Saturday, July 14, 2012

தோழியா இல்லை காதலியா?

பஸ் ஸ்டாண்டு. போட்டிக்கு வேற எந்த பஸ்ஸும் இல்லை என்று தெரிந்த டிரைவர் தைரியமாக பஸ்ஸை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு எஞ்சினை ஆஃப் செய்தான். இந்த ஊரில் அப்படித்தான். இனி பஸ்ஸில் கூட்டம் நிறையும்வரை அதை எடுக்கமாட்டான். இது ஏற்கனவே பஸ்ஸில் இருக்கும் பிரயாணிகளுக்கு எரிச்சலைமூட்டியது. கண்ணனுக்கும்தான். அலுப்போடு ஜன்னல்வழியாக வெளியே பார்த்தான். அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் தனியார் வகுப்புகளுக்கு செல்வதற்காகவும் அவற்றைமுடித்து வீடு திரும்புவதற்காகவும் பல இளவயது மாணவமாணவிகள் சாலையோரத்தில் திரண்டிருந்தனர். ஆண்பெண் வித்தியாசம் இல்லாமல் கும்பல் கும்பலாக இருந்து அரட்டையடித்துக்கொண்டிருப்பதும் சகஜமாக தொட்டுப்பேசி சிரித்துக்கொள்வதையும் பார்த்து அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆச்சரியம். இதே ஒருவருடத்திற்கு முன்பிருந்த நிலையென்றால் ‘நானும் இந்தக்கால இளைஞன்தானே, எனக்கு மட்டும் ஏன் எந்தப் பெண்தோழிகளும் இல்லை. நான் மட்டும் என்ன வேற்றுக்கிரகவாசியா’ என்று வயிறெரிந்த எரிச்சலில் காதுவழியாக புகைவிட்டிருப்பான். அப்பேற்பட்ட நிலைக்கு இன்றைய மாற்றம் அபரிபிதமானதுதான். ஆனால் இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் அஸ்ராவின் நினைவு வருவதைமட்டும் அவனால் தடுக்கமுடியவில்லை.

கண்ணன். இருபது வயது. உயர்தரம் முடித்து அடுத்தது என்ன செய்யலாம் என்று தீர்மானித்து கம்ப்யூட்டர் மல்டிமீடியா துறைமீதுள்ள ஆர்வத்தால் நகரின் பிரபலமான ஒரு கணனி நிறுவனத்தில் இணைந்தான். படிப்பு என்பது அவனுக்கு சிரமமாக இல்லை. பழக்கமென்பதே சிரமமாக இருந்தது. சிறுவயதுமுதலே அடக்கமான ஒரு குடும்பத்தின் பிரதிநிதியாக அவன் வளர்ந்ததால் இலகுவில் அடுத்தவரோடு பழகுவதோ குறிப்பாக பெண்களோடு சகஜமாக நடப்பதுவோ அவனுக்கு புதிதாக இருந்தது. அதில் தவறொன்றும் இல்லை என்றே அவன் நினைத்தான். காரணம் தன்னுடன் படிக்கும் சகமாணவர்கள் இடைவேளைநேரம் கூட்டாக சேர்ந்து சிகரெட் பிடிப்பது, சனிக்கிழமை மாலைகளில் எங்காவது கூட்டமாக சேர்ந்து சாராயம் குடிப்பது, அருகில் பெண்களை வைத்துக் கொண்டு ஆபாச நகைச்சுவைகளைக்கூறி கைதட்டி சிரிப்பது போன்றவை அவனுக்கு பிடிக்காத விடயங்கள். அதைவிட அந்த நகைச்சுவைகளை அருகில் இருந்து கேட்கும் பெண்களும் தங்களுக்கென்ன என்பதுபோல கூடச் சேர்ந்து சிரிப்பது அவனுக்கு அருவருப்பாக இருந்தது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது தான் ஒரு கலியுகத்து ராமன், ஒழுக்கங்காக்கும் உத்தமன் என்று தன்னைத்தானே பெருமையாக நினைத்துக்கொள்வான். அவனது வீட்டில்கூட தன் மகன்தான் லிந்தக்காலத்திலேயே தப்புவழி போகாத ஒரே பிள்ளை என்று அவனை தலையில்தூக்கி ஆடுவார்கள். எல்லோர் வீட்டிலும் அப்படித்தான் என்றாலும் தன்மீதான நம்பிக்கையை அவன் காப்பாற்றிக்கொண்டிருந்தான். சகமாணவர்கள் இவனது பழக்கவழக்கங்களால் பெரிதாக இவனை அண்டுவதில்லையென்றாலும் அவனை முற்றாக ஒதுக்கவுமில்லை. சகஜமாகவே பழகினார்கள்.
ஆனாலும் மற்றவர்கள்போல தன்னுடன் பெண்கள் பெரிதாக நட்புகொள்வதில்லையேயென்ற கவலை மட்டும் அவனை வாட்டியது. ஒவ்வொருவனும் இது என் ஆளுன்னு சொல்லும்போது நானும் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு சொல்வதற்கு எனக்கொரு ஆற் இல்லையை என்ற கவலை. அதற்காக பெண்களிடம் தானாக சென்று பேசியதுகூட கிடையாது. தன்னுடைய படிப்பு, பழக்கவழக்கம், ஒழுக்கத்தைப் பார்த்து பெண்களாக தன்னிடம் வந்து பேசுவார்கள் என்று மனக்கோட்டை கட்டியிருந்தான். அது மணல்கோட்டை என்றாகிவிட்டது. விரக்தியின் விளிம்புக்கு அவன் செல்லும்போது அவன் வாழ்க்கையில் வந்தாள் அஸ்ரா.

