Wednesday, June 22, 2016

நல்லதோர் வயலின் செய்தே..

'அந்த ஒரு மாற்றம். இருபத்தைஞ்சு வருடங்களின் ஏக்கம். அருகில் வைத்துக்கொண்டு தொலைத்துவிட்டதாக என்னையே ஏமாற்றிக்கொண்டிருந்த ஏமாற்றத்தின் முடிவாக சந்தோசத்துக்கும் நிம்மதிக்குமான தேடல். தேடிப்போகப்போகிறேனா? வாசல்படி தாண்ட முடியுமா? அப்படியா வளர்த்திருக்கிறார்கள். அப்புறம் எப்படி? அதுவாகவே வரப்போகிறது. ஒரு விடுதலை. சிறகடிக்கமுடியாமல் இறக்கைகளுக்குப் போட்டிருந்த விலங்குகளுக்கு விடுதலை. உண்மையில் இது விடுதலைதானா? அல்லது பழகிய சிறையிலிருந்து இன்னும் பாழான சிறைக்கான இடம்மாற்றமா?  எதிர்மறையான எண்ணங்களால் எட்டிப்பார்க்கும் சிறு நம்பிக்கைகூட வற்றிபோய்விடுகிறதே!!' இப்படி நடக்குமா அல்லது அப்படி நடக்குமா என சிறு சஞ்சலமும் பெரும் குழப்பமும் மனதைப்போட்டு ஆட்டிப்படைக்க எப்படி நடந்தாலும் இனி உன்னடியே தஞ்சம் என ஊர் எல்லையிலுள்ள வீரகத்தி விநாயகரிடம் அடைக்கலமானாள் ராதா. எப்போதும் போல இன்றும் அவளது குறைகளை சொல்லி அழ ஒரே ஆதரவு இந்த கல்லுப்பிள்ளையார்தான். இன்னும் முடியவில்லை. ஏதோ குறைகிறது புலம்பித்தீர்ப்பதற்கு. என்ன என்று கூட யோசிக்கவிடாமல் குழப்பியது ஒரு குரல்.

அடடே ஒரு ஆண்மகன்! என்னவாம் அவருக்கு? 'இந்தாருங்க' என்று இரண்டு தடவை என்னை அழைத்தான். ஏன் அவர் அழைப்பதற்கு வேறு யாருமேயில்லையாமா என்றால் உண்மையில் இல்லைதான். கிராமத்து எல்லையில் தனித்து இருக்கும் ஒரு சிறு விநாயகர் கோயிலான அதில் இப்போது தான் மட்டுமே நிற்பதை அவள் உணர்ந்தாள். மெல்ல இரண்டடி எடுத்து வைத்தாள்.

'இங்க மிஸ்டர்.சதாசிவம் வீடு எங்க இருக்குனு தெரியுமா? கிளார்க்கா இருந்து ரிடையர்ட் ஆனவரு..'

ஆமா என்னோட மாமாதான்.. ஆனால் அதை அவள் சொல்லவில்லை. சற்று யோசித்து 'நீங்க?' என்றாள்.

'என் பேரு விஜயசாரதி.. அவரு வீட்டுக்கு பொண்ணு பாக்க வந்திருக்கேன்.'

இப்போதுதான் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் ராதா. வாட்டசாட்டமாக வசீகரத்தோற்றத்துடன் அவன்.. அவர்.. விஜயசாரதிதானே பேர். நேற்று மாமா சொன்ன அந்த விடுதலை.. இல்லை இல்லை மாப்பிள்ளை.. அது வந்து.. அது.. இவர்தானா? இப்ப என்ன செய்வது? ஓடிடுவோமா.. அப்டினா அவருக்கு வீடு எப்படி தெரியும். விலாசம் தெரியாம வேற எங்கயும் போய்டார்னா? எப்படியோ நானும் வீட்டுக்குத்தான் போகணும். திரும்பி பிள்ளையாரைப் பார்த்தாள். சிறு சிரிப்புடன் 'வாங்க நானும் அங்கதான் போறேன்' என்றாள். இருவரும் வெட்டைவெளியான அந்த மண்தரையூடாக கண்ணுக்குத் தெரியும் அளவு தூரத்துலிருக்கும் கிராமத்தை நோக்கி நடந்தார்கள்.

