Wednesday, June 13, 2012

2007 - அது ஒரு போர்க்காலம்

'வெரி ஸொரி! இது ரொம்ப ரிஸ்க்... பர்மிஷன் கொடுக்க முடியாது'

'ப்ளீஸ் ஸார்.. கொஞ்சம் முயற்சி பண்ணுங்கோ! நிறைய நாளா நான் இதுக்காக கஷ்டப்படுறன்.'

'மிஸ்டர் குணசேகர சொன்னதுனாலதான் நான் இவ்வளவு தூரம் செஞ்சனான்! இதுவே பெரிய விசயம், இதுக்குமேல என்னால எதுவும் செய்யமுடியாது...நீங்க போறதெண்டா போங்கோ… அதுக்குவேண்டுமெண்டா எழுதிக்கொடுக்கிறேன்.'

இதற்குமேல் அந்த மனிதனிடம் கெஞ்சி பிரயோசனமில்லை என்று முடிவுசெய்த சுகுமார் இந்த முயற்சியை கைவிட்டுவிட்டு பிரான்ஸூக்கே திரும்பிவிடலாம் என்ற யோசனையுடன்தான் வெளியே வந்தான். ஆனால் அதோ.. வெயில் காயக்காய வெட்டவெளியில் அமர்ந்திருந்து தன் மகன் எப்படியும் தன் விருப்பத்தை நிறைவேற்றுவான் என விழிகளில் ஏக்கத்தோடு காத்திருக்கும் தந்தை, அவருக்கு என்ன பதில் சொல்வது? சரி இவ்வளவுதூரம் வந்துவிட்டோம் இன்னும் கொஞ்சம் முயற்சிக்கலாமே என உள்ளம் கொடுத்த ஊக்கத்தால் மலர்ந்தமுகத்துடன் தன் தந்தையை எதிர்கொண்டான்...

'என்னய்யா... போகலாம்தானே?'

ஆர்வத்துடன் பதிலை எதிர்பார்த்த தந்தையின் முகத்தை ஏறிடாமல் 'அது... ஓமப்பா... ஒண்டும் பிரச்சனையில்ல. மிஸ்டர் ரஞ்சனுக்கு கொஞ்சம் வேலயிருக்காம்.. எங்கள போக சொல்லிட்டார். நாளைக்கு வெளிக்கிடுவம்.' என்று கூறியதுதான் தாமதம், மகிழ்ச்சி பெருக்கால் மகனை கட்டியணைத்து முத்தமிட்டார் அந்த நரைபூத்த கிழவன்.

இன்று இரவும் அதே அம்பிகா லொட்ஜில் தங்குவதென்று தீர்மானித்த காலி செய்வதற்காக கட்டிவைத்த மூட்டைகளில் ஒன்றை மட்டும் அவிழ்தனர். சுகுமாரின் மனதில் மட்டும் ஆயிரம் கேள்விகள் எழுந்து பதிலின் வழிதெரியாமல் ஒன்றோடொன்று முட்டிமோதிக் கொண்டிருந்தன. எப்படி அங்கே செல்வது? அதுவும் இந்த சூழ்நிலையில்..... அப்பாவை சமாதானப்படும் கட்டத்தை எப்போதோ தாண்டிவிட்டதால் இனி அதை பற்றி நினைத்து பிரயோசனமில்லை. கொழும்பிலேயே இருந்து அடுத்தது என்னவென்பதை திட்டமிட்டல்லவா வந்திருக்கவேண்டும்... இங்கே வந்துவிட்டு அங்குமில்லாமல் இங்குமில்லாமல் நடுவில் நின்று தத்தளிக்கவேண்டியிருக்கிறதே என மனதை போட்டு உருட்டிக்கொண்டிருந்தான். இந்த கவலைகள் எதுவுமில்லாமல் சிறுகுழந்தையைப் போல உறங்கிகொண்டிருக்கும் அவன் தந்தையின் மனதில்தான் இந்நேரம் எவ்வளவு மகிழ்ச்சி படர்ந்திருக்கும். எத்தனை நாள் கனவிது... நாளை நினவாகும் என்ற நம்பிக்கையில்தானே இந்த தூக்கம். அது நடக்காதென்றால் எத்தனை பெரிய ஏமாற்றம்... நொருங்கிபோய்விடுவாரே என்ற கவலையில் உறக்கம் வராமல் உலவிக்கொண்டிருக்கும்போது கதவை திறந்துகொண்டு உள்ளேவந்தான் சுந்தரம்பிள்ளை.

