Friday, May 17, 2013

எவளோ ஒருத்தி!


வழமை.. இந்த வார்த்தை என்னோட மிகவும் ஒன்றிப்போனது. வழமையான காலைவேளை.. வழமையான அலுவலக ஓட்டம்.. வழமையான அவசர உணவு.. வழமையான எந்திர வாழ்க்கை.. வழமையான.. வழமையான.. வழமையான.. இத்யாதிகள். மாற்றம் என்பதிலுள்ள மகிழ்ச்சியை அனுபவிக்கவிடாமல் கட்டிப்போட்டிருக்கும் வழமை. இந்த வழமையிலிருந்து விடுபட எண்ணும் பலரிலும் விடுபட முயற்சிக்கும் சிலரிலும் நானும் ஒருவன். எவனோ ஒருவன். ஆமாம். எவனோ ஒருவன் திடைப்படம் என்னில் இந்த கேள்வியை ஏற்படுத்தி விடைகாண சொல்லியது. ‘சொன்னமாதிரியே வாழு சொன்னமாதிரியே செத்துப்போ’ மாதவன் அடித்துச்சொல்லும் இந்த வார்த்தைகளில்தான் எத்தனை நிதர்சனம்… நம்மில் எத்தனைபேர் இந்த வழமையிலிருந்து விடுபட்டு மாற்றத்தை அடைய ஆசைப்படுகிறோம்.. ஆனால் எத்தனை பேரால் அடையமுடிகிறது? காலையில் உழைப்புகாக எழுந்து மாலையில் ஓய்வுக்காக உறங்கும் மிகச்சாதாரணமான ஒருவனின் உள்ளக்குமுறல் இது. நிச்சயமாக இந்த சமூக வட்டத்தில் விரும்பியும் வேறுவழியில்லாமலும் கட்டுண்டு கிடக்கும் நம்மால் இலகுவாக.. ஏன் இயன்றபோதும்கூட பெரியளவு மாற்றத்தை அடையமுடியாது. ஆகவே  இதையும் ஒரு வேளையாக தினமும் புரட்சிகரமாக சிந்தித்து ஆதங்கப்படுவதை இன்றும் தொடர்வதை நினைத்து மனம் சலித்தது. இந்த மாற்றத்தை பற்றிய எண்ணம் வருவதற்கும் அதுவும் இத்தனை சீக்கிரமாக வருவதற்கு காரணம் அவள்தானே…

அப்பா அம்மா ஊருல இருக்காங்க. தம்பி தங்கச்சி வேற. இங்க சம்பாதிக்குற காசை செலவு செய்யுறது போக மொத்தமா ஊருக்கு அனுப்பிடனும். அப்பதான் அங்க வண்டி ஓடும். ஆனா இங்க? பெரிய நகரம், பெரிய கம்பெனி.. சாதாரண வேலை. ஒரு நிமிஷம் தாமதமா போனாக்கூட ஏதோ கொலைக்குற்றவாளியை விசாரிக்குற விசாரிப்பாங்க. தலையெழுத்து. அட சீக்கிரமா ஆபிஸ் வந்து தொலைக்கலாம்னாலும் நம்ம மாநகரபேருந்து ஊர்ந்து வாறதுக்குள்ள ஆபிஸ் முடியாம இருக்குறது ஆச்சரியம். கடைசியா எப்ப ஒழுங்கா சாப்பிட்டேன்னுகூட ஞாபகமில்ல. ஆனா இப்பிடி ஒரு நாள்ள இருபத்துநாலு மணித்தியாலத்துல இல்லாத ஏதோ ஒரு உன்னதம் ஒரு நிமிஷம் கிடைக்கும். அந்த ஒரு நிமிஷம். அவளைப்பார்க்கும் ஒரு நிமிஷம். அவள் யாரென்று கேட்காதீங்க… சத்தியமா தெரியாது. ஆனா நிதமும் பாக்குறேன். எப்ப மொதல்ல பாத்தேன்னு ஞாபகமில்ல. ஒவ்வொரு ஆம்பிளயும் ஒரு நாள்ள ஆயிரக்கணக்கான பொண்ணுங்கள சந்திக்குறாங்க. எல்லாரையும் எப்ப பாத்தோம் எப்பிடி பாத்தோம்னு எல்லாத்தையும் பதிவு பண்ற அளவுக்கு நம்ம மெமரிகார்ட் ஒண்ணும் அவ்வளவு கெப்பாசிட்டி இல்லியே.. அப்பிடித்தான் அவளையும் எதேச்சையாப் பாத்து அதை எதேச்சையா மறந்தும் போயிட்டேன் இரண்டாம் நாள் பார்க்குறவரைக்கும்.