அஸ்ரா... மல்டிமீடியா பாடநெறியில் அவனுக்கு அடுத்த பெட்ச். கண்டதும் கிரங்கடிக்கும் அழகு இல்லையென்றாலும் பார்ப்போரின் கண்களை ஒருநிமிடம் தன்னிடமே பதியவைக்கும் அளவு பெண்மையானவள். கம்ப்யூட்டர் படித்தால் தாங்களும் வெள்ளைக்காரர்கள்தான் என்ற மிதப்பில் அலையும் பகட்டுப்பேர்வழிகளுக்கு அவள் மட்டும் என்ன விதிவிலக்கா…. இயல்பாய் வரும் மொழிநடையை மாற்றி ஆங்கிலசாயலில் பேசுவது, இலகுவாக இல்லாவிட்டாலும் உடலோடு ஒட்டிய இறுகிய ஆடையை மலைப்பாம்பிடம் சிக்கிய மனிதன்போல கஷ்டப்பட்டு போட்டுக்கொண்டு அலைவது, நண்பர்களுடன் ஹோட்டல் சென்றால் பெயர்கூட உச்சரிக்கத் தெரியாத வெளிநாட்டு உணவை வீம்புக்கென்று வாங்குவது என்று கலியுக கன்னியாக வலம்வந்தாள் அஸ்ரா.

