Tuesday, May 22, 2012

விளையாட்டு வியாபாரம்…!

இத்தனை கமராக்கள், ஏசி போட்ட பெரிய அரங்கில் சந்திப்பு, வெளிநாட்டு பாணியில் மதுவிருந்து…… இதெல்லாம் சுப்புவிற்கு புதிதல்ல. ஆனால் பார்த்து பல காலமாகிவிட்டது. கிரிக்கெட்தான் தன் வாழ்க்கை என அவர் முடிவெடுத்த அந்த பத்தாமாண்டு ரிசல்ட்ஸ் வந்த நாளிலிருந்து மாவட்டம், மாநிலம் என கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறி தேசிய அணிக்கு விளையாடியதும் சர்வதேச கிரிக்கெட்டில் யார்யாரையெலாம் மானசீக குருவாக நினைத்தாரோ அவர்களையே எதிர்த்தாடியதும் இந்திய அணிக்காக விளையாடி பல வெற்றிகளை குவித்தபின் மனமுவந்து சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருவதும் சுப்புவின் மனத்திரையில் படமாய் ஓடியது. இன்று….. மீண்டும் தான் கிரிக்கெட்டுக்கு திரும்பி வந்திருப்பது அவராக விரும்பி நடந்ததா? இல்லை

உலக பணக்காரர்களில் ஒருவரான ரோய் வில்லியம்ஸ் தான் தேடிய செல்வம் போதாமல் இன்னும் நிறைய சம்பாதிக்க இந்தியன் சாம்பியன்ஷிப் ஃபெடரேஷன்(Indian championship federation) என்ற கிரிக்கெட் லீக் போட்டிகளை ஆரம்பித்து கொஞ்சம் மேல்நிலையடைந்திருக்கும் மாநிலங்களுக்கிடையில் போட்டிகளை நடத்தி தனது கல்லாவை நிரப்புகிறார். பெரிய வியாபாரியல்லவா! எந்த சந்தையில் எந்த வியாபாரம் களைகட்டும் என நன்கு தெரிந்துவைத்திருக்கிறார். அவருக்கென்ன?.....இந்தியாவில் மின்பற்றாக்குறை, தண்ணீர் பஞ்சம், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், கிரிக்கெட் போட்டிகளை நடாத்துவதால் பாதிக்கப்படும் சிறுவர்களின் கல்வி என்பதையெல்லாம் பற்றி எங்கோ லண்டனில் மில்லியன் பவுண்டு ஏசி மாளிகைக்குள் அல்ட்ரா ப்ரீமியம் சரக்கை குடித்துக்கொண்டிருப்பவருக்கு என்ன கவலை? அட அவரை விடுங்க…. தமிழ்நாட்டிலேயே நாள்முழுக்க கஷ்டப்பட்டு உழைக்குற காசை வீட்டுக்கு கொடுக்காம பொண்டாட்டி பிள்ளைங்க சாப்பிடாம இருக்க குடி, கஞ்சா, சூதாட்டம்னு செலவழிக்குற நம்ம நாட்டு முதுகெலும்புகளை என்ன சொல்வது? அடக்கடவுளே! எதையோ சொல்லவந்து எதையோ சொல்லிக்கிட்டிருக்கேன். இந்தியன் சாம்பியன்ஷிப் ஃபெடரேஷன் பார்த்தோம்ல… அதுல தமிழ்நாட்டு டீம் பேரு சென்னை சிங்கம்ஸ். இந்த அணியின் உரிமையாளர் கௌதம் சர்மா. சோப்புல இருந்து சோடா வரைக்கும் இவரு பண்ணாத வியாபாரமே இல்லை. இருந்தும் தன்னை பற்றி இந்த உலகத்துக்கு தெரியாதே என்ற அவரது கவலையை போக்கத்தான் இந்த அணியை இவரு வாங்கியிருக்காரு. பின்ன சும்மாவா? ஆயிரம்கோடி சொத்து இருக்குறவங்களக்கூட மக்களுக்கு தெரியாது. ஆனா நாள் சம்பளத்துக்கு தொலைக்காட்சியில வந்து நிகழ்ச்சி பண்ற தொகுப்பாளர்கள் ரொம்ப பிரபலம். மீடியாவோட பவர் அப்பிடி. கௌதம் சர்மா சென்னை அணியை வாங்கின அடுத்து நிமிஷமே தமிழ்நாடு முழுக்க ஏன் இந்திய அளவுல பிரபலமாயிட்டாரு. பேப்பர்ல அவரைபத்தி நிறைய செய்திகள் வருது. facebookல அவருக்காக பக்கங்கள் எல்லாம் உருவாகியிருக்கு. சும்மாவே கார்ல பறக்குற அவரை இந்த புகழ் காத்துல பறக்க வச்சுது. தொடர்ந்து இந்த அணியை மேலும் வலுப்படுத்தி பிரபலமடையவைக்க வழிகளை தேடினார். இன்றைய இளைஞர்கள் அனைவரின் இதயநாடியாக இருக்கும் கிரிக்கெட் வீரர் ஜோஷியை பலகோடிகள் கொட்டி அணிக்குள் கொண்டுவந்தார். சிம்கார்ட்ல இருந்து சேலைகடை வரைக்கும் அனைத்து ஸ்பான்ஸர்களையும் வளைத்துப்போட்டார். தமிழ்நாட்டுல உச்சத்துல இருக்கும் நடிகர் மதனை ப்ராண்ட் அம்பாஸ்டராக்கினார். தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டிய திறமையான சுப்புவை பயிற்சியாளராக்கினார். இவற்றையெல்லாம் விட மைதானத்தில் வீரர்கள் களைப்படையாமல் இருக்க ஊக்கமளிக்கும் நடன அழகிகளை பார்த்துபார்த்து தெரிவுசெய்தார். காரணம் அவர்களை பார்பதற்காகவே ஒரு கூட்டம் இருப்பது அவருக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு நாளும் பத்திரிகை தொலைக்காட்சிகளில் அணியின் பெயரை விளம்பரப்படுத்தி தள்ளினார். ஊருக்கு ஊரு தெருவுக்கு தெரு பேனர் போஸ்டர் என அமர்களப்படுத்தினார். வாராவாரம் பத்திரிகைகூட்டத்திற்கும் ஏற்பாடானது.

