Tuesday, January 22, 2013

கதை


இந்த கதைப்படி பார்த்தீங்கன்னா சார் ஹீரோ வேலதேடி கிராமத்துலர்ந்து சென்னைக்கு வாரான்..

அடப்போயா.. இத வச்சு தமிழ்சினிமால ஆயிரம் படம் வந்திடுச்சு. புதுசா ஏதாவது சொல்லுய்யா!

புதுசா எவன் சார் படம் எடுக்குறான்? நல்லா ஓடின ஒரு படத்து கதைய சும்மா பட்டி டிங்கரிங் பண்ணி புது படம்மாதிரி எடுத்துட்டு ஏதோ பல வருசம் ஒழைச்சேன். இது என் வாழ்க்கைலயே நடந்த கதைன்னால்லாம் அள்ளி விடுவாய்ங்க. எல்லாம் சகஜம்தானே

நம்ம படம் இப்படி இருக்ககூடாது… எனக்கு இன்டஷ்ரீல நல்ல பேர் இருக்கு. அடுத்த வருசம் எப்பிடியும் நேஷனல் அவார்டு வாங்கிடுவேன்னு பேசிக்குறாங்க. சோ ஒரு ஸ்டான்டர்ட் புராஜக்ட் பண்ணணும். அதுக்கு ஏத்தமாதிரி புது கதை இருந்தா சொல்லு. இல்லாட்டி எங்கிட்டயே நெறய அசிஸ்டண்ட் இருக்காங்க. நீ இடத்தை காலி பண்ணு.

சார் புது கதை எப்பிடி சார் பண்ணுறது. புதுக்கதை பண்ணணும்னுதான் எல்லாரும் வாறங்க. ஆனா ஒரு படம் கிளிக் ஆயிட்டா அதே பாணியிலயே படம் பண்ண வேண்டியிருக்கு. கௌதமால நாடோடிகள் பண்ணமுடியாது. சசிகுமாரால விண்ணைதாண்டி வருவாயா பண்ணமுடியாது. அப்பிடியே பண்ணாலும் இவங்களுக்கு வாறத விட்டுட்டு ஏன் தேவல்லாதத பண்றாங்கனு படம் பாக்குறவனே சிரிப்பான். அதான் ஏக்கனவே நீங்க ஹிட் பண்ண விடியலைத் தேடி படம் மாதிரியே கொஞ்சம் ட்ரை பண்ணிருக்கேன் சார்.

என்னய்யா வழ வழன்னு பேசிட்டுருக்க. எனக்கு எல்லாமே புதுசா இருக்கணும். அதான் தமிழ்சினிமாலயே யாரும் பண்ணாத சாக்கடை தொழிலாளிகள் கதையை விடியலைத் தேடின்னு எடுத்தேன். அது சூப்பர்ஹிட்டானதுக்கு காரணமே அதுல காட்டியிருக்குற எல்லாமே புதுசு. திரும்பவும் அதேமாதிரி துணிதுவைக்குறவன் ரோடுகூட்டுறவன் பன்னிமேய்க்குறவன்னு ஒரேமாதிரி பண்ணா எவன் பாப்பான்? நாம என்ன இவங்க வாழ்க்கைய மாத்தவா படம் எடுக்குறோம்? நமக்கு கல்லா கட்டணும்யா அதுக்கு அவங்க ஒரு சாட்டு. அவ்ளோதான். எனக்கு திரும்ப அப்பிடியே எடுக்க இஷ்டமில்ல. புதுசா சொல்லு. இல்லாட்டி நடைய கட்டு.

ஒன்றும் சொல்லமுடியாத கதாசிரியர் மோகனவேல் ஏமாற்றத்துடன். திரும்பினார். தனக்குப் பின்னால் வந்த எத்தனையோபேர் தன்னைதாண்டி போவதை இன்னும் எத்தனை நாள்தான் யொறுமையுடன் சகிப்பது. அவர் இந்த திரைத்துறைக்கு வரவேண்டுமென்று தன்னை ஆயத்தபடுத்திக்கொண்டபோது அவரிடம் நல்ல புதுக்கதைகள் இருந்தன. ஆனால் அவர் வாய்ப்புக்காக அலைந்த இந்த இருபது வருடத்தில் அவருடன் சேர்த்து அவருடைய கதைகளும் பழசாகிவிட்டன. காலத்துக்கு தகுந்த படைப்பை கொடுக்கமுடியாமலும் இருக்கின்ற திறமைக்காவது தகுந்த வாய்ப்பு கிடைக்காமலும் சரி போய்த்தொலை என்று சினிமாவை விட்டுவிடவும் முடியாமலும் வாழ்க்கை அவரை வாட்டி எடுக்கிறது. எப்படியாவது திரையில் தன் பெயரும் வந்துவிடாதாவென்ற அவரது ஏக்கத்துக்கு இன்னும்தான் விடைகண்டபாடில்லை. எப்படியோ தனக்கு தெரிந்தவர்கள்மூலமாக இந்த இயக்குனரை பார்க்க ஒரு வாய்ப்பு வந்தது. ஒரே படம் மூலம் தமிழ்சினிமாவையே திரும்பி பார்க்கவைத்துவிட்டான். ஆனால் அந்த படம் ஓகேயாறதுக்கு முன்னாடி தம்மைவிட பாவமான ஒருவனாக அந்த இயக்குனரை சந்தித்தது மோகனவேலிற்கு மறக்கவில்லை. காலம் யாரை எப்பட் மாற்றும்? எங்கே கொண்டுபோகுமென்று யாருக்கும் தெரியாது…. இவனுக்கு வந்த வாய்ப்பு எனக்கு வந்திருந்தால்?.... என்னை யோவ் என்று சொன்ன வாய் சார் என்று செல்லியிருக்கும். என்னை தட்டிவிட்ட கை என்முன்னால் பவ்வியமாக பணிந்து வளைந்திருக்கும். கதை சொல்லும் இடத்தில் அவன் இருந்திருப்பான். அதை நீராகரிக்கும் இடத்தில் நான் இருந்திருப்பேன்.

