண்டு வருபவர்கள் குறைவு. அப்படி வந்தால் அவர்களும் பாலிஷ் போட்டுக்கொண்டு போவார்கள். வரும் வாடிக்கையாளர்களிடம் முகம் மலர்ந்து பேசும் வித்தையை மளிகை கடை அண்ணாச்சியிடம் கற்றுக்கொண்டான். அப்பதான் திரும்ப திரும்ப வாடிக்கையாளர்கள் வருவார்களாம்... இப்படி அப்பா செய்யும் வேலையை பக்கத்தில் இருந்து பார்த்து வருவான் குமார். சின்ன சின்ன பொருட்களை தூக்கி கொண்டு வர அவனையும் அழைத்து வருவார் முருகேசன். மதியம் கூட்டம் குறைந்த நேரத்தில் வீட்டில் இருந்து கொண்டு வந்த பழையசாதத்தை மகனுக்கு ஊட்டி தானும் உண்ணுவார். பிறகு மகனை அணைத்தபடி மரத்தடியில் ஒரு குட்டி சயனம். மாலை வேலை வந்தால் உண்டு... பொதுவாக வராது. இரவு வீடு சென்று என்ன இருக்கோ உண்டுவிட்டு தூங்கி மறுபடியும் காலையில் வழக்கம்போல...

குமாருக்கு அஞ்சு வயசிருக்கும். ஒரேயொரு பழைய காற்சட்டையோடு பரட்டைத்தலையோடு ஒட்டியவயிறும் எப்போதும் எதற்காகவாவது ஏங்கும் கண்களோடும் காட்சிதருவான் குமார். மெல்லியதடியின்மேல் இறுக்கமாக ஒரு துணியை சுற்றியதுபோல அவனது எலம்பும் தோலும் இருக்கும். பணக்கார பிள்ளைகளைப்போல யானைமேலும் குதிரைமேலும் ஏறியவன் இல்லை. ஆனால் அவர்களுக்கேகூட கிடைக்காத தந்தையின் தோள் எப்பயுமே இவனுக்காக இருக்கும். தந்தை லாவகமாக செருப்பு தைக்கும் வித்தை இவனுக்கு மிகவும் பிடிக்கும். கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பான். பிஞ்சுபோய் நாறு நாறாக வந்த செருப்பை மந்திரவாதி மாயக்கோலை வைத்து மேஜிக் செய்வதைப்போல இவர் ஒரு ஊசியை வைத்து அழகிய செருப்பாய் மாற்றுவது அவனைப்பொருத்தவரை யாராலும் அசைக்கமுடியாத சாதனை. ஆனால் தன் மகனும் தன்னைப்போல சாலையோர தொழிலாளியாக கூடாதென்று கவனமாக இருந்தார் முருகேசன். அதுவும் ஒருதடவை தெருவில் நடந்துபோகும் பள்ளிச்சீருடை அணிந்த பிள்ளைகளை ஏக்கத்தோடு பார்த்தான் குமார். தன் வயதுப் பிள்ளைகளைப்போல உள்ளார்கள். ஆனால் அவர்கள் அப்பாவோடு வேலைக்குபோகாமல் பையை சுமந்துகொண்டு வெள்ளையுடையுடன் சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியாக போகிறார்கள். அந்த பார்வை முருகேசனை உலுக்கியெடுத்தது. மற்றபிள்ளைகளிலிருந்து தன் மகன் அந்நியமாக உணருகிறானா? எப்படியும் அடுத்தவருசம் தன் பிள்ளையை பள்ளிக்கூடம் சேர்க்கவேண்டுமென்றும் அவனும் புத்தகப்பையை தூக்கிக்கொண்டு பள்ளிச்சீருடையில் செல்லவேண்டுமென்றும் மனத்திரையில் படம் ஓட்டிப்பார்த்தார். தன் கனவு நனவாகும் காலத்திற்காக கடுமையாக உழைக்க உறுதிபூண்டார்.

