Monday, July 16, 2012

சிவன் ஆட்டம்

‘ஹாய்! ஹாய்! ஸாரிப்பா லேட்டாயிடுச்சு…. அசைன்ட்மெண்ட் பத்தி யோசிச்சுகிட்டேயிருந்ததுல ஒரே தலவலி. ஒண்ணுமே தோணல. நீங்களாவது ஏதாவது யோசிச்சுவச்சீங்களா?’

‘………………………………………………………….’

தான் வந்ததை கவனிக்காமல் தனக்கு பதில்கூட சொல்லாமல் ஏதோ மும்மரமாக தயாராகிக் கொண்டிருக்கும் சந்தோசையும் ஹரிணியையும் ஆச்சரியமாகப் பார்த்தான் சிவா.

‘என்னங்கடா? ஒரு மனுசன் வந்து நிக்கறதுகூட தெரியாம அப்படி என்ன வேல செய்றீங்க?’

‘காஞ்சிபுரம் கிளம்புறம்… சீக்கிரம் ரெடியாகு. நிறய வேல இருக்கு.’

‘என்ன இப்பவா? அப்பிடி என்ன அவசரம்?’

‘அசைன்ட்மென்ட் வேர்க்’

‘ஏண்டா? ஒரு ஜீனியஸ் இங்க இருக்கான்… அவன விட்டுட்டு நீங்களா அசைன்ட்மெண்ட் பத்தி முடிவயும் பண்ணிட்டு வெளியூர் போறதுக்குவேற ரெடியாகியிருக்கீங்க? என்னங்கடா நினச்சிட்டு இருக்கீங்க?’

‘நாங்க ரெடியாகிட்டோம்.. நீ வாறதுண்ணு வா. இல்லாட்டி இங்க இருந்து மத்த வேலயெல்லாம் பாரு’

‘டேய் டேய் விட்டுட்டு போயிடாதீங்க…. உங்கள நம்பித்தான் என் அசைன்ட்மென்டும் இருக்கு. போனாபோகுது நான் உங்கள மன்னிச்சிட்டேன். ஆமா என்னத்த பத்தி எழுதுறதுக்கு காஞ்சிபுரம் போறோம்?’

‘கூத்து’

‘என்ன? கூத்தா? அப்பிடின்னா என்னன்னே இங்க பாதிப்பேருக்கு தெரியாது… அவன் அவன் மெக்ஸிகன் யராபி, சைனீஸ் ஓபரான்னு ஹைலெவலா செஞ்சிட்டிருக்கும்போது நாங்க செஞ்சது கூத்துனு கொண்டுபோய்காட்டினா என்ன நினப்பாங்க? அவ்ளோயேன்… அந்த கிஷோர்கூட பாலிவுட் பத்தி அசைன்ட்மெண்ட் செய்யுறான்…. நாமளும் சும்மா கெத்தாபோயி நிக்கவேணாமா? பேசாம மறுபடியும் முதல்ல இருந்து யோசிச்சு ஒரு நல்ல புரோஜக்ட் செய்வோம்… ஏன் ஹரிணி நீகூட எப்பிடி சம்மதிச்ச?’

‘இந்த யோசனைய சொன்னதே நான்தான்…. மத்தவங்களுக்கு தெரியாத ஒரு விசயத்த சொல்லி அத அவங்களுக்கு புரியவைக்குறதுதான் கெத்து. நம்ம நாட்டுலயே பல அற்புதமான விசயங்கள் இருக்கப்போ நாம ஏன் வெளிநாட்டுக்காரனுகளப் பத்தி எழுதணும்? நம்ம அசைன்ட்மெண்ட் கூத்துதான். முழு மனசோடு சம்மதிச்சு வேல செய் சிவா, நாம நிச்சயம் தோக்கமாட்டோம்’

