Saturday, October 26, 2013

நின்னைச் சரணடைந்தேன்!!!


ராகம் - புன்னாக வராளி

பல்லவி
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா !
நின்னைச் சரணடைந்தேன் !

சரணங்கள்
 
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்னைச்)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தனகொன்றவை போக்கென்று (நின்னைச்)

 
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம் (நின்னைச்)

 
துன்ப மினியில்லைசோர்வில்லைதோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட (நின்னைச்)

 
நல்லது தீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக ! தீமையை ஓட்டுக ! (நின்னைச்)





அவன்தான்!


பொண்ணுங்களே இல்லாத இடத்துல வேலை செய்யுறதுகூட பரவாலங்க.  ஆனா இத்தனை பொண்ணுங்களுக்கு நடுவுல வேலைபாத்துகிட்டு ஒருத்தியும் நம்மள கவனிக்கலங்குற கடுப்பு இருக்கே... அட அதாவது கண்ணமூடிகிட்டு சமாளிச்சு போகலாம். ஆனா தீயா வேலை செய்யணும் குமாருல வர்ர கணேஸ் வெங்கட் மாதிரி ஹாண்ட்ஸம் ஆசாமிங்ககிட்ட இவளுக போய் வழியிறத பாக்கணுமே. வயிறு எரியுற எரிச்சல்ல அடுப்ப வச்சு சமைக்க ஆரம்பிச்ச ஒரு ஊரே சாப்பிடலாம். அட அந்த படத்துலயாவது ஒரு ஆபிஸுல ஒருத்தன் இருந்தான். ஆனா எனக்குன்னு எங்கியிருந்துதான் வாறாங்களோ தெரியல. கமல் மாதிரி, அஜித் மாதிரி, அரவிந்தசாமி மாதிரி, மாதவன் மாதிரி அத்தனை பேரும் இங்கதான் இருக்காங்க. நானும் விஜய்சேதுபதி மாதிரித்தான் இருப்பேன். ஆனா காம்படிஷன் அதிகமா இருக்குறதால ஃபீல்டுல நிக்கமுடியல. இப்பிடி எரிச்சலோட இருக்குறதுக்கு பேசாம வேலைய விட்டு போகாலாமானுகூட தோணும். என்னை மாதிரி ஆளுகளுக்கு எங்க போனாலும் இந்த பிரச்சினை இருக்கத்தானேபோகுதுனு மனச மாத்திப்பேன். ஏனோ வந்தோம், வேலை செய்யுறோம், சம்பளம் வாங்கினோம்னு வாழ்க்கை போய்க்கிட்டு இருந்திச்சு.

