Monday, January 30, 2012

அன்பிற்குமுண்டோ…

(பத்து வருடங்களின் முன் நான் எங்கோ படித்த கதையிது. கதையின் பெயர் எனக்கு மறந்துவிட்டது. எழுதியவரின் பெயரும் மறந்துவிட்டது. படித்தது குமுதத்திலா ஆனந்த விகடனிலா என்பதுகூட ஞாபகமில்லை. ஆனால் அந்த கதை எனக்கு மறக்கவில்லை. வாசித்த பத்து நிமிடத்தில் என்னுள் ஏதோ தாக்கத்தை ஏற்படுத்தி சென்றுவிட்டது. அதன் காரணமாகவே அதை இப்பொழுது எனது தலைப்பில் என் சொந்த நடையில் எழுதுகிறேன். பரந்த இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்கருவின் உரிமையாளருக்கு என் எழுத்தை சமர்ப்பிக்கிறேன்)

‘ஏங்க இன்னிக்கு நான் வர லேட்டாகும். ப்ளீஸ்ங்க நீங்களே டின்னர் செஞ்சு சாப்பிடுங்க.எனக்காக வெய்ட் பண்ணாதீங்க.சாப்பிட்டு தூங்கிடுங்க…!’

மனைவியின் பணிச்சுமை அறிந்தவனாய் ‘டோன்ட் வொரி, டேக் கேர்’ என சொல்லி வைத்தான் கமல்…!

நித்யா… அவளின் திறமைக்கு பல உயர்ந்த தனியார் மருத்துவமனைகளிலிருந்து வைத்தியப்பணிக்கு அழைப்பு வந்தும் ஏழைகளுக்கு சேவை செய்யவே அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தலைமை மருத்துவர். சொந்த வேலைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு எப்போதும் நோயாளிகளையே கவனித்துக் கொண்டிருப்பதாலும் அவள் இதுவரை வைத்தியம் பார்த்த அனைவருமே ஆரோக்கியம் பெற்றிருப்பதாலும் சமுகத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து பாராட்டப்படுகிறாள். இன்றும் அதுபோல்தான்…!

புறப்படும் நேரத்தில் ஆபத்தான நிலையில் ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டது தெரிந்தவுடன் வர தாமதமாகுமென கணவனுக்கு தெரிவித்துவிட்டு நோயாளியை கவனிக்க ஓடுகிறாள்…!

படுக்கையில் ஒரு இளைஞன். வயது முப்பதுதானிருக்கும். குளித்து வருடக்கணக்காகியிருக்க வேண்டும். அழுக்கும் நாற்றமும் நிறைந்த எலும்புத்தேகம். முகம் முழுக்க காடுமாதிரி முடி படர்ந்திருந்தது. மூச்சு விடவே திணறிக்கொண்டிருந்தான். என்னவென்று விசாரித்ததில் குடியாம்… மற்றும் உள்ள எல்லா போதைப்பழக்கங்களும் உள்ளதாம். அவனுக்கு பக்கத்தில் இருந்து புலம்பிக்கொண்டிருந்த அந்த கிழவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது. அவரைத் தேற்றுவதற்காய் அவருக்கு அருகே சென்று ‘ஏன் இப்படி ஆச்சு தாத்தா!’ என கனிவோடு வினவினாள் நித்யா!

‘என்னத்தம்மா சொல்லுவேன்? இந்த மவராசன் நான் வேல பாக்குற வூட்டு ஐயாவோட கடைசிப்புள்ள. அழகுராசா!!! குணத்துல தங்கம்…தாத்தா தாத்தானு எம்மேல உசுரா இருக்கும்..நல்லா படிச்சிட்டு வந்த புள்ளக்கு திடீர்னு இந்த பழக்கம் வந்துடிச்சு. வூட்டுல ஆரு சொல்லியும் கேக்கல. அவங்களும் ஏசிப் பேசி உருட்டி மருட்டி கொஞ்சிக் கெஞ்சி பாத்து முடியாம கைகழுவி வுட்டாங்க. இப்ப ஆருமே இல்லம்மா! நானு ஒத்த ஆள என்னத்தம்மா பண்ண்வே?’

