Tuesday, July 17, 2012

பாதப்பலகை…

வழக்கம்போல பாடசாலைவிட்டு வீட்டுக்கு நடந்துவந்துகொண்டிருந்தாள் திவ்யா. உயர்தரப் பரீட்சை நெருங்கும் காலமென்பதாலும் இத்தனைவருடகால பள்ளிப்படிப்பிற்கு முற்றுப்புள்ளி நெருங்கிவிட்டது என்பதாலும் பாடசாலைக்கு வெளியே வந்துகூட கரும்பலகையும் பள்ளிசுவர்களும் கண்களிலேயே வட்டமிட்டுக்கொண்டிருந்தன. நல்ல ரிசல்ட்ஸ் எடுத்து ஒரு பெரிய கல்லூரியில் இணைந்து பட்டப்படிப்பு மாணவியாக தான் நிற்கும் கோலத்தை மனக்கண்ணிலே கண்டு பூரித்துக்கொண்டாள். கற்பனையிலே குதூகலித்துக் கொண்டிருந்தவளின் முன் ஆவேசமாக வந்து நின்றான் குணா. அவனைக் கண்டதும் உண்டான பயத்தை உள்ளுக்குள்ளேயே மறைத்து கோபமாக அவனைப் பார்க்க முயற்சி செய்தாள் திவ்யா. இது முதல் தடவையல்ல. பல நாட்களாகவே அவனது தொல்லை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆரம்பத்தில் எங்கு சென்றாலும் பல்லை இளித்துக் கொண்டு பின்னாலேயே சுற்றுவான். கோவில், கடை என்று தான் செல்லும் இடங்களை எவ்வாறோ அறிந்து அவளுக்கு முன் அங்கு சென்று நின்றுகொண்டு சினிமா ஹீரோமாதிரி போஸ் கொடுப்பான். அதைப் பார்த்தாலே அவளுக்கு அருவருப்பாக இருக்கும். இருந்தாலும் பயத்தினால் வீட்டில் சொல்லாமல் வைத்திருந்தாள். இப்படியே சென்றுகொண்டிருந்ததால் அவன் பொறுமையிழந்திருப்பான் போல. அவள் தனியாக வரும் ஒரு நாளில் திடீரென்று அவள் முன் சென்று ‘நான் உன்னைக் காதலிக்குறேன். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ப்ளீஸ் என்னை வேணாம்னு சொல்லாத. உனக்காக நான் உயிரையும் கொடுப்பேன். என் காதல் ரொம்ப புனிதமானது. நீயும் என்னைக் காதலிக்குறேன்னு சொல்றவரைக்கும் சாப்பிடமாட்டேன், தூங்கமாட்டேன்… என் காதல புரிஞ்சுக்கோ’ என்று மிரட்டுவதுபோல சொல்லவும் அவள் அழுதேவிட்டாள். அழுது முடித்தவுடன் சரியென்று சொல்லுவாள் என அவனும் காத்திருந்தான். அவளும் சொன்னாள். இவ்வளவு நாட்களில் கண்டது கேட்டது மூலமாக தெரிந்துகொண்ட அத்தனை வார்த்தைகளையும் சொல்லி அவனை திட்டித் தீர்த்தாள். அவன் கண்ணில் காதல் இல்லை. மாறாக ஏதோ ஒன்றை அடையவேண்டுமென்ற வெறியே இருந்தது. அதன்பிறகு அவனை எங்கு பார்த்தாலும் முறைத்துக் கொண்டு திரும்பிவிடுவாள். ஆனால் இன்று யாரும் இல்லாத தனி இடத்தில் இப்படி மாட்டிக்கொண்டாளே…

