Friday, August 23, 2013

அது ஒரு கனாக்காலம்!

'இல்லம்மா... இன்னும் பஸ் ஏறல. லஞ்ச் சாப்டுட்டு மூணு மணி மாதிரி கிளம்புறேன். நீ சாப்ட்டு ரெடியாகி இரு. அஞ்சு மணிக்கு போனாலும் போதும். இது நமக்கு ஸ்பெஷல் ஷோ... டிக்கெட் எல்லாம் பக்காவா ரெடி. ஆஹ்... அப்புறம் அந்த லைட் ப்ளூ சுடிதாரப் போடு! ஓக்கே நான் பிறகு பேசுறேன்.  ஒழுங்கா சாப்பிடு...'

ஃபோன வச்சிட்டு ஒரு நிமிஷம் நீண்ட மூச்சு எடுத்தேன். இன்னைக்குத்தான் எத்தனை வேலை.. எதனனுதான் பாக்குறது? கஸ்டமர் ரெக்கார்ட்ஸ் கிளியர் பண்ணனும், அக்கவுண்ட் செக் பண்ணனும், இப்பனு பாத்து அம்மா கரண்ட் பில் கட்டு இல்லனா வெட்டிடுவான்னு பதறுறாங்க.. அவங்களுக்கு சீரியல் பிரச்சினை. காலைலருந்து நிற்ககூட நேரமில்லாம சுத்திட்டே இருக்கேன். ஆனாலும் அவ ஆசைப்பட்ட படத்துக்கு கூட்டிட்டு போகவேண்டிய மிகமுக்கிய கடமையில இருந்து தப்பிக்க முடியல. தப்பிக்க விரும்பல. அவள் கார்த்தியாயினி... கார்த்தி. கடந்த ஆறுமாசமா என் உலகத்த தன்னோட உலகமா மாத்தி காட்டினவ. என் சந்தோசத்த இரட்டிப்பாக்கி கவலைய குறைச்சு எனக்காக வாழுற ஒருத்தி. ஒரு சந்தர்ப்பத்துல பாத்துகிட்ட எங்களுக்கு ஒரே நேரத்துல ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு காதல் வந்திச்சு. பேசிக்கிட்டோம். நல்லா புரிஞ்சிக்கிட்டோம்.  அவளுக்காக நான் சில விசயங்கள விட்டுக்கொடுத்தேன். எனக்காக அவள் பல விசயங்கள விட்டுக்கொடுத்தாள். பொண்ணுங்க எவ்வளவு அற்புதமானவங்கனு புரிஞ்சிகிட்டாதான் தெரியும். ஆனா இதுவரைக்கும் யாருமே பொண்ணுங்கள முழுசா புரிஞ்சிகிட்டதில்லன்றதுதான் நிதர்சனம். அட அதுவும் கார்த்தி பத்தி சொல்லவே வேணும். ரொம்ப சென்சிடிவ். இன்னிக்கு வேலை இருக்கும்மா பேச டைம் இருக்காதுன்னு கேட்டு பர்மிஷன் வாங்கிட்டு வேலைய செய்வேன். அடுத்த நாள் பேசப்போனா என்கூட பேசமுடியாத அளவுக்கு உனக்கு வேலை முக்கியம்தானேனு மூஞ்சிய தூக்கி வச்சிப்பா. அப்புறம் அவள சமாதானப்படுத்த நான் ஒரு குருஷேத்ர யுத்தமே நடத்தவேண்டி இருக்கும். ஆனா அதுலயும் ஒரு சுகம் இருக்குன்னு உண்மையா காதலிக்குறவங்களுக்குதான் தெரியும். ரெண்டு வீட்லயும் பேசி சம்மதம் வாங்கிட்டதனால பயம் இல்லாம இனி ஊர் சுத்தலாம். அதான் இன்னிக்கு மேடத்தோட ஸ்பெஷல் புரோகிராம். ஐயாவோட படத்துக்கு போகணுமாம். காதலிக்குறது உற்சாகம்னா காதலிக்காக நேரம் ஒதுக்குறது அதுவும் இந்த மாதிரி சந்தோசமான விசயங்களுக்கு ... எவ்வளவு பூரிப்பு. லூசு மாதிரி எனக்குள்ளேயே சிரிச்சுகிட்டு ரோட்டோரமா போய்ட்டுருந்தேன்.