இந்த வயதானவரின் துயரைத் துடைக்கவாவது அவனை காப்பாற்ற வேண்டும்போல இருந்தது. அவனருகில் சென்றாள். நாற்றத்தை சகிக்க முடியாவிட்டாலும் அதை பொருட்படுத்தாது அவனை பரிசோதித்தாள். அவன் கண்களைத் திறக்க முடியவில்லை. பாதி உயிர் போன நிலையில் மீதி உயிரும் ஊசலாடிக்கொண்டிருந்தது. அவன் உதடுகள் மட்டும்
‘……..மலரும் மதியும் மனதில் மருகும்
அணுவின் அளவும் எளிதில் புரியும்
தொலையும் நினைவும் தொடரும் கனவும்
எதுவும் அணுகும் இதயம் தொலையும்…..

என்ற வார்த்தைகளை உச்சரித்தன. அவளால் நம்ப முடியவில்லை. கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள். படபடத்தவாறே அவனருகில் சென்று தீவிரமாக பரிசோதித்தாள். பலனில்லை. அவன் பிழைப்பதற்கு ஒரு சதவீதம்கூட வாய்ப்பில்லை என அறிந்ததும் துக்கத்துடன் மருத்துவமனையைவிட்டு வெளியே வந்து தானே காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினாள். பொத்துக்கொண்டுவந்த கண்ணீரை அடக்க முடியவில்லை. இது எப்படி எப்படி என அவள் உள்ளம் குமுறிக்கொண்டிருந்தது.


அவள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆண் நண்பர்களுடன் தேவையேற்படாதவிடத்து அனாவசியமாக உரையாடியதில்லை. அனைவரையும் சமமாகப்பார்க்கும் அன்பு உள்ளம் அவளிடத்தில் காணப்பட்டாலும் ஆண்களைப்பார்த்தால் ஒருவித அச்ச உணர்வு தோன்றும். எப்படியோ ஐந்து ஆண்டுகள் நல்ல படியாக படித்து முடித்தாகி விட்டது. தான் பெற்ற பட்டத்தை பெற்றோரிடம் காட்டும் பூரிப்புடன் சாலையோரத்தில் நடந்து வந்துகொண்டிருந்தாள்.

நீண்ட சாலையோரம். நடுநடுவே உயரமாக வளர்ந்திருந்த அந்த பெயர் தெரியாத மரத்திலிருந்து உதிர்ந்திருக்கும் மஞ்சள் நிற சிறிய பூக்கள் அவளின் பாதைக்கு விரிப்பானது. உடலைத் தழுவிச் செல்லும் இளந்தென்றல் காற்று ஏனோ இதமாக இருந்தது. யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள். அன்பு. இவன் ஏன் என்னை நோக்கி ஓடி வருகிறான்? அவள் நினைத்தமாதிரியே அவன் அவளின் அருகே வந்துநின்று சில மூச்சுகளை விற்று பல மூச்சுகளை வாங்கினான்.

அன்பு. அவளுடன் படிக்கும் மாணவர்களில் கவனிக்கப்படக்கூடியவன். தன் குறும்புத்தனங்களால் பலரையும் சிரிக்க வைப்பவன். படிப்பு சுமார்தான். ஆனால் கவிதை எழுதுவதிலும் கால்பந்து விளையாடுவதிலும் முதலாமவன். நிறைய பதக்கங்களும் கோப்பைகளும் பெற்றிருக்கிறான். பெண்களை ஏறெடுத்தும் பார்த்ததில்லை. நல்ல பையன்தான். ஆனால் அவன் ஏன் வந்து நிற்கிறானென புரியாமல் நின்றாள். ‘என்ன விசயம் அன்பு?’

ஒரு புன்னகைப் பார்வையுடன் ‘ வந்து….. எப்படி சொல்றதுனே தெரியல நித்யா! இதுவரைக்கும் எந்த பொண்ணுமே என்னை ஈர்த்ததில்லை. அது ஏன்னு புரியல? ஆனா உங்கள பார்த்தவுடனே எனக்கு பிடிச்சுப் போச்சு. அத உங்ககிட்ட எப்பிடி சொல்றதுனு தெரியாம இந்த அஞ்சு வருஷமும் ரொம்ப கஷ்டப்பட்டேங்க! நீங்க எப்பிடி எடுத்துப்பீங்களோனு ஒரே பயமா இருந்திச்சுங்க. இப்ப நம்ம படிப்பு முடிஞ்சு போச்சு. இனிமே உங்கள பார்க்க முடியாமப் போச்சுன்னா? அத நெனச்சுக்கூட பார்க்க முடியல! அதான் பயத்தவிட்டு சொல்லிட்டேன். என்னால உறுதியா சொல்ல முடியுங்க. நான் உங்கள சந்தோசமா பார்த்துப்பேன். எனக்கு உங்க அன்பு மட்டும் போதுங்க! நான் உங்கள ரொம்ப விரும்புறேங்க. எல்லாரும் என்னை நல்ல கவிஞன்னு சொல்றாங்க. உங்களுக்குத் தெரியாதுங்க…. நான் கவிதை எழுத ஆரம்பிச்சதே உங்களப் பார்த்தப்புறோம்தான். உங்ககிட்ட சொல்லணும்னே ஒரு கவிதை எழுதிருக்கேன்க.
...மலரும் மதியும் மனதில் மருகும்
அணுவின் அளவும் எளிதில் புரியும்
தொலையும் நினைவும் தொடரும் கனவும்
எதுவும் அணுகும் இதயம் தொலையும்…..
தெளிவாய்ச் சொன்னால் நிறைவெல்லாம் பெற்றியா?
அன்பின் ஆழத்தில் நினைவெல்லாம் நித்யா…….
என்னைப் புரிஞ்சுக் கோங்க.. வேணாம்னு சொல்லிடாதீங்க.’

