Sunday, November 10, 2013

மஞ்சள் குங்குமம்...

அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாதாமாதம் இடம்பெறும் சுமங்கலி பூஜை மிகவும் பிரசித்தம். நூற்றுக்கணக்கான சுமங்கலிகள் வரிசையாக அமர்ந்து விளக்கு ஏற்றி குங்குமத்தால் அர்ச்சனை செய்வார்கள். அந்த விளக்குபூஜை செய்து அம்மனை வழிபட்டால் அவர்களது மஞ்சள் குங்குமம் நிறைந்து சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அதேபோல அங்கே வரும் பெண்களின் வாழ்க்கையிலும் மங்களம் நிறைந்து முகம் மகிழ்ச்சியாகவே காணப்பட்டனர். மாதாமாதம் வரும் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் இந்த விளக்குபூஜை இந்த மாதம் கனகாவிற்கு மிக முக்கியமானதொன்று. மிகவும் பிரசித்தி பெற்ற அந்த கோயிலில் குருக்களாக பணியாற்றும் சுந்தரேஸ்வரனை திருமணம் செய்து அவள் பங்குபெறும் முதலாவது சுமங்கலி பூஜை என்பதால் மகிழ்ச்சியில் பூத்துகுலுங்கினாள் அவள். குருக்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை குருக்களின் மனைவியான தனக்கும் கிடைக்கும் என்ற பூரிப்பிலும் புதிதாக வந்திருக்கும் குருக்களின் மனைவி இவர்தான் என்று அனைவரும் தன்னைப்பற்றியே பேசப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பிலும் பூஜை எப்போதும் தொடங்கும் என காத்துக்கொண்டிருந்தாள். அவள் காத்துக்கொண்டிருந்த தருணமும் வந்தது.

பட்டுசேலையுடனும் தலைநிறைய பூ வைத்து மஞ்சள் குங்குமம் சூடிக்கொண்டு சிரித்தமுகத்துடன் பல சுமங்கலிப்பெண்கள் கோயிலுக்குள் நுழைந்து அம்மன் சந்நிதானத்திற்கு முன்பாக வரிசையாக அமர ஆரம்பித்தனர். ஒவ்வொருவருக்கும் முன்பாக ஒரு குத்துவிளக்கும் சிறுகிண்ணத்தில் குங்குமமும் வைக்கப்பட்டது. பூஜை தொடங்கும் நேரம் வந்தது. அனைவரும் அம்மனை வணங்கிக்கொண்டு விளக்கை ஏற்றினர். சுந்தரேஸ்வரக்குருக்கள் ஒரு தியானத்தை ஓதிவிட்டு லலிதா சகஸ்ரநாம புத்தகத்தை ஒரு கையில் வைத்துக்கொண்டு மறு கையால் மைக்கை பிடித்துக்கொண்டு 'ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ' என மந்திரத்தை ஆரம்பித்தார். ஒவ்வொரு நாம உச்சாடணத்திலும் பெண்கள் தமக்கு முன்னேயிருந்த கிண்ணத்திலிருந்து இரண்டுவிரல்களால் குங்குமத்தை கிள்ளி விளக்கிற்கு முன்னேயிருந்த வெற்றிலையில் போட்டு அர்ச்சனை செய்தார்கள். 1008 நாமங்களும் நிறைவு பெற்றபின் விளக்கிற்கு தூபதீபம் காட்டினர். அம்மனுக்கு பூஜை நடந்தது. பூஜை முடியும் தருவாயில் வந்திருந்த சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் சிவப்புதுணி கொடுக்க ஆயத்தம் செய்தார்கள்.

மற்றவர்களிடம் மதிப்புகொண்ட ஒரு சுமங்கலிதான் பிரதானமாக இருந்து அனைவரின் தாலிக்கும் குங்குமம் வைத்து மஞ்சள் குங்குமம் கொடுக்கவேண்டும். நான்தானே இந்த கோயில் குருக்களின் மனைவி. நானே அனைவருக்கும் மஞ்சள் குங்குமம் கொடுத்தால் என்ன? அப்போதுதானே மதிப்பாக இருக்கும் என எண்ணினாள் கனகா.

