Monday, April 8, 2013

சௌபாக்யா…!


‘என்னப்பா நீங்க? நாங்க வந்து முப்பது நிமிஷத்துக்கு மேலயாகுது. ஏன் வந்திருக்கோம்னும் சொல்லமாட்டேங்குறீங்க, யாருக்காக காத்திருக்கோம்னும் சொல்லமாட்டேங்குறீங்க…….ஏதாவது சொல்லுங்கப்பா?’

மறுபடியும் மகளுக்கு மௌனத்தையே பதிலாக தந்துவிட்டு தாங்கள் அமர்ந்திருக்கும் அந்த பெரிய ரெஸ்டாரெண்டின் வாசலையே மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தார் அர்ஜுனன்.

அர்ஜுனனின் மூத்தமகள் சௌபாக்யா. அளவான அங்கத்தவர்களோடும் தேவைக்கேற்ற வசதியோடும் வாழுற இனிமையான குடும்பம் அவர்களுடையது. பண்பான அந்த குடும்பத்தில பட்டாம்பூச்சியாக சிறகடிப்பவள் சௌபாக்யா!. படிப்பில கெட்டிக்காரியாகவும் பார்ப்பதற்கு லட்சணமாகவும் மட்டுமில்லாம நல்ல வேலையில நிறைவா சம்பாதிச்சு குடும்பத்தையும் பாத்துக்குறா. ஆனா இளவயதை அடைந்தபின்னும் சுட்டித்தனம், அனைவரிடத்திலும் நட்பு பாராட்டும் குணம், அதோட கொஞ்சம் திமிரு!

தூரத்தில் ஒரு நிழலாடுவதைக் கண்டு தன்னிலைக்கு வந்தார் அர்ஜூனன். அவளோ ஒன்றும் புரியாமல் அருகில் அமர்ந்திருந்து தன் ஐஸ்கிரீமில் கவனம் செலுத்தினாள். சிறிது நேரத்தில் அவர்களின் இருக்கைக்கு முன்னிருக்கையில் வந்து அமர்ந்தான் கணேஸ்!

‘ஹாய் கணேஸ்! என்ன இந்தப் பக்கம்? ………………. என்னப்பா நீங்க? கணேஸுக்காகத்தான் இவ்ளோ நேரம் காத்திருந்தோமா? முதல்லயே சொல்லியிருக்கலாந்தானே?’

அர்ஜுனனும் கணேஸும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கணேஸ் கண்ணால் ஏதோ சொன்னான். அர்ஜுனன் அதைப் புரிந்து கொண்டு தட்டு தடுமாறி பேச ஆரம்பித்தார்.

‘நான்தான் கணேஸ வரச் சொன்னேன்!’

‘அதுக்கேன்பா என்னை கூட்டிட்டு வந்த போரடிக்க வச்சீங்க?’

மீண்டும் ஒரு அமைதி……….

‘உன்கிட்டதான்மா பேசணும்………….நீ கணேஸ பத்தி என்ன நினைக்குறே?’

‘இதுல நினைக்க என்னப்பா இருக்கு? என் சின்ன வயசில இருந்து ப்ரண்டு… எனக்கு நல்லதுகெட்டதுக்கு முன்னுக்கு நிப்பான். நல்ல பையன். கொஞ்சம் லூசு! ஹாஹா……. ஏன்ப்பா இப்ப இவனப் பத்தி கேக்குறீங்க?’
கணேஸ் சிறு பதட்டத்துடன் அர்ஜுனனை பார்த்தான்.

‘கணேஸுக்கு உன்னப் பிடிச்சிருக்கும்மா! எங்ககிட்ட வந்து பேசினான். எங்களுக்கு உன் முடிவுதானே முக்கியம். அதுதான் பேசி ஒரு முடிவெடுக்க இங்க வரச் சொன்னேன்’

அந்த ஒரு கணத்தில் சௌபாக்யாவிற்குள் என்ன பிரளயம் வெடித்தது என மற்ற இருவருமே சற்று அறிந்திருக்கக்கூடும். கணேஸை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள். அதை எதிர்கொள்ள முடியாமல் அவன் தலைகுனிந்தான். அதே உஷ்ணத்தோடு பார்வையை தந்தையின் பக்கம் திருப்பினாள்.

