Friday, March 15, 2013

விட்டமின் c


மௌனத்தை சீருடையாக அணிந்துகொண்டு ஒரு கூட்டம். உண்மையான கவலையை மனதில் ஏந்திக்கொண்டு பீறிட்டு அழும் ஒரு கூட்டம். எப்படி எப்படி நல்லாத்தானே இருந்தா… திடீர்னு என்ன ஆச்சு? என்று விசாரணையில் ஒரு கூட்டம். அலுவலகத்தில் ஓடியாடி வேலைபார்த்து தங்களுடன் ஒன்றாய் கலந்து வாழ்ந்தவளின் பிரிவை தாளாது அலுவலக நண்பர்கள் ஒரு பக்கம். இரண்டு நாட்களுக்கு முன்னால் இறந்த பவித்ராவின் இறுதிக்கிரியை. இன்று அடக்கம் செய்கிறார்கள். இறந்த காரணம், போஸ்மார்டம் ரிப்போர்ட் அனைத்தும் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்னும் சிறிது நேரத்தில் அவளது உடலை மயானத்திற்கு எடுத்து செல்லவுள்ளனர். ஈமக்கிரியைகளை நடத்த ஆச்சாரியாரும் வந்துவிட்டார். அவளது தாய் பித்து பிடித்தவர்போல வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். அனைத்தையும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று சலனத்துடன் பார்த்துகொண்டிருந்தான் பார்த்திபன்.

அது ஒரு அரசாங்க அலுவலகம். நேஷனல் அக்ரிகல்சர் ரிசர்ஜ் சென்டர். சாதாரண உயர்தர அறிவுடன் கணக்காளினியாக வேலைக்கு சேர்ந்தவள் பவித்ரா. இலகுவில் அனைவருடனும் நெருக்கமாக பழகக்கூடியவள். சிரித்து சிரித்து பேசி அனைவரையும் கவர்ந்திடுவதோடு நட்புக்கு மரியாதை கொடுக்கும் அவளது பண்பு அனைவருக்கும் பிடித்துவிடவே அலுவலகத்தில் முக்கிய பிரபலமானாள். பல நண்பர்கள் சேர்ந்தார்கள். சந்தோஷமாக வாழ்வதைப்பற்றி அனைவருக்கும் கிளாஸ் எடுப்பாள். எப்படி இப்படி ஒரு பெண் இருக்கிறாள் என்று அவளை வியப்போடு அனைவரும் பார்த்தனர். அவளது குடும்பமும் அவள்மீது அதிக அக்கறை காட்டிவந்ததால் ஒரு இளவரசிபோல வலம்வந்தாள். அப்படிப்பட்டவள் கடந்த ஒரு வாரமாக வாட்டமாக காணப்பட்டாள். அலுவலக நண்பர்களில் முக்கியமானவர்கள் ரிசர்ஜ் காம்பிற்கு சென்றுவிட்டதால் இன்னும் சோகமாக இருந்தது.

வழக்கம் போல இன்றும் தன் அலுவலகத்திற்கு ஆமைபோல வந்தான் பார்த்திபன். வேண்டாவெறுப்புக்கு வேலைக்கு சேர்ந்து தினமும் நடந்து கால் தேய்ந்ததுதான் பாக்கி. எல்லாவற்றிலும் சோம்பல் படும் சோம்பல்குலதிலகம். அந்த அலுவலகத்தில் அவனை விரும்புபவர் எவருமில்லை. அதற்காக அவன் கவலைப்பட்டதுமில்லை. பவித்ராவை சுற்றி எப்போதும் கூட்டமாக இருப்பதை கண்டு அவன் பொறாமைப்பட்டதும் இல்லை. அவனை பொறுத்தவரைக்கும் சாதாரண மக்கள், சாதாரண வேலை, சாதாரண நாள் மொத்தத்தில் சாதாரண வாழ்க்கை.

அலுவலக சட்டப்படி மதியபோசன நேரம் இன்னும் பத்து நிமிடத்தில் முடிந்துவிடும். அதற்குள்ளாக சாப்பிட்டு முடிக்கவேண்டுமேயென அனைவரும் பரபரப்புடன் அள்ளி அடசிக்கொண்டிருக்கையில் சாப்பிட்டுமுடித்து கையும் கழுவிவிட்டிருந்தான் பார்த்திபன். அலுவலகத்தில் இன்று வேலை பார்ப்பவர்களும் குறைவு. நிறைய பொழுது மிச்சமிருந்ததால் பொழுதுபோகாமல் அலுப்படிக்கபோகிறதேயென சிந்தித்தவாறு மெதுவாக நடந்துகொண்டிருந்தான். அட பவித்ரா… இன்று ஏன் அவள் உணவுண்ண வரவில்லை. அவளுடன் உரையாட ஆர்வமில்லாதபோதும் பொழுதுபோகவேண்டுமேயென அவளுக்கு முன்சென்று அமர்ந்தான்.

‘சாப்பிட வரலயே… ஏன் உங்க பிரெண்ட்ஸெல்லாம் உங்கள விட்டுட்டு கேம்ப் போன கவலயா?’

