Tuesday, November 20, 2012

இதயமே… இதயமே…


ஒவ்வொருத்தருக்கும் அவங்க வாழ்க்கைய மாத்துறதுக்கு ஒரு சம்பவம் நடக்கும். எனக்கென்ன நடந்திச்சுனு கேக்குறீங்களா? சொல்றேன்.. எவ்ளோ ஓடுறோம்.. ஆடுறோம்.. விழுந்து விழுந்து சம்பாதிக்குறோம்… எதுக்காக? நம்ம ஒருத்தருக்காகவா? ஆனா நான் அப்படிதான் நினைச்சேன். என் வாழ்க்கைய நான்தானே வாழணும். தேவையேயில்லாம சில கமிட்மேண்ட்ஸ்ஸ நாமளே உருவாக்கிட்டு அதுக்காக ஏன் நம்ம வாழ்க்கைய கடினமாக்கிக்கணும்னு. ஆனா என்னை பெத்தவங்க வேற மாதிரி நினைச்சாங்க. சிங்கிள் பிளேயரா என் வாழ்க்கைன்ற கேம் நான் விளையாடிட்டு இருந்தப்ப எனக்கு துணையா ஒரு டபிள் பிளேயர பார்க்கணும்றது அவங்களோட ஆசை. காதலுங்குற நதியில நீந்தவே பயந்துகிட்டு கரையில நிக்குறேன். எல்லாருமா சேர்ந்து கல்யாணம்ன்ற கடல்ல தூக்கி போடப்பாக்குறாங்களே? அட அதுக்காக குதிச்சுடமுடியுமா? எப்படி தப்பிகணும்னு யோசிக்கணும்ல… அட அதுக்கும் அவங்களே ஒரு வழி வகுத்துகொடுத்தாங்க.

இவ்வளவு நேரமாகியும் அவள் வரவில்லையே என்று எரிச்சலாயிருந்தாலும் இன்னும் நல்லா தயார் பண்ண சந்தர்ப்பம் இருப்பதை நினைத்து பொறுமையாக மூச்சுவிட்டு எப்படி பேசுவதேன்று மீண்டும் மீண்டும் ஒத்திகை பார்த்தேன். பதட்டம்தான் அதிகமானது. மனதை வேறு பக்கம் திருப்ப சுற்றிமுற்றி என்ன நடக்கிறதெனப் பார்த்தேன். அழகான ரெஸ்டாரண்ட்தான். தனிமையில் காதலர்கள் பேசுவதற்கென்றே ரசித்து கட்டியிருக்கிறார்கள். ஆனால் சுற்றிலும் ஜோடியாக அமர்ந்திருக்கும் காதலர்கள் பேசுவதாகவே தெரியவில்லையே…. எதிர் எதிரே அமர்ந்திருந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே தவிர இந்த உலகத்தை ஒரு பொருட்டாக எண்ணியதாகவே தெரியவில்லை. ஓ… இதுதான் காதலா? ஏனோ எனக்குதான் இதுல நாட்டமேயில்ல. ஏன் வரல? அதுவும் வரல… நானும் போகல…