சுவாரசியமாக ஏதாவது புராஜக்ட் செய்யலாம் என்று வந்த சிவாவிற்கு கூத்து என்றதும் அலுப்படிக்க ஆரம்பித்தது. இருந்தாலும் ஹரிணி சொல்லிவிட்டாள், இனி அவன் மறுக்கப் போவதில்லை… ஏனென்றால்….. அதேதான். அரைமனதோடு அவர்களுடன் புறப்பட்டு காஞ்சிபுரம் சென்றான். செல்லும் வழியெங்கும் தங்களின் அசைன்ட்மெண்ட் எந்த வடிவத்தில் வரவேண்டுமென விவாதித்துக்கொண்டே சென்றார்கள். அவர்கள் பேசப்பேச சிவாவிற்குதான் கண்களில் உறக்கம் சுழன்றடித்துக் கொண்டுவந்தது. தான் அத்தனைதூரம் சொல்லியும் கேட்காமல் இவ்வளவு மெனக்கிடுகிறார்கள். கல்லூரியில் எல்லோருக்கும் முன்பாக அவமானப்படவேண்டியிருக்கப்போகுதே என சிந்தித்துக் கொண்டேயிருந்தான்.
காஞ்சிபுரத்தையடைந்ததும் மாடசாமி என்பவர் அவர்களை வரவேற்று அவர்களுக்கு வேண்டிய தேவைகளை செய்துகொடுத்தார். பின் அவர்களிடம் வந்த விடயத்தை தெளிவாகக்கேட்டார்.

‘ஐயா, என் பேரு ஹரிணி, இது சந்தோஷ், அப்புறம் சிவா. நாங்க சென்னையில விஷுவல் கம்யுனிகேஷன் படிக்குறோம். எங்க ஃபைனல் புராஜக்ட், ஓபன் டாபிக் டாகுமென்டரி ஒண்ணு செஞ்சணும். அதனால நாங்க கூத்துக்கலையைப் பத்தியும் அத சார்ந்திருக்குற மக்களோட வாழ்க்கைமுற பத்தியும் படமெடுக்க வந்திருக்கோம். இங்க இருக்குற நவீன கூத்துக்கலை அபிவிருத்தி சங்கத்தலைவர் பிரகாசம் எங்க அப்பாவோட நண்பர்தான். அவருமூலமாத்தான் உங்கள தொடர்புகொண்டோம். நீங்கதான் நாங்க படம் எடுக்குறதுக்க முழு ஒத்துழைப்பும் தரணும்’

‘இந்தக் காலப் பிள்ளைகளுக்கும் கூத்துமேல பிடிப்பு இருக்குறத நினச்சா ரொம்ப சந்தோசமாயிருக்கு… நிச்சயமா என்னால முடிஞ்ச உதவிய உங்களுக்கு செய்யிறேன்மா’
அவர்களை அழைத்துக்கொண்டு பல குழுக்களிடம் சென்றார் மாடசாமி. செல்லும் வழிகளில் தனக்குத் தெரிந்த சில விசயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டும் வந்தார்.

‘சிலம்பு, கும்மி, கரகாட்டம், பொய்க்கால்குதிரை, வில்லுப்பாட்டுனு தமிழ்பாரம்பரியகலைகள் நம்ம மக்களோடு சிறப்பான வாழ்க்கையை மத்தவங்களுக்கு அழகா எடுத்துசொல்லுது. அவ்வளவு ஏன் சங்ககாலத்துலயே பகல்ல கடுமையா உழைச்சு களைச்சுப்போயி ராத்திரில பரத்தையரோட ஆட்டம் பாக்கப்போறது வழக்கம். மத்த ஊர்க்காரனுங்க மாதிரி கலையை ஒரு பொழுதுபோக்கா பார்க்காம வாழ்வியல் அம்சமா நம்ம ஆளுங்க வளத்திருக்காங்க….’