ஒரே ஊர்க்காரி என்றதால பொண்ணு எப்படிப்பட்டவங்க என்று தன்னிடமே இவர் கேட்டால் என்ன செய்வது என்று ராதா யோசித்தாள். சொல்லி சமாளிக்க ஒரு வார்த்தையுமே கிடைக்கல. பேசாம உண்மைய சொல்லிடுவோமா என்று தனக்கு வலது பக்கத்தில் ஆறடி இடைவெளியில் நடந்து வந்துகொண்டிருந்த அவனைப் பார்த்தாள். அவன் கையிலிருந்த மொபைலிலேயே கவனமாயிருந்தான். பேசுவது வேறு நிமிர்ந்து பார்க்ககூட இல்லையே.. நாமளே பேசிடுவோமா? நமக்குத்தான் கேட்பதற்கு எக்கச்சக்கமாக இருக்கிறதே.. அவன் ஏதும் தவறாக நினைத்துவிட்டால்? ஏன் என்று வாயைமூடிக்கொண்டு மீண்டும் அவனைப் பார்த்தாள். அவள் மனது சிரித்தது.

அதுதான் வீடு என்று ராதா அவனுக்கு காட்டினாள். கொஞ்சம் பழசான நடுத்தரமான வீடு. ஏழ்மையானவர்களோ என அவன் ஒரு கணம் நினைக்கமுன் சுற்றியிருந்த மற்றைய வீடுகளையும் பார்த்தான். எல்லாமே சராசரியாக ஒரே மாதிரியாக இருந்ததால் பொதுவாக இங்கே வீடுகள் இதே அம்சத்துடன்தான் இருக்கும் என தீர்மாணித்தான். வீட்டு சுற்றுப்புறத்தை நோட்டமிட்டவாறே வாசலில் காலெடுத்து வைத்தான். அதற்குள் அவனைத்தாண்டிச் சென்ற ராதா தன்னிடமிருந்த சாவியால் கதவைத்திறந்து அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

'இந்த வீட்டு சாவி எப்பிடி உங்ககிட்ட?'

'இது எங்க வீடுதான்'

'அப்ப அந்த பொண்ணு?'

'அது.. நான்தான்.' என்று தயங்கியவாறே கூறிவிட்டு அவனது முகத்தைப் பார்த்தாள்.

அவனோ ஆச்சரியமோ அசடு வழிதலோ இல்லாமல் சாதாரணமாக 'ஓ.. அப்படியா?' என்றுவிட்டு வீட்டிற்குள் வந்து ஒரு கதிரையில் அமர்ந்து முன்பு போலவே அந்த மொபைலில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். வீட்டில் யாரும் இல்லை. மாமா கொஞ்சத்துல வாறேன்னுட்டு போனவர இன்னும் காணல. என்னதான் பெண்பார்க்கவந்தவன் என்றாலும் ஒரு அந்நிய ஆணோடு தனியாக வீட்டில் இருப்பது பதட்டத்தை கொடுத்தது. மெல்ல நகர்ந்து தன் அறைக்கு சென்றாள். இவன் எப்பேற்பட்டவனாக இருப்பான்? மனைவியின் கருத்துகளுக்கு மரியாதை கொடுப்பானா? இல்லை மறுகாதில் வெளியே விடுவானா? யோசித்துக்கொண்டே கண்ணாடிப் பக்கம் திரும்பினாள். அவளது பிம்பம் 'என்ன இப்டி இருக்க? சீக்கிரமா அலங்கரிச்சிக்க' என்று உசுப்பிவிட தன்னிடம் இருக்கும் ஒரு அழகான புடவைக்குள் தாவினாள். இப்ப பாரு எப்பிடி இருக்கு என்று கண்ணாடியிடம் கேட்டாள். போ போ அவர் மயங்கி விழப்போகிறார் என்று கண்ணாடியும் அவளைப் பார்த்து சிரித்தது. இப்படியேவா போறது? ஆ.. காப்பி போட்டுக்கொடுப்போம். அடுப்புடன் சேர்ந்து சில நினைவுகளும் எரிந்தன.