இதுவும் அப்படியான ஒரு பத்திரிகையாளர் சந்திப்புதான். அத்துடன் சில புரோமோஷன்களும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அடுத்தவாரம் போட்டிகள் தொடங்கப்போவதால் இது முக்கியமான ஒரு சந்திப்புதான். கௌதம்சர்மா நேரத்தோடு வந்து அனைத்து வேலைகளையும் சரிபார்த்தார். அனைத்துமே சரியாக நிகழ்ச்சி ஆரம்பமாகும் நேரமும் வந்தது. பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்றுவிடாமல் கலந்தகொண்டிருந்தனர். சிறப்பு விருந்தினர்களும் வந்தாயிற்று. அணித்தலைவர் ஜோஷி அரங்கில் நுழையும்போது கைதட்டல் பட்டாசாய் வெடித்தது. அதைவிட நடிகர் மதன் வரும்போது கைதட்டல் ஒலி அடங்க சிலநேரம் ஆனது. அந்த ஏற்பாடுகள் எதிலும் மனம் ஒட்டாதவராய் விலகியே இருந்தார் சுப்பு. ஓய்வுபெற்றபின் கிரிக்கெட்டிலிருந்து அது முழு ஓய்வாக இருக்கவேண்டுமென அவர் நினைத்தார். தேசிய அணிக்கு பயிற்சியாளராக வரவேண்டுமென்றுகூட அழைப்பு வந்தது. அப்போதுகூட உறுதியாய் இருந்த அவரது முடிவை இந்த ஐ.எஸ்.எஃப் மாற்றிவிட்டது. இதன் தீவிர ரசிகனான தன் மகனை சமாதானப்படுத்த முடியாமல் தன்னிடம் வந்த இந்த பயிற்சியாளர் பதவியை ஏற்றார் சுப்பு. இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தேசிய அணியில் பத்து வருடம் உழைக்கும் பணத்தை இதில் ஒரே வருடத்திலேயே உழைத்துவிடலாம். இப்பிடி ஒரு வாய்ப்பு இனி வருமா என மனைவியின் நச்சரிப்பும்தான் அவரை இங்கே கொண்டுவந்து வைத்திருக்கிறது. அவரது காலத்தில் அவர் செய்த சாதனைகளை யாரும் இன்னும் மறக்கவில்லைஎன்ற ஒரே விடயம்தான் இங்கே ஆறுதல். அவருக்கு வழங்கப்பட்ட மரியாதையில் எவ்வித குறையும் இல்லை. ஆனால் அவர் மனதில்தான் ஆரம்பத்திலிருந்தே ஏதோ ஒரு குறை இருந்துகொண்டேயிருந்தது. அந்த குறை அவர் மனதை சோரவடையச்செய்திருந்தது. அந்த நேரத்தில் மேடையில் நிகழ்ச்சி ஆரம்பம் என்பதால் அனைவரும் மேடையேறி அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர். அனைவருக்கும் நடுவிலே கௌதம் அமர்ந்திருந்தது ஒரு ராஜா பாணியை ஒத்திருந்தது. ராஜவாழ்க்கை வாழ்பவன்தானே!....சுப்பிற்கு அருகில் நடிகர் மதன் வந்து அமர்ந்தார். சுப்புவை பார்த்து சிரித்து அவராகவே பேச்சை ஆரம்பித்தார்.