பொதுவாகவே ஆண்களைக் கண்டால் உண்டாகும் அச்சமும் திடீரென்று ஒருவன் தன் முன்னே வந்து காதலிக்கிறேன் என்று சொன்ன எரிச்சலும் அவளை நிலைகுலைய வைத்தது. கைகளை இறுக்க பொத்திக் கொண்டு சில நிமிடம் நின்றாள். பின் கண்களைத் திறந்தபோது அவனை ஒரு ஜந்துவைப் போலப் பார்த்தாள். இருந்தாலும் அமைதியை கைவிடாமல்
‘எப்பிடி ஒரு ஆம்பளயால நினச்சமாதிரியெல்லாம் பேசமுடியுது? எங்கள நம்பி எங்க வீட்டுல கொடுத்திறுக்கிற சுதந்திரத்துக்கு நாங்க மரியாதை கொடுக்கணும்னு நினைக்குறோங்க. தயவு செஞ்சு இந்த மாதிரி ஆச வார்த்த காட்டி எந்த பொண்ணயும் ஏமாத்தாதீங்க…ப்ளீஸ். இந்த மாதிரி போய்ஸ்ஸ நம்பி நாசமாப்போன எத்தனபேர நா பார்த்துருக்கேன் தெரியுமா? அவுங்க அம்மா அப்பா எவ்ளோ வேதனப் பட்டுருப்பாங்க! ஏதோ தெரிஞ்ச பையன்றதால இதோட விட்றேனி. இதுக்கு மேலயும் என் பின்னால வந்து என் எதிர்காலத்த நாசமாக்கிடாதீங்க!!!’

தன் அன்பை பெறாத அந்த அன்புவிடம் தான் அவ்வாறு கூறிவிட்டு சென்ற வார்த்தைகள் ஒன்றும் அவ்வளவு கடுமையானவை அல்லவே. ஆனால் அதன் உண்மை புரிந்துதான் அவன் இவ்வளவு நாளாய்த் தன் வாழ்வில் குறுக்கிடவில்லூயென நினைத்திருந்தாளே! அவன் இவ்வாறு தன்னையே அழிப்பான் என அவள் அறிந்திருந்தாளா? சாகும்நாள்வரை உறுத்திக் கொண்டே இருக்குமே! இப்பொழுது என்ன செய்வது? தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டதே. ஒரு ஆணின் காதலுக்கு இவ்வளவு வலிமை இருக்குமென அவள் நினைத்தும் பார்த்ததில்லையே. சேவையைத் தவிர வேறொன்றும் அறியாத அவளுக்கு காதலின் வேதனை புரிய வாய்ப்பில்லைதான். ஆனால் காதல் தோல்வியால் அவன் தன்னைத்தானே அழித்துக்கொண்டதற்கு இவள் எவ்வாறு பொருப்பாளியாவாள்? இதில் அவளின் தவறு ஒன்றமேயில்லையா? முன்பின் யோசிக்காமல் தன்னை நோக்கிவந்த ஒரு தீவிரமான அன்பை அச்சம் காரணமாக அவள் புறக்கணித்தது சரியா? அவள் மட்டும் சற்று கால அவகாசம் எடுத்திருந்தாளேயானாலோ அல்லது அவனிடம் இதமாக எடுத்துரைத்திருந்தாலோ இன்று அவன் ஒரு கவிஞனாகவோ கால்பந்து வீரனாகவோ வந்திருப்பானே! மரணப்படுக்கையில் அல்லவா கிடக்கிறான். ஐயோவென எவ்வளவு முயன்றும் இந்த வேதனையை அடக்க முடியவில்லையே! இனி அவள் எப்படி உறங்கமுடியும்?

