Wednesday, June 13, 2012

2007 - அது ஒரு போர்க்காலம்

'வெரி ஸொரி! இது ரொம்ப ரிஸ்க்... பர்மிஷன் கொடுக்க முடியாது'

'ப்ளீஸ் ஸார்.. கொஞ்சம் முயற்சி பண்ணுங்கோ! நிறைய நாளா நான் இதுக்காக கஷ்டப்படுறன்.'

'மிஸ்டர் குணசேகர சொன்னதுனாலதான் நான் இவ்வளவு தூரம் செஞ்சனான்! இதுவே பெரிய விசயம், இதுக்குமேல என்னால எதுவும் செய்யமுடியாது...நீங்க போறதெண்டா போங்கோ… அதுக்குவேண்டுமெண்டா எழுதிக்கொடுக்கிறேன்.'

இதற்குமேல் அந்த மனிதனிடம் கெஞ்சி பிரயோசனமில்லை என்று முடிவுசெய்த சுகுமார் இந்த முயற்சியை கைவிட்டுவிட்டு பிரான்ஸூக்கே திரும்பிவிடலாம் என்ற யோசனையுடன்தான் வெளியே வந்தான். ஆனால் அதோ.. வெயில் காயக்காய வெட்டவெளியில் அமர்ந்திருந்து தன் மகன் எப்படியும் தன் விருப்பத்தை நிறைவேற்றுவான் என விழிகளில் ஏக்கத்தோடு காத்திருக்கும் தந்தை, அவருக்கு என்ன பதில் சொல்வது? சரி இவ்வளவுதூரம் வந்துவிட்டோம் இன்னும் கொஞ்சம் முயற்சிக்கலாமே என உள்ளம் கொடுத்த ஊக்கத்தால் மலர்ந்தமுகத்துடன் தன் தந்தையை எதிர்கொண்டான்...

'என்னய்யா... போகலாம்தானே?'

ஆர்வத்துடன் பதிலை எதிர்பார்த்த தந்தையின் முகத்தை ஏறிடாமல் 'அது... ஓமப்பா... ஒண்டும் பிரச்சனையில்ல. மிஸ்டர் ரஞ்சனுக்கு கொஞ்சம் வேலயிருக்காம்.. எங்கள போக சொல்லிட்டார். நாளைக்கு வெளிக்கிடுவம்.' என்று கூறியதுதான் தாமதம், மகிழ்ச்சி பெருக்கால் மகனை கட்டியணைத்து முத்தமிட்டார் அந்த நரைபூத்த கிழவன்.

இன்று இரவும் அதே அம்பிகா லொட்ஜில் தங்குவதென்று தீர்மானித்த காலி செய்வதற்காக கட்டிவைத்த மூட்டைகளில் ஒன்றை மட்டும் அவிழ்தனர். சுகுமாரின் மனதில் மட்டும் ஆயிரம் கேள்விகள் எழுந்து பதிலின் வழிதெரியாமல் ஒன்றோடொன்று முட்டிமோதிக் கொண்டிருந்தன. எப்படி அங்கே செல்வது? அதுவும் இந்த சூழ்நிலையில்..... அப்பாவை சமாதானப்படும் கட்டத்தை எப்போதோ தாண்டிவிட்டதால் இனி அதை பற்றி நினைத்து பிரயோசனமில்லை. கொழும்பிலேயே இருந்து அடுத்தது என்னவென்பதை திட்டமிட்டல்லவா வந்திருக்கவேண்டும்... இங்கே வந்துவிட்டு அங்குமில்லாமல் இங்குமில்லாமல் நடுவில் நின்று தத்தளிக்கவேண்டியிருக்கிறதே என மனதை போட்டு உருட்டிக்கொண்டிருந்தான். இந்த கவலைகள் எதுவுமில்லாமல் சிறுகுழந்தையைப் போல உறங்கிகொண்டிருக்கும் அவன் தந்தையின் மனதில்தான் இந்நேரம் எவ்வளவு மகிழ்ச்சி படர்ந்திருக்கும். எத்தனை நாள் கனவிது... நாளை நினவாகும் என்ற நம்பிக்கையில்தானே இந்த தூக்கம். அது நடக்காதென்றால் எத்தனை பெரிய ஏமாற்றம்... நொருங்கிபோய்விடுவாரே என்ற கவலையில் உறக்கம் வராமல் உலவிக்கொண்டிருக்கும்போது கதவை திறந்துகொண்டு உள்ளேவந்தான் சுந்தரம்பிள்ளை.

யாழ்நகரில் ஒரு வேன் வைத்துகொண்டு வரும்வேலைகளை பார்த்து பொழுதைக்கழிப்பவன் சுந்தரம்பிள்ளை. நாட்டில் யுத்தசூழல் நிலவுவதால் பெரிய சம்பாத்தியங்கள் ஒன்றும் வருவதில்லையென்ற கவலை அவனுக்கு. யுத்தம் முடிந்தது, யாழ்ப்பாணத்துக்கு யாரும் வரலாம் யாரும் போகலாம் என்ற நிலைமட்டும் வந்தால் தனக்கு நல்ல வாழ்க்கையேற்படும் என கனவு கண்டுகொண்டிருப்பவன். குறிஞ்சிபூ மாதிரி சுற்றுலாபயணிகள் வந்திருப்பதாக தெரிந்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு ஓடிவந்தான். இந்த ஒரு பயணத்தை ஒழுங்காக முடித்தாலே கிட்டத்தட்ட இரும்புக்கடைக்கு செல்வதற்கு தயாராயிருக்கும் அவனது ஓட்டை வேனை குறைந்தபட்சம் ஓடுமளவிற்காவது திருத்திவிடுவான். ஆனால் ஊரில் வேறு வேனே இல்லாத மாதிரி என்னுடைய வண்டியை ஏன் கேட்கிறார்கள் என்ற குழப்பதோடு நுழைந்தவனை அவசர அவசரமாக தனியாக இழுத்துக் கொண்டுபோனான் சுகுமார்.

'ஸார்.. அவசரமா ஊருக்கு போக வண்டி வேணுமெண்டு கேட்டனியளாம். எண்ட வேன் இருக்கு ஸார். சும்மா பறக்கும் ஸார்...எப்ப போகோணும்? நாளைக்கா? எங்க கொழும்புக்கா?'

அடுக்காக பேசிமுடித்தான் சுந்தரம்பிள்ளை. நிதானமாக அவனை பார்த்து 'கொழும்புக்கில்ல, வடமராச்சிக்கு போகோணும்.' என்று கூறிவிட்டு அவன் என்ன யோசிக்கிறான் என நோட்டமாக பார்த்தான் சுகுமார்.

