Thursday, November 15, 2012

அவரவர் நியாயம்

‘முதியோர் இல்லங்குறது எவ்ளோ வேதனையான அனுபவம் தெரியுமா? தப்பு பண்ணாதவங்களுக்கு தண்டனை கொடுக்கிற சிறைச்சாலை அது. நமக்காக எவ்ளவோ தியாகம் பண்ண அப்பா அம்மாக்கு இதுவா பரிசு? அவங்க அங்க எவ்ளோ கஷ்டப்படுவாங்கனு நீ கொஞ்சமாவது யோசிச்சியா? நீ இப்டி பண்ணுவனு நான் நினைக்கல அண்ணா…’

 ‘என்னையென்ன பண்ண சொல்ற? வேல வேலனு ஊர சுத்தவே எனக்கு நேரம் சரியாயிருக்கு. வீட்டுல அவளும் அம்மாவும் போடுற சண்ட தாங்க முடியல. நான் வெளிவேலய பாப்பேனா? இல்ல இவங்களுக்கு மத்தியஸ்தம் பண்ணுவேனா? இப்படியே போனா குடும்பம் நடத்த முடியாதுனுதான் அப்பிடி ஒரு முடிவெடுத்தேன். அங்க அவங்களுக்கு எல்லா வசதியும் இருக்கு. நீ அதப்பத்தி கவலப்படாம இரு.’

‘உன்ன அண்ணானு கூப்பிடவே அசிங்கமாயிருக்குடா…. செய்யக்கூடாதத செஞ்சிட்டு இப்ப சப்பகட்டு கட்டுறியே… அப்பிடி என்னதான் உன்ன மயக்கி வச்சிருக்கா உன் பொண்டாட்டி?’

 ‘ஹே, அவள தப்பா பேசாதா? அவ என்ன செய்வா? பாவம். வயசானா வீட்டு நெலமய அனுசரிச்சு அமைதியா இருக்கணும். அத வுட்டுட்டு இருக்குறவங்களுக்கும் தொல்லை கொடுத்துட்டு அவங்களும் மூக்க சிந்திட்டு இருந்தா எப்படி நிம்மதியா வாழமுடியும்? பெத்தவங்கன்றதுக்காக எவ்வளவுதான் பொறுத்துக்கமுடியும்.. ஆமா நீ என்ன என்னையே குத்தம் சொல்லிட்டு இருக்கே? உலகத்துல யாரும் செய்யாததயா நான் செஞ்சிட்டேன்?’

 ‘பெத்தவங்களுக்கு ஒருவாய் சாப்பாடு குடுக்க வக்கில்லாம சாக்கு போக்கு சொல்லிட்டு இருக்கே… வெக்கமா இல்ல?’ ‘அப்பிடீன்னா நீ கூட்டிட்டு போய் உங்கூடயே வெச்சிக்க வேண்டியதுதானே?’

‘அங்க அவரும் நானுமே இருக்க வசதியில்ல.. கரண்ட கட் பண்றதால புழுக்கத்துலயே வேகவேண்டியிருக்கு. இதுல அவங்கள வேற வச்சு எப்படி பாத்துக்கமுடியும்? ஆம்பிளப்பிள்ளனு சொத்த மட்டும் அதிகமா வாங்கிகிட்டியே ஆம்பிளயா லட்சணமா அப்பா அம்மாவ பாத்துக்ககூடாதா?'

‘ஓஓ…. அதுனாலதான் உன் மாமனார் மாமியார நீ புகுந்த வீட்டுக்கு போன அடுத்தமாசமே முதியோர் இல்லத்துக்கு அனுப்பினியா? உன் பேச்ச கேட்டு மச்சான் அவங்க பெத்தவங்கள தள்ளிவக்குறது தப்பில்ல.. ஆனா என் பொண்டாட்டிக்காக நான் பண்ணா தப்பா? வந்துட்டா நாட்டாம பண்ண. வேலயப் பாத்துட்டு போ’

 ‘……………………………………………’

No comments:

Post a Comment