இன்னிக்கும் அப்பிடித்தான் வழக்கமா வந்து என் சீட்ல உட்கார்ந்து தூங்குறதுக்கான எல்லா ஏற்பாடும்... ஸாரி எழுத்துப்பிழையாயிடுச்சி, வேலை செய்யுறதுக்காக எல்லா ஏற்பாடும் பண்ணிட்டுருந்தேன். எப்பயும் ஆபிஸ் வந்ததும் எவனாவது ஏதாவது பொண்ணுகிட்டபோய் படம் ஓட்டிகிட்டு இருப்பான். அவங்களும் ஏதோ mr.bean ஜோக் மாதிரி விழுந்து விழுந்து சிரிப்பாளுக. குறிப்பா எனக்கு எதிர் சீட்டுல இருக்குற விஜி என்னை வெறுப்பேத்தணும்னே எவனோடயாவது போய் பல்ல காட்டிகிட்டு இருப்பா. இப்பிடி ஒருத்தன்கூட பேசுறதால இன்னொருத்தன காண்ட் ஆக்குறதுல இந்த பொண்ணுக்களுக்கு என்ன சந்தோசமோ தெரியல. இன்னைக்கும் அப்பிடித்தான்.. அட இவன் யாருடா புதுசா? இருக்குற போட்டி பத்தாதுனு புதுசா இன்னொருத்தனா.. அதுலயும் பாருங்க இந்த விஜி வந்த முதல் நாளே அவன்கூட ஃபிரண்டாயிட்டாளே.. எல்லாம் என்னை கடுப்பாக்கணும்னுதானே.. செஞ்சிட்டுபோகட்டும்னு என் வேலையை பார்க்கப்போனேன். முடியல. மைன்ட் அங்கயே போய்ட்டு இருந்திச்சு. அவன் வேற பார்க்குறதுக்கு துப்பாக்கி வில்லன் மாதிரி அவ்வளவு ஹாண்ட்ஸமா இருந்தான். போச்சு. முதல்நாளே இந்த முட்டகண்ணு விஜியோட ஃபிரண்டாயிட்டான். ஒரே வாரத்துல எல்லா பொண்ணுகளோட ஃபேஸ்புக்கையும் வாங்கிடுவான் போலயே. எரிச்சலோட நாள் முடிஞ்சுது.
அவனைக் கடந்து போகும்போதெல்லாம் என்னைப் பார்த்து சின்னதா சிரிப்பான். போனா போகட்டும்னு நானும் சிரிச்சு வைப்பேன். எப்ப பாத்தாலும் அவன் மேசைக்கு ஏதாவது ஒரு பொண்ணு விஜயம் செஞ்சிட்டே இருப்பா.. என் மேசை? ஈயாடுது. இதுனாலயே அவனை ஒரு எதிரி மாதிரி மனசுக்குள்ள கற்பனை பண்ணிகிட்டேன். எப்படா இவனை பழி வாங்க ஒரு சந்தர்ப்பம் வரும்னு அப்படி ஒரு தீவிரம். ஏதோ இவனை விட்டா ஆம்பிளையே இல்லன்ற மாதிரி எல்லா பொண்ணுங்களும் இவன்கிட்டயே போய் பேசுறீங்கல்ல? இவனை விட நான் ஒசத்தினு நிரூபிக்கிறேன். எல்லாருக்கும் முன்னால நானும் ஹீரோவா டெவலப் ஆகுறேனு மனசுக்குள்ள வைராக்கியம் எல்லாம் வந்திச்சு. நமக்கும் காலம் வராதா...

'என் சிஸ்டத்துல ஏதோ பிராப்ளம் போல இருக்கு. RAM ஒருக்கா செக் பண்ணனும் உங்கிட்ட ஸ்க்ரூ ட்ரைவ் இருக்கா?'

'என்கிட்ட இல்ல புதுசா வந்தான்ல இந்த ஜான் அவன்கிட்ட இருக்கு போய் வாங்கு..'

அவன்கிட்டயா? அவன்தான் நம்ம எதிரியாச்சே. நான் போமாட்டேன்ப்பா. ஆனா சிஸ்டத்த ஓபன் பண்ணனுமே.. கடுப்போட அவன் மேசைக்கு போனேன். என்னைப்பாத்ததும் அழகா சிரிச்சான். ஆமா இது இப்ப ரொம்ப முக்கியம்.. 'எனக்கு ஒருக்கா ஸ்க்ரூ ட்ரைவர் வேணும்' அவன் ஒரு நிமிஷம் யோசிச்சிட்டு டக்குனு எந்திரிச்சு போய் இரண்டு நிமிஷத்துல ஸ்க்ரூ ட்ரைவரோட வந்தான். 'ஸாரி என்கிட்ட இல்ல.. யமுனாகிட்ட இருந்ததா ஞாபகம். அதான் போய் வாங்கிட்டு வந்தேன் ப்ளீஸ் மறக்காம கொடுத்துடுங்க..'