‘ஹாய் ஸார்’

‘ஹாய்’

‘நான் உங்க பெரிய ரசிகன் ஸார். எனக்கு அவ்வளவா கிரிக்கெட் விளையாடத்தெரியாது. ஆனா சின்ன வயசில உங்க மேட்ச்சு தவறினதே இல்ல. இப்ப உங்க பக்கத்துல உக்காந்து இருக்கறதே ரொம்ப சந்தோசமா இருக்கு.’

‘அப்படியா? இவ்வளவு பெரிய நடிகன் என் ரசிகரா இருக்குறது எனக்கும் ரொம்ப சந்தோசம். ஆமா…. கிரிக்கெட் தெரியாதுன்றீங்க. அப்புறம் எப்பிடி இங்க?....’

‘என்ன ஸார் பண்றது? காசு கொடுக்குறவங்க சொல்றத திருப்பி சொல்றதுதான் நடிகனோட வேல. ஆயிரம்கோடி கொடுத்து அணியை வாங்குறவர் எந்தெந்த வழியில அத திருப்பமுடியும்னு யோசிச்சிருப்பார்தானே.. எனக்கிருக்குற மக்கள் சப்போட் அவருக்கு தேவப்படுது. சோ… கமராவிற்கு வெளியேயும் இந்த மாதிரி நடிக்கவேண்டி இருக்கு.’

‘என்ன தம்பி சொல்றிங்க?... நடிகர் ஒருவர் சொல்லித்தான் ஜனங்க கிரிக்கெட் பார்க்கணுமா?ஆ… அப்ப அது கிரிக்கெட்டா இருக்காதே…’

‘நீங்க சொல்றது சரிதான் ஸார். எல்லாமே பணம்னு ஆனதுக்குப்பிறகு விளையாட்டுக்கு மரியாதை இருக்கும்னு நான் நினைக்கல. எல்லாமே பொழுதுபோக்குன்ற ஒரே கட்டதுக்குள்ள வந்திடுச்சி. இப்ப பொழுதுபோக்குன்றதுக்கு அர்த்தமே பாமரர்களிடம் பணம் சூரையாடப்பட்டு பிரபலங்களிடம் அது பரிமாறப்படுவதுதான். ஒரு படம் ரிலீஸான வேலை, குடும்பம், சாப்பாடு எல்லாம் விட்டுட்டு ஒருத்தன் உசிர வெறுத்து டிக்கெட் வாங்குறானே…அதுல எங்களுக்கு ஆயிரம் பலன் இருக்கு.ஆனா அவனுக்கு?.... அவங்கள பார்த்தா எனக்கு பாவமாத்தான் இருக்கு. ஆனா என்ன பண்ணமுடியும். இப்ப எனக்கிருக்குற போட்டிகளாள அவங்கள அப்பிடி பண்ணவேணாம்னு சொல்லமுடியல. நான் நடிக்க வரும்போது இத கடவுளா நினைச்சுதான் வந்தேன். ஆனா இங்க வளைஞ்சு கொடுக்காட்டி நம்ம அட்ரஸ் தொலஞ்சிபோயிடும். ஏன் கிரிக்கெட்கூட அப்பிடிதான். இத ஒரு புனிதமான தொழிலா நினைச்சு வாறவங்க எல்லாம் கடைசிவரைக்கும் அப்படியா இருக்காங்க?’