பீதியில் உடல்வெளிரிப்போனான் சுந்தரம்பிள்ளை... 'என்ன சொல்லுறியள் ஸார்? நாட்டு நிலம என்னவெண்டு தெரிஞ்சுதான் கதக்கிறியளா? டவுணுக்குள்ளேயே மனுசனால நிம்மதியா வாழ முடியேல. ஆர்மி செக்கப்பெல்லாம் வீதிக்கு ஒண்டு போட்டுருக்கானுவள். எல்லாத்தயும் தாண்டி போறதெண்டுறது நடக்காத காரியம். நான் என்ன எவனும் வரமாட்டான். பேசாம கொழும்புக்கே போயிடுங்கோ. ஒருவேள கொழும்புக்கு நீங்கபோறதுண்டா சொல்லுங்க எண்ட வேன் இருக்கு.'

'எனக்கு எல்லாம் நல்லா விளங்குது! யாரும் வரமாட்டேன்றாங்கறதாலதான் உன்ன கூப்புட்றேன். உனக்கு எவ்வளவு காசு வேணுமோ கேளு.'

'காசா? கடவுளே! போறவழியில எவ்வளவு காடு இருக்கெண்டு தெரியுமா? உங்கள பார்த்தா பர்மிஷன் இல்லாத ஆள்மாதிரிவேற இருக்கு. யார்மேலயாவது சந்தேகம் வந்தா பேச்சுக்கேயிடமில்லை! உசிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த வேலய ஏன் செய்யணும். உள்ளூர்காரன் எண்ட பொழப்பயும் சேத்து கெடுக்க பாக்குறியள்.'

'இல்ல... கண்டிப்பா போகத்தான் வேணும். ஒரு நாளேள போயிட்டு வந்துடலாம். உனக்கு எந்த பிரச்சினையும் இல்லாம நான் பாத்துக்கிறேன்.'

'நீங்க என்ன சொன்னாலும் சரி நான்.. சம்மதிக்கமாட்டன்.'

'பத்தாயிரம் ரூபா தாரன்'

'சரிவராது ஸார்.. என்ன விடுங்கோ'

'அம்பதாயிரம் தாரன்... கடசி பேச்சு. நாளக்கு காலம வெளிக்கிடோணும்'என்று கூறிவிட்டு உறங்கச் சென்றான் சுகுமார்.

தனக்கு இருக்கும் காசுபிரச்சினையை மனதில் வைத்து அரைமனதாக தயாரானான் சுந்தரம்பிள்ளை. காலையெழுந்தவுடன் உற்சாகத்தோடு புறப்பட்ட தந்தையை மகிழ்ச்சியோடு பார்த்தான் சுகுமார். ஒரு மண்பாண்டமும் கிலோ அரிசியும் எடுத்துக்கொண்டனர். ஆறுமணிக்கெல்லாம் சுந்தரம்பிள்ளையும் வந்து சேர்ந்தான். தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வண்டியில் ஏறினார்கள். காலையிளங்காற்றின் சுகந்தம் இதயத்தை தாலாட்ட பயணம் சீராக போய்க்கொண்டிருந்தது. என்ன நடக்க போகுதோ என்ற பீதியில் சுந்தரம் வண்டியோட்ட தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றவேண்டுமேஎன்ற படபடப்பில் சுகுமார் மூழ்க கிழவரோ செல்லும் வழியெங்கும் தான் வாழ்ந்த இடங்களின் நினைவுச்சுவட்டை எண்ணியெண்ணி பரவசமடைந்தார்.

அதோ அந்த புல்வெளியில் நான் விளையாடியிருக்கிறேன் இதோ இந்த குளத்தில் நான் குளித்திருக்கிறேன் என்று அவரது பிள்ளைப்பிராயத்தை மீண்டும் மனதில் இருத்தி ஒரு குழந்தையாய் மாறினார். அப்பப்பா.. அஞ்சு வயசில ஓடியாடிய இடங்களையெல்லாம் அறுபத்தஞ்சு வயசுல வந்து பார்க்கும்போது அந்த பூரிப்பு இருக்கே அதையெப்படி வார்த்தைகளால் சொல்லமுடியும்? நான் பிறந்துவளர்ந்த இடங்களையெல்லாம் மறுபடியும் பார்க்கத்தான் இவ்வளவுகாலமா அந்த ஆண்டவன் என்னை கூப்புடாம இருந்தான்போல.... இதயெல்லாம் திரும்பி பார்க்க பவானிக்கு குடுத்துவக்கலியே... எத்தனை கஷ்டத்துலயும் எங்கூடவேயிருந்தாளே. எனக்கு பத்தொம்பது வயசிருக்கும்போது அவ கையபிடிச்சேன். அவ சாகுறவரைக்கும் அதே கைக்குள்ளதானே தாயின் செட்டைக்குள்ளே சுகம் காணும் ஒரு குருவிக்குஞ்சைப்போல அடங்கியிருந்தாள். அவ இல்லாம நான் வாழுவனெண்டு நினைச்சும் பார்க்கலியே.. எண்பதுலயும் தொண்ணூறுலயும் சண்ட முத்தி இந்த மண்ணவிட்டே போகணும்னு ஒரு சூழ்நில வந்தப்போ இதவிட்டே வரமாட்டேன் செத்தாலம் பரவாலயெண்டு மண்ணில் புரண்டு கதறினாளே பிள்ளட எதிர்கலத்துக்காக நான் என்ன கஷ்டப்பட்டு அவள கூட்டிகொண்டு பிரான்சுக்கு போனனான். பிறந்த மண்ணுலதான் தன்ற உசுர் போகணும்னு சொல்லிக்கொண்டிருந்தாளே! கடைசில அது நிறைவேறாமலே போயிடுச்சே... தாய்க்கு தாயாய் மனைவிக்கு மனைவியாய் குழந்தைக்கு குழந்தையாய் என்னுடன் இருந்தாளே.. இவன் சுகுமார் பிறந்து எங்களுடன் தவழ்ந்து விளையாடும்போதெல்லாம் அவனைவிட இவள் குழந்தையாயிருந்தாளே அவன் வளரந்து பெரியவனாகிவிட்டான் ஆனால் அவள் சாகும்போதுகூட ஒரு குழந்தைதனத்தோடு இருந்தாள். அவள் மரணப்படுக்கையில் என்னிடம் கேட்ட ஒரு வார்த்தைக்காகத்தானே இவ்வளவு தாரம் பாடுபட்றேன்.