‘ஆ.. பார்த்திபன். நீங்க எங்கூடயெல்லாம் பேசுவீங்களா? ஆச்சரியமா இருக்கே. எனக்கு ஒரு பிரச்சினை சார். அத சொல்லக்கூட ஆபிஸ்ல யாரும் இல்லாம போய்ட்டாங்க.’

‘ஏன் மேடம்.. எங்ககிட்ட சொல்லமாட்டீங்களா? நாங்களும் இதே ஆபிஸ்தான்.’

‘ஐயோ! பார்த்திபன் அப்பிடி இல்ல.. நீங்கல்லாம் எங்ககூட பேசுறதே பெரியவிசயம்.. பிறகெப்பிடி உங்ககிட்ட சொல்யூசன் கேக்கமுடியம்?’

‘அட.. ரெண்டுபேரும் மாத்தி மாத்தி ஓட்னது போதும். என்ன பிரச்சினைனு இன்னும் சொல்லயே?’

‘அது வந்து பார்த்திபன்… நான் சாப்பாட்டு விசயத்துல அக்கறை எடுத்துக்குறதேயில்ல. கண்டதையும் கண்ட நேரத்துலயும் சாப்பிடுவேன். அதனால இதுவரைக்கும் பிரச்சினையில்லாமத்தான் இருந்திச்சு… ஆனா கொஞ்சநாளா… சாப்பிட்டு முடிச்ச உடனே மட்டும் ரத்தமா உமிழ்றேன். சாதாரண சாதம் சாப்பிட்டாகூட அப்பிடித்தான் இருக்கு. முதல்ல இத பெரிய விசயமா நான் நினைக்கல. ஆனா தொடர்ந்து நடக்ககுல பயமா இருக்கு. என்ன பண்றதுனே தெரியல.’

‘உங்க வீட்ல சொல்லலயா? டாக்டர்கிட்ட போயிருக்கலாமே…’

‘ஐயோ வீட்ட ரொம்ப பயந்துடுவாங்க. எனக்கு ஒரு காய்ச்சல் வந்தாலே துடிச்சிடுவாங்க. அதுவுமில்லாம இன்னும் இது சாதாரணமாத்தான் இருக்கும்னு எனக்கு தோணுது. டாக்டர்கிட்ட போன இல்லாததெல்லாம் சொல்லி பயமுறுத்திடுவாங்க. கைவைத்தியம் ஏதாவது செய்யலாம்னா இங்க யாரும் இல்ல…’

‘இப்பிடித்தான் எங்க பக்கத்துவீட்டு பாப்பாக்கும் அடிக்கடி வாயில ரத்தமா கக்கும். டாக்டர்கிட்டபோன அது ஏதோ விட்டமின் c குறைபாடாம். சாதாரண விட்டமின் மாத்திரையில சரியாப்போச்சு…’

ஆச்சரியத்தில் கண்கள் மிளிர்ந்தவளாய் ‘அப்படியா? அவ்ளோதானா? அப்ப நானும் விட்டமுன் c எடுக்கட்டா? என்றாள்.

‘அது உங்க விருப்பம்… ஏதோ எனக்கு தெரிஞ்சத சொன்னேன். உங்களுக்கு சரிப்பட்டுவந்தா நீங்க எடுங்க… ஆமா நீங்க இறால் சாப்படுவீங்களா?’

‘அசைவம் நல்லா சாப்பிடுவேன். ஆனா இறால் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை.. ஏன்?’

‘விட்டமின் c எடுக்ககுல கண்டிப்பா இறால் சாப்பிடணும். அதுவும் அதிகமா சாப்பிடணும். அப்பதான் சீக்கிரமா குணமாகும். 
இரண்டுவாரமாவது நீங்க இப்பிடி செய்யணும்… அப்புறம் முழுசா குணமாகி போதாததுக்கு இன்னும் ஆரோக்கியமாயிடுவீங்க’

‘தாங்க் யூ சோ மச் பார்த்திபன். நான் கூப்பிடாமலே நீங்களா வந்து இவ்ளோ பெரிய உதவி செஞ்சிருக்கீங்க. நான் பயந்துட்டேயிருந்தேன். இப்பதான் கொஞ்சம் ஆறுதலா இருக்கு. நான் நீங்க சொன்னபடியே எடுத்துக்குறேன்.’

தூரத்தில் பவித்ராவின் உடல் எரிவதை பார்த்து கதறி கதறி அழுதார் அவளின் தந்தை. வந்த உறவினர்களும் நண்பர்களும் கொஞ்சம் கலைய ஆரம்பித்தவுடன் தானும் நகர ஆரம்பித்தான் பார்த்திபன். தான் வாழ்க்கையிலும் மனிதர்கள் மீதும் அக்கறையில்லாமல் இவ்வளவுகாலம் இருந்ததற்கான உண்மையான பாதிப்பை இன்று உணர்ந்தான். மற்றவர்களால் விரும்பப்படுகிற மற்றவர்களுக்கு உபயோகமான ஒரு உயிரை எந்த உபயோகமுமேயில்லாத நான் கொன்றழித்துவிட்டேனா… இல்லை அவள் சாவிற்க்கு நான் எப்படி பொறுப்பாவேன்? ஆம் நான்தான் பொறுப்பு.