கருத்தும் கடுமையான உழைப்பும் இருந்தால் மட்டும் போதுமா? காலம் வரவேண்டாமா? ஓட்டுக்குடிலில் காலைநீட்டிப் படுக்கவே இயலாத சூழ்நிலையில் பணமாய்ப் போன படிப்பை அவ்வளவு இலகுவில் ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளியின் மகனால் அடையமுடியுமா? ஆனால் முயற்சி எடுத்துத்தான் பார்ப்போமே.. கடலையடைய முயற்சித்து ஒரு ஆற்றையாவது கடக்கமுடியாதா? சாக்கடையோடும் தெருவில் குத்தாட்டம் போடும் நுளம்புகளுக்கு மத்தியில் மழைவந்தால் முழுகிப்போகும் குடிசையில் விமோசனத்துக்காக ஏங்கும் ஒரு வறியவன், புயல்வேகத்தில் பாயும் விலைவாசியை நத்தைபோல் முன்னேறும் வருமானத்தைக்கொண்டு எதிர்கொள்வதே மரணப்போராட்டம். இதில் மகனின் படிப்பு? தினமும் இரவில் படுக்க விடாது சிந்திக்கவைக்கும் யோசனை... ஓலைகளின் விரிசல்களின் வழியே ஒழுகும் மழைநீருக்கும் மின்சாரம் இல்லாத குடிசையின் மிரட்டும் இருளுக்கும் நடுவே கண்ணம்மாவை இடப்புறமும் குமாரை வலப்புறமும் கையால் அணைத்தபடி குளிரில் நடுங்கும்பொழுதும் இராப்பொழுது பட்டினி என்பதைக்கூட கருதாது குமாரைப் படிக்கவைத்தால் இந்த நிலை மாறிவிடும் என்று முருகேசனின் எண்ணம் மட்டும் ஒளிர்ந்துகொண்டிருந்தது.

ஆனால் சித்திரம் வரைய சுவரை அழகுபடுத்திக்கொண்டிருக்கும்போது புல்டோசரை வைத்து சுவரை இடித்ததுபோல இருந்தது அந்த சம்பவம். குமார் என்ற ஒரு சிறுவன்... வறுமையின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் காணாமல் போன எத்தனையோ சிறுவர்களின் பிரதிநிதி... பஞ்சத்தின் முகத்தைகிழித்து படிப்பைநோக்கி ஓடும்போது கல்தடுக்கி கீழேவிழுந்ததுபோல, என்ன ஒரு கலவரமோ தெரியல... யார் யாரோட சண்டை பிடிச்சாங்க? ஆமா அருவாள்கள் சீவ கைகால்கள் துண்டிக்கப்பட தலைகள் தெருவில் உருண்டோட இன்னும் எத்தனையோ.. ஓடிப்பிடிச்சு வீளையாடும்போது இப்படி கத்தியால வெட்டுவாங்களா? ரத்தம் வருமா? குமாருக்கு அழுகை அழுகையாக வந்தது... அவனது தந்தையை இறுக்கமாக கட்டிக்கொண்டான். முருகேசனும் யாரும் தங்களைப் பார்த்துவிடக்கூடாதென்பதற்காக ஒரு சிற் ஒடுக்கில் மகனை இறுக்கி பிடித்தபடி ஒளிந்துகொண்டிருந்தான்... எவனுக்கும் எவனுக்குமோ பகை.. அதனால் சண்டை கலவரம் எல்லாம், அதுக்கேண்டா அப்பாவி மக்களை கொல்றீங்க? கண்ணீர் தாரைதாரையாக கொட்ட மூச்சு சத்தம் கேட்கக்கூடாதென்பதற்காக தனது மூக்கையும் மகனின் மூக்கையும் இறுக்கி பொத்தியபடி அந்த இடுக்கிலேயே பதுங்கியிருந்தான். எத்தனை நேரம் இருந்தான் என்று தெரியவில்லை... கலவரம் அடங்கியதா? அதுவும் தெரியவில்லை... மகனை தோளில் போட்டுக்கொண்டு லேசாக வெளியே தலையை எட்டிப்பார்த்தான். ஆ..ஆ...ஆ... யாரும் இல்லை. இப்படியே ஓடிவிடலாம். அதோ அந்தப்பக்கம். அப்படியே போனால்க்கூட வீட்டை அடைய நேரமாகுமே, கண்கள் சொருக புத்தி மயங்க என்ன செய்வதென்று தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தான்.  முதுகில் தொத்திக்கொண்டிருந்த குமாரும் என்ன காரணம் என்றே தெரியாமல் அழுதுகொண்டேயிருந்தான்.

ஆ.. அங்கே போலீஸ், அவர்களிடம் போனால் என்ன? ஆனால் அவர்களோ கலவரக்காரர்களை காட்டுமிராண்டிகளைப்போல அடிக்கிறார்களே? நாம் போனால் என்ன என்று சிந்திக்கும்போதே பின்னால் இருந்து ஒரு பலத்த அடி... ஒரு போலீஸ். இவனையும் கலவரக்காரன் என்று நினைத்து கழுத்தை பிடித்து இழுத்துக்கொண்டு போகும் அந்த காவலாளியிடம் காலில் விழுந்து அழுதுபுரண்டு கெஞ்சிகேட்டும் அவர்கள் காதில் விழுந்ததாய் தெரியவில்லை. கலவரத்தில் கைதுசெய்தோம் என்று கணக்கு காட்ட ஆள் தேவையோ தெரியவில்லை. ஆனால் அங்கே அழுதுகொண்டிருக்கும் ஒரு சிறுவனின் கண்ணீரை துடைக்க கைவிரல் யார் தருவார்? இயலாமையின் உச்சத்தில் குறுகி கழிவிரக்கத்துடன் தூரத்தில் அழுதுகொண்டிருக்கும் குமாரை கண்ணீருடன் பார்த்துகொண்டிருக்கும்போது போலீஸ் அவனை வண்டியில் ஏற்றினார்கள்...