எண்ணத்தில் கோர்த்துகொண்டிருந்த வண்ணநினைவுகளையெல்லாம் சிதைக்கும்விதமாக எங்கோ தூரத்தில் டமாலென்று ஒரு பெரியகுண்டு வெடித்தது. சற்றுநேரத்தில் உடல்பதறி இதயத்துடிப்பு நின்றுபோனதுபோலிருந்தது. ஐயோ கடவுளே இதுக்குத்தான் நான் அப்பவே வரமாட்டனெண்டனான் என்று புலம்பியபடி வண்டியை வேகமாக ஓட்டினான் சுந்தரம். பயம்தொற்றிக்கொண்ட சுகுமார் தந்தையையும் சேர்த்து குனிந்துகொண்டான். அதே அதிர்வுகளோடு இன்னும் இரண்டு குண்டுவெடித்த சத்தம் கேட்டது. ஆனால் அது மிகத் தொலைவில்தான் வெடித்திருக்கவேண்டும். இந்த இடத்தில் பயணம்செய்ய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பிடித்தார்கள் என்றால் வண்டிசாரதிஅனுமதிபத்திரத்தை ரத்து செய்வதோடு தன்னை எத்தனைகாலம் சிறையில்போடுவார்களோவென்ற அச்சம் சுந்தரத்திடம். சிறைதானா அல்லது நேராக சுவர்க்கம்தானா என்பது தனது முன்னோர் செய்த புண்ணியத்தில்தான் இருக்கிறது. அம்மாதாயே யெனக்கென்ன வந்தாலும் பரவால... என் புள்ளக்கு எந்த தீங்கும் வராம காப்பாத்தி விட்டுறுமா என ஆண்டவனை வேண்டிக்கொண்டிருந்த தந்தையை பாசத்தோடு பார்த்தான். எத்தனை கிலோமீட்டர் தாண்டி வந்தாயிற்று என்று தெரியவில்லை. குண்டு வெடிக்கும் சத்தமும் கேட்கவில்லை. பதட்டம் சற்று குறைந்த நிலையில் இயல்பிற்கு வந்தனர் மூவரும். இன்டைக்கு யார்ட முகத்துல முழிச்சேனோ தெரியல என்று சலித்துக் கொண்டான் சுந்தரம்.

நீண்டநெடிய பாதை.பாதையின் இருபக்கங்களும் செழிப்பாக வளர்ந்திருக்க வேண்டிய பனைமரங்களின் கருகிய எச்சங்கள். அவைதான் யுத்தம் கொடுத்த பரிசு. அழகிய கிராமமாக இருக்கவேண்டிய இடம் இன்று ஆள் அரவமில்லாத சுடுகாடாக திகழ்ந்தது. பதட்டத்தில் ஒருவன் வண்டியோட்ட,நினைத்ததை முடிக்கும் முனைப்பில் இருவர் செல்லும் அந்த பயணம் ரத்தத்தை மேலும்கீழும் அனுப்பும் வேலையை மட்டும் செய்யும் இதயத்தில் எங்காவது உணர்ச்சியிருக்கிறதாவென தேடி அதை தட்டியெழுப்புவதாகவிருந்தது. வண்டியின் டயர் சத்தத்தை தவிர ஒரு அரவமும் இல்லாமல் தொடர்ந்த அந்த பயணம் இப்போது வடமராச்சிக்குள் நுழைந்து வல்லிபுரம்வரை வந்துவிட்டது. சற்றும் எதிர்பார்க்காதது என்று செல்லமுடியாது ஆனாலும் திடீர்திருப்பமாக எதிரேகண்ட அந்த ஆர்மிக்காரர்களின் குவியல் மூவருக்கும் தொண்டைக்குழியையடைத்தது. அது ஒரு ஆர்மி காம்ப். சரிதான் அடுத்தவருடம் இந்நேரம் நமக்கு திவசம் நடக்கபோகுது என்று முடிவேசெய்தான் சுந்தரம். வேனைக்கண்டவுடன் ஒரு ஆர்மி கையைக்காட்டி வண்டியை நிறுத்தினான். வண்டியில் இருந்த மூவரும் தமிழர்கள் என்பதை கண்களாலேயே அளந்து ஏதோ தீவிரவாதியையே பிடித்தவிட்ட நினைப்பில் ஒரு ஏளனச்சிரிப்பு சிரித்தான். மூவரும் வண்டியிலிருந்து இறங்கினர். அவர்களை ஆர்மிகளெலாம் சுற்றிவளைத்தனர். இப்பிடி வந்து மாட்டிக்கொண்டோமேயென சுந்தரம் பதற வந்த காரியம் நடக்காதோவெனப் பயந்தனர் மற்ற இருவரும். மேலதிகாரிபோல ஒருவன் வந்து ரெண்டு நிமிடம் மேலும்கீழும் பார்த்தான். யார் நீங்கள் என்று சிங்களத்தில் கேட்டான். அவர்கள் மூவரும் ஒருவரையொருவர் பேந்த பேந்த முழித்தனர். அவன் மீண்டும் கேட்டான். மூவருக்கும் அந்த மொழி தெரியாததால் அவன் என்ன கேட்கிறான் என்று புரிந்தகொள்ளமுடியவில்லை. மேலும்மேலும் கேட்டு சலித்த அந்த அதிகாரி அவர்களுக்கு சிங்களம் தெரியவில்லையென்பதையுணர்ந்து கோபத்துடன் சிங்களம் தெரியாம இந்த நாட்டுக்கு ஏண்டா வந்தனியள் என்று அவனுக்கு தெரிந்த கொச்சைத்தமிழில் அதட்டவதுபோல முன்னுக்குவரவும் சுந்தரத்திற்கு காய்ச்சலே வந்துவிட்டது. ஐயா நானு அப்பவே சொன்னனான் இவையள்தான் கேட்கயில்ல என்று அழுவது போல சுந்தரம் கூறியதும் அங்கிருந்த வாய்களெல்லாம் நக்கல் சிரிப்பு குடிகொண்டது.

'நாங்க இங்க சுட்டிபுரம் கோயிலுக்கு வந்தனாங்க..' என்று சுகுமார் மெதுவாக கூற சுந்தரம் கேள்விக்குறியோடும் அந்த ஆர்மி ஆச்சரியக்குறியோடும் அவனை நோக்கினர்.

'என்ன! கோயிலுக்கா? இங்க சண்ட நடக்குது தெரியாதா?' என்று மிரட்டினான் அந்த ஆர்மிக்காரன்.