மேடையில் ‘அடுத்ததாக உங்கள் அபிமான நடிகர் மதன் இப்பொழுது’

மதன் சுப்புவிடம் விடைபெற்றுக்கொண்டு பேசச்சென்றான். ‘அனைவருக்கும் வணக்கம். இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில உங்கள சந்திக்கிறத நான் சந்தோசமா நினைக்கிறேன். ஏன்னா நானும் ஒரு கிரிக்கெட் பிளேயர்தான். சினிமாவுல வந்துட்டதனால கிரிக்கெட் விளையாட முடியாமப் போச்சு. இல்லாட்டி நிச்சயமா நானும் கிரிக்கெட்டராகியிருப்பேன்.’
மதன் பேசப்பேச ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் சுப்பு. சூழ்நிலை மனிதனை மாற்றுகிறதா? இல்லை மனிதனே சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுகிறானா? மதன் சொன்னது சரிதான் இங்கே வளைஞ்சு கொடுக்காட்டி அட்ரஸ் தொலைஞ்சிடும். வயித்துக்காக மனுசன் இங்க கயித்தில் ஆடுறான் பாரு ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறந்தானே சோறு என்ற பழைய பாடல் ஞாபகத்திற்கு வந்தது. உடனே அது தவறெனப் பட்டது. இங்கே யாரும் வயித்துக்காக பிழைக்கிறவங்க இல்ல. லாபத்துக்காக பிழைக்கிறவங்க. அந்த லாபத்த வச்சு இன்னும் லாபம் சம்பாதிக்கத்தான் பார்ப்பார்கள். வாழ்க்கையே இவர்களுக்கு வியாபாரம்தான். கிரிக்கெட்டா இங்க நடக்குது? ச்சீ கிரிக்கெட்டுக்காக நடக்குற விழாவுல கிரிக்கெட்னாலே என்னனு தெரியாத இந்த நடனமங்கைகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? நாம இங்க வந்தே இருக்ககூடாது. எல்லாம் வியாபாரம். இவங்கள குத்தம் சொல்லி பிரயோசனம்? இப்ப எங்கதான் வியாபாரம் இல்ல…. உயிர்போற நிலையில இருக்குற நோயாளிகிட்டகூட காசு வாங்காம மருத்துவம் பார்க்குற டாக்டர் யாராவது இருக்காங்களா? நல்லா படிக்குற ஆனா வசதியில்லாத ஒரு மாணவனுக்கு இலவசமா பாடம் சொல்லிக்கொடுக்குற வாத்தியார் யாராவது இருக்காங்களா? ஏன் கோயில்லகூட பாருங்க பத்துரூபா தட்சிணை கொடுக்குறங்களுக்கு ஏனோதானோன்னும் நூறுரூபா தட்சிணை கொடுக்குறவங்களுக்குவ ஆரஅமர பொறுமையாத்தானே அர்ச்சனை பண்றாங்க…. வியாபாரம் இல்லாத இடமே இல்லயே என அவர் எண்ணிக்கொண்டிருக்கையில் மதன் பேசிமுடித்து வந்து அமர்ந்தான்.