கண், காது, வாய், மூக்கிலிருந்து ரத்தம் வழிந்து ஒரு இளம்பெண் மரணமடைந்தார். அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஜூலியா மர்மமான முறையில் கண், காது, வாய், மூக்கிலிருந்து ரத்தம் வழிந்து துடித்து இறந்து போனார். அவரது சாவிற்கு காரணம் புரியாமல் அவரது குடும்பம் தவித்துக்கொண்டிருக்கையில் போலீஸார் மருத்துவர்களின் உதவியை நாடியுள்ளனர். மருத்துவ நிபுணர்களும் வந்து ஆராய்ந்ததில் அவர்கள் அரை மணிநேரத்தில் கண்டுபிடித்தனர். அவள் தற்கொலை செய்யவில்லை. அவளுக்கு எந்த நோயும்கூட இல்லை. அவளை இறந்ததற்கு காரணம் அவளது உணவுமுறை. அவள் தினமும் விட்டமின் c மாத்திரை எடுத்துக்கொண்டாள். அதனால் பிரச்சினையில்லை. அவளது பிடித்தமான உணவான இறாலை அதிகமாக இரவில் உண்ணுவாள். இறால் உண்ணுவதும் பிரச்சினையில்லை… ஆனால் பிரச்சினை என்னவென்றால் அவள் விட்டமின் c எடுத்துகொண்டிருக்கும்போதே அதிகமாக இறால் சாப்பிட்டதால் அவள் உடலில் அர்செனிக் அமிலம் அதிகமாக சுரந்து முகத்துவாரங்களில் ரத்தம் கசிந்து உயிர் நீத்தாள். ஆகவே நீங்கள் விட்டமின் c எடுக்கும்போது இறால் உண்ணவேண்டாம். தயவுசெய்து இந்த செய்தியை உங்கள் நண்பர்களிடமும் பகிருங்கள்.

முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட ஒரு செய்தியைப் பார்த்தான் பார்த்திபன். இதெல்லாம் ஒரு விசயமா என்று விட்டுவிட்டு வேலையை பார்த்துகொண்டிருந்தவனக்கு தனக்கு ஒரு பிரச்சினை இருப்பதாக பவித்ரா கூறியவுடன் இதுதான் நினைவுக்கு வந்தது. அவளும் தன்னைப்போல கவனிக்காமல் விட்டுவிடுவாள் என்று நினைத்து ஒரு மருத்துவ குறிப்புபோல அந்த வில்லங்கத்தோடு விளையாடினான்.

விபத்துக்களும் நோய்களும் மனித உயிர்களை அழிக்க காரணிகளாய் அமைவது. ஆனால் எல்லாவற்றிற்குமே அடித்தளம் அறியாமைதான். அறியாமை நீங்கினால் விபத்துகளும் நோய்களும் குறையும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அனைவரும் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கவேண்டிய அவசியமும் இல்லை. குறைந்தளவு நம்மைசுற்றியுள்ள நாம் பயன்படுத்துகிற விடயங்களை பற்றியாவது அறிந்திருக்கவேண்டும். அறிந்து வைத்திருப்பவர்கள்கூட அலட்சியமாக இருப்பதால்தான் நம்மால் தவிர்க்ககூடிய விடயங்கள்கூட இன்னும் நம்மிடையே சுற்றிக்கொண்டிருக்கின்றது. அதனால்தான் கொசுவை அழிக்க ஆயிரம் யுக்தி கண்டுபிடித்தாலும் அது மீண்டும் உருவெடுக்கிறது. கொசுவிற்கே அப்படியென்றால் அறியாமை, அலட்சியம் போன்றவை பூதங்கள். பெரும்முயற்சியின்றேல் அதை அழிக்கமுடியாது. அறியாமையை அகற்ற முடிவெடுக்கவேண்டும். அறிந்தவற்றில் அலட்சியமாக இருக்ககூடாது. முடிந்தளவு கடைப்பிடிப்போம். அடுத்தவருக்கும் எடுத்துசொல்வோம்.

கடுமையாக யோசித்தும் பார்த்திபனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. விபத்து என்று விட்டுவிடுவதா? அல்லது தண்டனையை அனுபவிப்பதா? தெரியாமல் செய்ததுதானே… ஆனால் அதற்காக ஒரு உயிர் போய்விட்டதே.. அதற்கு நான்தானே காரணம். அவன் மனம் உறுத்தியதில் இதுதான் முடிவு என்று தன் செயலை போலீஸில் ஒப்புக்கொண்டான். அவனது செயலுக்கு என்ன தண்டனையோ அதை நீதி கொடுக்கும். ஆனால் பிறரது வாழ்க்கையில் அலட்சியமாக அஜாக்கிரதையாக எடுக்கும் முடிவில் அவர்கள் அடையும் பாதிப்பை அவன் இத்தோடு அறிந்துகொண்டிருப்பான்.