Sunday, April 14, 2013

நாலு பேர் நாலு விதமா...


வழமைபோல எல்லாம் வழக்கத்திற்கு மாறாக நடந்தன. பார்த்தும் பார்க்காமல் போகும் பக்கத்துவீட்டுக்காரன், எனக்கு மட்டும் குட்மோர்னிங் சொல்லாத வாட்ச்மேன், என்னைப் பார்த்ததும் முகத்தை சுழிக்கும் கீரைக்காரி… மொத்தத்தில் அக்கம் பக்கத்தால் தள்ளிவைக்கப்பட்ட வாழ்க்கை. அன்னம் தண்ணி புழங்ககூட ஆளில்லை. போதும்டா சாமின்னு இந்த இடத்தை விட்டே போகலாம்னு யோசிச்சாலும் இருக்குறதே ஒரே ஒரு சொந்த வீடு. வாங்க விக்க வற்றவங்களும் ஆயிரம் குத்தம் சொல்றாங்க. இங்க இருந்து வேலை பாக்குற ஆபிஸ்ஸுக்கு பக்கமா ஒரு நல்ல வீடு வாங்கவே முடியாது. அப்பிடியே வாங்கினாலும் இதவிட ரொம்ப சின்னா வீடாத்தான் இருக்கும். பையனுக்கும் ஸ்கூல்போக சிக்கலாயிருக்கும். நாம வாங்குற சம்பளத்துக்கு தனியா எல்லாம் அவனுக்கு ஸ்கூல் வான் பிடிச்சு அதுக்கு ஃபீஸ் எல்லாம் குடுக்கமுடியாது. நான் ஆபீஸ் போகும்போதுதான் பைக்ல அவனையும் விட்டுட்டு போகணும். சரி நம்ம ஏரியாக்குள்ளதான் இவ்வளவு மனஸ்தாபம், ஆபிஸ்லயாவது நிம்மதியா இருக்கலாம்னா அங்க எவனும் பேசமாட்டேங்குறான். நானா போய் ஏதாவது கேட்டா என் முகத்தப் பாக்கமாத்தான் பதில் வரும். சரி பேசாட்டி போங்கடாங்கனு விட்டுட்டு இருந்துடுவேன். ஆனா சிலபேர் வந்து எனக்கு முன்னாலயே என்னைப்பத்தி பேசி நக்கலா சிரிக்கும்போது அத கேக்கமுடியாம கோபத்தை அடக்குறது ரொம்ப கஷ்டமாயிருக்கு. ஆபிஸ்லதான் இப்பிடின்னா பையனோட ஸ்கூல்ல அதவிட மோசம். டீச்சர், கூடப்படிக்குறவங்கள்ளேல்லாம் தப்பு தப்பா பேசுறாங்கனு வந்து அவன் தினமும் அழுதுட்டு இருக்கான். வீடு, ஆபிஸ், ஸ்கூல் எல்லாத்தையும் மொத்தமா ஒரேநேரத்தில மாத்துற அளவுக்கு வசதியில்லாத ஒரு குடும்பத்தலைவனால சுத்தியிருக்கற இத்தனை சிக்கலையும் சமாளிக்கமுடியாத நிலைமையில என்ன பண்ணமுடியும்? இப்போதைக்கு எனக்கு ஒருக்குற ஒரே ஆறுதல் காலம்தான். காலம் சிறந்த மருந்து. எல்லா காயங்களையும் ஆத்திடும். இதையும் ஆத்திடும். அதவிட முக்கியம் எல்லாரும் இத மறக்கணும். மறந்து…. பழையமாதிரி எங்கிட்ட பேசாட்டியும் பரவாயில்ல, குத்திகாட்டுறமாதிரி நடக்காம இருந்தாலே போதும். அப்பிடி என்னதான் நான் தப்பு செஞ்சிட்டேன்? கொஞ்சநாளைக்கு முந்தி வரைக்கும் இப்பிடி இல்ல….