மத்தவங்களுக்கு கதிரை துடைச்சுபோட்டவனையெல்லாம் கால்மேல கால்போட்டு உட்காரவச்ச கோடம்பாக்கம் என்னை தீட்டு பாத்து தள்ளிவச்சுடுமா என்ன? எனக்காக காத்திருக்கும் தயாரிப்பாளர், பத்தடிக்கு கட்அவுட்டு, பொங்கலுக்கு சன்டிவில பேட்டி எல்லாம் என்னைத்தேடி வரும் காலமும் உண்டாகுமென தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு எப்படியாவது அந்த இயக்குனரிடம் இந்த முறை கதையை ஓகே செய்யவேண்டுமென முழு முனைப்புடன் சிந்திக்க தொடங்கினார். எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கறாங்களோ? எவ்வளவு நுணுக்கமான திரைக்கதைகளோட படங்கள் வருது. இன்னும் யோசிச்சுபாத்தா திரைக்கதை நல்லா இருக்குற படங்கள்தான் இப்ப ஓடுதுன்ற உண்மைகூட தெரியும். அந்த நுணுக்கமான திரைக்கதை யுக்தி தன்னிடம் இல்லாதது அவருக்கு பெரிய குறையாக இருந்தது. அதற்காக பின்வாங்கவும் மனமில்லை. சரியான பயிற்சி எடுக்கவும் அவகாசம் இல்லை. இப்ப விட்ட அவனை பிறகு பிடிப்பதும் கஷ்டம். சாவகாசமா உக்கார்ந்து யோசிச்சாலே கதை கிடைக்குறது குதிரைக்கொம்பு. இப்படி இக்கட்டான கட்டத்துல எப்படி யோசிச்சாலும் கதை கிடைக்காதுன்னு அவருக்கு நல்லா புரிஞ்சுது.

தூக்கம் வராமல் புரண்ட மோகனவேலு தனது நெருங்கிய நண்பனிடம் இதுபற்றி கேட்க ஏதாவது இங்கிலீஷ் படத்து கதையை தமிழ்படத்தோட கதையோட மிக்ஸ் பண்ணி புதுசா கொடுத்தா கண்டுபிடிக்கமுடியாதுனு யோசனை சொன்னான். வேறு வழிஇல்லாததால அவரும் கிட்டத்தட்ட முப்பது ஹாலிவுட் படங்கள உன்னிப்பா பாத்து அத தமிழ்சினிமாக்கு ஏத்தமாதிரி மாத்திகொண்டுபோய் அதே இயக்குனரிடம் சென்றார்.
அவருடைய போறாத காலம் அவர் பாத்த எல்லா ஹாலிவுட் படங்களையும் அவனும் பாத்திருக்கான். கழுத்தபிடிச்சி தள்ளாதகுறையா அவரை வெளியில தள்ளி கதவடைச்சிட்டாங்க. எவ்வளவு அவமானப்பட்டாலும் பின்வாங்கப்போறதில்லனு முடிவெடுத்தார். அவமானங்களுக்கும் அசிங்கங்களுக்கு பயப்படுறவன் சினிமாக்கே வரக்குடாதுன்றது அவருக்கு நல்லா தெரியும். மறுபடியும் அதே இயக்குனர் வாசல்ல போய் நின்றார்.

உன்னை எத்தனை தடவை தொறத்தினாலும் திரும்பவாறியேயா? சரியான கொசுவுக்கு பொறந்தவனா இருப்பபோல

சார் ஒரு படத்திலயாவது என் கதை வறணும்னு முயற்சி பண்றேன். வாய்ப்புக்காக நான் ஓடின ஓட்டத்த ஒலிம்பிக்குல ஓடியிருந்தா பதக்கமாவது கிடைச்சிருக்கும். ஒரு வாய்ப்பு கொடுங்கய்யா..