புதிதாய் வந்த மாணவர்கள் பழைய மாணவர்களுடன் இணைந்து செயற்திட்டம் ஒன்று செய்யவேண்டுமென ஒரு சுழல் வந்து கண்ணனையும் அஸ்ராவையும் இணைத்தது. அவனது திறமையறிந்த ஆசிரியர்களும் அவனிடம் இருந்து நீ நிறைய கற்றுக்கொள்ளலாம் என்ற சிபாரிசு வேறு. முதலில் கடமைக்காக கூடப்பழகியவள் பின் அவனது குணம் பிடித்துப்போய் நெருக்கமானாள். ஊரறிய ஒன்றாக சுத்த தொடங்கினார்கள். இரவு முழுதும் செல்போனில் தகவல் பரிமாற்றம்தான். தன்னுடைய அனைத்து வேலைகளையும் கண்ணன்மூலமே செய்து படிப்பில் முன்னேறினாள். தன்னைப்பற்றியே நாள்முழுதும் சிந்திக்கும் ரோபோவாக அவனை மாற்றினாள். இது அஸ்ராவின் நிலை. கண்ணனுக்கோ???? முதல்முறை அவள் பேசும்போது ஒரு பெண்ணிடம் பேசும் கூச்சம்தான் அவனிடம் இருந்தது. அவனிடம் நட்பு கொண்டு அவள் நெருங்கி வந்தபின் அவன் மனது மார்பை பிய்த்துக்கொண்டு வானத்தில் பறந்தது. தன்னிடம் ஒரு பெண் இவ்வாறான முறையில் பழகுவது அவனுக்கு தன்மீதே ஒரு பொறாமை வந்தது. ஆண்பெண் நட்பு கூடாது என்று வளர்ந்ததினாலேயே அவளது உறவை வெறும் நட்பு என்ற வட்டத்துள் அவனால் கடைசிவரை பார்க்கமுடியாமல் போனது. செல்போன் மெசேஜ் என்பது அவளுக்கு கண்சிமிட்டுவது போல. பல நண்பர்களுக்கு பலவாறாக மெசேஜ் போய்க்கொண்டேயிருக்கும். ஆனால் அவளது எஸ்.எம்.எஸ் அவனுக்கு இதயத்துடிப்பாக இருந்தது. ஒரு மெசேஜ் வரத்தாமதமானாலும் இதயம் நின்று போவது உறுதி. அவளது தொடுகை அவளுக்கு சாதாரணமான ஒன்று. ஆனால் ஒரு பெண் தெட்டால் ஆணுக்குள் ஏற்படும் ஆயிரக்கணக்கான அதிர்வுகளை அவர்கள் உணர்வதில்லை. இதுபோக அவர்கள் இருவரின் நட்பை காதலென்று கதைகட்டும் நண்பர்கள் வேறு. அதை கேட்கும்போது ஒருபக்கம் கூத்தாடவேண்டும் போலவும் மறுபக்கம் கூச்சமும் அவனை கொன்றுதீர்க்கும்.

இதற்குமேல் தாங்காது என்று பொறுமையிழந்தவனாய் பெரும்பாடுபட்டு அவளது கண்களைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ என்று செல்லிவிட்டான். அவள் என்ன சொல்லப்போகிறாளோ என இருதயம் துடித்த ஓசை அவனது காதில் கோயில்மணி போல ஒலித்தது. இருக்கும் நட்பிற்கும் வேட்டு வைத்து விட்டோமா என கண்கலங்க ஆரம்பித்தது. ஆனால் அவளோ எந்த அதிர்ச்சியும் இல்லாதவளாய் சிரித்துக்கொண்டு ‘ஐ லவ் யூ சோ மச்’ என்றாள். என்னது, லவ்…. என் காது என்னிடம் பொய் சொல்லுமா? இல்லை உண்மைதான்… அட உண்மைதான். எரிமலையொன்றில் பனிமழை பெய்ததுபோல மனதுகுளிர்ந்தது. நிற்கமுடியாமல் தடுமாறினான். உலகத்தின் ராஜாவாகிவிட்ட நினைப்பு அவனுக்கு. டங் டடங் டடடங் டடடடடங் என்று மனசுக்குள்ளேயே ஒரு குத்துப்பாட்டு போட்டு ஆட தயாராகும்போது அவனுக்கு மட்டுமில்லை அவளுடன் நட்பாய் பழகும் அனைத்து ஆண்களுக்குமே அவள் ஐ லவ் யூ சொல்வது வழக்கம் எனத்தெரிந்ததும் அவனது குத்துப்பாட்டு டடடடடங் டடடங் டடங் டங் என சுதிகுறைந்தது.