யாழ்நகரில் ஒரு வேன் வைத்துகொண்டு வரும்வேலைகளை பார்த்து பொழுதைக்கழிப்பவன் சுந்தரம்பிள்ளை. நாட்டில் யுத்தசூழல் நிலவுவதால் பெரிய சம்பாத்தியங்கள் ஒன்றும் வருவதில்லையென்ற கவலை அவனுக்கு. யுத்தம் முடிந்தது, யாழ்ப்பாணத்துக்கு யாரும் வரலாம் யாரும் போகலாம் என்ற நிலைமட்டும் வந்தால் தனக்கு நல்ல வாழ்க்கையேற்படும் என கனவு கண்டுகொண்டிருப்பவன். குறிஞ்சிபூ மாதிரி சுற்றுலாபயணிகள் வந்திருப்பதாக தெரிந்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு ஓடிவந்தான். இந்த ஒரு பயணத்தை ஒழுங்காக முடித்தாலே கிட்டத்தட்ட இரும்புக்கடைக்கு செல்வதற்கு தயாராயிருக்கும் அவனது ஓட்டை வேனை குறைந்தபட்சம் ஓடுமளவிற்காவது திருத்திவிடுவான். ஆனால் ஊரில் வேறு வேனே இல்லாத மாதிரி என்னுடைய வண்டியை ஏன் கேட்கிறார்கள் என்ற குழப்பதோடு நுழைந்தவனை அவசர அவசரமாக தனியாக இழுத்துக் கொண்டுபோனான் சுகுமார்.

'ஸார்.. அவசரமா ஊருக்கு போக வண்டி வேணுமெண்டு கேட்டனியளாம். எண்ட வேன் இருக்கு ஸார். சும்மா பறக்கும் ஸார்...எப்ப போகோணும்? நாளைக்கா? எங்க கொழும்புக்கா?'

அடுக்காக பேசிமுடித்தான் சுந்தரம்பிள்ளை. நிதானமாக அவனை பார்த்து 'கொழும்புக்கில்ல, வடமராச்சிக்கு போகோணும்.' என்று கூறிவிட்டு அவன் என்ன யோசிக்கிறான் என நோட்டமாக பார்த்தான் சுகுமார்.

பீதியில் உடல்வெளிரிப்போனான் சுந்தரம்பிள்ளை... 'என்ன சொல்லுறியள் ஸார்? நாட்டு நிலம என்னவெண்டு தெரிஞ்சுதான் கதக்கிறியளா? டவுணுக்குள்ளேயே மனுசனால நிம்மதியா வாழ முடியேல. ஆர்மி செக்கப்பெல்லாம் வீதிக்கு ஒண்டு போட்டுருக்கானுவள். எல்லாத்தயும் தாண்டி போறதெண்டுறது நடக்காத காரியம். நான் என்ன எவனும் வரமாட்டான். பேசாம கொழும்புக்கே போயிடுங்கோ. ஒருவேள கொழும்புக்கு நீங்கபோறதுண்டா சொல்லுங்க எண்ட வேன் இருக்கு.'

'எனக்கு எல்லாம் நல்லா விளங்குது! யாரும் வரமாட்டேன்றாங்கறதாலதான் உன்ன கூப்புட்றேன். உனக்கு எவ்வளவு காசு வேணுமோ கேளு.'