யோவ்… இப்படியே வாறவன் போறவன்கிட்ட கதைகேட்டிட்டே இருந்தா அப்புறம் என் கதை என்னாகுறது? புரோடிசியர் அட்வான்ஸ் கொடுக்க மூணு நாளாகுமே அதுவரக்கும் போரடிக்குமேங்குறதுக்காகத்தான் உன்னை உள்ளேய விட்டேன். ஒழுங்கா ஒரு கதைய சொல்லி ஓகே பண்ற வழியப்பாரு.

நிச்சயமா இந்த கதை உங்களுக்கு பிடிக்கும் சார்…

அத நான் முடிவு பண்றேன்… நீ கதைய சொல்லு

ஹீரோ நல்லவன் சார்

ஹீரோன்னாலே நல்லவன்தான்யா… அறுக்காம கதைக்குள்ள போ
சார் கேளுங்க சார்.. நல்லவனா இருக்குற ஹீரோ சூழ்நிலையால கெட்டவனா மாறிடுறான். ஆனா அவனுக்கு கெட்டவனா இருக்க பிடிக்கல. எப்படியாவது தன்னோட எந்த விசயமும் மத்தவங்களுக்கு தெரியாம தான் புது ஆளா மாறணும்றதுக்காக தன் முகத்தயே அழிச்சு வேறமுகத்துக்கு மாறிடுறான்.

அப்ப இரண்டு முகமா? எப்படி வேற முகம் வரும்?....

அது பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிடலாம் சார்… அப்படி ஆளே தெரியாம அவன் மாறினாப்பிறகு ரொம்ப சந்தோசமா இருக்கான். ஆனா அவனுக்கு பிறக்குற பிள்ளை அவனோட ஒரிஜினல் முகத்தோட பொறக்குது.. அங்கதான் அவனுக்கு பிரச்சினையே வருது……

இங்கதான் உனக்கு பிரச்சினையே வருது… இது புதியமுகம் படத்தோட கதைய்யா. கண்ணுக்கு மை அழகு பாட்டக்கூட யாரும் இன்னும் மறக்கல. என்ன தைரியம் இருந்தா காப்பிரைட்ஸ் வாங்காம ரீமேக் பண்ணுவ. உன்னைப்போய் மதிச்சு உள்ளவிட்டது என் தப்பு. மரியாதையா போயிடு!

சார் சார் அப்படி ஒரு படமே நான் பாக்கல சார். இது நானா எழுதுனது சார். இந்த கதையில ஒரு படம் வந்திருக்கும்னு நான் நினைக்கல சார். பிளீஸ் நம்புங்க சார்.

நீ படம் பாக்காம எழுதினதுனு நான் எப்பிடி நம்புவேன். நேத்து வரும்போது ஒரு கதை சொன்னியே… இண்டியானா யோன்ஸயும் மிஸ்டர் பீனையும் மிக்ஸ் பண்ணி, அப்பயே தெரிஞ்சுபோச்சு நீ யாருன்னு… அப்படியே இது என் சொந்தக்கதைன்னு நீ சொன்னாலும் எத்தனை தடவைதான் ஒரே கதைய எடுக்குறது? உண்மையா நீ கதாசிரியன்தானா?

சார் ஒரு பதட்டத்தில அந்த கதைய சொல்லிட்டேன் சார். இன்னொரு கதை வச்சிருக்கேன். கேளுங்க சார். ஒரு வாய்ப்பு கொடுங்க சார்.

உன்னைப் பாக்கவே பாவமா இருக்குய்யா… சரி கடைசி வாய்ப்பு. என்னை இம்ப்ரஸ் பண்றமாதிரி கதை சொன்னா என் அடுத்த படம் உன் கதைதான்.

சார். நிச்சயமா சார். கேளுங்க. நம்ம ஹீரோ அனாதை சார். அவன ஒரு பணக்காரர் வளக்குறார். அவனும் பாசமா வளற்றான். அந்த பணக்காரரோட சொந்த பிள்ளைங்க சொத்துக்காக சண்டை போடும்போது அவன் மட்டும் அவருக்கு ஆறுதலா இருக்கான்.

அப்போது அந்த இயக்குனர் குபீரென்று சிரிக்கத்தொடங்கினான். என்ன என்று புரியாமல் மோகனவேலு குழம்பிதிற்க அவன் சிரிப்பை அடக்கமுடியாமல்

யோவ்… ஹிஹி அடப்போயா இது படிக்காதமேதை பழைய படத்தோட கதை

என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டேயிருக்க மோகனவேலு உண்மையிலேயே அவமானத்தால் தலைகுனிந்து நின்றார்.

மன்னிச்சிடுங்க சார். வேற வழியில்லாம…

உன்னை என்னய்யா செய்யுறது? கோபப்படக்கூட முடியல. உனக்கு கதை எழுதவே தெரியாதா?

கதைனு ஒன்னு இருந்தா எழுதியிருக்கமாட்டேனா?