எவ்வளவு நேரம்தான் என்னோட நானே பேசிக்கிட்டு இருக்கிறது என வெறுப்போடு சலிப்பும் வர ரெஸ்டாரண்ட்டின் கதவை திறந்துகொண்டு மயிலா! மரகதமா? மேகமா? இல்ல எனக்கு வரப்போற சோகமா? ஐயயோ இப்பனு பாத்து ஒரு உவமையும் கைவசம் இல்லியே… ஏதோ! அவரவர் எண்ணத்துக்கு உவமைகளை தாராளமாக பயன்படுத்தக்கூடியமாதிரி அவ்ளோ அழகா ஒரு பொண்ணு வந்தா. போட்டோவ விட நேர்ல அம்சமா…….. அதுக்குள்ள என் பக்கத்துல வந்துட்டா. நான் மட்டும் என்ன மட்டமா? கமல், அஜித் மாதிரி அழகா இல்லாட்டியும் ரஜினி, விஜய் மாதிரி மாநிறமா இருந்தாலும் பார்க்குவறவங்கள ஈர்க்குற மாதிரி கவர்ச்சியா இருப்பேன். ஆனா அது நம்ம பிரச்சினை இல்லை. இவ்ளோ அழகான பொண்ண பாத்ததுக்கு பிறகும் கல்யாணம் பண்ணக்கூடாதுன்ற என் கொள்கையில இருந்து நான் மாறலயே பாத்துகோங்க. ஏற்கனவே பெத்தவங்க எல்லாம் பேசிட்டதனால ஒரு சம்பிரதாயத்துக்கு இந்த சந்திப்பு. அவ எனக்கு முன்னால இருந்த கதிரைல உக்காந்தா.
சிரிச்சா.. நானும் சிரிச்சேன். டக்குனு சிரிப்பு மறைஞ்சு வேற எங்கயோ பாத்து யோசிச்சா? என்னடானு நான் அவளயே பாத்தேன். என் பக்கம் திரும்பி மறுபடியும் அதே சிரிப்பு. ஆத்தாடீ… இப்படியே சிரிச்சு கவுத்துடுவா போலயே… நானே அந்த மௌன சங்கிலிய உடைச்சேன்.

‘நீங்க.. உங்கள பத்தி நீங்க எப்படி… எல்லாம் அம்மா சொன்னாங்க. பட் பேசவேண்டியது நாமதானே…. (முகத்துல ஒரு உணர்ச்சியும் இல்லாம கல்லுமாதிரி உக்காந்திருந்தா. ம்ம்ம்) ஒரு பொண்ணா உங்களுக்கு வரப்போற கணவன் மேல உங்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கும்… ஆனா….. அதுக்கு நான் பொருத்துமானவனானு எனக்கு தெரியல. ( இப்ப முகத்த நிமிந்து என்னை பாத்தா..) ஹ்ம்ம் வந்து… நான்…. ஏதாவது பேசுங்களேன். அப்பதானே நானும் தைரியமா பேசலாம்..

(நான் அப்படி சென்னதும் உதட்டோரத்துல ஒரு மொட்டு பூவா அரும்புமே அப்படி ஒரு சிறுநகை… மயங்கிடாதடா… மனசை கட்டுபடுத்திவிட்டு என்ன சொல்லபோறாள்னு ஆர்வமா ஆனா அத வெளிள காட்டாம கவனிச்சேன்.)
‘நீங்க சொல்றது சரிதான். எனக்கும் எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கு. மத்தவங்க மாதிரி புருசன் என்ன தப்பு பண்ணாலும் பரவால அனுசரிச்சு போவோம்னு நினைக்கமாட்டேன். குடிக்குறது, சிகரெட், டைம்பாஸ்ஸுக்காக பொண்ணுங்ககூட ஊரசுத்துறது இப்பிடியான ஆம்பிளங்கள எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அப்படி ஒருத்தர் கிடைக்காமலேபொனாலும் என் தீர்மானத்துல இருந்து மாறமாட்டேன். ஆனா அப்பிடி ஒருத்தர நான் தேடிப்போகல. அதப்போல நீங்க எப்படியிருந்தாலும் அத பத்தியும் தான் கவலப்படல.’

