Thursday, May 24, 2012

மூன்றாம் தலைமுறை!

2012ம் ஆண்டு தமிழ்சினிமாவிற்கு மூன்றாம் தலைமுறை நடிகர்கள் இருவர் அறிமுகமாகின்றனர். அதுவும் அறுபது ஆண்டுகளாக தமிழ்சினிமாவின் முண்ணனி நட்சத்திரக் குடும்பங்களிலிருந்து. வாரிசு நடிகர்கள் என்பது தமிழ்சினிமாவிற்கு புதிதல்ல. இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் வாரிசு விஜய், நடிகர் சிவகுமாரின் வாரிசுகள் சூர்யாவும் கார்த்தியும், டீ.ராஜேந்தருக்கு சிம்பு, கஸ்தூரிராஜாக்கு தனுஷ்,எடிட்டர் மோகனுக்கு ஜெயம்ரவியென பட்டியல் நீளும். கமல் மகள் ஸ்ருதியும் தற்போது களத்தில் குதித்துள்ளார். ஆனாலும் மூன்றாம் தலைமுறையென்பது தமிழ்சினிமாவிற்கு புதிய விடயம். அதிலும் இந்த இருவருக்கும் பல சிறப்புகள் உண்டு.

ஒருவர் மறைந்த நடிகர்திலகம் செவாலியே சிவாஜிகணேஸன் அவர்களின் பேரனும் இளையதிலகம் பிரபுவின் மகனுமான விக்ரம்பிரபு. இன்னொருவர் மறைந்த நவரசத் திலகம் முத்துராமனின் பேரனும் நவரசநாயகன் கார்த்திக்கின் மகனுமான கௌதம்.

யார் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் தமிழ்சினிமாவின் அடையாளம் எம்.ஜி.ஆர்,சிவாஜி,ரஜினி,கமல்தான். இதில் நடிப்புக்கு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர் சிவாஜி. 1927ம் ஆண்டு பிறந்த இவர் எட்டு வயதில் ராமாயண நாடகத்தில் சீதை வேடமேற்றதிலிருந்து ஆரம்பித்த நடிப்புப்பயணம் அவர் இறக்கும்வரை ஓயவில்லை.கிட்டத்தட்ட 300 திரைப்படங்கள். 50 வருட திரைவாழ்க்கை. ஆங்கிலேயர்கள் இவரை புகழும்போது untired acting career என்பார்கள். தமிழ்சினிமாவில் உழைப்புக்கு சிறந்த உதாரணமே சிவாஜிதான். இது சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. 1952ம் ஆண்டு பராசக்தியில் அறிமுகமானார். பாடல்கள் ஆட்சி செய்த தமிழ்சினிமாவை மாற்றி வசனங்களால் விளையாடினார். சர்வதேச விருது பெற்ற முதல் இந்திய நடிகன் என்ற பெருமைக்கு உரியவர். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக ஆஃப்ரோ ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான பட்டம் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதேபோல அமெரிக்காவில் 1962ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச கலாசார விழாவில் இந்திய கலாசாரத்தின் பிரதிநிதியாக நடிகர்திலகம் அழைக்கப்பட்டார். அப்படி வெளிநாட்டினரால் அழைத்து கௌரவிக்கப் பட்ட முதல் இந்திய நடிகர் சிவாஜிதான். உத்தம புத்திரன், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன், தில்லானா மோகானாம்பாள், திருவிளையாடல், கௌரவம், வியட்னாம் வீடு, எங்க மாமா, திரிசூலம், முதல் மரியாதை போன்றவை சிவாஜியின் கிரீடத்தில் உள்ள சில முத்துக்கள். 1990ம் ஆண்டு கிட்டதட்ட நடிகர்திலகத்தின் இறுதி தசாப்தத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக சிவாஜி முதல் இடத்தில் காணப்பட்டார். இரண்டாவதாக எம்.ஜி.ஆரும் மூன்றாவதாக ரஜினியும் காணப்பட்டனர். இன்றும்கூட இன்றைய இளம் நடிகர்கள் பலரைக் காட்டிலும் நடிகர்திலகத்திற்கு அதிக ரசிகர்கள் இருப்பதைக் காணலாம். 1996ம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கத்தால் கலைத்துறைக்கு வழங்கப்படும் செவாலியே பட்டத்தை பெற்றார். இறுதிவரையும் தமிழ்சினிமாவிற்கு சேவையாற்றிய நடிகர்திலகம் 2001மாண்டு ஜூலை மாதம் 21ம் தேதி பூவுலகை நீத்தார். தமிழ்சினிமா உள்ளவரை சிவாஜி நாமம் இருக்கும்.