நல்லா படிச்சு ஒரு கௌரவமான உத்தியோகத்துல இருக்குற உங்களைப்போன்றவன்தான் நானும். மானத்துக்கு அஞ்சி வாழுற சாதாரண மிடில்க்ளாஸ் குடிமகன். அப்பாவோட சேமிப்போட நானும் ஒரு லோன் எடுத்து சொந்தமா வீடு வாங்கினேன். சிக்கனமா இருந்து லோனையும் கட்டியாச்சு. சொந்த வீடு, நல்ல வேலைனு வாழ்க்கைல ஒரு நிலைக்கு வந்ததும் கல்யாணம் ஆச்சு. சந்தோசமா போன கல்யாண வாழ்க்கைக்கு ஆதாரமா ஒரு பையனும் பொறந்தான். அப்பா அம்மா சாகுறப்போ பையன் நல்ல நிலமைல இருக்கான், பேரன் பொறந்துட்டான்னு நிம்மதியிலதான் கண்ண மூடினாங்க. ஆனா அவங்க போனப்புறம் எனக்கு நிம்மதி போச்சு. குடும்ப பாரத்த சுமக்குறது மட்டுமில்லாம கீதாவ வளர்க்குற பொறுப்பும் எனக்கு வந்திச்சு. என்னோட ஒரேயொரு உடன்பிறப்பு கீதா. என்மேல உயிரையே வச்சிருக்குற என் தங்கச்சி. அவளைப்பத்தி நினைக்கும்போதெல்லாம் பேசாம நான் சின்ன பையனாவே இருந்திருக்கலாம்னு தோணும். ஒரே சாக்லேட்ட அவகூட சண்டை போட்டு யாரு சாப்பிட்றதுனு தலைய பிச்சி உருண்டு பிரண்டு பிறகு ஒருவழியா ஒண்ணா உக்காந்து பாதி பாதி கடிச்சு சாப்பிட்டதுதான் என் வாழ்க்கையிலயே ரொம்ப அழகான நாட்கள். அதுக்கப்புறம் வளர்ந்து படிச்சு வேலை கல்யாணம்னு எத்தனையோ வந்தாலும் அப்பிடி நான் உண்மையா சந்தோசமா இருந்தேனானு தெரியல. அப்பா அம்மாவ விட என்மேலதான் பாசமாயிருப்பா. எனக்கு எப்பிடிபட்ட பொண்ணு வந்தா நல்லா இருக்கும்னும் அவதான் தேர்ந்தெடுத்தா. என் பொண்டாட்டியும் என் குடும்பத்துமேல அப்பிடியே பாசத்தை பொழிஞ்சு கொட்டாட்டியும் கொஞ்சமாவது சமாளிச்சா. அதுவே பெரிய விசயம். அவளுக்கு பொழுது டீ.வி சீரியலோடயே போயிடும். பையனும் ஸ்கூல்ல சேர்ந்து நல்லா படிச்சுட்டு வந்தான். தங்கச்சிக்கும் ரொம்ப கஷ்டப்பட்டு காலேஜ்ல இடம் கிடைச்சு போய்ட்டு இருந்தா. எனக்கு பகல்ல ஆபிஸ்ஸும் இரவில குடும்பத்தையும் பாத்திட்டு காலம் போய்ட்டு இருந்தப்பதான் நான் கொஞ்சமும் நினைக்காத என் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட அந்த சம்பவம் நடந்திச்சு.

போலீஸ்காரங்க, பத்திரிக்கைகாரங்க எல்லாம் சுத்தி நின்னிட்டு இருந்தாங்க. என் கண்முன்னால என்ன நடக்குதுனே தெரியல. கண்ணு கூசுற அளவுக்கு கேமரா லைட் அடிச்சிட்டு இருந்திச்சு. டாக்டர் எல்லாம் போலீஸோட ஏதோ பேசிட்டு இருந்தாங்க. கோட்டு சூட்டு போட்ட பெரிய மனுசங்க சிலபேர் தலையகுனிஞ்சு உள்ள வந்து போலீஸ தனியா கூட்டிட்டு போய் ரகசியம் பேசினாங்க. அவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல்ல அத்தனை கூட்டத்துக்கு மத்தியில தனி ஆளா என்ன செய்றதுனு தெரியாம சுத்தி சுத்தி பாத்திட்டு இருந்தேன். யார்கிட்ட கேக்குறது எங்க போறது ஒண்ணுமே தெரியல. அறிவு மங்கி போனமாதிரியிருந்திச்சு.