'காசா? கடவுளே! போறவழியில எவ்வளவு காடு இருக்கெண்டு தெரியுமா? உங்கள பார்த்தா பர்மிஷன் இல்லாத ஆள்மாதிரிவேற இருக்கு. யார்மேலயாவது சந்தேகம் வந்தா பேச்சுக்கேயிடமில்லை! உசிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த வேலய ஏன் செய்யணும். உள்ளூர்காரன் எண்ட பொழப்பயும் சேத்து கெடுக்க பாக்குறியள்.'

'இல்ல... கண்டிப்பா போகத்தான் வேணும். ஒரு நாளேள போயிட்டு வந்துடலாம். உனக்கு எந்த பிரச்சினையும் இல்லாம நான் பாத்துக்கிறேன்.'

'நீங்க என்ன சொன்னாலும் சரி நான்.. சம்மதிக்கமாட்டன்.'

'பத்தாயிரம் ரூபா தாரன்'

'சரிவராது ஸார்.. என்ன விடுங்கோ'

'அம்பதாயிரம் தாரன்... கடசி பேச்சு. நாளக்கு காலம வெளிக்கிடோணும்'என்று கூறிவிட்டு உறங்கச் சென்றான் சுகுமார்.

தனக்கு இருக்கும் காசுபிரச்சினையை மனதில் வைத்து அரைமனதாக தயாரானான் சுந்தரம்பிள்ளை. காலையெழுந்தவுடன் உற்சாகத்தோடு புறப்பட்ட தந்தையை மகிழ்ச்சியோடு பார்த்தான் சுகுமார். ஒரு மண்பாண்டமும் கிலோ அரிசியும் எடுத்துக்கொண்டனர். ஆறுமணிக்கெல்லாம் சுந்தரம்பிள்ளையும் வந்து சேர்ந்தான். தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வண்டியில் ஏறினார்கள். காலையிளங்காற்றின் சுகந்தம் இதயத்தை தாலாட்ட பயணம் சீராக போய்க்கொண்டிருந்தது. என்ன நடக்க போகுதோ என்ற பீதியில் சுந்தரம் வண்டியோட்ட தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றவேண்டுமேஎன்ற படபடப்பில் சுகுமார் மூழ்க கிழவரோ செல்லும் வழியெங்கும் தான் வாழ்ந்த இடங்களின் நினைவுச்சுவட்டை எண்ணியெண்ணி பரவசமடைந்தார்.

அதோ அந்த புல்வெளியில் நான் விளையாடியிருக்கிறேன் இதோ இந்த குளத்தில் நான் குளித்திருக்கிறேன் என்று அவரது பிள்ளைப்பிராயத்தை மீண்டும் மனதில் இருத்தி ஒரு குழந்தையாய் மாறினார். அப்பப்பா.. அஞ்சு வயசில ஓடியாடிய இடங்களையெல்லாம் அறுபத்தஞ்சு வயசுல வந்து பார்க்கும்போது அந்த பூரிப்பு இருக்கே அதையெப்படி வார்த்தைகளால் சொல்லமுடியும்? நான் பிறந்துவளர்ந்த இடங்களையெல்லாம் மறுபடியும் பார்க்கத்தான் இவ்வளவுகாலமா அந்த ஆண்டவன் என்னை கூப்புடாம இருந்தான்போல.... இதயெல்லாம் திரும்பி பார்க்க பவானிக்கு குடுத்துவக்கலியே... எத்தனை கஷ்டத்துலயும் எங்கூடவேயிருந்தாளே. எனக்கு பத்தொம்பது வயசிருக்கும்போது அவ கையபிடிச்சேன். அவ சாகுறவரைக்கும் அதே கைக்குள்ளதானே தாயின் செட்டைக்குள்ளே சுகம் காணும் ஒரு குருவிக்குஞ்சைப்போல அடங்கியிருந்தாள். அவ இல்லாம நான் வாழுவனெண்டு நினைச்சும் பார்க்கலியே.. எண்பதுலயும் தொண்ணூறுலயும் சண்ட முத்தி இந்த மண்ணவிட்டே போகணும்னு ஒரு சூழ்நில வந்தப்போ இதவிட்டே வரமாட்டேன் செத்தாலம் பரவாலயெண்டு மண்ணில் புரண்டு கதறினாளே பிள்ளட எதிர்கலத்துக்காக நான் என்ன கஷ்டப்பட்டு அவள கூட்டிகொண்டு பிரான்சுக்கு போனனான். பிறந்த மண்ணுலதான் தன்ற உசுர் போகணும்னு சொல்லிக்கொண்டிருந்தாளே! கடைசில அது நிறைவேறாமலே போயிடுச்சே... தாய்க்கு தாயாய் மனைவிக்கு மனைவியாய் குழந்தைக்கு குழந்தையாய் என்னுடன் இருந்தாளே.. இவன் சுகுமார் பிறந்து எங்களுடன் தவழ்ந்து விளையாடும்போதெல்லாம் அவனைவிட இவள் குழந்தையாயிருந்தாளே அவன் வளரந்து பெரியவனாகிவிட்டான் ஆனால் அவள் சாகும்போதுகூட ஒரு குழந்தைதனத்தோடு இருந்தாள். அவள் மரணப்படுக்கையில் என்னிடம் கேட்ட ஒரு வார்த்தைக்காகத்தானே இவ்வளவு தாரம் பாடுபட்றேன்.