பாதப்பலகை என்பது ஒரு பஸ்ஸினுள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பயன்படுத்தப்படுவது. ஆனால் அதில் தொங்கிக்கொண்டு செல்வதுதான் ஸ்டைல் என்றாகிவிட்டது. பஸ்ஸினுள் தேவையான இருக்கைகள் இருந்தாலும் ஃபுட்போர்ட்டில் தொங்கிச் சென்றால்தான் இளைஞர்கள் என்பதற்கே அழகாம். வீதி ஒழுங்குமுறையை சீராக கடைப்பிடிக்காத நமது நாட்டில் தெருக்களில் இப்படி சாகசம் காட்டி செல்வது எவ்வளவு ஆபத்தானது என புரியாத குரங்குக்குட்டிகள்தான் ஃபுட்போர்ட்டில் தொங்கிக்கொண்டுபோகும். நினைக்கும்போது சரவணனுக்கு சிரிப்புதான் வந்தது. ஃபுட்போர்ட்டில எவன் ஒருத்தன் தொங்கிகிட்டு போறானோ அவன் இதுவரைக்கும் கீழுவிழுந்து அடிபடலனு அர்த்தம். எங்கேயோ கேட்ட இந்த துணுக்கு அவனுக்கு இப்போது நினைவு வந்தது. அந்த ஃபுட்போர்டையே பார்த்துக்கொண்டிருந்தான். இதில் அப்படி என்னதான் இருக்கிறது. இதிலே நின்று பயணம் செய்வதில் அப்படி என்ன கௌரவத்தை கண்டுவிட்டார்கள்… அவன் மனம் விடைதேடும் அதே நேரத்தில் இதே பாதப்பலகையால் அவன் எத்தனைமுறை அவனது நண்பர்கள் முன்னால் அவமானப்பட்டிருக்கிறான்…. இயல்பாக சரவணன் பயந்த சுபாவம் கொண்டவன். அதனால் எந்த விசயத்தையும் எடுத்தவுடன் தைரியமாக அவன் செய்ததே இல்லை. ஓடி விளையாடக்கூட அஞ்சுவான். இத்தனைக்கும் அவன் ஒரு உயர்தரம் படிக்கும் இளைஞன். இந்த பாதப்பலகை விசயமும் அப்படித்தான். பள்ளிக்கூடம் விட்டு நண்பர்களுடன் பஸ்ஸில் வரும்போது அவர்கள் ஃபுட்போர்ட்டில் தொங்கிக்கொண்டு உள்ளே பம்மிக்கொண்டிருக்கும் சரவணனை கேலி பேசிக்கொண்டிருப்பார்கள். ஃபுட்போர்ட்டுலகூட நிக்க முடியல, நீயெல்லாம் ஸ்டூடண்ட்டுனு சொல்லிக்குற என்று அவனை குத்தும் வார்த்தைகள் அவனுக்கு இப்போது நினைவு வந்தது. பொதுவாக கேலி என்பது நகைச்சுவையான சந்தோசமான விடயமாகத்தான் இருக்கும். கேலிக்குள்ளாகும் அந்த ஆளைத்தவிர. இன்னும் இந்த கேலி தொடரவிடக்கூடாதென்று முடிவு செய்தான். நண்பர்கள் முன்னால் கெத்தாக மரியாதையைக் காப்பாற்றவேண்டுமே… அதோ அங்கே ஒரு சந்து வரும், அங்கே அதிகமாக ஆட்கள் இருக்கமாட்டார்கள். அந்த நேரம் ஃபுட்போர்ட்டில் நின்றுபார்ப்போம். பஸ்ஸுக்குள்ளேயும் சனம் குறைவாக இருப்பதால் ஃபுட்போர்ட்டில் நின்று நடுங்கிக்கொண்டு இருந்தாலும் யாரும் கண்டுகொள்ளப்போவதில்லையென்று பெரிய அதிரடித்திட்டங்களை போட்டு அதை செயற்படுத்தவும் தயாரானான். சந்து நெருங்கும்போது மெதுவாக இருக்கையில் இருந்து எழுந்து பஸ் சென்றுகொண்டிருக்கும்போதே ஃபுட்போர்ட் அருகே வந்தான். மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கி கடைசி படியில் இரண்டு கால்களையும் வைத்தான். தனக்கு முன்னால் இருந்த ஒரு நீளமான கம்பியை இறுக்கமாக பிடித்துக்கொண்டான். ஒருவழியாக செட்டில் ஆனபிறகு தலையை லேசாக வெளியே காட்டினான். எதிர்காற்று சில்லென்று அவனது முகத்தில் மோதி பரவசமூட்டியது. ஏதே ஒரு அசட்டுத்துணிச்சல் இடங்கொடுக்க தன் நண்பர்கள் நிற்பதுபோலவே ஸ்டைலாக நின்றான். அவனாலேயே இதை நம்ப முடியவில்லை… யாஹூ… நானும் ஒரு வீரன்தான்….