அவர் கூறும் விடயங்களை காகிதத்தில் பதிவுசெய்துகொண்டனர். அதுபோக பல குழுக்களிடம் நேரில் சென்று பேட்டி எடுத்து அவர்கள் கூறும் விடயங்களை படம்பிடித்தனர். கூத்து தமிழர்களின் அரியபெரிய பாரம்பரியக்கலை என இன்றும் மார்தட்டி சொல்லுபவர்கள் இருக்கிறார்களென்றாலும் கூத்துக்கலைஞர்களின் வாழ்க்கையோ அவலம் நிறைந்ததாகவும் மற்றவர்களால் கேலிக்குள்ளாகும் நிலையிலும் இருப்பது இந்த பயணத்தில் அவர்கள் அறிந்துகொண்ட ஒரு விடயம். ஒவ்வொரு கூத்துக்கலைஞர்களிடமும் பிரத்யேகமாக கூத்தைப்பற்றி கேட்டனர். அவ்வாறு அவர்கள் வேலை செய்யும்போது யாரோ படம் எடுக்க வந்திருக்கிறார்கள் என்று அங்கும் வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் கூடியது. அங்கிருந்த அனைவரின் முகங்களும் சந்தோஷின் கேமராவில் பதியப்பட்டது. எல்லாவற்றிலும் முக்கியமாக கந்தையா எனும் முதியவர் கூறிய விடயங்கள் அவர்களை மிகவும் கவர்ந்தது.

‘ஆயிரம் ஆயிரம் வருசமா நம்மகூட பொழங்கி வாறது இந்த கூத்து. சிவனோட ஆட்டமுனு சொல்லுவோம். இப்ப மாதிரி முந்தியெல்லாம் கொட்டில் கிடையாது. தெருவிலதான் ஆடணும். அதுகூட ஏனோதானோன்னு இருக்காது. தங்களுக்குன்னு ஒரு பாணிய கடைப்பிடிச்சி ஒரு கட்டுக்கோப்பாக ஒருக்கும். இப்ப மாதிரி அப்பல்லாம் தப்பான ஆட்டம் ஆடுறதில்லை. ராமன் கதை, அர்ச்சுனன் கதைனு கடவுள் பாட்டுதான். இப்ப இந்த இளசுகெலாம் சினிமானு பறக்குறமாதிரித்தான் சரியா நூறு வருசத்துக்கு முன்னால அப்ப இருந்தவங்களெலாம் கூத்துக்கு அடிமையானவங்க. இப்பகூட காஞ்சிவரம், விழுப்புரம், தீவண்ணாமலை, சேலம், செங்கல்பட்டனு இந்த கலைக்கு உயிர்குடுக்குறவங்க இருக்காங்க. ஆனா அவங்களுக்கு உயிர்குடுக்கத்தான் ஆருமேயில்ல. எங்க ஊருல மட்டும் கூத்தாடுற முப்பது கூட்டம் இருக்கு. திருவிழான்னாத்தான் அவங்க வயிறு நனையும். ஒரு கூட்டத்துலகூட பதினஞ்சுக்குமேல ஆக்க இருப்பாங்க. எங்க பக்கம் ஆடுறது தெக்கத்தி பாணி. அதுக்கு போடுறது தெக்கத்தி மெட்டு. வடக்கத்து பாணி பாக்கணும்னா நீங்க வந்தவாசிக்குத்தான் போகணும். எங்க கூட்டத்த சமான்னு சொல்லுவாங்க. சமாக்கு தலைவர வாத்தியார்னு சொல்லுவாங்க.. முக்கியமா இது ஒரு வழிப்பாட்டுக்கலைங்க, கோயில்ல ஆடுறது சிறப்பான விசயமுங்க. ஆடக்குல முகத்துக்கு நிறய பூச்சு பூசுவோம். இது முழுக்க அலங்காரத்த அண்டின தொழிலு. ஏன்னா முக உணர்ச்சியை அதிகமாக் காட்டுறதுக்குத்தான் இந்த வண்ணங்க. அந்த வண்ணமெல்லாம் முத்துவெள்ள, குங்குமம், செந்தூரம்னு விதவிதமான பொருட்கள எண்ணயில கொழச்சு பூசுவோம். காளிக்கு சிவப்பு, பீமனுக்கு கருப்பு, அர்ச்சுனனுக்கு நீலமுனு பூசுவோம். பெரியமீச, நாமம் கண்டிப்பா போடணும். அப்புறம் ஆடக்குல கையில புஜக்கட்டை வச்சிக்குறது, கிரீடம், குச்சிமுடி போடுறது, நெஞ்சுல பட்டை கட்டுறது, கன்னக்கதுப்பு இப்பிடி நெறய நகை போடுவோம். பாட்டுதான் ரொம்ப முக்கியம். டோலக், ஆர்மோனியம் வச்சு பாட்டுப்பாடி ஆடுறதுதான் வேல. கூத்தாடுறவங்களுக்கு சுயமரியாத ரொம்ப முக்கியம். கலைக்கு ஒரு அவமானம்னா பொறுத்துக்கமாட்டாங்க. கொதிச்சுடுவாங்க. அதனாலயே கூத்தாடுறவங்கள திமிர்காரங்கனு எல்லாரும் பேசுவாங்க. அப்புறம் இப்பகூட வெளிநாட்டுல இருந்து வாறவங்க கூத்துன்னா என்னனு ஒங்கள மாதிரி கேள்வியெலாம் கேட்டு போயி அவுக ஊருல சொல்லிக்கிறாங்க. ஆனா கூத்தாடுற இந்த சனங்களுக்குதான் ஒரு நல்ல வழி பொறக்கமாட்டேங்குது.’