(அவ பேசப்பேச அவளயே பாத்துட்டு இருந்தேன். அதுவும் எப்படி? சிதம்பர சக்கரத்த பேய் பாத்த மாதிரி… ஒண்ணுமே புரியல. என்ன சொல்லவாறா? அவ விரும்பின மாதிரி நான் இருக்க வேண்டாம்னா அவளுக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லயா? அப்ப இன்னும் சுலபமா முடிஞ்சுமே… அத எப்பிடி விடமுடியும்… இதுக்காகவே ராத்திரியெல்லாம் உக்காந்து யோசிச்சு ஒரு கதை ரெடி பண்ணியிருக்கேன். அத அழகா பெர்ஃபாமன்ஸ் பண்ணி மொத்தமா கழட்டிவிட்ருலாம். அப்புறம் டேய்.. அவ எப்படி திக்காம திணறாம தைரியமா பேசுறா? மானத்த காப்பாத்துடா. கெத்த மெயின்டன் பண்ணு)

‘(சோகமா முகத்த வச்சுகிட்டு) பாருங்க விதிய… நீங்க எதிர்பார்க்குற எல்லாம் எங்கிட்ட இருக்கு. குடி, சிகரெட் வாசனையே எனக்கு பிடிக்காது. பொண்ணுங்க பக்கமே திரும்பினது கிடையாது. ஆனா … ஆனா ( அழுவது போல) நீங்களும் நானும் கல்யாணம் பண்ணனும்னு நம்ம பெத்தவங்க ஆசப்பட்றது நடக்கவே நடக்காதுங்க… (சொல்லிட்டு தலயில கையவச்சு அழுவது மாதிரி ஓரக்கண்ணால அவ ரியாக்ஸன பாத்தேன். நெத்திய சுருக்கி ஒண்ண் புரியாம குழப்பமா என்னை பாத்தா. அசத்திடடா.. கண்டின்யூ…)

‘ஏன்? புரியல… தெளிவா சொல்லுங்க’

‘என்னத்த சொல்லுறது? எல்லாம் ஆண்டவனின் திருவிளையாடல். இப்பிடி ஒரு கெட்டபழக்கமும் இல்லாம வீட்டுக்கு அடங்கின பிள்ளையா ஒழுங்கா வேலைக்கு போய்ட்டு வந்திருக்கும்போதுதான் என் வாழ்க்கைல விதி விளையாடிடுச்சு. (அவள் மேலும் குழம்பியதை ரசித்தவாறே தொடர்ந்தேன்.) ஒருநாள் காலைநேரம்… எல்லாருக்கும் விடிஞ்சுச்சு. எனக்கு மட்டும் எனக்கு மட்டும் …. இருட்டிடுச்சு. வேலைக்கு போறதுக்காக சும்மா ஸ்டைலா பைக்ல போய்ட்டு ஒருந்தேன். ரோட்ல போற எல்லாரும் என் ஸ்டைலத்தான் பாத்துட்டுருந்தாங்க.(வாய சுளிச்சா பாருங்க.. தேவயாடா உனக்கு கதைய மட்டும் சொல்லு) திடீருனு மூச்சு எடுக்க முடியாம மயங்கி கீழ விழுந்திட்டேன். எல்லாரும் தூக்கிட்டு போய் ஹாஸ்பிடல்ல சேத்தாங்க. டாக்டர் செக் பண்ணிபாத்துட்டு… எங்கிட்ட வந்து… எங்கிட்ட வந்து… எனக்கு இதயநோய்னு சொன்னாருங்க… அவ்வ்வ்

(ஒரு கேப் விட்டு அவள நிமிந்து பாத்தேன். அவ அப்படியே உறைஞ்சுபோய் உக்காந்திருந்தா.. ஹாஹாஹா இத இத இததான் எதிர்பாத்தேன். என் பெர்ஃபான்ஸ பாத்து நானே வியக்குறேன். வாவ்.. சரி சரி இப்பிடியே தொடர்ந்து போ)
அப்பிடி டாக்டர் சொன்னத கேட்டு என் இதயமே நின்னுபோச்சு… எப்பிடியும் கூடிய சீக்கிரம் நிக்கப்போற இதயம்தானே… வாழ்க்கையே வெறுத்தமாதிரி ஆயிடுச்சு. யார்கிட்டயும் சரியா பேசல. மனசு வெறுத்துபோய் வீட்டுக்குள்ளயே முடங்கிட்டேன். என் அப்பா அம்மா இத தாங்கமாட்டாங்கனு அவங்ககிட்ட மட்டும் இல்ல யார்கிட்டயுமே இத சொல்லல. அது தெரியாம அவங்க இந்த கல்யாண ஏற்பாடு பண்ணிட்டாங்க. என்னால இன்னொரு பொண்ணுட வாழ்க்கை பாதிக்குறத நான் விரும்பல. அதான் உங்ககிட்ட உண்மைய சொல்லி கல்யாணத்த நிறத்தலாம்னு முடிவு பண்ணேன். தயவு செஞ்சு என் பிரச்சினைய சொல்லாம நீங்களே ஏதாவது ஒரு காரணத்த சொல்லி கல்யாணத்த நிறத்திடுங்க’