எண்ணத்தில் கோர்த்துகொண்டிருந்த வண்ணநினைவுகளையெல்லாம் சிதைக்கும்விதமாக எங்கோ தூரத்தில் டமாலென்று ஒரு பெரியகுண்டு வெடித்தது. சற்றுநேரத்தில் உடல்பதறி இதயத்துடிப்பு நின்றுபோனதுபோலிருந்தது. ஐயோ கடவுளே இதுக்குத்தான் நான் அப்பவே வரமாட்டனெண்டனான் என்று புலம்பியபடி வண்டியை வேகமாக ஓட்டினான் சுந்தரம். பயம்தொற்றிக்கொண்ட சுகுமார் தந்தையையும் சேர்த்து குனிந்துகொண்டான். அதே அதிர்வுகளோடு இன்னும் இரண்டு குண்டுவெடித்த சத்தம் கேட்டது. ஆனால் அது மிகத் தொலைவில்தான் வெடித்திருக்கவேண்டும். இந்த இடத்தில் பயணம்செய்ய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பிடித்தார்கள் என்றால் வண்டிசாரதிஅனுமதிபத்திரத்தை ரத்து செய்வதோடு தன்னை எத்தனைகாலம் சிறையில்போடுவார்களோவென்ற அச்சம் சுந்தரத்திடம். சிறைதானா அல்லது நேராக சுவர்க்கம்தானா என்பது தனது முன்னோர் செய்த புண்ணியத்தில்தான் இருக்கிறது. அம்மாதாயே யெனக்கென்ன வந்தாலும் பரவால... என் புள்ளக்கு எந்த தீங்கும் வராம காப்பாத்தி விட்டுறுமா என ஆண்டவனை வேண்டிக்கொண்டிருந்த தந்தையை பாசத்தோடு பார்த்தான். எத்தனை கிலோமீட்டர் தாண்டி வந்தாயிற்று என்று தெரியவில்லை. குண்டு வெடிக்கும் சத்தமும் கேட்கவில்லை. பதட்டம் சற்று குறைந்த நிலையில் இயல்பிற்கு வந்தனர் மூவரும். இன்டைக்கு யார்ட முகத்துல முழிச்சேனோ தெரியல என்று சலித்துக் கொண்டான் சுந்தரம்.