தலைப்பாகையுடனும் பெரியமீசையுடனும் கம்பீரமாக உட்கார்ந்து அந்த பெரியவர் கூறியதை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் சிவா. அவரைப் பார்த்தாலே தெரிகிறது மனதுக்குள் தன்னை ஒரு ராஜாவாக பாவிப்பவர் என்று. அடேயப்பா கூத்து என்றால் இவ்வளவு இருக்கிறதா? ஒரு பாட்டு போடுவாங்க அதுக்கு நாலு பேரு ஆடுவாங்கனுதானே இவ்வளவு நாளும் நினைத்தோம் என்று சிந்திக்கத் தொடங்கினான். மேலும் இவ்வாறான பல பேட்டிகளை எடுத்ததோடு நிஜ கூத்துக்களையும் வீடியோ செய்தனர். அங்கிருந்த கூத்துக்கலைஞர்கள் அவர்களை அன்பாக பார்த்துக்கொண்டனர். தங்கள் கூடாரத்திலேயே இடம் கொடுத்து தங்கள் உணவையே பகிர்ந்தளித்தது சிவாவிற்கு புது அனுபவமாக இருந்தது. கிராமத்து சுகந்தத்தில் ஒன்றிப்போனான் அவன். சந்தோஷும் வேலை பாதி முடிந்தது இனி எடிட்டிங்தான் என்று கவலையில்லாமல் இருந்தான். அங்கிருந்த கலைஞர்களின் குழந்தைகளோடு மீதிப் பொழுதை போக்கினாள் ஹரிணி. அவள் குழந்தைகளுக்கு கதை சொல்லும் விதத்தை தூரத்தில் நின்று ரசித்துக் கொண்டிருந்தான் சிவா. இனிமையும் எளிமையுமாக எப்படி இருக்கிறாள் என அவளை நினைத்து சிலாகித்தான். தன் எண்ண வண்ணங்களை அவள் இதயத்தில் பூசும் தருணம் வாராதா என்று அவன் இதயமும் இமைகளும் ஒன்றாய் துடித்தது. யாரோ அழைத்தது போல அவளும் திரும்பி அவனைப் பார்க்க அவன் திடீரென்று சுதாரித்துக் கொண்டான். அவன் மனம் அறிந்தவளாக அருகே வந்து….

‘சார் என்ன யோசிக்குறீங்க?’

‘அது வந்து…. இல்லை இது… ஆ இப்படி கூத்து படம் எடுக்கணைம்னு எப்பிடி ஒனக்கு தோணிச்சு’

‘ஓ அதுவா… வேறொண்ணுமில்ல எங்க தாத்தாவும் ஒரு கூத்துக்கலைஞர்தான். அது என் ரத்ததுலயே வந்தது. எங்கப்பாவுக்குத்தான் கூத்தோட இருந்தா வாழ்க்கைல உருப்பட முடியாதுன்னு பட்டணத்துக்கு வந்துட்டாரு, தனக்கப்புறம் இந்த கலைய கொண்டு செல்ல வாரிசில்லயேன்னு தாத்தாக்கு ரொம்ப கவல. இதோ இப்ப என்னால முடிஞ்ச ஒரு வேல.’