தன் கைகளால் எத்தனை உயிரை காப்பாற்றியிருப்பாள். இன்று தன்னால் ஒரு உயிர்……… இல்லை இல்லை….. அவனை பார்க்க வேண்டும். தான் யார் என அவனிடம் கூற வேண்டும். அவனின் இந்த நிலைக்கு தானும் காரணம் என கதறி மன்னிப்பு கேட்க வேண்டும். அவளால் முடிந்த எதையாவது அவனக்கு செய்யவேண்டும். இதே சிந்தனையுடன் மறுநாள் மருத்துவமனைக்குச் சென்றவுடன் அவனின் அறையை நோக்கி ஓடினாள் அங்கே அவன் இல்லை. அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தபோது எதிரே வந்த நர்ஸ் ‘ஸாரி மேடம். இதயத்துடிப்பு நின்னு போனதால நேத்து ராத்திரியே இறந்துட்டாரு. பாடி மார்ச்சுவரிக்கு மாத்தியாச்சு’ என்றாள்.

ரோயல் ரம்பள் 2012

இந்த ஆண்டிற்கான ரோயல் ரம்பள் மல்யுத்தப் போட்டி இன்று(29.1.2012) நடந்துமுடிந்துள்ளது. அதில் வளர்ந்துவரும் இளம் மல்யுத்த வீரர் ஸீமஸ் வெற்றி பெற்றிருக்கிறார். இவர் புகழ்பெற்ற மல்யுத்த வீரரான கிரிஷ் ஜெரிகோவை வெளியேற்றியதன் மூலம் இந்த வெற்றியைப் பெற்றார். வேர்ல்ட் ரெஸ்லிங் எண்டர்டைன்மண்ட் எனும் அமெரிக்க மல்யுத்த நிறுவனம் ஆண்டுதோறும் இந்தப் போட்டியை நடாத்தி வருகிறது. இது பட்டல் ரோயல் எனும் மல்யுத்த வகையை சார்ந்த போட்டி. முப்பது போட்டியாளர்கள் களமிறங்கும் மேடையில் வெளியே விழாமல் தப்பி பிழைப்பதே போட்டி விதிமுறை. வெற்றி பெறுபவருக்கு ரெஸ்ட்ல்மேனியா என்னும் பிரம்மாண்ட போட்டியில் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த வருட போட்டியில் கலந்துகொண்டோரில் குறிப்பிடத் தக்கவர்களாக முன்னைய மல்யுத்த சாம்பியன்களான மிக் ஃபொலி, பூக்கர் டீ, கிரிஷ் ஜெரிகோ, 2009ம் ஆண்டு ரோயல் ரம்பள் வெற்றியாளர் ராண்டீ ஓர்டன் மற்றும் பிக் ஷோ ஆகியோர் திகழ்கின்றனர். மல்யுத்த ஜாம்பவான்களான அண்டர்டேகர், படிஷ்டா, டிரிபிள் எச் மற்றும் எனக்கு மிகவும் பிடித்த ரே மிஷ்ரீரியோ ஆகியோர் கலந்துகொள்ளவிட்டாலும் இந்த போட்டி மிகவும் சுவாரசியமாகவும் தரமானதாகவும் காணப்பட்டது.

மேலும் தகவல்களுக்கு-http://en.wikipedia.org/wiki/Royal_Rumble_2012

Thursday, January 26, 2012

நான் ஏன் பிறந்தேன்? (கன்னிக் கவிதை)

காசுபணம் சேர்ப்பதற்க்கும் காமப்பசி தீர்ப்பதற்க்கும்
பகை என்னும் பேர்சொல்லி பலிநூறு கொள்வதற்க்கும்
கஞ்சமும் வஞ்சமும் நெஞ்சகத்தில் மிஞ்சமாய்
மனசு விற்று பிழைப்பதற்கா மனிதனாக நான் பிறந்தேன்?

அன்பும் அஹிம்சையும் அளந்து வைத்த பாதையிலே,
இம்மியளவு பிசகாமல் இறுதிவரை வாழ்ந்திடுவேன்.
உடல் என்னும் வாகனத்தை உயிர் நீங்கிப்போகும் முன்,
இல்லாதோர் உறுபசிக்கு இருப்பதை உவந்திடவேன்!