(அப்பாடீ… ஒருவழியா கதை முடிஞ்சுது.. எவ்ளோ நடிக்கவேண்டியிருக்கு.. ஆனா ஒண்ணுமே வீண் போகல. அதான் எதிரிலயே உக்காந்து தாரை தாரையா கண்ணீர் வடிக்குறாளே.. கதை சொல்லிட்டு இருக்கும்போதே கவனிச்சேன். அழத்தொடங்கினா. ஆனா இப்ப அவளயும் மீறி இம்புட்டு அழுகையா? எல்லாம் ஐயாவோட பெர்ஃபாமன்ஸ். எனக்குள்ள இத்தன திறம இருக்குனு என்னாலயே நம்ப முடியல. எங்கப்பா இருக்கு அந்த அக்காடமி ஆஃப் ஆர்ட்ஸ்.. ஒரு ஆஸ்கார் பார்ஷல் பண்ணி வையுங்கடா.
ஆனா அவ அழுகுறததான் பாக்கமுடியல. ரொம்ப ஓவரா போய்டோமோ? இவ இவ்வளவு இளகின மனசுக்காரினு தெரியாம்ப்போச்சே… பாவம்)
‘ஏங்க… நானே இவ்ளோ கவலப்படல.. நீங்க ஏன்? விடுங்க ப்ளீஸ் நீங்க அழுகுறது எனக்கு இன்னும் கஷ்டமாயிருக்கு.’

‘(அழுகையுடனேயே) அது.. அது இல்ல. நான் என்ன சொல்ல வந்தேனோ அதத்தான் நீங்க சொல்லியிருகீங்க…’

(அப்பிடியே சம்மட்டியால யாரோ பின் மண்டைல அடிச்சது போல இருந்திச்சு)

‘என்னங்க சொல்றீங்க? நீங்க சொல்ல வந்ததா? புரியல! ப்ளீஸ் தெளிவா சொல்லுங்க?’

(அவள் தன்னை ஆசுவாசப்படுத்திவிட்டு என்னைப்பார்த்தாள். நான் அதே குழப்பதோட அவளைப் பார்த்தேன். ஏதோ நினைத்தவளாய் மேசை மீது வைத்திருந்த என் கை மீது அவள் கையை வைத்தாள். மின்னல் தாக்கும்போது சுனாமி வந்து மோதினா எப்பிடி இருக்கும்? அப்பிடி இருந்திச்சு. ஆனா பிடிச்சிருந்திச்சு. இத்தனை நாள் எதையோ இழந்துவிட்டமாதிரி என்மேல எனக்கே கோபமா வந்திச்சு. பரீட்சை பேப்பர பாக்குறதவிட அதிக குழப்பம், குழந்தைங்க சிரிப்பை பாக்குறதவிட அதிக சந்தோசம், கிரிக்கெட்டின் கடைசி ஓவரைவிட அதிக பதட்டம், மழைநேர உறக்கத்தவிட அதிக நிம்மதி எல்லாம் ஒண்ணா… ஒண்ணா வந்து உயிரைப் பிய்ச்சிடுச்சு. அந்த நிமிஷம் முடிவு பண்ணேன். பிடிச்ச இந்த கைய இனி விட்றதே இல்லனு. ஆனா இன்னும் அவ ஏன் அழுறானு தெளிவா சொல்லவே இல்லயே. என்ன என்பதுபோல அவளப் பாத்தேன். என் வாழ்க்கைலயே முதல்முறையா காதல்பார்வையோட பாத்தேன்.)

