Monday, March 26, 2012

போதையின் பாதையில்...!

(உண்மை சம்பவம்)
அடுத்ததாக யாரை கூப்பிடப்போகிறார்கள் என்ற படபடப்பிலும் இண்டர்வியூல நல்லா பதில் சொல்லணும்ற பதட்டத்திலும் அங்கிருந்த அனைவரும் ஏதோ மனனம் செய்துகொண்டும் சிலர் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டுமிருந்தனர். எப்பிடியும் நான் தேர்வு செய்யப்படப்போவதில்லை என்ற தைரியத்தில் குஷியாக அனைவரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே அதோ...அந்த தேவதை. இத்தனை பேரிலும் எந்தவித கலக்கமும் இல்லாமல் தெளிவான முகத்துடன் அமர்ந்திருந்தாள் ஜனனி. இண்டர்வியூக்கு முதலான பயிற்சிபட்டறையில் ஏற்பட்ட அறிமுகத்தில் அவளருகில் சென்று அமர்ந்தேன்.

'ஹாய்! எப்பிடி இருக்கீங்க? நல்லா பிரிபேர் பண்ணிருக்கீங்க போல இருக்கே!'

'ஹாய் சனா! இதுல பிரிப்பேர் பண்ண என்ன இருக்கு? தெரிஞ்சத சொல்லப்போறேன், அவ்ளோதான்.'

'அதுதான் தெரியுதே! இத்தனை பியூஸ் போன பல்புகளுக்கு நடுவுல உங்க முகம் மட்டும் பிரகாசமா இருக்கே!'

'ரொம்பதான் ஐஸ் வக்கிறீங்க! ஆமா உங்களுக்கு எப்பிடி ரேடியோ ஜோக்கியாகணும்னு ஐடியா வந்திச்சு?'

'எனக்கு இதுதான்னு எதுவும் இல்லிங்க ஜனனி! எது தோணுதோ அத செய்வேன். பேப்பர பாத்து சும்மா அப்ளை பண்ணேன், இது கிடைக்காட்டிகூட கவலப்படமாட்டேன்! நீங்களும் அப்டியா?'

'இல்ல சனா...சின்ன வயசுலேந்து எனக்கு இதுதான் ஆசை! எங்க வீட்லதான் என்னை இன்ஜினியராக்கணும்னு இந்தியாவுக்கு அனுப்பினாங்க...எனக்கு பிடிக்கல! திரும்பி வந்துட்டேன்'

'இந்தியாக்கெலாம் போயிருக்கீங்களா?'

'ஆமா, ஊட்டில ஒரு ஹாஸ்டல்ல தங்கி காலேஜ் போனேன். அப்புறம் அத பாதில விட்டுட்டு இங்க வந்ததுல இன்ஜினீரிங்கும் போச்சு'

'ஏங்க இன்ஜினீரிங் நல்லதுதானே! அதப் படிச்சுகிட்டே இதையும் செய்யலாமே?'

'எனக்கு அங்க இருக்க புடிக்கல!'

'ஏன்? என்ன ஆச்சு?'

'............................................'

' சொல்லப் பிடிக்கலனா பரவால்ல விடுங்க!'

'அப்டி இல்ல சனா!.........அங்க.....என்கூட ஹாஸ்டல்ல இருந்த கேர்ல்ஸெலாம் ட்ரக் அடிக்ட்ஸ்! எனக்கு அது புடிக்கல விட்டுட்டு வந்துட்டேன்.'

'ட்ரக் அடிக்ட்ஸா?.....என்ன சொல்றீங்க?'

'ஆமா...தினமும் போதை மருந்தடிச்சுகிட்டு அவளுக போட்ற ஆட்டத்த பார்க்கவே சகிக்காது....ஒருநாள் போதை மருந்து கிடைக்காட்டியும் பைத்தியமாயிடுவாங்க. பணக்காரிகளுக்கு இது ஒரு பொழுதுபோக்கு, பணம் இல்லாதவங்களுக்கும் அவங்களே வாங்கி கொடுத்து பழக்கிடுவாங்க!'

'என்ன?......அவங்களுக்கு எப்பிடி அது கிடைக்கும்?'

'அசிங்கம்! பக்கத்து ஹாஸ்டல் போய்ஸ்கிட்ட இருந்து வாங்கிக்குவாங்க. அதுக்காக அவங்க என்ன சொன்னாலும் இவளுக கேட்பாங்க. வாயால சொல்லமுடியாம இருக்கு சனா! அந்த பொண்ணுங்க எங்க ஹாஸ்டல்ல இருந்ததவிட அந்த பசங்க ஹாஸ்டல்ல இருந்த இரவுகள்தான் அதிகம். அவன்களும் தங்கட விருப்பத்த நிறைவேத்த போதைமாத்திரையை ஒரு கருவியா பயன்படுத்துறாங்க. இது அங்க கிட்டத்தட்ட எல்லா ஹாஸ்டல்லயும் நடக்குது. எப்படா விட்டுட்டு வருவோம்னு இருந்திச்சு...'

'இப்பிடியெலாம் நடக்குமா ஜனனி? கேவலம் போதை மாத்திரைக்காக பொண்ணுங்க தப்பு பண்ணுவாங்களா?'