அவளைப் பொருத்தவரை மற்றவர்களும் தானும் ஒன்றில்லை என்பதை அனைவருக்கும் நிரூபிக்க அவன் இல்லாத முயற்சியெல்லாம் எடுத்துப் பார்த்தான். நானும் நீயும் ஒரேமாதிரி யோசிக்குறோம் நாம ஏன் கல்யாணம் பண்ணிக்ககூடாது, என்னைவிட இன்னொருத்தன் உன்னை சந்தோசமா பாத்துக்கமாட்டான், வாழ்ந்த உன்கூடமட்டும்தான் இல்லேனா கல்யாணமே பண்ணிக்கமாட்டேன் என்று இப்படி பல சினிமா வசனங்களெல்லாம் சொல்லி சொல்லி அவர்கள் சந்திக்கும் தருணங்களையெல்லாம் அவளுக்கு வெறுப்பாக மாற்றினான். அவளைப் பொறுத்தவரை வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் சுகமாக சந்தோசமாக வாழத் துடிப்பவள். காதலினால் கஷ்டங்கள்தான் மிஞ்சும் என்பதையறிந்தும் அவள் காதலிப்பாளா? வேண்டாம்… நாம பிரண்ட்ஸாவேயிருப்போம், ஏன் காதல் காதல்னு வாழ்க்கைய கெடுத்துக்குற?, காதலத் தவிர நாம நாதிக்க எவ்வளவோயிருக்கு அப்படின்னு அவளும் அதிகமா யோசித்து பல அறிவுரைகளைக் கூறினாள். அவன் எதையும் ஏற்க தயாராக இல்லை. அப்ப ஏண்டி உரசி உரசி வந்த? பார்க்குல ஒண்ணா உக்காந்து ஐஸ்கிறீம் தின்னது, கடல்ல இரண்டுபேரும் ஒண்ணா குளிச்சது இதுக்கெல்லாம் என்னடி அர்த்தம் அப்படினு அவனும் கொஞ்சம் மதியிழந்தவனாய் பேச ஆரம்பிக்க அவர்கள் உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது. அவள் அவனை தவிர்க்கத் தொடங்கினாள். அவன் முன்பாக மற்ற ஆண்களுடன் நெருக்கமாகப் பழகினாள். கல்லூரிக்கு வெளியே அவனது தொடர்பை துண்டித்தேவிட்டாள். இதனால் மேலும் டிஸ்டர்ப்பான கண்ணன் நீ சரியென்று சொல்லாவிட்டால் நான் தற்கொலை செய்திடுவேன் என்று பூச்சாண்டிகாட்டினான். இந்த கடும் நெருக்கடியான சூழலைழெவ்வாறு சமாளிப்பது என்று தெரியாதவளாய் அவள் யோசித்து ஒரு முடிவெடுத்தாள்.

அவன் வழக்கம் போல கல்லூரிக்கு சென்றான். எல்லாம் சாதாரணமாக இருப்பது போலவே அவனுக்கு தோன்றியது. இடைவேளையின்போது அவனது நண்பர்கள் கூப்பிட்டார்கள் என்று மாடியில் உள்ள தனியறைக்கு சென்றான். அவனது ஆசிரியர்களோடு அவனை முறைத்தவண்ணம் அங்கே நின்றிருந்தாள் அஸ்ரா… எதற்கு இவர்கள் இங்கே நிற்கிறார்கள், என்னையேன் இங்கே அழைத்துவந்தார்கள் என்று அவன் யோசித்து முடிப்பதற்குள் இடதுபுறமாக ஒரு பலம்வாய்ந்த கை அவனது கன்னத்தில் பளார் என்று அளைந்தது. நிலைதடுமாறிய கண்ணன் இந்த யொங் என்ற சத்தம் அறையின் எந்தப் பக்கம் இருந்து வருகிறது என சுற்றிமுற்றிப் பார்த்தான். அங்கிருந்த பெரியவர்களின் வாய் அசைவது மட்டும் விளங்கியது. என்ன சொல்லியிருப்பார்கள் என உணர்வது அவ்வளவு கடினமானது அல்ல. இவ்வளவு நாளும் நல்லவன் என்று பெயர்வாங்கிய கல்லூரியில் இன்று ஒரு பொம்பளப்பொருக்கி என முத்திரை குத்தப்பட்டதுகூட அவனுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. ஆனால் அவளுக்கு தான்தான் விருப்பமான நபர் என்று நினைத்திருந்தானே… இன்று அவனை அடிக்க யார்யாரையோ கூட்டி வந்திருக்கிறாளே? அப்போ என்னை அவளுக்கு தேவையில்லையா என்று நினைக்க நினைக்கத்தான் அவன் மனம் வெதும்பியது. அந்த யொங் ஓசை மறைந்து காது கேட்க ஆரம்பிக்கம்போது ‘இனிமேல இவள தொந்தரவு பண்ணா போலீஸ்கிட்ட சொல்லவேண்டியிருக்கும், ஜாக்கிரதை’ என அவனது கல்லாரி தலைமை ஆசிரியர் சொன்னது மட்டும் அவனுக்கு கேட்டது.