பெற்றோரை இழந்த நிலையில் மாமாவிடம் அடைக்கலம் புகுந்த அந்த சிறுமி அவருடைய மனைவியால் துன்புறுத்தப்படுவோம் என நினைத்துப்பார்த்திருப்பாளா? பள்ளிக்கூடமா.. அப்படி என்னதான் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று எழும் கேள்விக்கு பதிலே காணாமல் படிப்பை தொலைத்த கதையைத்தான் மறப்பாளா.. மாமாவின் பிள்ளைகளுக்கு கிடைக்கும் சலுகைகள் தனக்கும் வேண்டும் என அவள் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் ஒரு பெண்பிள்ளைக்கென செய்யவேண்டிய சில கடமைகளையாவது தனக்காக செய்தார்களா? சமையல் செய்யும் அவளுக்கே மிஞ்சாது சாப்பாடு... கால் அமுக்கிவிட்டாலும் எட்டிஉதைக்கும் அத்தையுடன் படும்பாடு.. இந்த வீட்டையே சுற்றிவரும் செக்குமாடு.. இதானே என் வாழ்க்கை.

காப்பியை அவனிடம் நீட்டினாள். அவள் முகத்தைப் பார்க்காமல் மொபைலைப் பார்த்தபடியேவாங்கி குடித்தான். அவள் சற்று விலகி நின்றாள். பார்க்கவேமாட்டேன்கிறான். அலங்காரம் எல்லாம் விண். பேசாமல் அறைக்குள்ளேயே சென்றுவிடுவோமா.. மாமா வந்தவுடன் அவருடனேயே பேசட்டும். நமக்கென்ன வந்தது. ரொம்பத்தான் பண்றாரு. அறைக்குள் சென்றும் மனம் குமுறினாள். நான் என்ன பேயா பிசாசா.. பொண்ணு பார்க்க வந்துட்டு போனைப் பார்த்துட்டு இருந்தா? நிறுத்தி.. அவளைப் பற்றி அவளே நினைத்து தலையில் தட்டிக்கொண்டாள். இப்படியெல்லாம் நீ பேசுவியா என்று சிரித்தாள். வெளியே லேசாக தலையை நீட்டிப் பார்த்தாள். அவன் அங்கே இல்லை. எங்கே போனான். பின் வாசலடியில். எதைப் பார்த்து சிலைபோல் நிற்கிறான். அவன் அருகில் மெல்ல நடந்தாள்.

அவன் பருகிய காப்பி கப் கழுவி பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. நாகரீகமானவன். அவன் பார்த்துக்கொண்டிருந்த மூலையில் தன்னுடைய பழைய வயலின் இருந்தது. ஆசையாக வாங்கியது. வயலின் என்றால் உயிராச்சே. நல்லா வாசிக்கவும் கற்றுக்கொண்டாயிற்று. ஆனால் வாசிக்கத்தான் உரிமையில்லை. வாங்கிய வயலின் வீட்டின் பின்பக்க குப்பைகளோடு குடிபுகுந்தது. வீட்டு வேலை செய்யவே இவளுக்கு நேரமில்லை இந்த கேட்டுல வயலினோட உட்கார்ந்துட்டா.. இவ வாசிச்சுதான் மழை வரப்போகுது.. இது அத்தை கடைசியாக தன்னை வயலினோடு பார்த்தபோது கூறிய வார்த்தைகள். அதற்கு பிறகு இப்போதான் அந்த வயலினையே பார்க்கிறாள். அவன் திரும்பி அவளை கோபமாகப் பார்த்தான்.

'இது யாரோடது?'

'என்னோடதுதான்.'

'அருமை தெரியாட்டி அத ஏன் வாங்குறீங்க? எங்கயோ யாருக்கோ தன்னோட இசையால சந்தோசம் கொடுக்கவேண்டிய இந்த வயலின் இங்க வெய்யில்லயும் மழையிலயும் குப்பைக்குள்ள இருந்து அழியணுமா?'

அதே ஆவேசத்துடன் போய் அந்த வயலினை எடுத்தான். ஒட்டியிருந்த அழுக்குகளை சுத்தம் செய்தான். இனி இது எங்கிட்டத்தான் அப்பிடினு திரும்பி சொல்ல வந்து நீர் வழியும் அவளது விழியில் சிக்கி சற்று திகைத்து நின்றான்.

'ஏன் அழுறீங்க?'

அவள் ஓடிவந்து அவன் தோளில் சாய்ந்தாள். அவன் நிலைகுழைந்தான். அட இது எதிர்பார்க்காததுதான். விலக்கவும் அவகாசம் கொடுக்காமல் அவள் அழுதுகொண்டே இருந்தாள். என்ன இந்த பொண்ணு இப்பிடி பண்றாளே.. தள்ளிவிட்டுடுவோமா?