‘என்னடீ முறைக்கிறே? ஒரு ஆம்பிள பைத்தியக்காரன்மாதிரி உன் பின்னால சுத்துறானே.. பாவம்னு பாத்தியாடீ! இனிமே உன்னால பாக்கவே முடியாது. இன்னிக்கு உனக்கு ஒரு முடிவு கட்டுறேண்டி’ தன்னை வழிமறித்து மிரட்டிக்கொண்டிருக்கும் குணாவிடமிருந்து எப்படி தப்பிப்பது என தெரியாமல் குழம்பிநின்றாள் திவ்யா. கைகள் பரபரத்துக்கொண்டு நிற்க கண்ணில் கொலைவெறியுடன் திவ்யாவை நகரவிடமுடியாமல் தடுத்துநின்றான் குணா. அவளை திடுக்கிட செய்வதற்காக அவளது உடையின்மீதிருந்த துப்பட்டாவை பிய்த்து தூக்கியெறிந்தான். ஆவேசமடைந்த திவ்யா ‘ஒரு பொண்ணுக்கு உன்னை பிடிக்கலனா விட்டுட்டு போகவேண்டியதுதானே. ஏண்டா இப்படி அடுத்தவங்க வாழ்கையோட விளையாடுறீங்க?’ என்று காரி அவன் முகத்தில் துப்பினாள். அடுத்த நொடியே அவளது கன்னத்தில் அவன் கைரேகை பதிந்தது. ‘நான் எவ்ளோ பெரிய ரவுடினு தெரியாம என்னை துப்பிட்ட இல்ல. கடவுள வேண்டிக்க. இன்னிக்குதான் உன் கடைசி நாள்’ அவள் சற்றும் எதிர்பாராத விதமாய் பாக்கெட்டில் இருந்து கைக்கத்தி ஒன்றை எடுத்தான். அப்படியென்றால் தன்னைக்கொல்லும் எண்ணத்தில்தான் வந்திருக்கிறானே.. அவனை பார்க்கும்போதே ஒரு பொறுக்கி என்பது தெரிந்தது. ஆனால் கொலை செய்யும் அளவுக்கு போவான் என்று எதிர்பார்க்கவில்லையே… அவன் முதல்முறை தொந்தரவு செய்தபோதே பெற்றோரிடம் சொல்லாமல்விட்டது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்று இப்போது புரிகிறது. இப்படி உதவிக்குகூட யாரும் வரமுடியாத இடத்தில் அநாதரவாக சிக்கியதை நினைக்க தொண்டையடைத்தது. படபடப்பாக உடல் நடுங்கியதில் அவளுக்கு வேர்த்துக்கொட்டியது. அவன் நேரத்தை தாமதிக்காமல் அவளின் கழுத்தை ஒருகையால் பிடித்து மறுகையால் கத்தியை ஓங்கினான். அவளின் அப்பா அம்மா பாட்டி தோழிகள் ஜிம்மிநாய்க்குட்டியெல்லாம் அவளது கண்முன்னால் வந்து போனது. அடக்கடவுளே எனக்கு இப்படியா விதி முடியவேண்டும் என்று புலம்பத்தொடங்கினாள். அந்த சந்தின் வழியாக வந்த பஸ் ஹார்ண் அடித்தது.