நீண்டநெடிய பாதை.பாதையின் இருபக்கங்களும் செழிப்பாக வளர்ந்திருக்க வேண்டிய பனைமரங்களின் கருகிய எச்சங்கள். அவைதான் யுத்தம் கொடுத்த பரிசு. அழகிய கிராமமாக இருக்கவேண்டிய இடம் இன்று ஆள் அரவமில்லாத சுடுகாடாக திகழ்ந்தது. பதட்டத்தில் ஒருவன் வண்டியோட்ட,நினைத்ததை முடிக்கும் முனைப்பில் இருவர் செல்லும் அந்த பயணம் ரத்தத்தை மேலும்கீழும் அனுப்பும் வேலையை மட்டும் செய்யும் இதயத்தில் எங்காவது உணர்ச்சியிருக்கிறதாவென தேடி அதை தட்டியெழுப்புவதாகவிருந்தது. வண்டியின் டயர் சத்தத்தை தவிர ஒரு அரவமும் இல்லாமல் தொடர்ந்த அந்த பயணம் இப்போது வடமராச்சிக்குள் நுழைந்து வல்லிபுரம்வரை வந்துவிட்டது. சற்றும் எதிர்பார்க்காதது என்று செல்லமுடியாது ஆனாலும் திடீர்திருப்பமாக எதிரேகண்ட அந்த ஆர்மிக்காரர்களின் குவியல் மூவருக்கும் தொண்டைக்குழியையடைத்தது. அது ஒரு ஆர்மி காம்ப். சரிதான் அடுத்தவருடம் இந்நேரம் நமக்கு திவசம் நடக்கபோகுது என்று முடிவேசெய்தான் சுந்தரம். வேனைக்கண்டவுடன் ஒரு ஆர்மி கையைக்காட்டி வண்டியை நிறுத்தினான். வண்டியில் இருந்த மூவரும் தமிழர்கள் என்பதை கண்களாலேயே அளந்து ஏதோ தீவிரவாதியையே பிடித்தவிட்ட நினைப்பில் ஒரு ஏளனச்சிரிப்பு சிரித்தான். மூவரும் வண்டியிலிருந்து இறங்கினர். அவர்களை ஆர்மிகளெலாம் சுற்றிவளைத்தனர். இப்பிடி வந்து மாட்டிக்கொண்டோமேயென சுந்தரம் பதற வந்த காரியம் நடக்காதோவெனப் பயந்தனர் மற்ற இருவரும். மேலதிகாரிபோல ஒருவன் வந்து ரெண்டு நிமிடம் மேலும்கீழும் பார்த்தான். யார் நீங்கள் என்று சிங்களத்தில் கேட்டான். அவர்கள் மூவரும் ஒருவரையொருவர் பேந்த பேந்த முழித்தனர். அவன் மீண்டும் கேட்டான். மூவருக்கும் அந்த மொழி தெரியாததால் அவன் என்ன கேட்கிறான் என்று புரிந்தகொள்ளமுடியவில்லை. மேலும்மேலும் கேட்டு சலித்த அந்த அதிகாரி அவர்களுக்கு சிங்களம் தெரியவில்லையென்பதையுணர்ந்து கோபத்துடன் சிங்களம் தெரியாம இந்த நாட்டுக்கு ஏண்டா வந்தனியள் என்று அவனுக்கு தெரிந்த கொச்சைத்தமிழில் அதட்டவதுபோல முன்னுக்குவரவும் சுந்தரத்திற்கு காய்ச்சலே வந்துவிட்டது. ஐயா நானு அப்பவே சொன்னனான் இவையள்தான் கேட்கயில்ல என்று அழுவது போல சுந்தரம் கூறியதும் அங்கிருந்த வாய்களெல்லாம் நக்கல் சிரிப்பு குடிகொண்டது.

'நாங்க இங்க சுட்டிபுரம் கோயிலுக்கு வந்தனாங்க..' என்று சுகுமார் மெதுவாக கூற சுந்தரம் கேள்விக்குறியோடும் அந்த ஆர்மி ஆச்சரியக்குறியோடும் அவனை நோக்கினர்.

'என்ன! கோயிலுக்கா? இங்க சண்ட நடக்குது தெரியாதா?' என்று மிரட்டினான் அந்த ஆர்மிக்காரன்.