‘எங்க நிலமையும் புரிஞ்சுகோம்மா….. உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பாக்கணும்ணு எங்களுக்கு மட்டும் ஆச இருக்காதாணு மத்தவங்க மாதிரி பேசமாட்டேன். நல்லா யோசிச்சு பாரு. இந்த கால பசங்கெல்லாம் எப்பிடி இருக்காங்க? வீட்டுக்கு அடங்காம ஊர சுத்துறது, கண்ட கண்ட கெட்ட பழக்கங்கள பழகிக்கறது இப்பிடி சீரழியற சமூகத்துல ஒரு நல்ல பையனுக்கு உன்ன கட்டி வக்கிற பொறுப்பு எங்களோடதுதானே…. கணேஸபத்தி நம்ம எல்லாருக்குமே நல்லா தெரியும்! அதான் அந்த பையன் வந்து கேட்டதும் மறுக்கமுடியல’

‘எனக்குனு சில லட்சியங்கள் இருக்குறது உங்களுக்கு தெரியுந்தானேப்பா… அப்பிடி இருந்தும் நீங்க என்ன புரிஞ்சுக்காம…’

‘கொஞ்சம் பொறும்மா! நான் எந்த முடிவும் எடுக்கப் போறதில்ல. முடிவு உன்னோடதுதான். நீங்க ரெண்டு பேரும் பேசுங்க. நீ என்ன முடிவு பண்ணாலும் அதுக்கு நான் கட்டு படுறேன். நான் வீட்ட போறேன். நீ பேசிட்டு வாம்மா.’

அதற்குமேல் தான் அங்கிருப்பது தேவையில்லையென அர்ஜுனன் புறப்பட்டார். எதிரெதிர் இருக்கைகளில் கணேஸும் சௌபாக்யாவும்! ஒரு அமைதி. அந்த அமைதியை அடுத்தவர் உடைக்கட்டும் என இருவரும் காத்திருந்தனர். கணேஸ் இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தை எப்பிடி எதிர்கொள்வதென அறியாது சம்பந்தமேயில்லாமல் அங்குமிங்கும் விழிகளை அலைக்கழித்தான். அவன் கண்கள் செல்லும் வழியில் அவளின் கண்களை சந்தித்து அவளின் உள்மனதை நோட்டம் பார்க்கும் உளவு வேலையை செய்தது. ஆனால் அந்த வேலையை திறம்பட செய்யும் சக்தியற்று அவையிரண்டும் நிலத்தில் மண்டியிட்டன. இதற்கு மேல் பொறுமையிழந்த சௌபாக்யா கண்களில் எரிமலையோடும் உதட்டில் பூகம்பத்தோடும் பேச ஆரம்பித்தாள்.

‘என்ன எண்ணத்துல நீங்க இப்பிடி கேட்டீங்கனு தெரிஞ்சுக்கலாமா?’

‘…………………………………………..!’

‘என்ன பேசாம இருக்கீங்க? பேசத்தானே வந்தீங்க? சொல்லுங்க கணேஸ்…..’

‘அது வந்து…… அது….. உங்க அப்பா சொன்னார்தானே…… அது…… உங்க முடிவு என்னணு……………’

‘ஏன் தடுமாறுறீங்க? நீங்க ஏதோ தப்பு பண்றீங்கணு உங்களுக்கே தெரியுதுதானே கணேஸ்…. சொல்லவந்தத சொல்லி முடிங்க!’

‘அதாங்க…. அவரு…. நான்….. நீங்க என்ன சொல்றீங்க?’

‘எனக்கு பிடிக்கல’

‘ஏன்? என்னை பிடிக்கலயா?’