என்ன யோசித்து என்ன பலன்? எல்லாம் நடந்துபோன விசயங்கள்… யாரால மாத்தமுடியும்…. அதன்பிறகு அவளை அவன் பார்க்கவேயில்லை. ஒருமுறைமட்டும் கல்லூரிக்கு சென்றான். அனைவரின் பார்வையிலும் ஒரு தோத்தாங்கோளியாக மானம் போனவனாக நிற்பதை விட படிப்பைவிடுவதே மேல் என்று மயிர்நீப்பின் வாழாக்கவரிமானாக சொல்லாமல் கொல்லாமல் கல்லூரியைவிட்டு நீங்கினான். இன்றுவரை பெற்றோருக்கு தெரியாமலும் பாதுகாத்து வருகிறான். மகன் என்ன செய்தாலும் சரியாத்தான் இருக்கும் என்று நம்பும் பெற்றோரும் அவனிடம் ஒன்றும் கேட்கவில்லை. அவளை காலம் முழுக்க நான்தான் பார்க்கபோறேன்னு நினைச்சான். ஆனா அவ அவனை பார்க்கவேபோறதில்லன்றததான் அவன் மனசு ஏத்துக்க கஷ்டப்படுது. ஆனால் பல சமயங்களில் அந்த கஷ்டத்தை மறந்து குடும்பம், படிப்பு, வேலைதான் உலகத்திலேயே முக்கியம் என்பதை உணர்ந்து பாடுபட்டு வெளியுலகில் தன் நல்லபெயரைக் காப்பாற்றிவருகிறான். பஸ் எஞ்சின் ஸ்டார்டானதில் தான் இருக்கும் நிலையுணர்ந்து ஓரக்கண்ணில் வரும் கண்ணீர்த்துளியை யாரும் காணாமல் துடைத்தான். எஞ்சினின் பேரிரைச்சலுடன் பஸ் புறப்பட்டு செல்ல ஆரம்பிக்க அந்த இடத்தில் இன்னொரு பஸ் வந்து நின்றது.

7 comments:

  1. சிறுகதை நன்றாகவே உள்ளது. நடையும் அருமை. இருந்தாலும் கண்ணனை கடைசியில் இப்படி கோழையாக்கி இளம் வாழ்கையின் வளிம்பில தள்ளிவிட்டு என்னதான் உங்களுக்கு சுகமோ தெரியவில்லை. ஒரு அஸ்ரா இல்லாவிட்டால் ஓராயிரம் அஸ்ராக்கள் கண்ணனுக்கு கிடைப்பார்கள். காதல் என்பது ஒரு மன நிலை. மனம் சக்தி வாய்ந்தால் இருந்தால் எதற்கும் துவண்டு விடாமல் அனைத்தையும் சமாளித்து துள்ளி எழுந்து போராடி வெற்றி பெறும். தன் அடிமை மோக மன நிலையை அழித்து புற்றணர்வு பெற்று கண்ணன் வேறு பல அஸ்ராக்களை பதம் பார்ரத்து வாழ்க்கை பூரணமாக அனுபவிக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு தோற்றுப்போனவனின் கதைதான்...நாடகத்தனமாக எதையும் இணைக்க விரும்பவில்லை..
      உங்கள் கருத்து சூப்பராக இருக்கு நன்றி;)

      Delete
  2. கதை நல்லாருக்கு சனா...., தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete