Wednesday, May 9, 2012

தமிழும் அழகும்…!

கொழும்பு கம்பன் கழகத்தினரால் வருடாந்தம் நடாத்தப்படும் கம்பன் விழா இந்த வருடமும் மிகசிறப்பாக கடந்த மாதம் நடைபெற்று முடிந்துள்ளது. பேராசிரியர் ஔவை நடராஜன், கவிக்கோ அப்துல்ரகுமான், பேராசிரியர் மு.ராமச்சந்திரன் போன்ற தமிழறியர்கள் பலர் தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்து விழாவை சிறப்பித்தனர். Seminar, workshop, assignment என்று சதா எந்திரவாழ்க்கை வாழும் 2012 தகவல்தொழில்நுட்ப அவசரயுகத்தின் சாதாரண பிரதிநிதிகளில் ஒருவரான நான் திகட்டதிகட்ட(என்றும் திகட்டாத) தமிழை பருகிய தருணம் அது. தித்திக்கும் விவாதங்கள், தீந்தமிழ் கவியரங்கம், கருத்துச் சொல்லும் பட்டிமன்றம், அதை எடுத்துச் சொல்லும் பேச்சுகளென நான்கு நாட்களும் தமிழ்தாய்க்கு திருவிழாயெடுத்தனர். அவற்றை முழுதும் எழுதப்போனால் ஒரு பதிவு போதாது. இருந்தாலும் விழாவின் இறுதிநாள் திரு.கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களின் ‘என்றுமுள தென்தமிழ்’ என்னும் தலைப்பிலான பேச்சுக்கு நான் அடிமையானதால் அதில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதியை பகிர விரும்புகிறேன். தமிழின் பெருமையை தனது தள்ளாத வயதிலும் போற்றிக் காக்கும் அப்துல்ரகுமான் ஐயாவிற்கு நன்றி.



என்றுமுள தென்தமிழெனும் கடலில் முத்தெடுக்க முப்பது நிமிடங்களே தந்திருக்கிறார்கள். முடியாவிட்டாலும் முயற்கி செய்கிறேன். உலகில் தமிழ் மொழிக்கு உண்டான சிறப்புகள் காலங்காலமாக மறைக்கப்பட்டு வந்துள்ளன. இல்லாவிடில் இப்போதைக்கு தமிழறிவின் வளர்ச்சி அபரிமிதமானதொன்றாயிருந்திருக்கும். இது சாதாரண ஒரு மனிதன் உட்கார்ந்து எழுதிய மொழி அல்ல. தமிழ்மொழியின் அற்புதங்களை மேலோட்டமாகவே படித்துவரும் நாம் அதை ஆழ்ந்து ருசித்தால்த்தான் தெரியும் அதை ஒரு சாதாரண மனிதனால் உருவாக்கியிருக்கமுடியாது என்று. உதாரணமாக சில வார்த்தைகளை நீங்கள் கவனிக்கலாம். அதன் பொருள், விளக்கம், தன்மை, வடிவம் போன்றவை அந்த வார்த்தைகளை ஒரு சாதாரண மனிதனால் இயற்றமுடியாது. தமிழ்மொழியை உருவாக்கியவர் அகத்தியர். அகத்தியம் என்ற இலக்கணநூலை அவர் இயற்றியதாலேயே அகத்தியர் எனப் பெயர்பெற்றார். அவர் ஒரு சித்தர். பிற்காலத்தில் அவரை புராணக்கதைகளோடு இணைத்து கூறிவருகிறார்கள். அவரது ஞானம் தமிழை உருவாக்கியிருக்கும் திறனில் வெளிப்படும். உதாரணமாக கடவுள் என்னும் சொல் இறைவனை விளிப்பதற்கு பயன்படுகிறது. வேறெந்த மொழியிலும் இவ்வளவு திறனாக பொருள்பட இயற்றப்படவில்லை. அனைத்திலும் கடந்து இருப்பவன். அனைத்திலும் உள்ளும் இருப்பவன். ஆதலால் கடவுள். மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட திறன் இது. தமிழ்மொழியை சிவபெருமான் அருளியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இந்த மொழியை செதுக்க ஒரு அளப்பரிய ஞானம் வேண்டும். அதனால்தான் அந்த நம்பிக்கை நிலவுகிறது என நினைக்கிறேன். தமிழ்மொழியின் சொல்மாத்திரை அதாவது அளவு மிக குறைவு. அதனால் தமிழைப்பேசினால் மூச்சு அதிகமாக வெளியேறாது. மூப்பு விரைவில் வராது. அதிக காலம் இளமையோடு வாழலாம். யப்பான், ஜேர்மன் போன்ற மொழிகள் பேசினால் அதிக மூச்சு வெளியேறும். ஆகவே பேச்சின் மூலமாகவும் நோய்த்தடுப்பை கையாண்டுள்ளனர் முன்னோர்கள். இன்னொரு ஆச்சரியம். எழுத்துக்களை அடுக்கியவிதம். கஙசஞடணதநபம இது ஏனோதானோவென்று செய்த விடயமில்லை. இந்த எழுத்துக்களை காதலர்கள் என சொல்லலாம். ஒன்றைவிட்டு ஒன்று பிரியாது. ங என்பது க உடன்தான் வரும். சங்கு,தங்கம்,கங்கை போன்றவையை குறிப்பிடலாம். ஞ என்பது ச உடன்தான் வரும் பஞ்சு,நஞ்சு,தஞ்சம் இப்படி. அதேபோல் டவும் ணவும், தவும் நவும், பவும் மவும், றவும் னவும். இப்படி சொல்லடுக்கிய விதத்திலும் மற்றைய மொழிகளுக்கு அப்பன் என்பதை உணர்த்துகிறது.