‘அதுசரி, அசைன்மெண்டுல பாஸாகணுமே?’

‘ம்ம்ம்… ஒரு நல்ல விசயத்த சொல்லுற திருப்தி கிடைக்குதே சிவா. அதுபோக நாம பாஸாக மாட்டோம்னு எப்டி சொல்ற? பாரு நாமதான் ஹையஸ்ட் ராங்க் வாங்கப்போறோம்.’

‘வாங்கினா சந்தோசம்தான். ஆனா என்னால திருப்தியாக முடியாது. இங்க பாரு ஹரிணி, இவங்கலாம் எவ்ளோ கஷ்டப்படுறாங்க? சோமாலியா மாதிரி நாட்டுல வறட்சியில வேல இல்லாம வந்த பட்டினியா இது? இல்லயே.. தங்களுக்குனு ஒரு வேல இருந்தும் அதுக்கு ஆதரவில்லாததால வந்த பட்டினி. அந்த பிஞ்சு குழந்தைகளப் பாரு. எதிர்காலத்த வெறுங்கையோட எதிர்பார்க்கறாங்க.. இவங்க முன்னேற என்னதான் வழி? அட இவ்வளவு கஷ்டத்துலயும் இவங்க இந்த தொழில விடலயே, இன்னும் தெய்வமாத்தனே பாக்குறாங்க.லிப்பதான் ஹரிணி எனக்கு நிஜமாவே தமிழன்னு கர்வம் வருது. நிச்சயமா இவங்களுக்கு ஏதாவது செய்யணும். இந்த ஒரு டாகுமெண்டரி பத்தாது. உலகளவுல இவங்களுக்கு அங்கீகாரம் கெடக்கணும். அது நம்மளமாதிரி இன்னொரு கலைஞர்களாலதான் முடியும். எனக்கு நம்பிக்க இருக்கு. இங்க வரும்போது நான்கூட பிடிப்பில்லாமத்தன் வந்தேன் இப்ப மாறலயா.. இந்த உலகமும் ஒரு நாள் நம்ம பாரம்பரியத்துக்கு தலவணங்கும். அதுக்கு நாமதான் ஏதாவது பண்ணனும். இந்த கூத்துல இருந்துதானே நாடகம் வந்திச்சு, நாடகத்துல இருந்துதானே சினிமா வந்திச்சு… சினிமாவ எல்லாரும் தலயில தூக்கிவச்சு ஆடலயா.. அட்லீஸ்ட் அந்த சினிமா மோகத்தால அழியுற கட்டுத்துக்கு வந்துட்ட இந்த கூத்துக்கலைய ஒரு நிமிஷம் காப்பாத்த யோசிச்சா என்ன?’

ஆவேசமாக பேசிக்கொண்டே போன சிவாவை ஆச்சரியமாகப்பார்த்தாள் ஹரிணி. இவன் எப்போதும் இப்படித்தான். மகிழ்ச்சியையோ சோகத்தையோ மிகையாகத்தான் காட்டுவான். ஆனாலும் இப்போது அவன் கோபப்படுவது சரியென்று படவே அவனது கையை மெதுவாக பற்றி அவன் தோளில் சாய்ந்தாள். ஆனால் அவன் கண்களோ எதிரில் இருந்த வண்ணங்களையும் கிரீடத்தையும் பட்டாடைகளையும் கண்டு கலங்கியது. ‘கண்ணுக்கெதிரே நம்ம சொத்து அழிஞ்சிகிட்டிருக்கிறத பார்த்துட்டு வெளிநாட்டுக்கு வக்காலத்து வாங்குறமே?’

No comments:

Post a Comment