ஆஜானுபாகுவான அந்த ஆளோட தோற்றத்தை பார்த்ததும் கொஞ்சம் மிரண்டுதான் போனேன். நல்லா ஜிம்முக்கு போய் உடம்பை ஏத்தியிருந்தான். அத காட்டுறமாதிரி உடம்போட ஒட்டின ஒரு டிசர்டு போட்டிருந்தான். அண்ணனா இருப்பானோ... எனக்கு தெரிஞ்சு எந்த பொண்ணும் பட்டப்பகல்ல அண்ணன கூட்டிகிட்டு ரெஸ்டாரெண்ட் வரமாட்ட... ஒரு வேளை சொந்தாகாரனா இருப்பானோ.. எனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்பிடி தேவையில்லாத விசயத்தப்பத்தியெல்லாம் நினைச்சிட்டு இருக்கேன்னு எனக்கு நானே அறிவுறை சொல்லி கவனத்தை திருப்ப பார்த்தாலும் முடியாம அவளையே பாத்துட்டு இருந்தேன். அவ பேர்கூட எனக்கு தெரியாது. இவ்வளவு கொடுமையான காதலனை எங்காவது பார்த்திருப்பீங்களா? இவளுக்காக எத்தனை நாள்... எத்தனை மாசம் ஏங்கியிருப்பேன்? ஒரு தடவை பார்க்கமாட்டோமானு கதறியிருப்பேன்... காலம் முழுக்க இவதான்ன் கனவு கண்டேனே. கற்பனையிலேயே காலம் கழித்தானே... அவளேதான். அப்படியேதான் இருக்கிறாள். பத்து ஆண்டுகள் கழிந்தும்...

கடவுள் ஏன்தான் இந்த பொண்ணுங்களைப் படைச்சானோனு வெறுப்பில் இருந்தவன் நான். ஹாஹா இப்போ இல்ல.. என் பத்து வயசுல. பொண்ணுங்களே வேணும். இந்த உலகத்துல பசங்க மட்டும் இருந்தா போதும்ன்றது என்னோட நினைப்பு.. பெண்குழந்தைங்கள தூக்கக்கூட மாட்டேன். லூசு மாதிரி எல்லாரும் போய் பொண்ணங்கள கல்யாணம் பண்றாங்க.. நான் கல்யாணமே பண்ணமாட்டேனு பெருமையா சொன்னேன். இந்த வயசுல இப்படித்தான் சொல்லுவ. அந்த வயசு வந்ததும் தானா மாறும் பாருன்னு அப்பா சொன்னதை அலட்சியம் பண்ணது எவளோ தப்புனு என் பதினாறு வயசுல அவளைப் பாக்ககுலதான் தெரிஞ்சிச்சு... அப்ப அவளுக்கு எத்தனை வயசுன்னு தெரியாது. ஒரு பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கு கவிதைப்போட்டிக்கான பரிசு வாங்க போனேன். யூனிஃபோர்ம்ல அங்கயும் இங்கயுமா சுத்திட்டு இருந்த ஒரு சுட்டிப்பொண்ணு திரும்ப திரும்ப அவளை கவனிக்கவச்சா... மேடைக்கு போய் கடவுள் வாழ்த்தெல்லாம் பாடினா.. அவமேல என்னதான் ஈர்ப்போ தெரியல அவ பாடின கடவுள் வாழ்த்துக்கு எழுந்து நின்னு கை தட்டினேன். முழுக்கூட்டமே என்னை ஒரு மாதிரி பாத்திச்சு. இது என்னமாதிரியான உணர்வு? ஐயோ அவளைக் காணமே.. இங்கதானே சுத்திட்டு இருந்தா. கண்ணை அங்கயும் இங்கயும் சுத்தி அலையவிட்டதுல மேடையில நான் வாங்கவேண்டிய பரிசுக்காக என் பெயரைச் சொன்னதைக்கூட கவனிக்கல. விழாவும் முடிஞ்சுது. அவளை அதுக்கப்பொறம் பார்க்கலயே. எப்படியும் இந்த ஸ்கூல்லதான் அவ படிப்பா. நாளைக்கு பார்த்தேயாகணும்னு சபதமெல்லாம் எடுத்தேன். தூங்க முடியலங்க. அவ முகமே கண்ணுக்குல வந்து கரகாட்டம் ஆடிட்டு இருந்திச்சு. சத்தியமாடா, உனக்கு காதல் வந்திடுச்சுடானு ஒரு அசரீரி என் காதுக்கு மட்டும் கேட்டிச்சு.

