Saturday, March 24, 2012

ஊமை விழிகள்...

எனக்கு மிகவும் பிடித்த படங்களில் குறிப்பிடத்தக்க திரைப்படம் ஊமைவிழிகள். முதன்முதலில் இந்த படத்தை பார்த்தபோது என்னை மிகவும் ஈர்த்த விடயம் இந்த படத்தின் நட்சத்திர நடிகர் பட்டாளம். விஜயகாந்த்,கார்த்திக்,ஜெய் சங்கர்,அருண் பாண்டியன் ,விசு,ரவிச்சந்திரன்,சந்திரசேகர்,சரிதா என தொடரும் இந்த நட்சத்திரங்கள் இந்த படத்தை பிரகாசிக்க வைத்தார்கள். ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் அவை பார்க்கும் ரசிகர்களை குழப்பாமல் கதையோடு ஒன்றவைத்த திரைக்கதை பிரமாதம். தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் நிச்சயமாக இந்த படத்திற்கு முக்கிய இடம் உள்ளது.

சுற்றுலாசெல்லும் பெண்கள் கொலை செய்யப்படுவது, அவற்றை கண்டுபிடிக்கும் ஒரு பெண் கொல்லப்படுவது, அதற்காக எதிர்த்து நிற்கும் அந்தப் பெண்ணின் காதலன் கொல்லப்படுவது, அதை துப்பறியும் போலீஸின் கொல்லப்படுவது என பல கொலைகளையும் அவற்றிற்கான மர்ம முடிச்சுக்களையும் அதை தேடிப் போகும் கதாநாயகர்களின் சாகசத்தையும் மிகவும் ரசிக்கும் வண்ணம் தந்திருக்கிறார்கள்.


தொண்ணூறுகளிலும் இரண்டாயிரத்திலும் சின்னக் கவுண்டர், வானத்தைப் போல போன்றவை தவிர்த்து விஜயகாந்த் போலீஸ் உடையிலேயே நடிப்பதற்கு அடிக் கோலிட்டது இப்படம். அந்த கம்பீரம் கனகச்சிதம்.ஜெய்சங்கருக்கும் சந்திரசேகருக்கும் இந்த படம் ஒரு மைல்கல்.சிறிது நேரமே வரும் கார்த்திக்கின் கதாபாத்திரமும் நடிப்பும் விரும்பும்படியாகவும் ஸ்டைலிஸாகவும் பேசப்பட்டது. அருண்பாண்டியனுக்கு மிகசிறந்த நுழைவாயிலாக இப்படம் அமைந்தாலும் அதை சிறிது காலமே அவர் தக்கவைத்துக்கொண்டார். விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஏற்ப பிண்ணனி இசையும் ஒளிப்பதிவும் மக்களை பயமுறுத்தியது. சர்ச்சில் மணியடிக்கும் பாட்டி, கார்த்திக்கை மறைத்து வைத்திருக்கும் சுடுகாட்டு வயோதிபர், மலேசியா வாசுதேவன் கதாபாத்திரம் மூலமாக அரசியல்வாதிகளின் இயல்பைக்காட்டுவது, ஒரே நேரத்தில் நூறு வாகனங்கள் செல்லும் காட்சி, தன்னை காப்பாற்றவரும் ஜெய்சங்கரை ரவிச்சந்திரன் கொளுத்துவது, சர்ச் பாதிரியாருடன் படத்தை முடித்திருப்பது போன்று குறிப்பிட்டு சொல்லவேண்டிய கட்டங்கள் பல இடம்பெற்று இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். ராத்திரி நேரத்து பூஜையில் பாடல் அடைந்த பிரபலமும் கண்மணி நில்லு, மாமரத்து பூவெடுத்து, தோல்வி நிலையென நினைத்தால் போன்ற பாடல்கள் மனதை தாலாட்டிய விதமும் யாராலும் மறந்திருக்கமுடியாது.
அனைத்தையும்விட காலத்தைவிஞ்சி நிற்கும் நிலைமாறும் உலகில் பாடல் எனது சாய்ஸ்.

1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளிவந்த இந்த படம் விமர்சன அடிப்படையிலும் வசூல் ரீதியாகவும் பெருவெற்றி பெற்றது. தொழில்நுட்பத்தில் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தி பாராட்டுகளை குவித்தது. இதன் இயக்குனர் புதுமுகம் அரவிந்தராஜ், ஒளிப்பதிவு ரமேஸ் குமார், இனிமையான இசையை வழங்கியவர் மணோஜ் கஜன். கதை,திரைக்கதை,பாடல்கள் எழுதி தயாரித்தவர் சோழா கிரியேஷன்ஸ் ஆபாவாணன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட இதே கூட்டணியை வைத்து செந்தூரப்பூவே, இணைந்த கைகள் ஆகிய படங்களை தயாரித்தார்.

2 comments:

  1. உங்கள் பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க, உங்கள் பதிவுகளை hotlinksin.com இணையதளத்தில் பகிர்ந்திடுங்கள்.

    ReplyDelete