‘எனக்கு காதலே பிடிக்காது….. இவளோ நாளா என்கூட நல்ல ப்ரண்டா பழகின உங்களுக்கு அது தெரியாதா? அப்பிடி தெரிஞ்சும் நீங்க கேட்டதுதான் உங்க தப்பு. வாழவேண்டிய காலத்துல மனசைக் கெடுத்து வாழ்க்கைய வீணாக்குற இந்த மண்ணாங்கட்டி காதல்ல எனக்கு உடன்பாடு இல்லனு தெரியாதா? அதோட நான் இப்பதான் வேலையில கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகுறேன். இன்னும் நிறைய சாதிக்கணும். என் டேலண்ட புரூப் பண்ணனும். இப்ப கல்யாணம் அது இதுனு மனசை மாத்தினா இத்தனை நாள் நான் கண்ட கனவு என்ன ஆகும்? எவ்வளவு திறமையிருந்தாலும் ஒரு பொண்ணா பொறந்தா கல்யாணம் பண்ணிகிட்டு அடுப்பாங்கறையிலயே இருக்கவேண்டியதுதானா? சொல்லுங்க?’

‘நல்லா தெரியுங்க….. இவ்வளவு நாள் உங்களுக்கு நல்லா ப்ரண்டா இருந்த என்னால கல்யாணம்னு ஒன்னு பண்ணாலும் அதுக்குபிறகும் அந்த நட்போட உங்கள பாத்துப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனாலதான் கேட்டேன். நீங்க இன்னும் ஒருதடவை யோசிச்சு…’

‘நல்லா யோசிச்சுட்டேன் கணேஸ்.. ப்ளீஸ் புரிஞ்சுகோங்க. என்னோட நல்ல ப்ரண்டா இருந்த உங்கள காயப்படுத்த எனக்கு கஷ்டமாயிருக்கு. இப்ப என்னால கல்யாணம்ற ஒன்ன நினைக்கமுடியாது. உங்க வாழ்க்கைய பாத்துகோங்க…’

பதிலை எதிர்பார்க்காம இருக்கையவிட்டு எழுந்து திரும்பிபார்க்காமல் போய்விட்டாள். கண்ணியத்தோட காதலைசொன்ன கதாநாயகன் கண்ணீரோடு அவள் கடந்த பாதையையே பார்த்துக்கொண்டிருந்தான்.
 


கலகலப்பான காலை நேரம். அலுவலகத்தில் அனைவரும் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருக்க நான் மட்டும் சோம்பலோடு உட்கார்ந்திருந்தேன். அதுக்காக வேலை இல்லாதவன்னு நினைக்காதீங்க. நான் ஒரு ஐ.டி அட்மினிஸ்ரேட்டர். சிலநாள் ஒரு வேலையும் இருக்காது. ஆனா வேலை வந்தா முதுகெலும்பை வளைக்காம விடமாட்டாங்க. ஆனா இப்ப ஐயா வெட்டிதான். சரி ஏதாவது செஞ்சிட்டு இருப்போமேனு ஐபி வெர்ஷன் 4 நெட்வேர்க்கை ஐபி வெர்ஷன் 6 ஆக மாத்த ஒரு சின்ன இன்ப்ராஸ்ரக்‌ஷர் போட ஆரம்பிச்சேன். அட மறந்துட்டேனே… வழக்கம்போல இந்த நேரத்துக்கு சௌபாக்யா வந்திருக்கணுமே, ஆளை காணலயே? என்ன ஆயிருக்கும்.

பத்து நிமிஸத்துக்கு பிறகு மறபடியும் பாத்தேன். அதோ அவ வந்திருக்காளே.. ஆனா டல்லா இருக்காளே.. ஏதாவது பிரச்சினையா இருக்குமோ? சரி வெட்டியாத்தானே இருக்கோம் போய் விசாரிப்போம்.

‘ஹாய் சௌபி..!’