அடுத்த நாள் அவளைப்பாக்க போனேன். பள்ளிக்கூடம் விடுற நேரம். அவ வீட்டுக்கு போறதப் பார்த்தேன். ஆனா பக்கத்துல போய் பேசமட்டும் தைரியம் வரல. இத மாதிரி எத்தனையோ நாட்கள் கடந்தபோச்சு. நான் அவளைப் பாக்குறது அவளுக்கு தெரியுமா இல்லையானுகூட தெரியல. ஒரு தடவை என்னை திரும்பி பார்த்தா! எப்பிடி இருந்திச்சு தெரியுமா? பத்து ஏஞ்சல் தலைக்குமேல அந்த கால யாழ் வாத்தியம் வாசிச்சுகிட்டு சுத்துற மாதிரி.. ஏதோ என்கிட்ட சொல்லணும்போல அவ என்னையே பாத்திட்டு இருந்தா. இருக்குமே... பின்ன காதல்னா சும்மா? இங்க விதைவிதைச்சா அங்க மரம் முளைக்குமே... அவளுக்கு அந்த உணர்வு வந்திருக்கும்ல. அதானே தெய்வீக காரலோட தனித்துவம். ஆஹா நான் ஒரு கதாநாயகன்னு இவ்வளவு நாளா தெரியாமரே வாழ்ந்திருக்கேனே? டேய் கற்பனையை நிறுத்துடா அவ பக்கத்துல வாறா.. ஐயோ நான் இப்ப என்ன பேசுறது? ஒண்ணும் தயார் பண்ணலயே. சொதப்பிட்டேன்னா? அதோட அவ கண்ணப் பார்க்கவேற வயித்துக்குள்ள வாஷிங்மெஷின் சுத்துதே. அவ கிட்ட வர வர மூச்சு அதிகமாக்க நுரையீரல் காற்றை கடன் கேட்டிச்சு. இதயத்துடிப்பு அடிக்குறசத்தம் மின்னல்மாதிரி கேட்டிச்சு. கண்கருவிழிகளை மேகமெல்லாம் வந்து மூடிடுச்சு. அட சும்மாவா! என் தேவதை என்கிட்ட பேசவராளே... இத்தனை இயற்கை அனர்த்தங்களும் எனக்குள்ள ஆடி அடங்குறதுக்குள்ள அவ என் முன்னாடி வந்து நின்னா. யப்ப்ப்ப்பா அப்ப மூச்சுன்னு நான் ஒண்ண விட்டதே பெரியவிசயம். ஹை அப்பிடினு சொன்னா.. ஆனா என் காதுல என்னமோ கண்ணான்ற மாதிரிதான் கேட்டிச்சு. வானத்து தேவதையெல்லாம் என்னை வந்து தூக்கிட்டுபோயமாதிரி இருந்திச்சு. அடச்சே... பூலோகத்தேவதையே என்கூட இருக்கும்போது வானத்துதேவதைகள் என்னத்துக்கு? அவள் என்ன்னிடம் இருந்து பதில் வராததால் என் முகத்துக்கு முன்னால் கையை ஆட்டி ஹலோ அப்டின்னாள். ஆஹ் ஹை.. ஹல்ல்... ஹல்லோ ஹை.. செமயா உளரித்தள்ளிட்டேன். அவ கையால வாயமூடி கலகலன்னு சிரிச்சு ஒரு டிக்கெட் வாங்குறீங்களானு ஒரு ரசீது நோட்டைக்காட்டினாள். எமதர்மன் ஏரோப்பிளேன்ல இருந்து குதிச்சு கிட்டார் வாசிச்சுக்கிட்டே என் கிட்ட வாற மாதிரி இருந்திச்சு. இதுக்குத்தான் இவ்வளவு கற்பனையா? வடிவேலு மாடுலேஷன்ல என் மைன்ட்வாய்ஸ் கேட்டிச்சு. அதுவா நடக்குறதுக்கு முன்னால நீயா படம் ஓட்டினா ரீலு இப்பிடித்தான் பாதியிலயே அந்துபோகும்ன்னு.. சரி முதல்பரிசுதான் கிடைக்கல ஆறுதல் பரிசாவது இருக்கட்டுமேனு பத்து டிக்கெட் வாங்கிட்டு அந்த பாகவதர் கச்சேரிக்குபோனேன்.