‘அடுத்ததாக அணித்தலைவர் ஜோஷி’ என்றதும் அரங்கமதிரும் விசிலோசைக்கு நடுவே பேசவந்தான் ஜோஷி. அவன் வடநாட்டுக்காரன் என்பதால் ஆங்கிலத்திலேயே பேசினான். அவன் பேசுவதை சுப்பு பெரிதாக கணக்கெடுகவில்லையென்றாலும் சில இடங்கள் அவரை உற்றுநோக்கவைத்தது. முக்கியமாக எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும். சீக்கிரமே உங்க முன்னால நல்லா தமிழ் பேசுவேன். தமிழ்நாடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இத விட்டு போகவே மனசில்லை என்றான். சுப்புவுக்கு சிரிப்புதான் வந்தது. ஒப்பந்தம் முடிஞ்சிட்டா வேறொரு மாநிலத்துக்கு வேறொரு அணிக்கு போயிடுவான். அங்க போயும் இப்பிடிதானே பேசப்போறான். தமிழ்நாட்டுக்காரனை சேர்த்தாதானே நம்ம ஊருக்காக விளையாடுற உணர்வு இருக்கும். இவங்கெல்லாம் காசுக்காகத்தானே விளையாடுறாங்க. ஊரு உணர்வெல்லாம் இவங்களுக்கு ரெண்டாம்பட்சம்தானே! ஏன் இப்ப தமிழ்நாட்டு அணியில இருக்கவங்கள்ள பாதிக்குமேல வேற ஊரு வேற நாடு… தமிழனுக்கு வாய்ப்பு குடுத்தா என்ன கொறஞ்சா போயிடும். இந்தியா தமிழர்கள் விசயத்துல பாரபட்சமா இருக்குதோனு சுப்பு சிலநேரம் நினைப்பார். ஆனா பாருங்க. மக்கள்தொகையில மூணுக்கு ஒரு வீதம் தமிழர்கள் இருக்குற இலங்கையில கிரிக்கெட் அணியில இப்ப ஒரு தமிழன்கூட இல்ல. அதுக்கு இந்தியா எவ்வளவோ மேல்.

ஏன் நான் கண்டதையும் நினைச்சிட்டு இருக்கேன்…ம்ம்ம் மனம் முழு ஈடுபாடோட இங்க கவனமா இருந்தாதானே.. இதுக்குமேல போலி பகட்டுக்கு நடுவுல இருக்குறது கஷ்டம் உடம்பு சரியில்லைனு சொல்லிட்டு கெளம்புவோம்னு சந்திப்புல இருந்து பாதியில புறப்பட்டார் சுப்பு. மனசு சரியில்லாததால் காரை போக சொல்லிவிட்டு நடந்தேசென்றார். ஆமா ஏன் மனசு சரியில்லை? காலைல இருந்து நடந்தவைகளை நினைத்துப்பார்த்தார். கிரிக்கெட்டை இப்படி நாசமாக்குகிறார்களே என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது. அதிலிருந்து விடுபட கவனத்தை மாற்ற ஏதாவது இருக்கிறதா என எண்ணிக்கொண்டே சாலையில் சென்றார். ரோடு. ரோடா இது. ரோடு போட சொன்னா சின்ன பிள்ளைங்க களிமண்ல செய்ற பொம்மைமாதிரி பண்ணிவக்கிறாங்க. ஒரு மழை பெஞ்சாலே பாதி ரோடு தண்ணியோட போயிடுது. அந்த அணியை ஆயிரங்கோடிக்கு வாங்கினாராமே… அதுல நூத்துல ஒரு பங்கை இந்த மாதிரி ரோடு போட செலவு செஞ்சிருக்கலாமே… அதோ அங்க…. தண்ணிவண்டியில தண்ணிக்காக பொம்பளைங்க குடத்தே வச்சிகிட்டு சண்டை போட்டுட்டு இருக்காங்க.. என்ன கம்ப்யூட்டர் வந்தென்ன தொழில்நுட்பம் இந்தளவுக்கு முன்னேறியென்ன? இந்த சண்டேக்கு இன்னும் முடிவு வரல. யூத்ஸ்டார் மதன் நடிக்கும் வாலிபன். டிக்கேட் கொடுக்க இன்னும் ஒரு மணிநேரம்ரொருக்கு. உப்பவே வந்த கால் வலிக்க நிக்குறாங்க. அஞ்சு நிமிஷம் படிக்க சொன்னா கசந்துடும். பத்தடி உயரமான கட்அவுட்டுக்கு ஒருத்தன் பால் ஊத்துறான். தவறுதலா கீழ விழுந்தா அவனுக்கே பால் ஊத்தணும்னு அவனுக்கு ஏன் புரியல? அவன் குடும்பத்துக்கு என்ன வழி? இந்த மாதிரி ரசிகர்களாளத்தான் தங்கள் பொழப்பே ஓடுதுனு மதன் சொன்னது நினைவுக்கு வந்தது.
திடீரென்று சுப்புவுக்கு உலகமே வெறுத்துப் போயிற்று. இந்த நிலையை மாத்த என்ன அவதாரபுருஷனா வரமுடியும்? அங்கே என்ன கும்பல்? ஓஓ… பிச்சைக்காரனா?.... ம்ம்ம் உலகத்தையே மாத்தக்கூடியளவுக்கு காசிருக்குற அந்த கௌதமே சும்மா இருக்கான். இந்த பிச்சைக்காரனால என்ன பண்ணிட முடியும்….