கம்பியை இறுக்கமாகப் பிடித்திருந்தாலும் ஏதோ வழுக்குவதுபோல இருந்தது சரவணனுக்கு. அதுமட்டுமில்லாமல் வழக்கமாக இந்த சந்தில் பஸ்ஸை மெதுவாக ஓட்டமாட்டர்கள். கிரைண்டரில் ஆட்டுக்கல்போல கதிகலங்கும். இப்ப மேல ஏறி உள்ளே போகவும் பயமாய் இருக்கு. இங்கேயே நிக்கவும் முடியல. என்ன பண்ணுறது கடவுளே… ஸ்டைலுக்கு ஆசைப்பட்டு உயிரை பணயம் வச்சானே! நான் எவ்வளவு பெரிய முட்டாள், ஆத்தா கருமாரியாத்தா முண்டகன்னியம்மா கருப்பண்ணசாமியே சொரிமுத்தய்யனாரே என்னை உயிரோடு காப்பாத்தி விட்டீங்கன்னா ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா வந்து மொட்டை போடுறேன் கடவுளேன்னு ஊரில் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் கும்பிடு போட்டுக்கொண்டிருந்தான். அந்த இளவெடுத்த டிரைவர் வேற வேகத்தை குறைக்காமல் ஏரோப்பிளேனை ஓட்டுறமாதிரி பறந்தான். ஆபத்தான விசயமென்பது எப்போதுமே ஆபத்தான விசயம்தான். அதன் வடிவம் மாறலாம் ஆனால் விளைவு ஒன்றுதான் என்பது அவனுக்கு அப்போது புரிந்தது. இருந்தாலும் இதுவே கடைசி என்றும் இனிமே இந்த ஃபுட்போர்ட் கருமத்தை நினைத்தும் பாரப்பதில்லையென்றும் முடிவுபண்ணி கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு கம்பியை கெட்டியாக பிடித்தான். ஆனாலும் விதி விடவில்லை. எங்கிருந்தோ காற்றில் பறந்துவந்த ஒரு துப்பட்டா டிரைவருக்கு முன்னாலிருந்த கண்ணாடியை மறைத்துவிட வழிதெரியாமல் பதட்டமடைந்த டிரைவர் நாலு அடிக்குமேல் போகமுடியாமல் வந்த வேகத்திலேயே பிரேக் போட்டான். அந்த பிரேக்கில் தடுமாறிய சரவணன் கைவழுக்கி முன்னுக்குத் தள்ளப்பட்டு தூக்கியெறியப்பட்டான்.


கலங்கிய கண்களுடன் தனக்கு முன் வழிதெரியாமல் நிற்கும் திவ்யாவை கொல்ல இதுதான் நேரம் என எண்ணி கத்தியுடன் கையை ஓங்கினான் குணா. அவன் கையை ஓங்கியது மட்டும்தான் நினைவிருக்கிறது. அந்தரத்தில் எறியப்பட்டு வந்த சரவணன் தெருமூலையில் திவ்யாவை மடக்கிபிடித்திருந்த குணாவின்மீது போய்விழுந்தான். திடீரென்று ஒரு மனிதன் விழுந்ததால் தள்ளப்பட்ட குணா சுவரில்போய் தலையில் அடிபட்டு மயங்கிவிழுந்தான். அதுதான் சமயம் என எதைப்பற்றியும் யோசிக்காமல் வீட்டைநோக்கியோடினாள் திவ்யா. குணாவின் மீது விழுந்த சரவணனுக்கு அங்கிருந்த கல்லொன்றில் கால் மோதி ரத்தம் வரத்தொடங்கியது. உயிர்போற வேதனையில் துடித்தான் அந்த அதிர்ச்சியிலேயே அவனும் மயங்கிப்போனான். பஸ்ஸில் இருந்த ஒருவன் விழுந்ததைப் பார்த்த மற்றவர்கள் உடனே இறங்கிவந்து அவர்களை சூழ்ந்துகொண்டனர்.