முருகு. இந்த வார்த்தையின் அற்புதத்தைப் பாருங்கள். மூன்று எழுத்துக்கள். ஒவ்வொன்றும் வல்லினம்,மெல்லினம்,இடையினம் எனும் மூன்று இனத்தினலிருந்தும் எடுக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார் இந்தியாவில் முதன்முதலாக வாழ்ந்த இனம் தமிழினமென்று. நாங்கள் சொன்னால் நம்பமாட்டார்கள். சொல்லவேண்டியவர் சொல்லவேண்டும். ஆரியர்கள் நீர்,நெருப்பு,வானம்,காற்று,இடி போன்றவற்றை வணங்கியதாக சதுர்வேதம் கூறுகிறது. ஆனால் ஆதிகுடியான தமிழர்கள் முருகு என்னும் கடவுளை வணங்கியதாக வரலாறு. முருகு என்றால் அழகு என்று பொருள். பிற்காலத்தில் அன் சேர்த்து முருகன் என்று வழிபடுகிறார்கள். ஆனால் இதன் ஆதி முருகுதான். அனைவரும் நன்றாக கவனிக்க வேண்டிய இடம் இது. அழகு என்னும் அம்சத்தை தமிழன் வழிபட்டிருக்கிறான். உலகில் வேறெந்த நாகரிகமும் மொழியும் இனமும் செய்யாத ஒரு விடயம். அழகை வணங்குவது. இது தமிழனின் பாரம்பரியம். வாழ்வியலின் ரசனையை இதைவிட அருமையாக யாரால் கூறமுடியும்? அழகை வணங்குவது என்பது ஒரு பண்பாட்டின் உச்சம். உலகில் பழமையான நாகரிகம் என்று கூறிக்கொள்ளும் எவரிடத்திலும் இப்படி ஒரு சிறப்போ மாண்போ காணப்படவில்லை. பஞ்சபூதங்களினால் வரும் தீமைகளுக்கு பயந்து அதிலிருந்து தங்களை காத்துக்கொள்ள அவற்றை வணங்கிய ஆரியருக்கும் வாழ்க்கையை இனிமையாக அனுபவித்து சமூகப்பண்பில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய தமிழருக்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். இப்படியான ஒரு பண்பாட்டு பின்னணியிலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் வந்ததில் ஆச்சரியமில்லையே.

இன்றும் இளைஞர்கள் சாலையோரங்களில் நின்றுகொண்டு அழகை வணங்கிகொண்டுதான் இருக்கிறார்கள். பாரம்பரியமல்லவா…. ஆனால் அந்த அழகுக்கு தெரியாது இவர்கள் வணங்குகிறார்கள் என்று.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகால பழமை, வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதி என எத்தனையோ காதலர்களை கொண்டிருந்தாலும் என்றும் மாறாத கன்னித்தன்மை, தன்னோடு கூடப்பிறந்த எத்தனையோ மொழிகள் இன்று அழிந்துவிட்ட போதும் உறுதியாய் நில்க்கும் வன்மை, உலகுக்கு எடுத்துகாட்டான பண்பாடு இப்படி எத்தனையோ சிறப்புகளை தன்னகத்தே கொண்டது நமது செம்மொழி.டதை நாம் போற்றிட வேண்டாமா? தமிழர்களைவிட சனத்தொகையில் குறைந்த பிரெஞ்சு, யப்பான், இத்தாலி போன்றவை உலகில் தலைதூக்கி நிற்க நாம் இன்னும் தலைகுனிந்து வாழ்வதா? தமிழர்கள் இல்லாத நாடு எங்கே உள்ளது? உலகில் பரந்துவாழும் தமிழர்கள் தாம் வாழும் பிரதேசத்தில் தமிழ்மொழியையும் தமிழ்பண்பாட்டையும் போற்றி வளர்த்தானேயானால் இன்று உலக மொழியென்று சொல்லும் ஆங்கிலத்துக்கு சவால்விட முடியாதா? அந்த திறன் தமிழனுக்கு இல்லையா? உலகம் இனி தமிழனின் சாதனைகளுக்கு சலாம்போடும் காலம் தூரத்தில் இல்லை. தமிழர்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை எந்த சூழ்நிலையிலும் விட்டுகொடுக்காமல் வாழ்வதுதான். அழகுத்தமிழை பேசுங்கள். தமிழர்கள் தமிழர்களாக வாழ்வோம். உலகம் நம்மை போற்றும்.

No comments:

Post a Comment