எந்த பொண்ணு என்ன வச்சிருக்கானு எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான். எவ்வளவு எரிச்சலா இருக்கும். சே நம்ம வாழ்க்கை இப்பிடி இருக்கேனு அதீத கழிவிரக்கதோட கவலையா இருந்தேன். ஆபிஸ் முடியுற நேரம் அவன் வந்து சிரிச்சான். கேள்வியோட அவனைப் பார்த்தேன். 'ஸ்க்ரு  ட்ரைவர் வாங்கிட்டு வந்தீங்களே...' அட.. ஆமால்ல. அந்த கருமத்த எங்க வச்சேன்னு ஞாபகம் இல்லியே. இவன் மேல இருக்குற கோபத்துல நாம என்ன செய்யுறேம்னு நமக்கே தெரியல. இவன்வேற நின்னுட்டு இருக்கானேனு என் மேசை முழுக்க தேடிப்பார்த்தேன். 'சீக்கிரம் தாங்க... நேரமாகுது' இவன் விடுறமாதிரி இல்ல. எங்க வச்சேனு தெரியலயே. 'கவனமா கொண்டு வந்து தாரேனு சொன்னேன். ப்ளீஸ் கொஞ்சம் நல்லா பாருங்க.' வந்த ஆத்திரத்தை எங்க கொட்டுறதுனு கொதிச்சுபோன நேரத்துல கம்ப்யூட்டர்  CPU
மேலதான் ஸ்க்ரூ ட்ரைவர் இருந்திச்சு. எப்பிடி மறந்தேன்? அதை எடுத்து அவன் கையில கொடுத்து 'ஒரு சாதாரண ஸ்க்ரூ ட்ரைவருக்காக இப்பிடி நிக்குறீங்களே'னு கொஞ்சம் ஆத்திரித்தோடயே கேட்டேன். அவன் சிரிச்சுக்கிட்டே 'நான்தானே வாங்கிக்கொடுத்தேன்' என்று போய்விட்டான். நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன்.

நான் எப்பிடி இதை கவனிக்க தவறினேன். ஒருவேளை அவன்மேல இருந்த கோபத்தால அவனை பார்க்காமலயே பதில் சென்னதால தவறியிருப்பேனா? அச்சுஅசலாக ஒரு திருநங்கைக்கு என்ன முலாம் பூசி நம்ம ஊடகங்கள் நம்மள வளர்த்திச்சோ அதே சாயல்ல அவன் சொல்லிட்டு போனான். ஒரே குழப்பமா இருந்திச்சு. சுமாரான பசங்களே தங்கள ஹாண்ட்ஸமா காட்டிக்க எவ்ளோ கஷ்டப்படுறாங்க. இவன் இயற்கையாவே வசீகரத்தோட இருக்கான். இவனுக்குள்ள இப்பிடி ஒரு குணம் இருக்குமானு இன்னும்கூட நம்ப முடியல. தூரத்துல இருந்து அவனையே நோட்டம் விட்டேன். அவனுடைய அசைவுகள், நெழிவுகள், பார்வைகள், மற்றவருடன் பேசும் பாங்கு.. அப்படியே பெண்குணத்தோடு இருந்தது. இடதுகையை மடித்து வலதுகையை அதன் மேல் வைத்து தாடையைப் பிடித்தனே.. அந்த நேரம் நூறு சதவீதம் உறுதியானது. உள்ளுக்குள் ஒரு குரூர ஆனந்தம். மகிழ்ச்சியோட வீட்ட போனேன். நினைக்க நினைக்க சிரிப்பு வர்ரத தடுக்கமுடியல. அந்த விஜி இவனோட பேசிட்டு இருக்கும்போது இவன் அவளைவிட நெழிஞ்சு அபிநயத்த காட்டினா எப்பிடி இருக்கும். நல்லா வேணும். என்னையவா கடுப்பேத்தினீங்க.. உங்களுக்கு அக்கா ஒருத்தன் வந்திருக்கான் அவனோடயே நல்லா பேசுங்கனு மனம் முழுக்க அதே நினைப்பு ஓடிட்டு இருந்திச்சு.