‘சனா… எத்தனை தடவ சொல்லியிருக்கேன் அப்பிடி கூப்பிடாதீங்கனு, ஏதோ நாய்க்குட்டிய கூப்ட்றமாதிரி இருக்கு..’

‘சரி திருநிறைச்செல்வி சௌபாக்யா அவர்களே.. இன்று தாங்கள் ஏன் டல்லடிக்கிறீர்கள்’

‘உங்களுக்கு சிரிக்குற நேரமா இது?’

‘ஏன் உங்களுக்கு இது சிரிக்ககூடாத நேரமா?’

சிரித்தேவிட்டாள் அவள். பெண்களை சிரிக்கவைப்பது ஒரு கலை.. நானும் ஒரு கலைஞன் என்பதை அவளது சிரிப்பில் உணர்ந்தேன். ஆனா இன்னும் அவளது சலிப்புக்கு என்ன காரணம்னு தெரியலயே

‘சரி சிரிச்சு முடிச்சாச்சா? இப்பயாவது சொல்லுங்கம்மா ஏன் இவ்வளவு சலிப்பு இன்னிக்கு’

‘இன்னைக்கு நான் சிரிப்பேன்னு நினைக்கவேயில்ல சனா.. மனசு கஷ்டமாயிருந்துச்சு. இப்ப பரவால’

‘ஹயோ அதான் ஏன் மனசு கஷ்டப்படுது? எங்கிட்ட சொல்லக்கூடாதா?’

‘அப்பிடி இல்லங்க.. காலைல என் ஃப்ரண்டு ஒருத்தன பார்த்தேன். சின்ன வயசுலேந்து எங்கூட பழகியிருக்கான். நல்ல ஃபிரண்டாயிருப்பானு நம்பிட்டு இருந்தேன். திடீர்னு உங்கள பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணலாமானு கேட்டுட்டான். அதான் ஒரே தலைவலியா இருக்கு.’

‘ஏங்க.. அவனால ஏதாவது பிரச்சினை வரும்னு பயமா?’

‘ஐயோ இல்லங்க.. அவன் ரொம்ப நல்லவன். மத்தவங்கள கஷ்டப்படுத்த நினைக்ககூடமாட்டான். அவனால எந்த பிரச்சினையும் இல்ல. ஆனா என் நம்பிக்கைய கெடுத்துட்டான். அதான் கவலயா இருக்கு சனா..’

‘என்ன சௌபி.. சரி சரி சௌபாக்யா.. அவன இப்பிடி புகழ்ந்து தள்ளுறீங்க.. பேசாம சரினு சொல்லியிருக்கலாமே..’

‘இல்லங்க.. இப்பதான் ஆபிஸ்ல நல்லா வேலை செய்வேனு பேர் வாங்கியிருக்கேன். அப்பிடியே புரமோஷன் வாங்கணும். அதவிட குடும்ப பாரத்த இப்ப நான்தானே சுமக்குறேன். இந்த நேரத்துல கல்யாணம் தேவையா?’

‘அட இவ்வளவுதானா… ம்ம்ம், உங்கள நினைச்சா சிரிப்புதான் வருது’

‘என்ன சனா? உங்களுக்கு நக்கலாயிருக்கா?’

‘அட நக்கல் இல்லிங்க.. நீங்கதான் புரிஞ்சுக்காம முடிவு எடுத்துட்டீங்க. இதுல எனக்கு ரெண்டு விசயம் தோணுது. அத சொல்லாம விட்டா என் தலையே வெடிச்சிடும்.. சோ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க. முதலாவது எந்த வயசுலயும் சாதிக்கலாம், ஆனா கல்யாணம் அந்த வயசுல பண்ணிகாட்டி பின்னால பிரச்சினைதான். அட இருங்க இது கொஞ்சம் ஓல்டுதான். பச்சே கோல்ட்டு. பிராக்கடிக்களா பாருங்க.. இந்த ஜெனரேஷன்ல எத்தனை பொண்ணுங்க வேலைக்காக முதிர்கன்னியா வாழுறாங்க. சரி அத விடுங்க. அதவிட முக்கியமான பாயின்ட் ஒரு நண்பன் கணவனா கிடைக்குறதுக்கு கொடுத்துவச்சிருக்கணுங்க. கணவன் மனைவி உறவுல நட்பு இல்லாததாலதான் இப்ப இத்தனை விவாகரத்துகளும். உங்களுக்கு அந்த பிரச்சினையே இல்லயே. ஆல்ரெடி உங்க நண்பனைத்தானே கட்டிகுறீங்க.’