'அழியுற நிலையிலதான் இருக்கு. ஆயிரம் கனவுகளை சுமந்து பூமிக்கு வந்து அனாதையா போகவழியில்லாம அடைக்கலம் தந்தவங்ககிட்டயும் அன்பில்லாம அவங்கள தாண்டி போகவும் முடியாம கொடுமையான வாழ்க்கையில சிக்கித் தவிக்குது. இப்போ உங்க கையில இருக்கு. நீங்களாவது..' என்று முடிப்பதற்குள் வாசலில் ஏதோ சத்தம் கேட்டு தன்னிலைக்கு வந்தவள் சட்டென அவனிடம் இருந்து விலகி அறைக்கு ஓடினாள். நடுவில் ஒருக்கா திரும்பி பார்த்தா பார்வையில் ஆயிரம் கேள்விகளுடன். என்கிட்ட என்ன பதில் இருக்கு? அவள் வயலினைப் பற்றியா இப்படி அழுதுவிட்டுப் போகிறாள்? அவள் கண்ணீரால் நனைந்த சட்டையுடனும் கையில் பிடித்த வயலினுடனிம் ஹாலுக்கு செல்கிறான். அங்கே அவனது உயரதிகாரி சங்கர் இருந்தார். இவனைப் பார்த்ததும் சிரித்து அட அட வாங்க எப்போ வந்தீங்கனு வரவேற்றார். பக்கத்தில் ஒரு வெற்றிலைவாய் ஆசாமி. அவளது மாமா..அந்த சதாசிவமாக இருக்ககூடும். அவன் போய் இருக்கையில் அமர்கிறான்.

'ஏன்மா.. வாசல பூட்டிட்டு கோயிலுக்கு போய்ட்டு வர இவ்ளோ நேரமா? நாங்க காத்திருந்து அலுத்துட்டு அப்பொறம் காலாற நடந்துட்டுவந்தோம்..சரி சரி கொஞ்சம் முன்னுக்கு வா' என்று அந்த சதாசிவம் அழைக்க சற்றுமுன் நடந்த சம்பவத்தால் அடைந்த நாணத்திலிருந்து விலகாமல் அவர்கள்முன் கொலுபொம்மைபோல வந்து நின்றாள் ராதா. விஜயசாரதி அமர்ந்திருந்தான். அவள் இதழில் தானாகவே ஒரு சிறுநகை அரும்பியது. அப்பொறம் மாமா.. அவருக்குப் பக்கத்தில் ஒரு வயசானவர். அவனின் உறவுக்காரராக இருக்கக்கூடும். வந்ததற்கு அவருக்கும் ஒரு வணக்கத்தை வைத்தாள்.

'ராதா ரொம்ப அடக்கமான பொண்ணு. அதிகம் படிக்கலதான். ஆனா அன்பா அரவணைப்பா நடந்துக்குவா.' தன்னைப்பற்றிய மாமாவின் வார்த்தைகளால் நிஜமாகவே பூரிப்படைந்த அவள் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள். அவன் எந்தவிதமான உணர்ச்சியும் காட்டாமல் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தான். 'வீட்டுல மத்தவங்க எல்லாம் ஊர்த்திருவிழாவுக்குப் போயிருக்காங்க. அதான் பெரிசா ஏற்பாடு செய்யமுடியல' என்று தொடர்ந்த சதாசிவம் ராதாவைப்பார்த்து 'மாப்பிளைக்கு காப்பி கொடும்மா' என்று சொல்ல 'ஏற்கனவே கொடுத்துட்டேன் மாமா' என்று மெல்லியகுரலில் பதிலளித்தாள். 'என்னம்மா சொல்ற? வீடு பூட்டியிருந்ததால நானும் மாப்பிளையும் ஏரியை சுத்திப்பாத்துட்டு இப்பதானோ வாறோம்..நீ என்ன காப்பி கொடுத்துட்டேனு சொல்ற?' என்று நிறுத்த ராதா புரியாமல் குழம்பியை பார்வையோடு விஜயசாரதியைப் பார்த்தாள். சதாசிவம் அவளது பார்வையை கவனித்து ஏதோ தப்பு நடந்திருக்கவேண்டுமென ஊகித்து 'இவர்தான்மா மாப்பிள்ளை..சங்கர். ஒரு பெரிய கம்பெனில பெரிய உத்தியோகம் பாக்குறாரு. உன்னைப் பார்த்தும் பிடிச்சிருக்குனு சொன்னாரு. தம்பி அவருக்கு கீழ வேல பாக்குறவரு. மாப்பிளக்கு உறவுக்காரங்க யாரும் இல்லாததால தம்பியக் கூட்டிட்டு வந்தாரு' என்று மாமா சொல்வது கனவாக இருந்துவிடக்கூடாதா என அவள் மனம் தவித்தது. அவள் அழுவது அவளுக்கே தெரியவில்லை. ஏன் மாமா இப்பிடி பண்ணீங்கனு கத்தணும்போல இருந்திச்சு. அவனைப் பார்த்தாள். அவன் பார்வையில் வெறுமைதான் இருந்தது. எந்தப் பதிலும் இல்லை.