‘கீதாவோட சொந்தக்காரங்க யாராவது வந்துருகீங்களா?’ உள்ளேயிருந்து ஒரு நர்ஸ் வந்து கேட்க ஏதோ ஆவேசம் வந்தவனைப்போல கூட்டத்தை தள்ளி முந்தியடித்துக்கொண்டு போய் அவளைப் பார்த்து.. ‘நான்தான் கீதாவோட அண்ணா… அவ எங்க இருக்கா? எப்படி இருக்கா? ஒருக்கா அவள பார்கணும்… அவளுக்கு என்ன ஆச்சு ப்ளீஸ் சொல்லுங்க’ பதட்டத்திலயும் பயத்திலயும் எனக்கு பேச்சு வந்ததே அதிசயம். அந்த நர்ஸ் ஏதாவது சொல்லுவாளா கீதாவ பார்க்கலாமானு அவ முகத்தயே பாத்திட்டு இருந்தேன். அவ ஏதோ நோட்ல குறிப்பு எடுத்திட்டு ‘சரி இந்தப்பக்கம் உக்காருங்க.. டாக்டர் கூப்பிடும்போது வாங்கனு சொல்லிட்டு போய்ட்டா’ நடக்கமுடியாம தள்ளாடிப்போய் ஒரு கதிரையில உட்கார்ந்தேன். ‘உங்க வீட்டுல கீதான்னு பொண்ணு இருக்கா? அவங்கள கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கு. சீக்கிரம் வாங்க’னு ஒரு ஃபோன்தான் வந்திச்சு. அவளுக்கு என்ன ஆச்சுனு தெரியாம ஹாஸ்பிடல் முழுக்க நாயா சுத்தி வந்தேன். யார்யாரோ வந்திட்டு போறாங்க. என்ன நடக்குது ஏதுன்னு ஒண்ணும் புரியல. மனசும் உடம்பும் சோர்ந்துப்போச்சு. கண்ணமூடி உக்காந்திட்டேன்.

‘எல்லாம் காலக்கொடுமைதான்… என்னத்த செல்றது. காலேஜ் படிக்குற பொண்ணுங்க மூணுபேர கூடபடிக்குற பசங்க பார்ட்டினு கூட்டிட்டு போயி நாசம் பண்ணிட்டாங்க. அந்த பொண்ணுங்க கெஞ்சி கதறிப்பாத்தும் அவனுக விடல. தடுத்த அந்த பொண்ணுங்களுக்குத்தான் பலத்த காயம். பணக்காரப்பசங்கன்னா என்ன வேனா செயவாங்களா? இத்தனைபேரு வந்து பாத்துட்டு போறாங்களே இதால அந்த பொண்ணுங்களுக்கு நல்லது நடக்கும்னு நினைக்குறியா? காலேஜ் பேர் கெட்டுப்போகக்கூடாதுனு அந்த காலேஜ் ஓனர் வந்து கெஞ்சுறான், கெடுத்த பசங்கள காப்பாத்தனும்னு அவங்க பெத்தவங்க வந்து பேசுறாங்க.. நியாயம் கிடைக்கணும்னு பேச யாரும் வரலியே’