‘ஆமாம்! ஆனா நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு பிரான்ஸுல இருந்து வந்து பர்மிஷன் வாங்கினோம். கொழும்புல இருக்குற அரச அதிகாரி மிஸ்டர் குணசேகர பிரான்ஸ்ல எங்கூட வேலபாக்குற ஒரு லேடியோட பிரதர். அவர்ட உதவியால யாழ்நகர காவலாளி ரஞ்சனிடமும் பேசினோம். அவர் போலிஸ் உதவி கிடைக்காது வேண்டுமெண்டா நீங்க போங்கவெண்டு எழுதிக்கொடுத்தவர்’ எனக்கூறி ஒரு காகிதத்தை நீட்டினான்.

அதை வாங்கி படித்தவன் உடனே யாழ்நகர போலிஸுக்கு போன் செய்தான். சிறிது நேரம் பேசிவிட்டு அவர்களிடம் வந்தான். ‘உங்க நேரம் நல்லாயிருக்கு. இதே வேறயாக்களெண்டால் நாங்க டீல் பண்ற விதமே வேற. ரஞ்சன் நல்ல பொலிஸ். அவர் கெஞ்சிகேட்டதால உள்ள அனுப்புறன். ரெண்டு மணித்தியாலத்துல திரும்பி வந்து எங்களிற்ற சொல்லிட்டு வந்த வழியே ஓடிடுங்க…புரியுதா’ என அதட்டினான்.



விட்டது சனியன் என மூவரும் வண்டியில் அமர்ந்து நேராக சுட்டிபுரத்தில் சென்று நின்றனர். அது ஒரு சிறுகிராமம். கூப்பிட்டால்கூட கேட்காத தொலைவு இடைவெளியில் ஒவ்வொரு வீடும் இருந்தது. வேலிகளுக்கு அப்பால் ஒரு கோபுரம் தெரிய மூவரும் இறங்கினர். வண்டியிலிருந்து முதலில் இறங்கியது சுகுமாரின் தந்தைதான். அவருக்கு நேராக தெரிந்ததோ சுட்டிபுரம் கண்ணகியம்மன் கோவில். அம்மா என்று உணர்ச்சி பெருக்கெடுக்க கைகளை தலைக்கு மேலே தூக்கி அப்படியே சாஸ்டாங்கமாக விழுந்தார். அவரைதொடர்ந்த சுகுமார் அவரை கைத்தாங்கலாக தூக்கி, ‘கோயிலுக்குள்ள போகலாம் வாங்கோ’ எனக்கூற ‘இல்ல தம்பி, முதல்ல பொங்கோணும்.. சாமாங்கள இறக்கு’ என்றார். கோயிலுக்கு முன்னேயிருந்த பரந்த நிலத்தில் பொங்கல் காய்ச்சுவதற்காகவே அங்கங்கு மூன்று மூன்று கற்கள் இடப்பட்டு இருந்தன. அந்த வயதான காலத்திலும் உற்சாக மிகுதியால் விறகு எடுத்து அந்த கற்களுக்கிடையில் வைத்து தீமூட்டி பானையைவைத்து தண்ணீர் ஊற்றி அது கொதித்ததும் கல்லரித்த அரிசியை அதில்கொட்டி அது பொங்கும்வரை பக்கத்திலேயே இருந்துகொண்டிருந்த தந்தையை சற்று தள்ளிநின்று ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தான் சுகுமார். அதுவரை பொறுமையாக இருந்த சுந்தரம்பிள்ளை நேராக சுகுமாரிடம் வந்து கோபமாக முறைத்துப் பார்த்தான்.

‘என்ன ஸார்? இப்படி சாமி கும்பிடத்தானா என்ற உசுரப் பணயம்வச்சு கூட்டிவந்தனியள்.’

‘இது என்ற அப்பாட நிறையநாள் கனவு. அத நிறவேத்தி வக்காட்டி நான் என்ன பிள்ள.’

‘நான் கோபத்துல இருக்கன். பேசாதீங்கோ… வந்தவரக்கும் உசுரு தப்பினது மூத்தார் புண்ணியம். அப்படி இந்த கோயிலுக்கு கட்டாயம் வரத்தான் வேணுமோ?’