சாப்பிட்டு எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை... தான் என்றாலும் பரவாயில்லை இந்த பிஞ்சு பாலன் என்ன செய்வான் என்று நினைக்கையில் நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது கண்ணம்மாவிற்கு. முருகேசனை எப்போ விடுவார்கள்? யாரைப்பார்ப்பது? ஒன்றும்புரியாமல் அடுத்தது என்ன என்பது சூன்யமான நிலையில் புரியாமல் அவள் இருக்க கையில் செருப்புதைக்கும் ஆணியை எடுத்தான் குமார்.

அதே அண்ணாச்சி கடை மூலை... அதே மரத்தடி... முருகேசன் இருந்த இடத்தில் இப்போது ஏழுவயது குமார். தந்தையின் திறமையை அருகில் இருந்து கண்கூடாக பார்த்த பலன் அவனையும் ஒரு திறமையான செருப்புத்தைக்கும் தொழிலாளியாக்கியது. அதே ஒருவேளை சாப்பாடு.. கைக்கும் வாய்க்குமான சீவியம். சுமாரான வாடிக்கையாளர்கள். தெரிந்ததை செய்து தன் தாய்க்கு உணவளித்தான் ஒரு சிறுவன்.. படித்து ஒரு கணக்காளனாகவோ கணனிதுறை வல்லுனனாகவோ வரவேண்டிய ஒரு எதிர்காலத்தை ஷூ பாலிஸுடனும் செருப்புதைக்கும் ஆணியுடனும் கழிக்கவைத்த ஒரு சமூகம். அடுத்தவர்களைப் பற்றி யோசிக்காமல் தங்கள் ஆத்திரத்தை போக்கிக்கொண்ட கலவரக்காரர்கள், அதிகாரம் கையில் இருந்தால் தாங்கள் செய்வது அனைத்தும் சரி என்று இறுமாறும் காவலாளிகள், ஏழைக்குழந்தைகள் படிக்கவேண்டுமென்று பேட்டி மட்டும் கொடுத்துவிட்டு அதற்கு பிரயத்தனம் எடுக்காத பிரபலங்கள் என அனைவருமே இதற்கு காரணம். நீங்கள் இந்த சம்பவத்தில் எந்த இடம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.




                        
‘தெருவில் ஒரு சிறுவன் எப்பிடி இருக்கு தலைப்பு?’

‘நல்லா இருக்குங்க.. ஆனா எதுக்கு?’

‘அட இப்ப நாம செருப்பு தைச்சுட்டு வந்தோம்ல.. அந்த பையனோட கதைய எழுதப்போறேன்டி.. அவனை ஒரு மாசமா பாத்து உணர்ந்து அப்பிடியே உள்ளுக்குள போய் அனுபவச்சு எழுதப்போறன்... இதைபடிக்குறவங்களுக்கு சாட்டையடியா இருக்கணும், அந்த பையனுக்கும் ஒரு நல்ல வாழ்வு கிடைக்கும்ல’

‘எப்படி நல்ல வாழ்வு கிடைக்கும்’

‘அட நான் எழுதுற எழுத்த படிச்சு ஒரு சிலராவது மனசு மாறுவாங்களே.. அப்ப இந்த மாதிரி பையங்களுக்கு மறுவாழ்வுகிடைக்க ஏதுவாயிருக்குமே’
‘நீங்க இனி கதைய எழுதி அதை எல்லாரும் படிச்சு அவனுக்கு நல்ல வாழ்வு கிடைக்குறதுக்கு பதிலா அவன் செருப்பு தைச்சதுக்கு கேட்ட எழுபது ரூபாய பேரம் பேசி ஐம்பதா குறைக்காமநப்பிடயே கொடுத்திருந்தா அவனுக்கு இந்த பொழுது நல்லா இருந்திருக்குமே. அப்ப உங்க கதையில சும்மா வீரவசனம் எழுதிவிட்டு அதை நடைமுறையில செய்யாத எழுத்தாளர்களுக்கும் ஒரு சாட்டையடி கொடுங்க...’

‘...............................’