‘இது எப்படினு எனக்கும் புரியல. எனக்கும் இதயநோய் இருக்கு. அத மறைச்சு இந்த கல்யாணத்த செய்ய என் அப்பா முடிவு பண்ணாரு. எனக்கு மனசு வரல. அதான் உங்ககிட்டயே சொல்லி கல்யாணத்த நிறுத்தலாம்னு வந்தேன். ஆனா… இப்பிடி… எல்லாம் கடவுளோட… அது வந்து… என்னை கல்யாணம்… பண்ணிப்பீங்களா?’

(அழுதுகொண்டே கேட்டு முடித்தாள். அடப்பாவி. அவளே கல்யாணத்தை நிறுத்தத்தான் வந்திருக்கா. வாய மூடிகிட்டு சும்மா இருக்காம பெரிய கதாசிரியர் மாதிரி சீன் எல்லாம் கிரியேட் பண்ணி மாட்டிகிட்டியே… ஆனா நான் அப்பிடி சொல்லாம இருந்திருந்தா இப்ப இந்த தேவதை என்னைக் கல்யாணம் பண்ணசொல்லி கேட்டிருப்பாளா? ஒவ்வொருத்தருக்கும் காதல் ஒவ்வொரு புள்ளியில ஆரம்பிக்கும். எனக்கு நோயில ஆரம்பிச்சிருக்குனு விடவேண்டியதுதான். ரொம்ப யோசிக்காதடா… பதிலுக்காக மூஞ்சியயே பாத்துட்டு இருக்கா. டக்குனு பதில சொல்லு.. ம்ம்ம் எப்பிடி சொல்றது. எதிர் எதிரா இருந்த நான் அவளுக்கு பக்கத்தில கதிரைய போட்டு அவ தோளமேல கையவச்சு என் நெஞ்சோட அணைச்சேன். அவளும் அடையவேண்டிய இடத்தை அடைஞ்ச திருப்தியில கண்மூடி சாய்ந்துகொண்டாள்)

அஞ்சு வருஷமாச்சு. இன்னும் அப்பிடியேதான் என் நெஞ்சில ஒரு குழந்தபோல சாஞ்சு டீவில சீரியல் பாத்துட்டு… இதோ என் பக்கத்துலதான் என் தேவதை இருக்கா. நான் ஒரு நல்ல கணவனா நடந்தேன்னு சொல்லமாட்டேன். அவ ஒரு நல்ல மனைவியா நடந்துகறதுக்கு இடமளிச்சேன். இன்னிய வரைக்கும் அவ இதயத்துக்கு எதுவும் ஆகாம வந்தாச்சு. இனிமேலும் நடக்க விடமாட்டேன். ஆ.. நடுவுல ஒருக்கா எனக்கு உண்மையாவே இதயத்துல ஒரு பிரச்சினையும் இல்லனு அவளுக்கு தெரிஞ்சப்பதான் பொய் சொன்னதுக்காக கொஞ்சம் கோபப்பட்டா. அதுவும் கொஞ்சநேரந்தான். நினைச்சுப்பாத்தவே பிரமிப்பா இருக்கு. என் வாழ்க்கை கேம்க்கு ஒரு டபிள்பிளேயர் கிடைச்சாச்சு. காதலே புடிக்காம சுத்திட்டு இருந்த நான் இப்ப எல்லாத்தையும் ஏன் என்னையே காதலிக்க வச்சது இந்த காதல். கவலய விட்டுட்டு லவ் பண்ணுங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும் :) 