‘ஆமாம்! ஆனா நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு பிரான்ஸுல இருந்து வந்து பர்மிஷன் வாங்கினோம். கொழும்புல இருக்குற அரச அதிகாரி மிஸ்டர் குணசேகர பிரான்ஸ்ல எங்கூட வேலபாக்குற ஒரு லேடியோட பிரதர். அவர்ட உதவியால யாழ்நகர காவலாளி ரஞ்சனிடமும் பேசினோம். அவர் போலிஸ் உதவி கிடைக்காது வேண்டுமெண்டா நீங்க போங்கவெண்டு எழுதிக்கொடுத்தவர்’ எனக்கூறி ஒரு காகிதத்தை நீட்டினான்.

அதை வாங்கி படித்தவன் உடனே யாழ்நகர போலிஸுக்கு போன் செய்தான். சிறிது நேரம் பேசிவிட்டு அவர்களிடம் வந்தான். ‘உங்க நேரம் நல்லாயிருக்கு. இதே வேறயாக்களெண்டால் நாங்க டீல் பண்ற விதமே வேற. ரஞ்சன் நல்ல பொலிஸ். அவர் கெஞ்சிகேட்டதால உள்ள அனுப்புறன். ரெண்டு மணித்தியாலத்துல திரும்பி வந்து எங்களிற்ற சொல்லிட்டு வந்த வழியே ஓடிடுங்க…புரியுதா’ என அதட்டினான்.



விட்டது சனியன் என மூவரும் வண்டியில் அமர்ந்து நேராக சுட்டிபுரத்தில் சென்று நின்றனர். அது ஒரு சிறுகிராமம். கூப்பிட்டால்கூட கேட்காத தொலைவு இடைவெளியில் ஒவ்வொரு வீடும் இருந்தது. வேலிகளுக்கு அப்பால் ஒரு கோபுரம் தெரிய மூவரும் இறங்கினர். வண்டியிலிருந்து முதலில் இறங்கியது சுகுமாரின் தந்தைதான். அவருக்கு நேராக தெரிந்ததோ சுட்டிபுரம் கண்ணகியம்மன் கோவில். அம்மா என்று உணர்ச்சி பெருக்கெடுக்க கைகளை தலைக்கு மேலே தூக்கி அப்படியே சாஸ்டாங்கமாக விழுந்தார். அவரைதொடர்ந்த சுகுமார் அவரை கைத்தாங்கலாக தூக்கி, ‘கோயிலுக்குள்ள போகலாம் வாங்கோ’ எனக்கூற ‘இல்ல தம்பி, முதல்ல பொங்கோணும்.. சாமாங்கள இறக்கு’ என்றார். கோயிலுக்கு முன்னேயிருந்த பரந்த நிலத்தில் பொங்கல் காய்ச்சுவதற்காகவே அங்கங்கு மூன்று மூன்று கற்கள் இடப்பட்டு இருந்தன. அந்த வயதான காலத்திலும் உற்சாக மிகுதியால் விறகு எடுத்து அந்த கற்களுக்கிடையில் வைத்து தீமூட்டி பானையைவைத்து தண்ணீர் ஊற்றி அது கொதித்ததும் கல்லரித்த அரிசியை அதில்கொட்டி அது பொங்கும்வரை பக்கத்திலேயே இருந்துகொண்டிருந்த தந்தையை சற்று தள்ளிநின்று ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தான் சுகுமார். அதுவரை பொறுமையாக இருந்த சுந்தரம்பிள்ளை நேராக சுகுமாரிடம் வந்து கோபமாக முறைத்துப் பார்த்தான்.

‘என்ன ஸார்? இப்படி சாமி கும்பிடத்தானா என்ற உசுரப் பணயம்வச்சு கூட்டிவந்தனியள்.’

‘இது என்ற அப்பாட நிறையநாள் கனவு. அத நிறவேத்தி வக்காட்டி நான் என்ன பிள்ள.’

‘நான் கோபத்துல இருக்கன். பேசாதீங்கோ… வந்தவரக்கும் உசுரு தப்பினது மூத்தார் புண்ணியம். அப்படி இந்த கோயிலுக்கு கட்டாயம் வரத்தான் வேணுமோ?’

‘இந்த மண்ணவிட்டு உசுர தப்பிச்சு வெளில வாழுற எங்கட சனங்களெல்லாமுமே எண்டக்காவது ஒருநாள் தங்கட பிறந்த மண்ண பார்க்கமாட்டமாண்டு எப்படி ஏங்குறாங்கள் தெரியுமா? இந்த சந்தர்ப்பம் எங்கட வாழ்க்கைல இனி எப்ப கிடைக்கபோகுது? நான் அம்மாட வயித்துல இருக்ககுல இந்த கோயிலுக்கு வந்து நான் நல்லா பொறக்கவேண்டுமெண்டு அம்மாவும் அப்பாவும் நேர்த்தி வச்சவயள். கலவரத்தால இடம்பெயர்ந்ததால நான் பொறக்கும்போது அத செய்யமுடியேல. பிறகு வேத்து தேசத்துக்கு போய் நல்லாவற்றதுக்காக நாய்பாடுபட்டதுல கொஞ்சகாலம் போயிட்டு. பிள்ளக்காக வச்ச நேர்த்தி செஞ்சேயாகோணுமெண்டு அம்மா ஒத்தக்கால்ல நின்னவா. கடசிவரக்கும் அவாக்கு அந்த குற இருந்துகொண்டேதானிருந்தது. அவா போனபிறகு அப்பாவ என்னால சமாதானப்படுத்த முடியேல. நெடுங்காலமா நெஞ்சுக்குள்ள வச்சிருந்த ஆச நிறவேறாம உங்கம்மா மாதாரா நானும் போகணுமெண்டு நினக்கிறியா எண்டு கவலப்பட தொடங்கிட்டார். வேற வழியல்லாம அவர சந்தோசப்படுத்த இத்தனை கஷ்டங்களயும் தாண்டி வந்துட்டன்.’

‘உங்கட நோக்கம் புரியாம பேசிட்டன். மன்னிசிடுங்கோ. உங்களமாதிரி இந்த காலத்துல எந்த பிள்ளயள் இருக்குதுகள்? இருந்தாலும் உசுர வெறுத்து இப்படி சாகசம் பண்ணினது கொஞ்சம் அதிகமாத்தான்படுது.’ என சுந்தரம் சொல்லவும் இருவரும் குபீரென சிரித்தனர்.