இதுல ஒரு முக்கியமான விசயத்த விட்டுட்டேன். எந்த ஒரு ஆணுக்குமே அதுவும் வாழ்க்கையில எந்த பொண்ணுகூடயும் பழக்கமில்லாத பிரம்மச்சாரிகளுக்கு கோயில்லயோ கல்யாண வீட்டுலயோ பஸ் ஸ்டாண்ட்லயோ நம்மள கடக்குற பொண்ணுங்கள பார்க்கும்போது இவ நமக்கு மனைவியா வந்தா எப்படி இருக்கும்னு ஒரு எண்ணம் வாறது இயல்பு. அதுவும் சாதரணமா வறாது. அந்த பொண்ணு நம்மள கடக்கும்போது ஏதோ மின்னல் பாயுறமாதிரி இருக்கும். ஒருக்கா பாத்துட்டு விடமுடியாதே. திருப்பி பாக்கணுமே. எப்பிடி பாக்குறது? யாருக்கும் தெரியாம ஏன் அவளுக்கே தெரியாம பாக்கணும். கோயில்னா அவ போற சந்நிதிகளுக்கே நாமளும் பின்தொடரணும். கல்யாணவீட்டுலனா சாப்பாட்டுல அவ என்ன ஐட்டம் பரிமாறுறாளோ அதையே திருப்பிதிருப்பி கேட்டு அவள பாக்கவைக்கணும்.. பஸ்ஸுலனா வழியுறது தெரியாம அவளுக்கு டிக்கெட் எடுக்க உதவிசெய்யணும். இதெல்லாம் காதலிக்குறவிங்களுக்கு தமிழ்சினிமா கத்துக்கொடுத்த டெக்னிக்கல்ஸ். ஆனா கடைசியில லைஃப் ஒஃப் பை பட கிளைமேக்ஸ்ல வாற புலி மாதிரி நம்மள திரும்பிபாக்காமலே போயிடுவாளுக.. அந்த மாதிரி எத்தனையோ பொண்ணுகள எதேச்சையா பாத்து காதலிக்குற மாதிரி கல்யாணம் பண்ணா நல்லாருக்கும்ற மாதிரியெல்லாம் நினைச்சுபாத்துருக்கேன். ஆனா இவள முதல் தடவை பாக்கும்போது அப்பிடி தோணல. அவளோட தோற்றம் அப்படி…

பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல ஒரு சின்ன பூக்கடை வைச்சுருக்குற பொண்ணு.. அவளோட தோற்றத்தை வச்சு எத்தனை வயசுன்னு இலகுவா சொல்லமுடியாது. காரணம் எப்பயும் தோய்க்காத சேலையும் கழுவாத முகமுமா இருப்பா. பூ விக்குற பொண்ணுங்க எப்பயும் குளிச்சு மஞ்சள் பூசி பெரிய குங்கும்ப்பொட்டு வச்சு தலைநிறைய பூ வச்சு மங்களகரமா இருப்பாங்க. அப்பதான் அவங்ககிட்ட பூ வாங்குறங்க நல்ல சகுனமா நினைப்பாங்க. ஆனா இப்பிடி விடியா மூஞ்சியா ஒரு பொண்ணு பூ வித்திட்டு இருந்தா யாரும் பூ வாங்கவும் வரமாட்டாங்க.. அவளை ஒரு சகுனத்தடையாவும் நினைப்பாங்க. இப்பிடி ஒரு சந்தர்பத்துலதான் அவளை பாத்திருப்பேன்னு நினைக்குறேன். அவசர அவசரமா பஸ்ஸுக்காக ஓடிவந்து அவ்வளவு கூட்டத்தையும் ஓரங்கட்டி பஸ்ஸுல ஏறி இடம்பிடிக்கணுங்குற தினசரி போராட்டத்துல அந்த பொண்ண பாக்குறது அதிகபட்சம் இரண்டு நிமிஷம்தான். சொல்லப்போனா எனக்கு அவளை பாக்கணுங்குற அவசியம்கூட கிடையாது. ஆனா அந்த ஒரு நிமிட பொழுதுபோக்குக்காக என் கணை அவள் இருக்குற இடத்தையே சுத்திவரும். பெரும்பாலும் வியாபாரமேயில்லாம தனியா இருந்து பூக்கட்டிகிட்டு இருப்பா. எப்பயாவது ஒருக்கா ரெண்டுதரம் யாராவது பூ வாங்க வாறத பாத்திருக்கேன். அதுவும் ஆம்பிளைங்கதான்.