‘இந்த மண்ணவிட்டு உசுர தப்பிச்சு வெளில வாழுற எங்கட சனங்களெல்லாமுமே எண்டக்காவது ஒருநாள் தங்கட பிறந்த மண்ண பார்க்கமாட்டமாண்டு எப்படி ஏங்குறாங்கள் தெரியுமா? இந்த சந்தர்ப்பம் எங்கட வாழ்க்கைல இனி எப்ப கிடைக்கபோகுது? நான் அம்மாட வயித்துல இருக்ககுல இந்த கோயிலுக்கு வந்து நான் நல்லா பொறக்கவேண்டுமெண்டு அம்மாவும் அப்பாவும் நேர்த்தி வச்சவயள். கலவரத்தால இடம்பெயர்ந்ததால நான் பொறக்கும்போது அத செய்யமுடியேல. பிறகு வேத்து தேசத்துக்கு போய் நல்லாவற்றதுக்காக நாய்பாடுபட்டதுல கொஞ்சகாலம் போயிட்டு. பிள்ளக்காக வச்ச நேர்த்தி செஞ்சேயாகோணுமெண்டு அம்மா ஒத்தக்கால்ல நின்னவா. கடசிவரக்கும் அவாக்கு அந்த குற இருந்துகொண்டேதானிருந்தது. அவா போனபிறகு அப்பாவ என்னால சமாதானப்படுத்த முடியேல. நெடுங்காலமா நெஞ்சுக்குள்ள வச்சிருந்த ஆச நிறவேறாம உங்கம்மா மாதாரா நானும் போகணுமெண்டு நினக்கிறியா எண்டு கவலப்பட தொடங்கிட்டார். வேற வழியல்லாம அவர சந்தோசப்படுத்த இத்தனை கஷ்டங்களயும் தாண்டி வந்துட்டன்.’

‘உங்கட நோக்கம் புரியாம பேசிட்டன். மன்னிசிடுங்கோ. உங்களமாதிரி இந்த காலத்துல எந்த பிள்ளயள் இருக்குதுகள்? இருந்தாலும் உசுர வெறுத்து இப்படி சாகசம் பண்ணினது கொஞ்சம் அதிகமாத்தான்படுது.’ என சுந்தரம் சொல்லவும் இருவரும் குபீரென சிரித்தனர்.

‘தம்பி, பொங்கிடுச்சு… வா படைப்போம்.’ என தந்தை கூப்பிட்டதும் சுகுமார் அவரிடம் ஓடினான். சுந்தரம் இனம்புரியாத சந்தோசம் கிடைத்த திருப்தியில் வேனில் ஏறி இருக்கையில் சாய்ந்து வேன்ரேடியோவைப் போட்டான். காய்ச்சிய பொங்கலை கையில் எடுத்துக்கொண்டு தகப்பனும் மகனும் கோயிலைநோக்கி சென்றனர். அடிவாரத்திலிருந்து கோபுரத்தை பார்த்தார்கள். நமது பாரம்பரிந்த்தின் கடைசி அடையாளமாயிற்றே. மெலும் உற்சாகம் பொங்க ஒரு சிறுகுழந்தைபோல தந்தை கோயிலினுள்ளேயோட அவருக்கு பின்னால் ஓடியவன் தடுமாறி யார்மேலோ விழுந்துவிட்டான். சுதாரித்து எழுந்தபின்தான் தெரிந்தது அது ஒரு அழகான இளம்பெண். அவளை பார்த்த மாத்திரத்தில் அப்படியே ஸ்தம்பித்து நின்றவன் அவள் எழுந்து செல்லசெல்ல அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளும் திரும்பி திரும்பி பார்த்து புதுப்பிரச்சனைக்கு வித்திட்டாள். அவள் கண்ணிலிருந்து மறந்தபின் திரும்பவும் இங்க வரோணும் என்று சிரித்துவிட்டு தந்தையிடம் ஓடினான். எங்கிருந்தோ வானோலியில் மிதந்துவந்தது ஒரு கீதம் ‘இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை, இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை.’

No comments:

Post a Comment