‘தம்பி, பொங்கிடுச்சு… வா படைப்போம்.’ என தந்தை கூப்பிட்டதும் சுகுமார் அவரிடம் ஓடினான். சுந்தரம் இனம்புரியாத சந்தோசம் கிடைத்த திருப்தியில் வேனில் ஏறி இருக்கையில் சாய்ந்து வேன்ரேடியோவைப் போட்டான். காய்ச்சிய பொங்கலை கையில் எடுத்துக்கொண்டு தகப்பனும் மகனும் கோயிலைநோக்கி சென்றனர். அடிவாரத்திலிருந்து கோபுரத்தை பார்த்தார்கள். நமது பாரம்பரிந்த்தின் கடைசி அடையாளமாயிற்றே. மெலும் உற்சாகம் பொங்க ஒரு சிறுகுழந்தைபோல தந்தை கோயிலினுள்ளேயோட அவருக்கு பின்னால் ஓடியவன் தடுமாறி யார்மேலோ விழுந்துவிட்டான். சுதாரித்து எழுந்தபின்தான் தெரிந்தது அது ஒரு அழகான இளம்பெண். அவளை பார்த்த மாத்திரத்தில் அப்படியே ஸ்தம்பித்து நின்றவன் அவள் எழுந்து செல்லசெல்ல அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளும் திரும்பி திரும்பி பார்த்து புதுப்பிரச்சனைக்கு வித்திட்டாள். அவள் கண்ணிலிருந்து மறந்தபின் திரும்பவும் இங்க வரோணும் என்று சிரித்துவிட்டு தந்தையிடம் ஓடினான். எங்கிருந்தோ வானோலியில் மிதந்துவந்தது ஒரு கீதம் ‘இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை, இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை.’

Tuesday, June 5, 2012

முகப்புத்தகம்

என்ன ஒரு முட்டாள்த்தனம்! நான் ஏன் இப்படி செய்தேன்? சரியா தவறா என்று யோசிக்காமல் அவசரத்தில், அவசரம் என்றுகூட சொல்லமுடியாதே… இது ஒரு சபலம். இந்த சபலத்தில் நான் செய்த காரியம் என்ன விளைவுகளை ஏற்படுத்தப்படுத்தப்போகிறதோ என்று நினைத்தாலே தலையை சுத்தி பத்துபேர் நின்று ஒரேநேரத்தில் சுடுவதுபோல இருக்கு… ஆ… என்ன சுடும்போது குனிந்துவிடவேண்டியதுதானே என்கிறீர்களா… என் மனச்சாட்சி என்னை சுடுமே அதிலிருந்து எப்படி தப்பிச்செல்வது? ஆ… அதற்கு முதல் அந்த ஃபேஸ்புக்கை சுடவேண்டும். எவன்தான் கண்டுபிடிச்சானோ அவன் இடி விழுந்துதான் சாவான். என்னை என்ன பாடு படுத்தியது…….

ஃபேஸ்புக். முகப்புத்தகம். 2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கைக்கு எப்போது வந்தது என்று சரியாக நினைவில்லை. இன்று இலங்கையில் 90வீத மக்களுக்கு இணையஅறிவு இருக்கிறது. ஆனால் 2005, 2006 ஆண்டுக்காலங்களில் 50வீதமானோருக்கும் குறைவாகவே இணையபாவனையாளர்கள் இருந்தார்கள். முகப்புத்தகம் முதலில் சென்றடைந்தது பள்ளி, கல்லூரி மாணவர்களிடம்தான். அந்த கவர்ச்சியில் உந்தப்பட்டு இன்னும் பலர் அதற்கு அடிமையானார்கள். 2007,2008,2009 என வருடாந்தம் அதன் பாவனையாளர்கள் அதிகரித்து இன்று இலங்களையில் முகப்புத்தக பாவனையாளர்களாக இல்லாதோர் எவரும் இல்லை என்று ஆகிவிட்டது. மன்னிக்கவும் அகதிமுகாமில் அடுத்தவேளை உணவை யார் தருவார்கள் என்று ஏக்கத்தோடு வாழ்வோரும் புறக்கோட்டையில் நாள்கூலிக்காக தினமும் வண்டி இழுத்தும் மூட்டைதூக்கியும் சம்பாதித்து அந்த காசுகூட கையில் நிலைக்காமல் எதிர்காலத்தை வெறுங்கையுடன் எதிர்நோக்குவோரும் மலைநாட்டில் பிறந்து படிக்க வசதியில்லாமல் குடும்ப வருமானத்திற்காக கொழும்புக்கடைகளில் வேலைபார்க்கும் சிறுவர்களும் இந்த பட்டியலில் வர வாய்ப்பில்லை. காரணம் அவர்களுக்கு முகப்புத்தகத்தை அணுகும் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. கசப்பான உண்மை என்னவென்றால் இப்படி பரிதாபத்திற்குரிய மக்களுக்கும்கூட முகப்புத்தகத்தை பாவிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களையும் அது விட்டுவைக்காது. அதற்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா? பொதுவாக இந்தமாதிரியான விடயங்கள் செவிவழியாகத்தான் பிரபலமடையும். 2009ல் கிட்டத்தட்ட அனைத்து பள்ளிமாணவர்களும் முகப்புத்தக பாவனையாளர்களாக இருந்தநேரம் எனக்கு அதைபற்றிய அணுகமுறை தெரியாததாலும்(ஏன் முகப்புத்தகம் பாவிக்கிறார்கள் என்றுகூட எனக்கு தெரியாது) எனது வீட்டில் கணினி இல்லாததாலும் நான் முகப்புத்தகத்தை உபயோகிக்கவில்லை. அது போகப்போக எனக்கு பெரிய அவமானமாக இருந்தது. மற்ற மாணவர்கள் என்னை ஒருவித பரிதாபத்தோடு பார்த்தார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. எப்பாடுபட்டாலும் நாமும் முகப்புத்தகத்தில் இணைவது என்று முடிவெடுத்து கொஞ்சம்கொஞ்சமாக அதைபற்றி தெரிந்துகொண்டு எப்படியோ 2010ல் முகப்புத்தகத்தில் இணைந்தும்விட்டேன். புதிதாக ஒருவிடயத்தை பார்க்கும்போது அதுவும் உலகமே கொண்டாடும் ஒரு விடயத்தை நாமும் அனுபவிக்கபோகிறோம் என்ற வியப்பும் மிரட்சியும் என்னில் தொற்றிக்கொண்டன.