வீட்டுலர்ந்து வாசலால வெளில போகும்போது அங்க சின்னதா ஒரு பிள்ளையார் சிலை இருந்தா திரும்பிபாத்து ஒரு செக்கன் கண்ணை மூடிட்டு போறோம்ல.. அந்த மாதிரி ஒவ்வொரு நாளும் பஸ் ஸ்டாண்ட் வந்தா ஒரு செக்கன் அவளை திரும்பிபாக்குறது எனக்கு வழக்கமாயிற்று.. ஆனா நான் முதல்ல சொன்னமாதிரி ஒரு பொண்ணை எங்கயாவது பாத்தா இவ நமக்கு மனைவியா வந்தா எப்பிடி இருக்கும்னு ஏங்கி அவளையே பாக்கணும்னு தோணும்னு சொன்னேனே.. அந்த மாதிரி இல்ல. ஆனாலும் தினமும் பாக்குறேன். திரும்பி திரும்பி பாக்குறேன். ஒருவேளை பழகிப்போன ஒண்ணுன்றதால மாத்தமுடியாம இருக்கோ தெரியல. ஆனா ஒரு சாதாரண விசயம், ரொம்பசாதாரண விசயம் நம்மளுக்குள்ள போய் நம்மள ஆளுது அதாவது அதுல இருந்து வெளில வரமுடியாம பண்ணுதுங்குறப்போ அத மாத்தித்தான் ஆகணும். எனக்கு அவளை பாக்குறதால ஒரு பிரச்சினையும் இல்லனே வச்சுக்கங்க… ஆனா ஒரு பையன் தினமும் பஸ் ஸடாண்டுக்கு வந்து இந்த பொண்ணையே திரும்ப பாக்குறான்னு யாராவது கவனிச்சிட்டா அந்த பொண்ணுக்கு எவ்வளவு பிரச்சினை வரும். அதனாலயே அவளை திரும்பி பாக்குறத இன்னியோட விட்டுற்றதுன்னு எத்தனையோ நாள் சத்தியம் பண்ணிட்டு போய் நின்னாலும் அவ பக்கம் திரும்பாம பஸ்ஸுல ஏறினதே இல்ல… இந்த பிரம்மச்சாரிகளோட மனசு இருக்கே எதை செய்யக்கூடாதுனு சொல்றோமோ அதையே செஞ்சுபாத்தா என்னனு விடாப்பிடியா செய்யும்.