'உங்களாள நம்ப முடியல இல்ல? நேர்ல இருந்து பாத்த எனக்கு எப்பிடி இருந்திருக்கும். இப்ப நினைக்ககூட எரிச்சலா வருது சனா! எத்தனை பொண்ணுங்க சீரழிஞ்சு இருக்காங்க தெரியுமா? என் ப்ரண்ட் ஒருத்தி இரண்டு தடவை கருக்கலைப்பு செஞ்சிகிட்டா…..அதனால உடம்பு பாதிச்சு ட்ரீட்மெண்ட் கொடுத்தும் பிரயோசனமில்லாம செத்துப் போயிட்டா. அப்பா அம்மா என்ன செய்வாங்க பாவம்? படிக்க வேண்டிய காலத்துல படிக்காம சினிமாத்தனமான ஆசைகள வளர்த்துக்கிறது, ஜாலின்ற பேருல கும்மாளம் போடுறது, முன்பின் தெரியாதவங்ககிட்ட சினேகம் வச்சுக்கிறது (இந்த இடத்துல என் முகபாவத்த நீங்களே முடிவு பண்ணிக்கங்க), ஒரு 1000 ரூபா ரீசார்ஜ்ஜுக்காகவும் ஷாப்பிங்,ரெஸ்டாரெண்ட்ன்ற ஓசி பந்தாக்காகவும் பசங்களோட சிரிச்சு பேசுறதுனு சொல்லிடே போகலாம். இளமைக்கால சுகங்களை அனுபவிக்கிறதுக்காக பெத்தவங்களுக்கு துரோகம் பண்ணிட்டு எதிர்காலத்தையும் நாசமாக்கிக்குற அவங்கள….. என்ன சொல்றது?’

‘சரி சரி, உணர்ச்சிவசப்படாதீங்க ஜனனி. நம்ம ஊரு பொண்ணுங்க எப்பவுமே ஒரு பிரமிப்புல வாழ்றவங்க. சினிமால ஏதாவது வந்தா அத மாதிரியே பண்ணனும்னு தோணும், அமெரிக்கால ராக் முயூசிக் கேட்டா இவங்களுக்கும் கேக்கணும்னு தோணும், அவுஸ்ரேலியால சோர்ட் பேண்ட் போட்டா இவங்களுக்கும் போடணும்னு தோணும், பக்கத்துவீட்டுக்காரி பல் விலக்கினாத்தான் இவங்களுக்கும் பல்விலக்கத்தோணும், பசங்க சரக்கடிக்கலாம் பொண்ணுங்க சரக்கடிக்ககூடாதானு நினைப்பாங்க….ஆனா அதவிட குடிகாரனா இருக்குற அப்பாவையோ அண்ணாவையோ நண்பனையோ திருத்தலாம்ல! ஹா ஆனா இதப்பத்தி பேசி பிரயோசனமே இல்ல. இனி ஒரு புரட்சி பண்ணியா இவங்கள திருத்தமுடியும்? இந்தப் பொண்ணுங்களே இப்டித்தான்(சிறு நக்கலுடன்)’

(ஒரு முறைப்புடன்) ‘ஹலோ ஸார், பொண்ணுங்கள தப்பு சொல்லாதீங்க. நல்லா யோசிச்சு பாருங்க. இந்த நிலைமை எங்க ஆரம்பிச்சது? ஆம்பளங்களோட சபல புத்தி. எங்க எவ கிடப்பானு அலையுறாங்களே. ஒரு பஸ்ல நிம்மதியா போகமுடியுமா? ரோட்ல பயமில்லா நடக்கமுடியுமா? இவங்ககிட்ட இருந்து தப்பிக்கிறதா நினைச்சு பொண்ணுங்க சில பசங்கள ப்ரண்ட்ஸா வச்சுக்கிறாங்க. ஆனா அங்ககூட எப்படா நமக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும்னு நாக்க தொங்கபோட்டுட்டு இருக்கவங்கதான் அதிகம். பொண்ணுங்க இப்ப போற பாதை தப்புதான். கல்யாணத்துக்கு அப்புறம் எப்பிடியும் நாம கூண்டுக்கிளியாயிடுவோம். அதக்குள்ள எல்லாத்தயும் அனுபவிச்சிட நினைக்கிறாங்க.ஆனா அதுக்கு காரணமும் ஆணாதிக்கப் புத்திதான். இனி வார காலத்தை இந்த மாதிரி வாயால மட்டும் பேசி திருத்த முடியாது. எப்ப ஆண்கள் ஒரு பெண்ணோடு மட்டுமே வாழணும்னு நினைக்குறாங்களோ தன்னோட வாழ்க்கைய பங்கு போடுற பொண்ண தனக்கு சமமா நடக்குறாங்களோ காமத்தை தாண்டி கண்ணியமான கண்ணோட்டத்தோட பொண்ணுங்கள பார்க்குறாங்களோ அப்ப இதுக்கான தீர்வுக்கு வழி பிறக்கும். நீங்க குடிக்குறத நிறுத்துங்க. பொண்ணுங்க குடிக்க மாட்டாங்க. நீங்க சிகரட் பிடிக்காதீங்க. அவங்களும் பிடிக்க மாட்டாங்க. நீங்க முதல்ல மனைவியவட்டு மத்த பொண்ணுங்கள பார்க்குறத யிறுத்துங்க. அவங்க உங்க கால்ல விழுந்து கிடப்பாங்க. சொல்லுங்க சனா? பொண்ணுங்கள மரக்கடை பொம்மைகளா பார்க்குற ஆண்களாளதானே விபச்சாரிகளும் போதைக்கு அடிமையாகும் பெண்களும் வாழ்க்கையில் சீரழியும் பெண்களும் உருவாக்கப் படுகிறார்கள்? சொல்லுங்க?’

(மனதினுள்- இவ என்ன நாயகன் கமல் மாதிரி அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன்னு சொல்றாளே. இப்ப என்ன சொல்றது?)’அது…………… வந்து…………………’

(தூரத்தில் ஒரு குரல்) அடுத்தது சனாதனன்…

‘என் பேரு கூப்புட்றாங்க……நான்……..போயிட்டு வாரேன்!’

No comments:

Post a Comment