முகப்புத்தகத்தில் இணைந்தாயிற்று. இப்போ யாரை நண்பராக்குவது? என் பள்ளிதோழர்களின் பெயர்களை தட்டிப்பார்த்தேன். தக்ஷன் என்று கேட்டால் நூறு தக்ஷன்களின் வந்தது, அனைவரும் ஏதாவது ஒரு சினிமாநடிகனின் படத்தை போட்டிருந்தார்கள். இதில் என் நண்பனை எப்படி கண்டுபிடிப்பது? அதனால் அவர்களை நேரில் பார்க்கும்போது அவர்களின் விபரங்களை கேட்டுதெரிந்துகொண்டு அதன்பிறகு இணைத்துக்கொள்வோம் என நினைத்து அவர்களை தேடும் முயற்சியை விட்டுவிட்டு பொதுவாக தேடும் பொழுது அழகான பெண்கள் பலரின் முகவரிகள் கிடைத்தன. இத்தனை பெண்களோடு ஒரேநேரத்தில் நட்பு கிடைப்பதென்பது எத்தனை பெரியவிடயம்… முகப்புத்தகத்திற்கு கோயில்கட்டி கும்பாபிஷேகம்செய்து நானே முதல் ஆளாய் அர்ச்சனை செய்யவேண்டும் போலஇருந்தது. நான் கொடுத்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு நண்பராக இணைத்த சில பெண்களோடு முதலில் ‘ஹை’ அளவில் பேச்சுக்கள் தொடங்கின. சிறிது நாட்களுக்குள் சிலர் நல்ல நெருக்கமாக பழகுவதால் மெதுவாக இரட்டையர்த்த வார்த்தைகளுடனான பேச்சு இடம்பெற்றது. அதற்கு மறுப்பு வராத நண்பிகளிடம் கொஞ்சம்கொஞ்சமாக ஆபாச உரையாடல் ஆரம்பமானது. சிலர் அந்த கணமே நண்பர்பட்டியலில் இருந்து தூக்கிவிட்டார்கள். ஆனாலும் இன்னும் சிலர் அதனூடும் தொடர்ந்தனர். இணையத்தினூடாக எத்தனையோ பெண்களுடன் சல்லாபித்திருக்கிறோம் என எனது நண்பர்கள் அளந்துவிடும்போதெல்லாம் வயிறு எரிந்து காதுவழியாக வந்த புகைக்கு நீர் ஊற்றி அணைக்கும் விதமாக ஆஹா!....ஓஹோ!... எத்தனை பெண்களடா! நாம் சொல்லும் அனைத்திற்கும் ஆமோதிக்கிறார்களே என்று பூரித்து இருக்கும் வேளையில்தான் நண்பர்கள் மூலமாக ஒரு விடயம் தெரிந்தது. அதாவது பொழுதுபோகாத சில பொறுக்கி பசங்க, பொண்ணுங்க மாதிரி கணக்கு வைத்துக்கொண்டு இன்னொரு ஆண், பெண் என்று நினைத்து வழியிறதை ரசிப்பாங்களாம். கண்றாவி. ஐயய்யோ! நான் எத்தனை பேரிடம் ஏமாந்தேன் என்று தெரியவில்லையே! அட மடையா எந்த பெண்ணாவது முன்னபின்ன பார்க்காத முகம்கூட தெரியாத ஆளோட இப்பிடி பேசுவாங்களா? முதல்வேளையாக அனைவரையும் நண்பரிலிருந்து தூக்கிவிட்டேன். என்னை ஏமாத்தின அத்தனை பாவிகளும் நடுரோட்ல நாய் தொரத்தாம சாகமாட்டாங்க.. அப்பிடி இருந்தும் மனம் ஆராததால் உடனே பெண்போல ஒரு கணக்கை ஆம்பித்து என்னை பத்துபேர் ஏமாத்தியதற்கு ஈடாக ஆயிரம்பேரை நான் ஏமாற்றியபின்தான் மனம் சற்று அடங்கியது.

அதன்பிறகு எனக்கு முகம் தெரியாத ஆட்களை நான் இணைத்துக் கொள்வதில்லை. தெரிந்தவர்களை இணைத்து அவர்கள் மூலமாக வேறு யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என அவர்களது நண்பர் பட்டியலை ஆராய்ந்து அவர்களையும் இணைத்துகொள்வது வழக்கம். அப்படித்தான் ஒருநாள் தேடும்போது சிவானியின் படத்தை பார்த்தேன். சிவானி ஜெய் என்று பெயர் இருந்தது. என் நினைவிலே என்றுமே துருப்பிடிக்காத அவளது சிரிப்புடனும் அவளை பார்த்து கிறங்கவைத்த அந்த பொட்டுடனும் அப்படியே இருந்தாள். ஒரு சிறு வித்தியாசம் நெற்றியில் வைத்திருந்த பொட்டுக்கு மேலாக உச்சிவகிட்டில் இன்னொரு பொட்டும் வைத்திருந்தாள். இவளை இனி என்றுமே பார்க்கமுடியாது என நினைத்த என் வாழ்க்கையைவிட்டு தொலைந்து போனவளை மீண்டும் கண்டுபிடித்து என் கண்முன்னே நிறுத்தியது முகப்புத்தகம்.