அதேபோல தமிழ்சினிமாவின் பொற்காலம் என்று சொல்லப்படும் 1960களில் தனக்கென தனி முத்திரையுடன் வலம் வந்தவர் நவரசத்திலகம் முத்துராமன். திரைப்பிண்ணனி ஏதுமில்லாமல் கலையார்வத்தால் தனது சொந்த முயற்சியில் ஜெயித்தவர். அந்தக்காலத்தில் மிகவும் அழகான கவர்ச்சியான நடிகராக கருதப்பட்ட முத்துராமன் அனைவராலும் விரும்பப்பட்டார். 60களிலும் 70களிலும் கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து புகழ் ஈட்டினார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், சிவகுமார், ரவிச்சந்திரன் என பலருடனும் இணைந்து நடித்த முத்துராமன் சூரியகாந்தி, காதலிக்க நேரமில்லை, காசேதான் கடவுளடா, அனுபவி ராஜா அனுபவி, சர்வர் சுந்தரம் போன்ற சூப்பர்ஹிட் படங்களில் நடித்தார். பாலச்சந்தரின் ஆரம்பகால படங்கள் அனைத்திலும் சிறந்த கதாபாத்திரங்கள் பலவற்றில் தோன்றினார். காலம் கைகொடுக்காததால் பிரகாசமாகவிட்டாலும் தமிழ்சினிமாவில் மறக்கமுடியாத நபர்களில் ஒருவராகிவிட்டார் முத்துராமன். தனது ஐம்பத்திரெண்டு வயதிலேயே அவர் இறந்ததால் தமிழ்சினிமா ஒரு சிறந்த நடிகரை இழந்த சோகம் கொண்டது.



சிவாஜி கணேசனும் முத்துராமனும் இணைந்து பார்மகளேபார், அன்னை இல்லம், பழனி, கர்ணன், திருவிளையாடல், திருவருட்செல்வர், வாணி ராணி, மூன்று தெய்வங்கள், காவல் தெய்வம், எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம், இரு துருவங்கள், சிவந்த மண், வைர நெஞ்சம் மற்றும் மேலும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களுக்கு அடுத்த தலைமுறை பிரபுவும் கார்த்திக்கும். நடிகர்திலகத்தின் இளையமகன் பிரபு. நடிகர்திலகத்தின் நேரடியான கலைவாரிசு. 1956ம் ஆண்டு பிறந்த பிரபு சங்கிலி படம் மூலம் திரைத்துறைக்கு வந்தார். இளையதிலகம் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட பிரபு இதுவரை தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஆங்கிலம் என நூறு படங்களுக்குமேல் நடித்துள்ளார். இவரது ப்ளாக்பஸ்டர் படமாக சின்னத்தம்பி திகழ்கிறது. தமிழ்சினிமாவின் வாரிசுகளுக்கு உதாரணம் கேட்டால் பிரபுவின் பெயர்தான் முதலில் கேட்கும். கிட்டதட்ட இருபது வருடங்களுக்குமேல் கதாநாயகனாக நடித்த பிரபு 2006மாண்டு வந்த உனக்கும் எனக்கும் படம்மூலம் குணசித்திர நடிகராக உருவாகினார். இன்றும் தினந்தோறும் படப்பிடிப்பகளுக்கு செல்லும் பிஸியான நடிகர். சந்திரமுகி, அசல் போன்ற படங்களை தயாரித்துள்ளார். குழிவிழும் கன்னம் இவரது ஸ்பெஸாலிடி. அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் தனது முத்திரையை பதித்தவர். இவரது ரசிகர்களுக்கு இன்றும் குறைவில்லை. எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளிலும் வெற்றி நாயகனாக வலம்வந்தவர்.