கை நடுங்கியது.. வேர்த்து கொட்டியது, என்ன? என் தங்கச்சியா? இல்ல… இருக்காது இருக்கவே இருக்காது… ஐய்யோ ஐயோ….. கீதா… கீதா… இப்பதானே ஸ்கூல் முடிச்சு காலேஜ் போனா. பச்ச பிள்ளைடா அவ ஐயோ அடப்பாவிகளா…. கத்தினேன் கதறினேன்… என் கூச்சலுக்கு பதில் சொல்ல அவ்வளவு பெரிய ஹாஸ்பிடலில் ஒருத்தர்கூட இல்ல. என்னோட ஆற்றாமையில் எனக்கே கோபம் வந்திச்சு. யாரு என்ன ஏதுன்னு ஒண்ணுமே புரியலயே யாரு? யாரு? அவன் மட்டும் என் கையில கிடைச்சான்னா? அடக்கடவுளே… ஒரு பொண்ணா பொறந்தது அவ குத்தமா? என் கீதா உனக்கு என்ன செஞ்சா? கீதா.. ஆமா கீதா எங்க? என் கீதா? எழும்பமுடியாமல் எழுந்து அங்கும் இங்கும் ஓடினேன்.. எந்த வார்ட்னு தெரியல. மொத்த ஹாஸ்பிடலயும் நாலஞ்சு தடவ சுத்தி அவ இருக்குற இடத்துக்கு போனேன். அவ… என் தங்கச்சி, என் தேவதை ஒரு கட்டில்ல கசங்கிப்போய் படுந்திருந்தா.. இத பாக்காத்தான் நான் இத்தனை கஷ்டப்பட்டு வளர்த்தேனா? தடுமாறி அவளுக்கு பக்கத்தில போனேன். சுத்தியும் டாக்டர்களும் போலீஸும் பத்திரிகைகாரங்களும்.. அவ முழிச்சுட்டுதான் இருந்தா. என்னைப் பாத்ததும் கத்தி அழுதிட்டா. ஐயோ நான் அவளுக்கு பக்கத்துல போய் அவ கைய இறுக்க பிடிச்சுகிட்டேன். அவ என் முகத்தயே பாக்கல. தலைய குனிஞ்சிட்டு அழுதிட்டே இருந்தா. அதுக்குள்ள ஒரு நர்ஸ் வந்து ‘உங்கள அங்க இருக்கதானே சொன்னோம். இங்கல்லாம் வரக்கூடாது. வெளில இருங்க’னு சொன்னார். என்னால முடியல. அவள விட்டுட்டு இனி எங்கயும் நகரமுடியாது.. அதுவும் அவளும் என் கையை பிடிச்சுட்டு அழுதுட்டு இருக்காளே.. டாக்டர் என்னை இருக்க சொன்னார். பத்திரிக்கைகாரங்க எல்லாம் கீதாவ சுத்தி நின்னுகிட்டு கேவலமா கேள்விக்கேட்டு கொன்னுட்டாங்க.. ‘நீங்க ஏன் அவங்களோட போனீங்க?, உங்கள எத்தனைபேர் கற்பழிச்சாங்க?, எவ்வளவு நேரம் அவங்களோட நீங்க இருந்தீங்கனு மாத்தி மாத்தி ஈவு இரக்கமே இல்லாம கேள்வி கேட்டிட்டு இருந்தாங்க… ஏன்யா இப்பிடி பண்றீங்க? ஏற்கனவே செத்துபொழைச்சு வந்தவங்கள இப்பிடி கேள்விகேட்டு சாவடிக்குறீங்களேனு கத்தினேன். போங்க போங்க என என் தங்கச்சியும் எல்லாரையும் பாத்து கத்தினா.. எல்லாரும் கலைஞ்சு போனாங்க.. என் தங்கச்சியோட கண்ணீரைத் தவிர..

பல போராட்டங்கள் நடந்திச்சு. பல மகளிர்அமைப்புகள் இது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை என உண்ணாவிரதம் இருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மாசம் முழுக்க எல்லா பத்திரிகையிலும் என் தங்கச்சிதான் தலையங்கமானாள். குற்றவாளிகளுக்கு பேருக்கு ஒரு தண்டனை கிடைத்தது. கவர்ன்மென்ட்ல இருந்து காலேஜ்வரைக்கும் எல்லாரும் நஷ்டஈடு கொடுக்கவந்தார்கள். எத்தனைகோடி கொட்டிகொடுத்தாலும் நடந்ததை மாத்தமுடியுமா? என எல்லாத்தையும் கீதா வேணாம்னுட்டா… தன்னை காதலிக்காத பெண்ணை பழிவாங்க ஆசிட் ஊற்றிய வாலிபன், ஓடும் பேருந்தில் ஆறுபேரால் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் என்று தினமும் ஒரு செய்தி பத்திரிகைகளில் வரும். அப்படி வரும்போது பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் வலி மட்டும்தான் ஊருக்கு தெரியும். அதையும் தாண்டி அந்த பெண்களை ஆயிரம் கனவுகளுடன் வளர்த்த அப்பாவோடயோ அம்மாவோடயோ அண்ணனோடயோ வலியை உணரமுடியாது. உணரவேண்டிய அவசியமும் இந்த பாழாய்ப்போன பொதுமக்களுக்கு தேவையில்லை. உணர்ந்திருந்தால் முதல்முதலா ஒரு தப்பு நடந்தப்பவே அடுத்த தப்பு நடக்காம இந்த மக்கள் பார்த்திருப்பாங்க. தண்டனையை அந்த படுபாவிகளுக்கு கொடுத்திருப்பாங்க. ஆனால் அங்க எல்லாம் ஆட்டுமந்தை மாதிரி வாயை மூடிட்டு இருந்துட்டு அவங்க தண்டனை கொடுக்க வந்தது என் தங்கச்சிக்கும் என் குடும்பத்துக்கும்… எத்தனை ஏச்சு பேச்சு!