சிவானி. என் காதலி. ஜெய் அவளின் காதலன். அவளுக்கு என்னைவிட நான்கு வயது அதிகம். நான் பள்ளியில் படிக்கும்போது அவள் கல்லூரி முடித்திருந்தாள். இரண்டு வருடத்திற்கு முன் என் பெரியப்பாவின் மளிகைகடையில் ஆள்குறைவதால் என்னையும் உதவிக்கு அழைத்தார். ஒரு மாதம் தவணைவிடுமுறை இருந்ததால் ஒரு உதவிக்காகவும் வேலை பழகின மாதிரி இருக்கும் என்பதாலும் அங்கே சென்றேன். ஒரு மாதம்தான் அங்கே இருந்தேன். அந்த ஒரு மாதம்தான் அவளைப் பார்த்தேன். ஆனால் வாழ்க்கைக்கு மறக்கமுடியாது. பெண்களுக்கு இரண்டு காதல்கள் இருந்தாலும் புதுக்காதல் வந்தவுடன் தேவையில்லை என்று உதறிய பழைய காதலை அடியோடு மறந்துவிடுவார்கள். ஆனால் ஆண்களோ ஆயிரம் காதலிகள் வந்தாலும் அனைவரோடும் இருந்த தருணங்களை புத்தகமாக போடும் அளவுக்கு நினைவில் வைத்திருப்பார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம். சும்மா காதலுக்கே அப்படியென்றால் என்னுள் முதன்முதல் காதல் உணர்வை ஏற்படுத்தியவள் சிவானி. மரணத்தில்கூட அவள் நினைவு பசுமையாகத்தான் இருக்கும். எங்கள் கடைக்கு பக்கத்தில்தான் அவர்கள் வீடு இருந்தது. எதற்கெடுத்தாலும் அங்கே வந்துதான் பொருள் வாங்குவாள். நான் புதுசு என்பதால் பெரிதாய் பழக்கமில்லை. எங்கள் பெரியப்பாவுடன் நல்ல நட்பாய் பழகுவாள். ஒருநாள் பெரியப்பா கடையில் இல்லாத நேரம் வந்திருந்தாள். நானோ ஏற்கனவே வந்திருந்த ஒரு பெரியவரின் கணக்குகளை பார்த்துக்கொண்டு இருந்தேன். அவர் ஏகப்பட்ட பொருட்களை கேட்டிருந்ததால் அனைத்தையும் சரிபார்ப்பதற்குள் விழிபிதுங்கிவிட்டது. அவள் என்னை திரும்பதிரும்ப கூப்பிட்டும் நான் கவனிக்காததால் கோபத்தின் உச்சிக்கே சென்றவளாட்டம் ‘நீங்க இந்த கடையில வேல பாக்கணுமா வேணாமா?’ என்றாள். நிமிர்ந்து அவள் முகத்தை முதல்தடவையாக பார்த்தேன். அழகுல மயங்குறதுன்னு சொல்லுவாங்களே அதுதான் அதேதான்… என்ன முறைப்பு சாமி முன்னுக்கு நிற்பவர்கள் எரிந்துபோவதுபோல கோபம். முறைக்கும்போதே இவ்வளவு அழகென்றால் சிரித்தாள் எப்படி இருப்பாள். அட… இவள் எப்படி என் பெரியப்பா கடையில் இருந்து என்னையே மிரட்டுவாள் என எனக்கும் கோபம் வந்துடுச்சுனா பாருங்களேன். நானும் ஏட்டிக்குபோட்டியாக நின்றதால் கோபத்துடனே சென்றுவிட்டாள். பெரியப்பாவிடம் அவளைப்பற்றி கூற அவரும் அவள் விளையாட்டுப்பெண் சும்மா விளையாட்டுக்கு சொல்லியிருப்பாள் என்று போய்விட்டார்.
நாட்கள் செல்லச்செல்ல எங்களுக்கிடையிலான பேச்சு கொஞ்சமாய் மிகக்கொஞ்சமாய்த்தான் அதிகரித்தது. ஆனால் அவள் மீது கொண்ட காதலோ ஜெட் வேகத்தில் பறந்தது. வயது பிரச்சினை வருமே என புத்தி சுட்டிக்காட்டினாலும் இளமைக்கேயுண்டான துடுக்கால் அதெல்லாம் பெரியவிசயமா என மனசு போலிவீராப்பு காட்டியது. அவள் ஒவ்வொருமுறையும் கடைக்கு வரும்போதும் பாரதிராஜா படத்துல வாறமாதிரி நாலு தேவதைகள் அவளை பூத்தூவி வரவேற்பது போல கற்பனைக்குதிரை பூட்டிய கனவுத்தேர் என் தலையைசுற்றி வலம் வந்தது. அவள்தான் என் வாழ்க்கை என்று செத்துப்போன அப்பத்தா மேல சத்தியம்லாம் செஞ்சேன். அப்போதுதான் அவளும் ஜெய்ன்றவனும் லவ்வுறதாவும் அவன் கனடால இருக்குறதால இந்த மாசமே அவளும் கனடா போறாள்ன்றதும் தெரியவந்தது. ஒருநாள் முழுக்க கடைக்கு லீவு போட்டு ரூம் பூட்டிட்டு விடியவிடிய உக்காந்து அழுதேன். கனடாவுல இருக்குற அந்த ஜெய்க்கும் ஏதாவது ஒரு வெள்ளைக்காரிக்கும் காதல் வரக்கூடாதா? இல்லாட்டி இவளுக்கு விசா கிடைக்காம இருக்கணும் இப்படி ஆயிரம் பிரார்த்தனைகள் வைத்தும் கனடாக்கு போறதுக்கு ஆயத்தமாகி வந்து நின்றாள். மனம்திறந்து சொல்லவும் முடியவில்லை. பெரியப்பாவுக்கு தெரிந்திருந்தால் இந்நேரம் என் படம் பத்திரிகையில் இரண்டாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி என்று வந்திருக்கும். இப்படி நான் புலம்பி முடிப்பதற்குள் அவள் கனடா போய்விட்டாள். போறவள் சும்மா போகலாம்தானே சொல்லிட்டு போறதுன்ற பேர்ல வந்து சிரித்துட்டு போனாளே…. செத்துட்டேன். அப்ப அவ்வளதானா? என் தெய்வீக காதல் இப்படித்தான் முடியவேண்டுமா? யாரென்றே தெரியாத அந்த ஜெய்மீது கொலைவெறி உண்டானது. டேய் மவனே உன்னையே நம்பி வாற என் சிவானிக்கு ஏதாவது கொடுமை செஞ்சே….. செத்தடா.. ஐயோ இப்படி பைத்தியக்காரனாய் மாத்திட்டு போய்ட்டாளே!