Thursday, November 15, 2012

அவரவர் நியாயம்

‘முதியோர் இல்லங்குறது எவ்ளோ வேதனையான அனுபவம் தெரியுமா? தப்பு பண்ணாதவங்களுக்கு தண்டனை கொடுக்கிற சிறைச்சாலை அது. நமக்காக எவ்ளவோ தியாகம் பண்ண அப்பா அம்மாக்கு இதுவா பரிசு? அவங்க அங்க எவ்ளோ கஷ்டப்படுவாங்கனு நீ கொஞ்சமாவது யோசிச்சியா? நீ இப்டி பண்ணுவனு நான் நினைக்கல அண்ணா…’

 ‘என்னையென்ன பண்ண சொல்ற? வேல வேலனு ஊர சுத்தவே எனக்கு நேரம் சரியாயிருக்கு. வீட்டுல அவளும் அம்மாவும் போடுற சண்ட தாங்க முடியல. நான் வெளிவேலய பாப்பேனா? இல்ல இவங்களுக்கு மத்தியஸ்தம் பண்ணுவேனா? இப்படியே போனா குடும்பம் நடத்த முடியாதுனுதான் அப்பிடி ஒரு முடிவெடுத்தேன். அங்க அவங்களுக்கு எல்லா வசதியும் இருக்கு. நீ அதப்பத்தி கவலப்படாம இரு.’

‘உன்ன அண்ணானு கூப்பிடவே அசிங்கமாயிருக்குடா…. செய்யக்கூடாதத செஞ்சிட்டு இப்ப சப்பகட்டு கட்டுறியே… அப்பிடி என்னதான் உன்ன மயக்கி வச்சிருக்கா உன் பொண்டாட்டி?’

 ‘ஹே, அவள தப்பா பேசாதா? அவ என்ன செய்வா? பாவம். வயசானா வீட்டு நெலமய அனுசரிச்சு அமைதியா இருக்கணும். அத வுட்டுட்டு இருக்குறவங்களுக்கும் தொல்லை கொடுத்துட்டு அவங்களும் மூக்க சிந்திட்டு இருந்தா எப்படி நிம்மதியா வாழமுடியும்? பெத்தவங்கன்றதுக்காக எவ்வளவுதான் பொறுத்துக்கமுடியும்.. ஆமா நீ என்ன என்னையே குத்தம் சொல்லிட்டு இருக்கே? உலகத்துல யாரும் செய்யாததயா நான் செஞ்சிட்டேன்?’

 ‘பெத்தவங்களுக்கு ஒருவாய் சாப்பாடு குடுக்க வக்கில்லாம சாக்கு போக்கு சொல்லிட்டு இருக்கே… வெக்கமா இல்ல?’ ‘அப்பிடீன்னா நீ கூட்டிட்டு போய் உங்கூடயே வெச்சிக்க வேண்டியதுதானே?’

‘அங்க அவரும் நானுமே இருக்க வசதியில்ல.. கரண்ட கட் பண்றதால புழுக்கத்துலயே வேகவேண்டியிருக்கு. இதுல அவங்கள வேற வச்சு எப்படி பாத்துக்கமுடியும்? ஆம்பிளப்பிள்ளனு சொத்த மட்டும் அதிகமா வாங்கிகிட்டியே ஆம்பிளயா லட்சணமா அப்பா அம்மாவ பாத்துக்ககூடாதா?'

‘ஓஓ…. அதுனாலதான் உன் மாமனார் மாமியார நீ புகுந்த வீட்டுக்கு போன அடுத்தமாசமே முதியோர் இல்லத்துக்கு அனுப்பினியா? உன் பேச்ச கேட்டு மச்சான் அவங்க பெத்தவங்கள தள்ளிவக்குறது தப்பில்ல.. ஆனா என் பொண்டாட்டிக்காக நான் பண்ணா தப்பா? வந்துட்டா நாட்டாம பண்ண. வேலயப் பாத்துட்டு போ’

 ‘……………………………………………’