அடுத்தநாள் ஆபிஸ்ல அவனைப் பார்க்கும்போது முதல்தடவை என்னை நானே முழு மனிதனாக உணர்ந்தேன். இந்த ஆபிஸ்ல என் கண்ணுமுன்னாலயே இவங்க போட்ட ஆட்டத்துல என்மேல ஏதாவது குறை இருக்குமோனு கவலைப்பட்ட காலங்களை நினைச்சுப்பார்தேன். ஆனா இப்ப என் தாழ்வு மனப்பான்மையை விரட்டியடிக்கத்தான் இவன் வந்திருக்கான்னு சந்தோசமா இருந்திச்சு.. எனக்கென்ன குறை, நான் ஆம்பிளை சிங்கம் அப்படிங்குற அற்ப நிம்மதி. ஹாயா என் கதிரையில உக்காந்து அவன் மேசையைப் பாரத்தேன்.  இன்னைக்கு எவளும் வந்து பேசலயா? ஆஹ் அந்தா வாராலே கீதா. அவள் அவனருகில் வந்து ஏதோ கேட்க அவன் அதே பெண் ஜாடையில் கையை லேசாக வீசினான். அவள் ஒரு மாதிரி பார்த்து கேனைசிரிப்பு சிரித்துவிட்டு போயிட்டா. நான் குபீருனு சிரிச்சிட்டேன். நான் பார்க்க வசீகரமா இல்லாட்டியும் சுமாராவது இருப்பேன். அதுக்காக என்னை திரும்பிக்கூட பார்க்காம அழகான பசங்களா தேடிப்போய் பேசிட்டு இருந்த அத்தனை பொண்ணுகளும் இவனோட இந்த குணத்தால எப்பிடி மூக்கறுபடுறாங்கனு பார்த்தே ஆகணும்ன்ற ஆசைதான் முழுசா இருந்திச்சு.. இனி வயிறு எரியத்தேவையில்ல.. எரிச்சல்படத்தேவையில்ல.. முக்கியமா ஒரு பொழுதுபோக்கு கிடைச்சிருக்கு. என்ஜாய். எனக்குள் சிலிர்த்துக்கொண்டேன்.

அற்ப விசயத்துக்காக இவ்வளவு சந்தோசப்பட்டத நினைக்க மனசு கறுத்துப்போச்சு... இவங்க ஏன் இப்பிடி இருக்காங்க. இந்த கூட்டத்துல நாமளும் சேர்ந்துட்டோமோனு ஒரு மாதிரி இருந்திச்சு. ஒரு மனுசனுக்கு குறை இருந்தா இப்பிடியா குத்திக்காட்டுறது? அப்ப நான் மட்டும் என்ன செஞ்சேன் என்று மனசு குறு குறுத்தது. அவங்க இப்பிடி செஞ்சிருக்ககூடாது.. லஞ்ச் டைம் கேண்டீன்ல கை கழுவப்போனப்பதான் அத கேட்டேன். விஜியும் கீதாவும் இன்னும் சில பொண்ணுங்களும் ஜான் பத்தி பேசி சிரிச்சிட்டு இருந்தாங்க. அவன் பண்றமாதிரி ஜாடை பண்ணி அவன கேலி செஞ்சு சிரிச்சிட்டிருந்தாங்க. 'இந்த மாதிரி ஆளுகளெல்லாம் நான் பாத்ததே இல்லடீ, அதான் அவன் எப்பிடியெல்லாம் அபிநயம் பிடிக்குறான்னு பார்க்குறதுக்காகவே  அவன்கூட டைலி போய் பேசுறேன்' என்று அவன்மாதிரி ஒரு அபிநயத்தோட கீதா சொல்ல எல்லாரும் விழுந்துவிழுந்து சிரிச்சாங்க. அப்பிடியே போய் நாலு அப்பு வைக்கலாமானு தோணிச்சு. 'அதுவும் பாருங்கடி அவன் சிரிக்குறதும் நடக்குறதும்.. அப்பிடியே எனக்கு ஒரு அக்கா..' என்ற கீதா திடீருனு நிப்பாட்டினாள். அவள் பார்த்துக்கொண்டிருந்த திசையில் ஜான் இருந்து எல்லாத்தையும் கேட்டுக்கிட்டிருந்திருக்கான். பாவம் என்ன நினைச்சிருப்பானோ. உண்மையா பார்த்தா இந்த ஆபிஸ்லயே நல்லவன் அவன்தான். யாரைப்பார்த்தாலும் முதல்ல அவன் முகத்துல ஒரு சிரிப்பு வரவேற்கும்.லவனை சிடுமூஞ்சியா பார்க்கவே ஏலாது. யாராவது ஏதாவது உதவி கேட்டா உடனே செய்வான். அப்படித்தான் நான் ஸ்க்ரூ ட்ரைவர் கேட்க அவனே போய் வாங்கிட்டுவந்து கொடுத்தானே.. மத்தவங்கள கஷடப்படத்தி ஒரு சொல் சொல்லமாட்டான். அவனைப்போய் இவங்க இப்பிடி நடத்தி இருக்காங்களே.. நான் வேற ஏதோ ஒரு காரணத்துக்காக சம்பந்தமேயில்லாத அவன்மேல மனசுக்குள்ளேயே ஒரு விரோதத்த வளர்த்துக்கிட்டு இருந்திருக்கேன். யார்மேல கோபப்படுறது, யாரை குற்றம் சுமத்துறது? மனசு பாரத்தோட வீட்ட போனேன்.