‘காலையில கிழக்குல சிவப்புவெளிச்சம் பாரு…
கரண்டில்லாம வானத்துக்கு லைட்டு போட்டது யாரு?
ஆளைப்பாக்காம இடிச்சிட்டு சிட்டாபோகுது காரு…
காலுபோன ஏழைக்கு பிச்சையெடுத்து சோறு!
ஆம்பளயும் பொம்பளயும் ஒண்ணாசேர்ந்து குடிக்குது…
உழைச்சகாச செலவுபண்ண வழியதேடி துடிக்குது…
தண்ணிக்காக ஒருகூட்டம் தலைதலையா அடிக்குது,
விஐபிங்க வீட்டுக்குத்தான் சுமிங் புல்லு கேட்குது!
ஒருவாய் சோத்துக்குத்தான் ஓயாமப் பாடுறேங்க.
பத்துபைசா பிச்சைபோடும் சாமியத்தான் தேடுறேங்க
பசிக்காத கடவுளுக்கு பால ஊத்தும் மனுசங்களே
பட்டினி வயித்துக்கு கஞ்சி ஊத்திட்டு போங்களே!’

ஒரு மத்தளத்த கையில வச்சிகிட்டு சின்னபையன் ஒருத்தன் பாட்டுபாடி பிச்சை கேட்டுகிட்டு இருந்தான். நிச்சயமா இந்த பாட்டில் ஏதோ இருக்கவேண்டும். நம்ம சுப்பு அசையாம அந்த பையனையே பாத்திட்டிருந்தார். அந்த பாட்டொண்ணும் அவ்வளவு புரட்சிகரமா இல்ல. அப்பிடியே பாட்டு பாடியே புரட்சி பண்ண அவன் ஒண்ணும் பாரதியும் இல்ல. ஆனா நம்ம சுப்பு கொஞ்சம் அமைதியாகிட்டார். உலகத்த ஒரேயடியா மாத்திட முடியாது. ஏதோ நம்மளாள முடிஞ்சத செஞ்சோம்னு ஒரு திருப்தி வரணும். அதுக்கு ஏதாவது செய்யணும். எப்பப்ப முடியுதோ அப்பப்ப இல்லாதவங்களுக்கு ஒரு வாய் சோறாவது போடணும். அதான் நம்மளாள முடிஞ்சது. இந்த பையனாலதானே இந்த எண்ணம் வந்திச்சு. இவன்கிட்ட இருந்தே தொடங்குவோம்னு அவனருகில் சென்றார். பார்த்துகிட்டு இருந்த கூட்டம் ஏதோ தங்களாள முடிஞ்சத போட்டுட்டு கலைஞ்சு போனது. சுப்பு அவன் அருகில் போய் ஒரு ஐநூறு ரூபாயை கொடுத்துவிட்டு..

‘நல்லா பாடின தம்பி..உன் பேரு என்ன?’

ஐநூறு ரூபாயை பார்த்த சந்தோசத்தில் கும்பிட்டுக்கொண்டே ’ஸார் பாரதி ஸார்’.

No comments:

Post a Comment