ஆசையோட படிக்கப்போன படிப்பும் போய் மானமும் போய் என் தங்கச்சி வீட்டோட முடங்கிப்போயிட்டா.. அக்கம்பக்கத்துல இருந்தவங்க எல்லாம் கெட்டுப்போனவள வீட்டோட வச்சிருக்காங்கனு அரசல்புரசலா பேச ஆரம்பிச்சாங்க.. சாதாரணமா ஒரு பக்கத்துவீட்டுக்காரனோட கொண்டாடுற உறவுமுறை அற்றுப்போனது. அருவருப்பா பாத்தாங்க… எந்த ஒரு தப்பும் பண்ணாம வாழ்க்கையே தலைகீழா மாறிப்போனது. டீவிடீல இருக்குறமாதிரி வாழ்க்கைலயும் ஒரு ரீவைண்டு பட்டன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு தோணிச்சு… நாங்க படுற கஷ்டத்த பாத்துட்டு கீதாவாவே வந்து ஒருநாள் சொன்னா நான் தனியா போறேன்னா.. என்னால இனி நீங்க யாரும் கஷ்டப்படாதீங்கனு.. அவளை விட்டுட்டு நாங்க என்ன பண்ணமுடியும்.. அப்புறம் நாங்க பக்கத்துவீட்டுல இருக்குறத அசிங்கமா நினைக்குறவங்களுக்கும் என்ன வித்தியாசம்? எப்பிடியும் கஷ்டப்படத்தான்போறோம். பிரிஞ்சுபோனா பனவேதனைதான் அதிகமாகும்.  எப்ப பாத்தாலும் அவமேல எரிஞ்சுவிழுற என் பொண்டாட்டியே இப்பல்லாம் அவள குழந்த மாதிரி பாத்துக்குறா.. அவளுக்குத்தேவை ஒரு சுகமான ஆறுதல். வாழ்க்கையில அடுத்தகட்டத்துக்கு போகமுடியும்ற நம்பிக்கை. அதை கொடுக்குறதுதானே ஒரு அண்ணனா என்னோட கடமை. அவளுக்கு நான் படிப்பு கொடுப்பேன். அவளோட மொத்த வாழ்க்கையையும் மாத்த எங்கிட்ட சக்தியில்லாம இருக்கலாம். ஆனா இனி வாழப்போற வாழ்க்கைக்கு உறுதுணையா கைகொடுக்க மனசிருக்கு. அவ என் தங்கச்சி. ஆமா.. ஊரு இன்னும் பேசிட்டுத்தான் இருக்கு. முந்திக்கு இப்ப கொஞ்சம் குறைஞ்சிருக்கு.. இன்னும் கொஞ்சநாள்ள மொத்தமா குறைஞ்சிடும். அதுவரைக்கும் பொறுமையா இருப்பேன். கறை எங்க வாழ்க்கையில வரல. வீணாப்போன சில இளைஞர்களின் எண்ணத்துலதான் வந்திச்சு.. அதுக்காக நாங்க காலம் முழுக்க தண்டனை அனுபவிக்கணுமா? வாழ்க்கை ஒரு விபத்துனால நின்னுபோயிடாது.. அது ஓடிக்கிட்டேதான் இருக்கும். வித விதமா பேசத்தான் இந்த சமூகம் இருக்கு ஆனா சமுதாயம் பேசுறதை தாண்டி வாறவங்கதான் வாழ்க்கையில ஜெயிப்பாங்க. என் தங்கச்சி ஜெயிப்பா…

No comments:

Post a Comment