அவன் இன்னைக்கு யார்கூடயுமே பேசல. யாரும் அவன்கூட பேசுறதாவும் தெரியல. அப்பிடி ஒருத்தன் இருக்கான்னுகூட திரும்பி பார்க்கவும் இல்ல. அட நேத்து அந்த குரங்குங்க இவனை கேலி செஞ்சத இவன் பாத்தான்ல. அதுக்கு மன்னிப்பு கேட்கவாவது அவளுக வருவாங்கனு பார்த்தேன் ஒருத்தியையும் காணல. எப்பயும் சிரிச்சமுகத்தேட இருக்குறவன் இன்னைக்கு அத அடகுவச்சிட்டு வந்திட்டான்போல. அவன் மனசு எவ்ளோ கஷ்டப்படும்னு நினைக்கக்கூட பாவமாயிருந்திச்சு. இனி யார்கூட பேசினாலும் இப்பிடித்தானே நினைப்பாங்க. யார்கூடயுமே பேசாம விட்டுடுவோம்னு நினைப்பானோ? இவனோட வித்தியாசமான பாவனைகள் அவங்களுக்கு பிடிக்காட்டி பேசாம போயிருக்கலாம். நல்லா பழகுறமாதிரி பழகி அவனை வித்தியாசமா பாரக்கலைனு நம்பவச்சு ஏமாத்தியிருக்காங்க. அந்த ஏமாற்றம்தான் அவன் இப்பிடி ஒளியிழந்து இருக்கான். பிரேக்பஸ்ட்டும் எடுக்கல. லஞ்சுக்கும் வரல. நாள்முழுக்க இப்பிடியே ஏதோமாதிரி அவன் இருக்குறது இத்தனைநாள் அவனையே அவதானிச்சிட்டிருந்தறெனக்கு புதுசா இருந்திச்சு. வேற வழியில்ல. எழும்பி போய் இரண்டு காஃப்பி எடுத்துகிட்டி அவன் மேசையில வச்சு.. ' இந்த ஆபிஸ்ல நான் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்க இத்தனைநாள் ஒரு மனுஷன்கூட இல்லாம போய்டான். கஷ்டத்திலதான் உண்மையான மனுஷனை அடையாளம் காணலாம். காஃப்பி குடிங்க' என்றேன். அவன் சிரித்தான்.