'எனக்கு வசதி நிறைய இருந்தாலும் இந்த வயசுல என்னை கவனிக்க யாரும் துணையா இல்லை. ராதாவயும் உங்களயும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, கூடிய சீக்கிரம் கல்யாணத்தை வச்சிக்கலாம்'னு அந்த பெரியவர் கூறுவதையும் அதற்கு தன் மாமா சிரிச்சிக்கிட்டு தலையாட்டுவதையும் விரக்தியோடு பார்த்தாள் ராதா. இவ்வளவும்தான் என் வாழ்க்கையா வினாயகா..என்னை ஏமாத்திட்டியே என்று அவள் சோர்ந்துபோகும்போது அங்கே இன்னொரு இதயமும் துவண்டுபோயிருந்தது.

'நான் என்ன தப்பு செய்தேன். ஏன் என் மனம் வலிக்கிறது? பொண்ணு பார்க்க வந்திருக்கேனு சொன்னேன். ஆனா எனக்குத்தான் பொண்ணு பார்க்க வந்திருக்கேனு சொன்னேனா? நான் அவளை ஏமாத்திட்டேனா? இல்லை அவளா நினைத்து ஏமாந்ததற்கு நான் பொறுப்பா?'

இதற்குமேல் அனுமதிக்கூடாதென்று எழுந்து அவளிடம் போய் 'நான் எனக்கு பொண்ணுபார்க்க வரல. ஆனா எனக்கு பொண்ணு கிடைச்சிருச்சு. உனக்கு சம்மதம்னா இப்பவே என்கூட வா' என கை நீட்டிய அவனை இன்னுமே நம்பிக்கையில்லாமல் பார்த்தாள். இதுவும் கனவுதானா? 'எவன்டா அவன் ஊர்பைர் தெரியாதவன் என் வீட்டு படியேறி திமிராப் பேசுற'னு மாமா சண்டைக்கு வரவும்தான் அவள் சுய நிலைக்கே வந்தாள். அவனை நிஜமாத்தான் சொல்றியா என்ற அர்த்தத்துடன் பார்தாள். அவன் அவளது மாமாவின் பக்கம் பொறுமையாக திரும்பி 'உங்ககிட்ட ஒன்னே ஒன்னு கேக்குறேன். உங்க சொந்த பொண்ண இப்பிடிப்பட்டவருக்கு கட்டிக்கொடுப்பீங்களா?' அவன் கேட்ட திடீர் கேள்வியால் அடுத்த அடி வைக்கமுடியாமலும் அடங்காத கோபத்தால் பின்வாங்கவும் முடியாமல் அதே இடத்தில் இருந்தார். அதே பொறுமையுடன் சங்கரிடம் திரும்பி 'ஸாரி சார். உங்களுக்கு பொண்ணு பார்க்கத்தான் வந்தேன். ஆனா வயசாகியும் கல்யாணம் ஆகாம கஷ்டப்படுற எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்க. அப்பிடி இல்லாட்டி கல்யாணம் ஆகி கணவனை இழந்து ஒரு துணைக்காக ஏங்குறவங்கங்களும் நிறைய இருக்காங்க. அந்தமாதிரி உங்க வயசுக்கு பொருத்தமா ஒரு பொண்ணைப் பாருங்க சார்.. அதுக்கும் நான் துணைக்கு வாரேன். இப்பிடி சின்னபெண்ணு வாழ்க்கையை வீணாக்கி நீங்களும் நிம்மதி இழந்து வாழவேணாம் சார்' என்று கூறிவிட்டு பதில் எதிர்பார்க்காமல் ராதாவின் பக்கம் திரும்பினான். சட்டென மாமாவின் காலில் விழுந்த ராதா நான் போய்ட்டு வாரேன் மாமா என்றாள். ஒரு கையில் அவளது கையைப் பிடித்து மறு கையில் அவளது வயலினையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான் விஜயசாரதி.