என்னடா ஒரு பொண்ண தினமும் திரும்பி பாக்குறது ஏதோ ஒரு பெரிய விசயம் மாதிரி இவ்வளவு ஃபீல் பண்றானேனு பாக்குறீங்களா? மனைவிக்கு ஒருநாள் உடம்பு சரியில்லன்றதுக்காக காஃபி சாப்பிடாம ஆபிஸ் வந்தா அந்த நாள் முழுக்க ஏதோ ஒன்னு குறைஞ்சமாதிரி இருக்குமே.. அதேமாதிரி ஒரு பழக்கத்துக்கு தன்னை ஆட்படுத்திகிட்டு அதுலயிருந்து வெளில வரமுடியாம ஒருத்தன் புலம்புறான்னு வச்சுகங்களே.. ஆனா இதுவரைக்கும் அவளை அந்த பஸ் வாற ஒரு நிமிஷ இடைவெளில திரும்பிபாக்குறதே தவிர அவ யாரு, பேர் என்ன, எங்க இருக்கான்னு ஒண்ணும் தெரிஞ்சிகிட்டது கிடையாது. தெரிஞ்சுக்கவேணும்னு நினைக்கவும் இல்ல. அட அவ கடைக்கு போய் ஒரு முழம் பூ கொடுங்கனு சொல்லி அவகிட்ட பேசினதுகூட கிடையாது. ஏன் பேசனும்? அவகிட்ட எனக்கு எந்தவித எதிரபார்ப்பும் இல்ல. அவளும் என்னை பாக்கணும், என்னை பாத்து சிரிக்கணும், எங்கூட பேசனும் இப்பிடி நான் நினைச்சுகூட பாக்கல. அந்த அவசியமும் இல்ல. அதேபோல இதுவரக்கும் ஒருநாள்கூட அவளும் என்னை பாத்தது இல்ல. நான் யாரு, இப்பிடி ஒருத்தன் இருக்கானானு கூட அவளுக்கு தெரியாது. பஸ் ஸ்டாண்டுக்கு வரும்போது ரெண்டு செக்கன் திரும்பி அவளை பாக்குறது என்னோட வழக்கம். அதோட எங்க உறவு முடிஞ்சுபோச்சு. இத தாண்டி எந்த ஒரு சின்ன கோடுகூட எங்களுக்குள்ள இல்ல.

வாசலோர பிள்ளையார் சிலை, காலைநேர காஃபி மாதிரி ஒரு வழக்கமாயிருந்த அவளோட தரிசனம் ஒருநாள் ஒரு சம்பவத்தால என்னை ஒரு சமூகபுரட்சியாளனா சிந்திக்கவச்சுது. அன்னைக்கும் அதே மாதிரி பஸ்ஸுக்காக சாலையோரமா தவம் செஞ்சிட்டு இருக்கும்பாது அந்த ரெண்டு நிமிஷ இடைவெளில அது நடந்துச்சு. ஒரு பெறுக்கி பஸ் ஸ்டாண்ட்ல இருந்த பொண்ணுங்கள கிண்டல் பண்ணிட்டு இருந்தான். சரி சரி அப்பிடி பாக்காதீங்க. இது ஏதோ தெரியாத விசயம் மாதிரி சொல்ல வந்துட்டானு நினைக்குறீங்க. ஆனா அப்பிடி கேவலமா பொண்ணுங்கள கிண்டல் பண்ணிட்டு இருந்த அந்த தடியன் அவளை பாத்துட்டு பாக்காத மாதிரி திரும்பி வேறு பொண்ணை கிண்டல் பண்ணான். அங்க இருந்த ஒவ்வொரு பொண்ண போய் வழிஞ்சு அசிங்கமா பேசி அழவச்ச அவன் அவளை மட்டும் திரும்பி பாக்கல. அந்த பொறுக்கி பண்ற அத்தனை சில்மிஷத்தையும் பாத்துட்டு வழக்கம்போல நம்ம காந்தியின் பேரன்கள் வேடிக்கை பாத்துட்டு இருந்தாங்க. அந்த நேரத்துல அவன் அவளோட கையைபிடிச்சுகூட இழுத்திருக்கலாம். பஸ்ஸுல ஏறிட்டேன். அருந்தும் அங்கேயே மூளை சுத்திட்டு இருந்திச்சு. இந்த மாதிரியான சமூக அவலங்கள்ள இருந்து தன்னை காப்பாத்திக்கத்தான் அவ இப்பிடி அசிங்கமாயிருக்காளா? பொட்டுல அடிச்சமாதிரி பகீர்னு இருந்திச்சு. அப்ப ஒரு பொண்ணு சுதந்திரமா தனக்கு பிடிச்சமாதிரி வாழ்ந்தா அது ஆபத்தானதா? இந்த மானங்கெட்ட சமூகத்துல இருந்து அவ தப்பிக்கணும்னா தன்னை தாழ்த்திக்கிட்டுதான் வாழனுமா? ஆனா இன்னோரு விசயம் வேறு ஒரு திசையால வந்து பிடரியில அடிச்சிச்சு.. அவ மட்டும் குளிச்சு முடிச்சு சீவி சிங்காரிச்சு வந்திருந்தா அங்க இருந்த அழகான பொண்ணங்கள அந்த பொறுக்கி அசிங்கபடுத்தினமாதிரித்தானே இவளையும் அசிங்கப்படுத்தியிருப்பான். அப்பயும் நம்ம குடிமகன்கள் வேடிக்கைதானே பாத்திட்டு இருந்திருப்பாங்க. இவ ஏழைப்பொண்ணுவேற. யாரு இவளுக்கு ஆதரவா அந்த தடியனை எதிர்த்திருப்பாங்க? அவ புத்திசாலின்னு மட்டும் தெரிஞ்சுது. ஆனா இப்பிடி ஒரு சமூக அமைப்புல வாழுறத நினைக்க வெட்காமாவும் இருந்திச்சு. நானும் அந்த ஆட்டுமந்தைக்கூட்டத்தோட ஒருத்தனா இதயெல்லாம் எதிர்த்து மக்களுக்கு நல்லது செய்ய யாராவது வருவாங்கனு பெருமூச்சுவிட்டதோட என்னோட சமூகசீர்திருத்த சிந்தனை முற்றுப்பெற்றது.