போனவள் போனவள்தான் அவள் நினைவு மட்டுமே இனி நிஜம் ன்றிருந்த வேளையில் அவளோடு பேச இன்னொரு வாய்ப்பு கம்ப்யூட்டர்கதவை தட்டும் போது வேணாம்னா சொல்வேன். முதல்தடவை பார்க்கும்போது அவள் முறைத்த முறைப்பும் கடைசியாக போறதுக்கு முன்னால திரும்பி பார்த்து சிரித்த சிரிப்பும்தான் இப்போதைக்கு என் காதல்சின்னங்கள். இன்று அவளது முகப்புத்தக கணக்கும். அவளுக்கு உடனடியாக விண்ணப்பம் அனுப்பினேன். அவள் எப்போ வருவாள் எப்போ என் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வாள் என முகப்பத்திலேயே தூங்கினேன். ஒரு தகவல் வந்தது. சிவானி ஜெய் உங்களின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார். என் காலை தரையில் தேடிப்பார்த்தேன். அது வானத்தில் பறந்துகொண்டிருந்தது. ‘ஹை, என்னை ஞாபகம் இருக்கா?’ என்ற கேள்வியுடன் ஆரம்பித்தேன். ம்ம்ம் என்று மட்டுமே பதில் வந்தது. அவளோடு நிஜமாகவே பேசுகிறோம் என்ற பிரமிப்பில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. என்ன செய்றீங்க சிவானி எனக்கு உங்க நினைவு பசுமையா அப்படியே இருக்கு என்றேன். சரி அந்த நினைவுகளை கொஞ்சம் சொல்லுங்கள் என்றாள். பதட்டம் அதிகரித்தது. கைகளும் நடுங்கியது. அவள் இருக்கும்போது என் மனது இறக்கைகட்டி பறந்த நினைவுகளை அழகாக எடுத்து சொன்னேன். கருமம் பிடிச்சவன் அவளை காதலிக்குறதையும் சொல்லி தொலச்சுட்டேன். எப்ப சொன்னேன்னு தெரியல. மனசுல இருந்ததெல்லாம் தட்டிகிட்டு இருக்கும்போது அதுவும் வந்திடுச்சு. கணனித்திரையில் நான் எழுதிய செய்தியை பார்த்தவுடன்தான் தெரிந்தது எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும், நான் உங்கள காதலிச்சேன் இப்பயும் காதலிக்குறேன்னு எழுதியிருக்கிறேன். ஐயோ என்ன சொல்லப்போறாளோ என்று பயத்துடன் நகத்தை கடித்துக்கொண்டு இருக்கும்போதுதான் ‘நானும்தான்’ என்று பதில் வந்தது. இதயம் நின்னேபோச்சு. நெஞ்சுல தட்டிதட்டி இயங்கவைத்தேன். நான் மறுமொழி கூறுவதற்குள் ‘எனக்கு நேரமாச்சு ரவி, நான் நாளைக்கு வாறேன்’னு சொல்லிட்டு போயிட்டா. என்னையும் ஒருத்தி விரும்புறா அதுவும் நான் உயிருக்கு உயிரா விரும்பியவள் என நினைக்கும்போது அந்த உணர்வை அனுபவித்தால்தான் தெரியும். அதுவும் நிலைக்கவில்லை. மூளைக்கு வேலை கொடுக்காமல் உணர்வாலேயே அவளின் உறவை எதிர்பார்த்ததால் முட்டாளானேன். மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. உண்மை விளங்கியது.

அவளோடு நட்பாய் பழகிய காலத்தில் (நான் எங்கே நட்பாய் பழகினேன்? அவள் என்னோடு நட்பாய் பழகிய காலத்தில்) பொதுவாக சில விடயங்களை பேசிக்கொண்டு செல்வோம். அப்போது அவள் சொன்ன ஒரு விடயம். அவளுக்கும் அவள் காதலனுக்கும் ஒரு விசித்திர பழக்கம் இருக்கிறதாம். அதாவது அவன் இவளது பெயரை முதலாவதாகவும் அவனது பெயரை இரண்டாவதுமாக வைத்து முகப்புத்தக கணக்கு ஆரம்பித்து அதில் இவளின் படத்தை போட்டானாம். அதேபோல இவளும் அவனது பெயரை முதலாவதாக வைத்து அவனது படம் போட்ட கணக்கு ஆரம்பித்தாளாம். அப்படி பார்த்தால் நேற்று நான் பேசியது? அடச்சீ என்ன ஒரு முட்டாள்த்தனம்…. இப்போது நினைவுக்கு வருவது நேற்றே வந்திருக்கலாமே.. அட அதைவிடு! இங்கே இருக்கும்போது உன்னை நண்பன் என்ற ஸ்தானத்தில் இருந்து வேறுபட்டு ஒரு பார்வைகூட பார்க்காதவள் அங்கே சென்றதும் காதல் என்கிறாளே…. அப்போதாவது சுதாரித்திருக்க வேண்டாமா? ஒருவேளை இது அவளது காதலனாக இருந்து இன்னொருவன் அவளை காதலிப்பது பொறுக்காமல் அவளுக்கு எதாவது தீங்கு செய்தால்? ஐயோ நினைச்சுகூட பார்க்கமுடியலயே…. இனி மனதை போட்டு அலட்டிக்கொள்வதில் பிரயோசனம் இல்லையென்று ஒரு தீர்மானமான முடிவு எடுத்தேன்.

காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக முகப்புத்தகம் சென்று அவளுக்கு செய்தி அனுப்பினேன். ‘என்ன அக்கா பயந்துட்டீங்களா? எனக்கு தெரியாதா நீங்க ஜெய் அண்ணாவ எவ்ளோ லவ் பண்றீங்கனு. நான் சும்மா உங்ககூட விளையாடினா நீங்களுமா எங்கூட இப்பிடி விளையாடுவீங்க? இங்க இருக்கும்போது யாரோடும் பேசாமல் தன் வேலை உண்டுனு அமைதியா இருக்குற சிவானி அக்காவ இப்பிடி பேசுறதுன்னு எப்பிடி ஆச்சரியப்படேன் தெரியுமா? சரி அக்கா… எனக்கு நிறைய படிக்க இருக்குறதால என் ஃபேஸ்புக் அக்கவுண்ட க்ளோஸ் பண்ணப்போறேன். திரும்பி வந்தா உங்களோடு மறுபடியும் பேசுறேன். நீங்களும் ஜெய் அண்ணாவும் எந்த குறையும் இல்லாம சந்தோசமா வாழ என் நல்லூர் முருகனை வேண்டிகொள்றேன். என்று சொல்லிவிட்டு என் முகப்புத்தக கணக்கை அழித்துவிட்டேன். அது அவளா அல்லது அவனா அல்லது வேறு யாராவது அவளது பெயரில் விளையாடினார்களா ஒன்றும் தெரியாது… ஆனால் இந்த முடிவுதான் சரியென்று மனதுக்கு பட்டது. ஏதோ மிகப்பெரிய பாரம் இறங்கிவிட்ட உணர்வு. கலைந்துபோன கனவை மீண்டும் முயற்ச்சிப்பது முட்டாளத்தனம். அத்தோடு அந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. பழைய ரணம் என்றாலும் ஆறாவிட்டால் மருந்து போடத்தானே வேண்டும். மற்றவர்கள் என்றால் மதுவிலே மருந்து தேடியிருப்பார்கள் எனக்கு இசைதான் மது மருந்து எல்லாமே….அமைதியாக நாற்காலியில் சாய்ந்து வானொலியைப் போட்டேன்.

‘நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர்பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர்போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்

கண்போன போக்கிலே கால் போகலாமா?
கால்போன போக்கிலே மனம் போகாலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகாலாமா?’