‘நீங்க சொல்றது எப்பிடி சனா ஏத்துக்கமுடியும்? நட்போட பார்த்த ஒருத்தர எப்பிடி காதலோட பார்க்கமுடியும்?’

‘நட்புன்றதே காமம் கழித்த காதல்தான். சாதாரண நட்பு, நெருங்கிய நட்பு, மிக நெருங்கிய நட்பு, ரயில் நட்புன்னல்லாம் இருக்கே.. அத மாதிரி இதுவும் கல்யாண நட்பு. கல்யாணம் பண்ணிகிட்டு ஒருத்தர புரிஞ்சுக்குறது விட புரிஞ்சிகிட்ட ஒருத்தர கல்யாணம் பண்ணுறது பெட்டர்தானே.. நான் லாஸ்ட்டா ஒன்னு சொல்றேங்க…’

‘ம்ம் சொல்லுங்க’

‘நல்ல நண்பர்கள் காதலிச்சா அந்த காதல் தூய்மையோடயும் இருக்கும், தாய்மையோடயும் இருக்கும்.’

‘என்னை குழப்பிட்டீங்க சனா..’

‘ஹாஹா.. உண்மைய சொன்னேன்.’

‘ம்ம் எப்பிடியோ இன்னிக்கு உங்க கலகத்துக்கு நான் கிடைச்சேன்ல. சரி சரி நான் இன்னிக்கு அரைநாள்னு செல்லிடுங்க.’

‘ஏன் எங்கயாவது போகணுமா?’

‘அதான் சனா குருஜி ஆலோசனையில மனசு மாறிடுச்சே.. கணேஸ பார்க்கணுமே.. ரொம்ப ஓவரா பேசிட்டு வந்துட்டேன். பாவம். நான் போய் சமாதானப்படுத்தனும் வேற.. சரிங்க நான் போய்ட்டு வாறேன்.’

‘சரி சரி நடக்கட்டும்.. கல்யாணத்துக்கு கூப்பிட மறந்துடாதீங்க. நல்ல சாப்பாடு சாப்பிட ரொம்ப நாளாச்சு’

அவ வந்ததுக்கும் இப்ப போறதுக்கும் நிறைய மாற்றம் இருக்கு. தெளிவா ஒரு முடிவ எடுத்திருப்பா. காதல சொல்றதவிட அத ஏத்துக்கிறப்பதான் அதிக பதட்டம்னு அவ நடையில தெரியுது. ஆனா எப்பிடியும் அவ காதல சொல்லிடுவா இல்ல…. ஆனா என் காதல சொல்லலயேனு கேக்குற மனச ரொம்ப கஷ்டப்படுத்திதான் அடக்கி வைக்கணும். சின்ன வயசுலேந்து பழகின நண்பன் காதலிக்குறான்னதுமே அப்பிடி கவலைப்பட்டவ… ம்ம்ம் நான் சொல்லாம விட்டதே நல்லதுதான். எது எப்பிடியோ அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைதான் கிடைக்கப்போகுது ஏன்னா நல்ல நண்பர்கள் காதலிச்சா அந்த காதல் தூய்மையோடயும் இருக்கும், தாய்மையோடயும் இருக்கும்

1 comment:

  1. நல்ல நண்பர்கள் காதலிச்சா அந்த காதல் தூய்மையோடயும் இருக்கும், தாய்மையோடயும் இருக்கும்.’{{ realy nice line and nice love story}}

    ReplyDelete