காரணமேயில்லாம அவளை பார்க்குறத ஒரு வழக்கமா வச்சிருந்த நான் அதுக்கப்புறம் பெருமையோட பார்க்க ஆரம்பிச்சேன். அலுப்பான வழமைகளுக்கு மத்தியில் அது ஒரு அற்புதமான வழமையாக மாறியது. அந்த வழமை தொடரவேண்டுமெனவும் ஆசைப்பட்டேன். ஆனா இப்பிடி என்ன புலம்பவச்சதுக்கு காரணம் ரெண்டு நாளா அவளைப் பார்க்கல. வழமையில் ஒரு தனிமை. அவ வழமையா உட்கார்ர இடத்துல கண்ணு போய்ட்டு போய்ட்டு வருது. அவ ஏன் வரல. ஏதாவது நடந்திருக்குமா? இல்ல ஊருக்கு போய்ருப்பாளா? என்னமோ போங்க ஏதோ ஒன்றை இழந்ததாக… அட அது கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேணும்னா இப்பிடி வச்சுக்கலாம். தினமும் பண்ற வேலையில ஏதோ ஒன்னு கொறைஞ்ச மாதிரி. நாய் மாதிரி ஓடி கழுதை மாதிரி உழைக்குற கடினமான வழமைகளுக்கு மத்தியில் ஆறுதலாக இருந்த ஏதோ குறைந்தமாதிரி… ம்ம்ம் வேலையில் நாட்டமில்லை, மனசு அலை பாயுது, பைத்தியம் பிடிச்சமாதிரி இருக்குனலாம் ஓவரா ரீல் விடமாட்டேன். ஆனா ஒரு வெறுமைய உணர்ரேன். ரெண்டுநாளா ஒரு பொண்ண பாக்காதாதால ஒரு வெறுமைய உணர முடியுதுனா அவ எப்பிடி ஆள்கொண்டிருப்பானு நினைச்சு எனக்கே ஆச்சரயமா இருக்கு. சாதாரண ஒரு பார்வை. அதுவும் நான் மட்டும். அது இல்லாமத்தான் இப்பிடியா? இதுக்குமேல இப்பிடி ஆபிஸ்ல உட்கார்ந்து இதப்பத்தியே புலம்பி என்ன பயன்? வீட்டுக்கு கிளம்புறேன். நாளைக்காவது அவளைப் பார்பேன்ற நம்பிக்கைல!!!