பிரபுவின் சககாலத்தில் இன்னொரு வெற்றிநாயகனாக வலம்வந்தவர் நவரசநாயகன் கார்த்திக். பலவருடங்கள் தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்தாலும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அதிக ரசிகர்களைக்கொண்ட நாயகனாகத் திகழ்ந்தார். அதுவும் பெண் ரசிகர்கள் ஏராளம். தனக்கென தனித்துவமான ஸ்டைல் உடையவர். இவரது காதல்காட்சிகள் இனிமையாக இருக்கும். அனைவரையும் போல நானும் மௌனராகத்தையே உதாரணமாக காட்டுகிறேன். அந்த சார்ம் இதுவரை முறியடிக்கபடவில்லை. சிறந்த நடிப்பாற்றலை கொண்ட நடிகராக இருந்தாலும் பல ரசிகர்களைக்கவர்ந்தவர் என்றாலும் இன்றும் தனக்கென ஒரு கூட்டத்தை பலமாக கொண்டவராயினும் காலக்கொடுமையோ தீயசகவாசமோ வேண்டாத பழக்கவழக்கங்களோ ரஜினி கமலுக்கு அடுத்ததாக இன்று வளர்ந்திருக்கவேண்டியவர் யாராலும் கவனிக்கபடாதவராகவே இருக்கிறார். அரசியலுக்குள் சென்ற அனைவரும் ஜெயிப்பதில்லை என்பதை அவருக்கு யாராவது உணர்த்தவேண்டும். நேரத்திற்கு படப்பிடிப்புக்கு செல்வதில்லை போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர்மேல் இருந்தாலும் பெரும்பான்மையோரால் ரசிக்கப்பட்ட சிறந்த நடிகன் கார்த்திக் என்பதில் ஐயமில்லை. அத்துடன் சிறந்த நடிகருக்கான பிலிம்ஃபேர் விருதுகளை நான்குமுறையும் மாநிலவிருதை ஒருமுறையும் இவர் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபுவும் கார்த்திக்கும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். உதாரணமாக அதிசயப்பிறவிகள், அக்னிநட்சத்திரம், காவலன் அவன் கோவலன், சுயம்வரம், தை பொறந்தாச்சு, குஷ்தி, மாஞ்சாவேலு, ராவணன் போன்ற படங்களை குறிப்பிடலாம். ஒன்றாக சேர்ந்து நடித்த ஒரு நடிகர்களின் வாரிசுகள் இணைந்து நடித்த பெருமையை பிரபுவும் கார்த்திக்கும் அன்றே அடைந்தனர்.

இன்று மூன்றாம் தலைமுறை நடிகர்கள் உருவாகிறார்கள் அதுவும் ஒரே ஆண்டில். இளையதிலகம் பிரபுவின் மகன் விக்ரம்பிரபு கும்கி படம் மூலம் அறிமுகமாகிறார். மைனாவின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்த பிரபுசாலமன் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்த படம் வெளியாகும் முன்னே இளையதளபதி விஜய் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீமேக்கிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.


அதேபோல நவரசநாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கடல் படம்மூலம் திரையுலகத்திற்குள் பிரவேசிக்கவிருக்கிறார். அதுவும் மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில். சமந்தா, அர்ஜூன், அரவிந்தசாமி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். முதல்படமே இவ்வளவு பெரிய கூட்டணி என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.



இரண்டு பெரிய திரைக்குடும்பத்திலிருந்து வரும் வாரிசுகள் என்பதால் இவர்கள்மேல் ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்களா? ஒருவேளை இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் மூன்றாவது தலைமுறையாக இணைந்து நடிக்கும் பெருமை இவர்களை வந்தடையும்.

No comments:

Post a Comment