மிகவும் கஷ்டப்பட்டுதான் கண்திறக்க வேண்டியிருந்தது. கொஞ்சம்கொஞ்சமாக அனைத்தையும் பார்க்கவும் முடிந்தது. ஆம், தான் இப்போது ஆஸ்பத்திரியில் இருப்பதை உணர்ந்தான் சரவணன். அவனுக்கு எதிரில் காக்கிச்சட்டை போட்ட ஒரு ஆள் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரைக்கண்டு அஞ்சி எழ முயற்சித்தவனை அவர் தடுத்து ‘வேணாம்பா படுத்திரு, ஒடம்பு இப்ப எப்பிடியிருக்கு?’ அவர் மீதிருந்த பயம் போகாமலேயே ‘கால்தான் வலிக்குது..இப்ப பரவால’…. ‘எவ்ளோ பெரிய விசயத்த செஞ்சிட்டு சாதாரணமா படுத்திருக்கே தெரியுமா? பஸ்ஸுலேந்து ஒருத்தன் மேல விழுந்தியே.. அவன் நாங்க தேடிக்கிட்டுருக்க பெரிய ரவுடி, நீ போயி விழுந்ததுல சாககிடக்குறான், அப்படியே உயிர்பொழச்சாலும் சுயநினைவுக்கு வாறது கஷ்டமாம். எங்க வேலய சுலபமாக்கினதுக்கு உனக்கு நன்றி சொல்லத்தான் நான் காத்திருந்தேன்.’ அவனுக்கு ஒன்றும் புரியவில்லை ‘சார் எனக்கு ஒண்ணும் தெரியாது சார், நான் வேணும்னு ஒண்ணும் பண்ணல. இப்ப எனக்கு இருக்குற பிரச்சினை நான் அடிபட்டு கெடக்குறது எங்க வீட்டுக்கு தெரிஞ்சா ரொம்ப கவலப்படுவாங்க சார்’.. அவர் சிரித்துக்கொண்டே ‘கவலப்படாத, உங்க வீட்டுக்கு சொல்லிட்டோம். உனக்கெந்த பிரச்சினையும் வராம நாங்க பாத்துக்குறோம். உன் காலுக்கும் ஒண்ணும் இல்ல. சீக்கிரம் குணமாயிடுவ. நான் வறேன்.’ அவர் போனபின் அழுதுகொண்டே வந்த பெற்றோரைப்பார்த்து சரவணனும் அழுதுவிட்டான். பின் ஒரு வாரம் ஆஸ்பத்திரியிலேயே தங்கிவிட்டு காலிசெய்து புறப்பட்டார்கள். அவன் மீதிருந்த திருஷ்டிதான் இதற்கெல்லாம் காரணமென்று அவனது தாயார் அவனுக்கு சுற்றிப்போட்டார்கள். அவர்கள் ஆஸ்பத்திரி பில் கட்டிக்கொண்டு நிற்கும்போது நொண்டி நொண்டி சரவணன் வீதிக்கு வந்தான். அவனைக்கண்டு மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டு ஒரு பெண் அவனை நோக்கி வந்தாள்.

‘உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்றதுனே தெரியல. உங்கள என் வாழக்கைல மறக்கமுடியாது. அந்த பாவி என்னைக் கொல்லவந்தான். நீங்க மட்டும் அப்போ வரலன்னா நான் உயிரோடயே இருந்திருக்கமுடியாது. ஆனா நான் கீழ விழுந்த உங்கள பாக்காம ஓடிட்டேன். என்னை மன்னிசிருங்க’. என்று கண்களில் ஈரத்துடன் ஒரு பெண் கூறிவிட்டு தேம்பிதேம்பி செல்வதைப் பார்க்கும்போது அவனுக்கு குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆர்வக்கோளாறில் என்னவென்று தெரியாமல் ஃபுட்போர்ட்டில் தான் போய் நின்றதால் மரணத்தின் விளிம்புவரை சென்று கும்பிட்ட சாமிகளின் புண்ணியத்தால் சில அடிகளோடு தப்பித்து ஒருவாரம் ஆஸ்பத்திரியில் படுத்திருந்து படிக்கவேண்டிய படிப்பும்போய் சிரமபடுகிறோம். அதேகாரணத்தால் உள்ளே ஒருவன் உயிருக்கு போராடுறான். அதுக்கு ஒருத்தி நன்றி சொல்லிட்டு போறா.. ஒரு சம்பவத்தால ஏற்பட்ட பல்வேறுபட்ட விளைவுகளுக்கு பாதிப்புகளுக்கு இன்னொரு சம்பவம் எப்படி காரணமாயிருக்கும் என அவன் குழம்பிக்கொண்டிருக்கையில், அவனைக்கடந்து சென்ற ஒரு பஸ்ஸில் நாலு, அஞ்சு பேர் ஃபுட்போர்ட்டில் தொங்கிக்கொண்டு விசிலடித்து பாட்டுபாடிக்கொண்டு சென்றனர்.

No comments:

Post a Comment