ஒவ்வொரு தட்டுகளிலும் இடம்பெறவேண்டிய துணி, மஞ்சள், குங்குமம், மஞ்சள்கயிறு, வெற்றிலை, பழம் ஆகியவற்றை அடுக்கிக்கொண்டிருந்தார் சுந்தரேஸ்வரக்குருக்கள். அவரிடம் அருகில் சென்று 'இந்த மஞ்சள் குங்குமம் எல்லாம் நானே எல்லாருக்கும் குடுக்கட்டா?' என்றாள். அவருக்கு தூக்கிவாரிப்போட்டது. கோயில்தொண்டே பணியென்று வாழ்ந்துவரும் சிவநாதருடைய மனைவி பார்வதியம்மாளே ஒவ்வொருமுறையும் மஞ்சள் குங்குமம் கொடுப்பார். அவருடைய கையிலே வாங்கினால்தான் மங்களம் நிலைக்கும் என்பது பக்தபெண்பணிகளின் நம்பிக்கை. அந்த பழக்கத்தை மாற்றுவது எப்படி? ஆனால் கேட்பது யார்? புதுப்பெண்டாட்டி... சிறுவயதில் இருந்து செல்லமாக வளர்க்கப்பட்ட அவள் முன்கோபக்காரியாகவும் பிடிவாதக்காரியாகவுமே இருக்கிறாள். தனக்கு மரியாதை கிடைக்காவிட்டால் சட்டென்று உணர்ச்சிவசப்படகூடியவள். சூழ்நிலை புரியாமல் எல்லார்முன்னும் எடுத்தெறிந்த நடந்துவிடுவாளே.. என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினார் குருக்கள். தன் கையால் மஞ்சள் குங்குமம் வாங்கி அனைவரும் தன்னையும் புகழவேண்டுமென்ற கணிப்போடு காத்திருந்தாள் கனகா.

மனைவி சொல்லே மந்திரமாக பாவித்து சுந்தரேஸ்வரரும் பெரியகுருக்களிடம் அனுமதி கேட்கபோனார். ஆனால் தர்மகர்த்தாவின் மனைவி வந்திருப்பதாகவும் அவருக்கு பார்வதியம்மாள் கையால் குங்குமம் வாங்கினால்தான் திருப்தியாக இருக்கும் என்றும் கூறி மறுத்துவிட்டார். சுந்தரேஸ்வரரும் அதோடு மறந்துவிட்டார். ஆனால் தன் கையால் மஞ்சள் குங்குமம் கொடுக்கப்போகிளோம் என ஆசைப்பட்டுக்கொண்டிருந்த கனகா ஒவ்வொரு நொடிப்பொழுதும்தாவலாக இருந்தாள். மஞ்சள் குங்குமம் கொடுக்கவேண்டிய நேரம் வந்தது. அனைவரும் தன்னை மரியாதையாக அழைத்து தன்கையால் கொடுக்கவைக்கபோகிறார்கள் என கனகா ஆசையோடு பார்த்துக்கொண்டிருக்கையில் கோயில் பணியாள் தட்டுகளை பார்வதியம்மாளிடம் கொடுக்க அவர் ஒவ்வொன்றாக ஒவ்வொரு பெண்ணிடமும் கொடுக்க ஆரம்பித்தார். கனகாவிற்கு அவமானமாயிற்று. கோயில் குருக்களின் மனைவி தான் இருக்கும்போது யாரோ ஒரு கிழவியிடம் கொடுத்து மஞ்சள் குங்குமம் கொடுப்பது தனக்கு பெரிய தலைகுனிவாக எண்ணினாள். குருக்களின் மனைவி, புதிதாக திருமணமாகி வந்திருக்கிறாள் என்று தன்னைப்பற்றி அனைவரும் பேசுவார்கள் என எதிர்பார்த்ததும் ஏமாற்றமாய்ப்போனது. அனைவரும் பார்வதியம்மாளின் கைராசியையே புகழ்ந்துகொண்டிருந்தார்கள். எல்லா சம்பவங்களுக்கும் முடிச்சுப்போட்டு தனக்கு இந்த இடத்தில் மரியாதை இல்லை என முடிவுகட்டி தனியாக ஒரு மூலைக்கு சென்று அழ ஆரம்பித்தாள். அழும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்த அனைவரும் 'என்னடா இந்தப்பெண்? நல்ல விசயம் நடக்கிற இந்த இடத்தில இப்பிடி வந்து அழுதுக்கொண்டிருக்கிறாளே' என முகம் சுழித்தனர். சுந்தரேஸ்வரக்குருக்களுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவள் அருகில் மெதுவாக சென்று 'இதுக்குப்போய் இப்பிடியா அழுவ? மானம் போகுது.. வீட்ட போடி' என அதட்டினார். அவரை முறைப்போடு பார்த்து அழுத கனகா 'உம் பொண்டாட்டிக்கு மரியாதை இல்லாம காரியம் நடக்குது. அத கேக்காம என்ன வந்து அதட்டுரீர்?' என ஆவேசமாகி தலையில் இருந்த பூவை இழுத்து கையில் போட்டிருந்த காப்புகளை உடைத்து நகைகளை அறுத்து வீசி புயலடித்ததுபோல சீறினாள். அங்கிருந்த பெண்கள் அனைவரும் உறைந்துபோனார்கள். கோயில் பிரமுகர்களுக்கு முகத்தில் அறைந்தது போல இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் சுந்தரேஸ்வரர் கனகாவை இழுத்துக்கொண்டு போய்விட்டார். அனைவரும் சங்கடத்துடனே வீடு போனார்கள்.