குடும்பம், படிப்புன்னு எதைப்பத்தியுமே யோசிக்கவிடாம அவ நினைப்பு மட்டுமே மண்டைக்குள்ள ராட்டினமா சுத்திச்சு. எத்தனை நாட்கள் அவளுக்காக அவளோட பள்ளிக்கூட வாசல்ல தவம் இருந்தேன்னு எனக்கே தெரியாது. ஆனா எந்த ஒரு விசயமே எதிர்வினை நடக்காம எவ்வளவுதூரம் கொண்டுபோகமுடியும்? அவ பாக்குறதாவே தெரியல. எனக்கும் பரீட்சை அது இதுன்னு அவளை தேடிப்போறது கொறைஞ்சுட்டேபோனது. ஒரு நேரத்துல மொத்தமா அவளைப் பாக்குறதே நின்னுபோச்சு. அவளும் எங்க போனானு தெரியல. நெஞ்சு குமுறுறத அடக்கமுடியல. இனி எங்கன்னு பாக்குறது? அவளுக்கு நான் ஒரு பொருட்டான்னே தெரியாது. அவள் என்னைப்பத்தி அவளோட வாழ்க்கைல ஒரு நிமிஷமாவது நினைச்சுப்பாக்கக்கூட வாய்ப்பில்லை. என்ன தைரியத்துல அவள தேடி அலையுறது? குறைஞ்சபச்சம் அவகிட்ட என் காதலயாவது சொல்லியிருக்கலாம்.. அட அவ பேரையாவது கேட்டிருக்கலாம். நினைக்க நினைக்க அழுகை வர்ரதுதான் மிச்சம். சத்தியமா சொல்றேன். காதலை சொல்ல தைரியமில்லாத கோழையெல்லாம் காதலிக்கவேகூடாது. துக்கமும் தோல்வியுமா கொஞ்சகாலம் சுத்திட்டு இருந்தேன். பிறகு குடும்பபாரம் சுமக்கவேண்டிய சூழ்நிலை. வேலை, புதிய நண்பர்கள், கால ஓட்டம். எல்லாம் மாறிப்போச்சு. ஆனா கொஞ்சகாலம் எந்த பொண்ணைப்பார்த்தாலும் அவ ஞாபகம் வர்ரத தடுக்கமுடியாம ரொம்ப அவஸ்தைப்பட்டேன். இப்பகூட எப்பயாவது அந்த முதல்காதல் அப்பிடினு மனசுக்குள்ள ஆணியடிச்சு மாட்டின அவளோட முகத்தை தூசிதட்டிப் பார்த்துப்பேன். ஆனா இப்ப அந்த வலி இல்லை.

இன்னிக்கு அவளைப் பார்த்தேவிட்டேன். பத்துவருஷம். அதேமுகம். உருவம்தான் கொஞ்சம்வித்தியாசமா.. ரொம்ப பெரியமனுஷி மாதிரி! நல்ல வசதியா வாழ்றானு அவளோட தோற்றத்துலதே தெரியுத். இப்ப போய் ஹை ஹலோனு எப்பிடி அவகிட்ட பேசமுடியும? அட நான் உளராம பேசிடுவேன். அவளுக்கு என்னை தெரிஞ்சிருக்கணுமே. இப்பிடி ஒரு கிறுக்கு இவளுக்காக பல ராத்திரி தூங்காம கனவுகண்டான்னு அவளுக்கு தெரியாதே. தெரிஞ்சும் புண்ணியமில்ல. தெரியக்கூடவேணாம். நல்லா இருக்கிறாள். நால்லவே இருக்கட்டும். அந்த ஒரு துளிநீரைமட்டும் என் மனசாட்ச்சிக்கு தெரியாம அவசரமா துடைச்சேன். ஃபோன் அடிச்சிச்சு. கார்த்தி... 'என்னடா? இன்னுமா சாப்பிடல இடியட்?' என் சந்தோசம் எங்கே இருக்குன்ற பக்குவம் எனக்கு தெரியும். நடுரோடுனுகூட பாக்காம ஃபோன்ல இச் இச்னு முத்தம் கொடுத்துட்டேன்.