அடுத்தநாள் தர்மகர்த்தாவிடம் மன்னிப்பு கேட்க வந்தார் சுந்தரேஸ்வரர். அவருடைய முகத்தை எப்படி எதிரகொள்வதென தெரியாமல் குழம்பிநின்றார். ஆனால் தர்மகர்த்தவோ குருக்களை தவறாக எண்ணாமல் 'சிறிய பெண். ஏதோ ஆசைப்பட்டுவிட்டாள். நடக்காத கோபத்தில் இப்படி நடந்துவிட்டாள். பரவாயில்லை. அடுத்தமுறை அவளைக்கொண்டே மஞ்சள் குங்குமம் கொடுக்கவைப்போம். கவலைப்படாதீர்கள்' என்றார். சந்தோசமாக வீட்டுக்கு சென்ற குருக்கள் இந்த விசயத்தை கனகாவிடம் பகிர்ந்தார். அவளுக்கு இருப்புகொள்ளவில்லை. முக்கியமாக தான் அவ்வாறு சீற்றத்தோடு நடந்ததால்தான் தனக்கு மரியாதை தேடிவந்தது. இந்த மாதிரி ஆட்களை இப்பிடித்தான் பண்ணவேண்டும் என உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள். தன்னை பார்த்து முகம் சுழித்தவர்களுக்கு அடுத்தமுறை நல்ல பாடம் புகட்டுகிறேன் என இறுமாப்போடு இருந்தாள். அடுத்த பௌர்ணமியும் வந்தது.

வழக்கம்போல எல்லாபூஜையும் முடிந்தபிறகு மஞ்சள் குங்கும தட்டுகளை கனகாவிடம் கொடுத்து கொடுக்க செய்யுமாறு தர்மகர்த்தா சொன்னார். கனகாவும் பெருமையுடன் ஒரு தட்டை எடுத்து முதலாவதாக இருந்த பெண்ணிடம் கொடுக்க சென்றாள். அந்தப்பெண்ணோ அதை வாங்காமல் விலகி சென்றுவிட்டார். எல்லோருக்கும் அதிர்ச்சி. இப்படி சாமி பிரசாதத்தை அலட்சியப்படுத்துகிறாரே என்று. அடுத்த பெண்ணிடம் கொடுக்க சென்றபோதும் அவரும் வாங்கவில்லை. எந்த பெண்ணுமே கனகாவின் கையால் மஞ்சள் குங்குமம் வாங்க முன்வரவில்லை. கனகாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்ன நிலைமை என்பதை புரிந்துகொள்ளமுடியாமல் 'என்னவாயிற்று.. ஏன் பிரசாதம் வாங்கவில்லை' என அந்த பெண்களிடம் விசாரித்தார் தர்மகர்த்தா. அந்த பெண்களில் ஒருவர் முன்னுக்கு வந்து 'எங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவேண்டுமென்றுதான் நாங்களே இந்த பூஜைக்கு வருகிறோம். ஆனால் கணவன் உயிரோடு இருக்கும்போதே பூவை அறுத்து பொட்டை அழித்து காப்புகளை உடைத்து அமங்களமாக நடந்துகொண்ட இந்த பெண்ணிடமிருந்து மஞ்சள் குங்குமம் வாங்கினால் அதற்கு என்னதான் பலன் இருக்கும்?' என்றார். கனகாவிற்கு மனது உறைத்தது. நிலைமையை சமாளிக்க தர்மகர்த்தா பார்வதியம்மாளை அழைத்து மஞ்சள் குங்குமத்தை கொடுக்கவைத்தார். இடம் பொருள் தெரியாமல் ஆணவமாக நடந்துகொண்டதற்கு ஆயுளுக்கும் மறக்கமுடியாத தண்டனை கிடைத்ததை எண்ணி அழ ஆரம்பித்தாள் கனகா. இம்முறை சமாதானம் பண்ண சுந்தரேஸ்வரர் வரவில்லை.

4 comments:

  1. அருமை நண்பரே. ஆணவத்திற்கு கூடியிருந்த பெண்கள் கொடுத்தப் பரிசு அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. படித்து முடித்ததே தெரியவில்லை அப்படியொரு உயிரோட்டம். பகிர்வுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.. ஊக்கமூட்டும் பின்னூட்டம் :)

      Delete
  2. வாழ்த்துக்கள்...
    அருமை..!!!

    ReplyDelete