Tuesday, April 2, 2013

வெளிநாட்டு மாப்பிள்ளை…


லண்டன் நகரம், ஒரு குட்டி தமிழ்நாடு என்று என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் செரிந்துவாழும் பகுதிகள் பலவற்றை உள்ளடக்கியது. வழக்கம்போல இந்தவருடமும் லண்டன் தமிழ்மன்றத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் விமான நிலையத்தில் வந்திறங்கினேன். சென்ற வருடத்தைவிட மாலை மரியாதைகள் சற்று அதிகமாகவே எனக்கு கிடைத்தன. நான் எழுதிய இசைவாக்க நரிகள் சென்றவருடத்தின் மிகச்சிறந்த நூலாகவும் அதிக லாபம் கண்டதுவும்தான் அதற்கு காரணம். புகழ்ச்சி ஒரு படைப்பாளியை மேலும் செதுக்கும், அவனையே பாதாளத்திலும் தள்ளிவிடும். நான் என்னை செதுக்ககூடிய புகழ்ச்சிகளை ஏற்க விரும்புகிறேன். தானாக வந்த புகழை தக்க வைக்கத்தெரியாத எத்தனையோர் காணாமல் போனதை கண்ணெதிரே பார்த்தவன். அவ்வாறு நானும் காணாமல் போவதை விரும்பவில்லை. நான் எழுதும் தமிழால் எனக்கு கிடைத்த புகழை அழியாமல் காத்து என்றும் ஒரு வெற்றியாளனாகவே இருக்க விரும்புகிறேன். என் முதல் கதையில் கிடைத்த பாராட்டுகளும் பரிசுமே என்னை ஒரு வெற்றியாளனென எனக்கே உணர்த்தியது. நான் வரும்பும் வெற்றி இன்றுவரை தொடர்கிறது.  அப்படித்தான் நினைத்தேன். அது தவறெனத்தெரிந்தது. பார்க்ககூடாதென நினைத்தவளை பார்த்தபின்…

பள்ளிப்படிப்பை முடித்துவிட்ட நேரம்… அறிவியல், கணிதம் போன்றவற்றில் குறைவான மதிப்பெண் என அனைவரும் என்மேல் வருத்தம் தெரவிக்க நானோ தமிழில் முதல் இடம் என கர்வப்பட்ட காலம். என் கவிதைகளும் கதைகளும் காகிதங்களாய் என் அறையை நிரப்பியிருந்தன. கல்லூரிக்கு செல்ல வசதியில்லாததால் ஒரு கொம்ப்னிகேஷன் சென்டரில் வேலைக்கு சேர்ந்தேன். இருந்தாலும் எனக்குள் இருந்த எழுத்து வெறி பெரிய எழுத்தாளனாகியே தீரவேண்டுமென்ற உத்வேகம் உந்தி தள்ளியதால் என் கதைகளை எடுத்துக்கொண்டு பத்திரிகை அலுவலகங்களாக ஏறி இறங்கினேன். அறிமுகமில்லாதவன், அடையாளமில்லாதவன், கானமயிலைக் கண்டு வான்கோழிபோல வந்தவன் என்றெல்லாம் வசைகள். அவமானங்களை துடைத்தெறிந்துவிட்டு மீண்டும் மீண்டும் முயற்சித்தேன். பலனளிக்காத முயற்சிகளின் எண்ணிக்கை மட்டும் கூடிக்கொண்டேபோனது. தெருவில் நடந்துகொண்டிருக்கையில் கீழே கிடந்த செய்தித்தாள் ஒன்றில் சிறுகதைப்போட்டி அறிக்கையைப் பார்த்தேன். முதல்பரிசு பத்தாயிரம் ரூபாய். ஆறுதல் பரிசு பத்து பேருக்கு ஆயிரம் ரூபாய்… நிச்சயம் எனக்கு ஒரு ஆறுதல் பரிசு உறுதி என்று ஒரு கதையை அனுப்பினேன். முதல்பரிசே கிடைத்தது. பத்தாயிரம் ரூபாயும் பாராட்டுபத்திரமும் பரிசாக கிடைத்தன. அதைவிட நான் எழுதிய அந்த கதை பிரபலமான ஒரு பத்திரிகையில் வெளியாகி எழுத்தாளனாக என் பயணத்துக்கு அடிக்கல் நாட்டியது. கூடவே என் அம்மாவின் ஆசைக்கும் நீர் வார்த்தது..

நல்லா கதை எழுதுவான் என்று நாலுபேருக்கு தெரிந்துவிட்டது. புத்தகம் வெளியிடவும் பேச்சு நடக்கிறது. இனி கொஞ்சம் தலையெடுத்துடுவான் என்ற நம்பிக்கையில் என் அம்மா என் திருமணத்திற்கு பெண்தேடினார். பார்க்கும் பெண்களையெல்லாம் மருமகளாக எண்ணி படம் ஓட்டிப்பார்த்தார். என் புத்தகம் வெளியிடும்வரை திருமணம் இல்லை என்று நான் பிடிவாதமாக இருந்தேன். அந்த பிடிவாதத்தையும் ஆட்டிப்பார்தாள் ஒரு பெண்.

திருமண வரவேற்பொன்றிற்கு நானும் அம்மாவும் சென்றிருந்த வேளை அங்கே தேவதைபோல சுத்திக்கொண்டிருந்த ஒருத்தி தற்செயலாகத்தான் கண்ணில் பட்டாள். முதல்முறை தற்செயல். இரண்டாம் முறை…. மூன்றாம் முறை? இன்னும் எண்ண முடியாமல் எத்தனையோ… எதில் ஈர்க்கப்பட்டேனோ தெரியவில்லை என் அம்மா என்னை அவதானிப்பதைகூட மறந்து அவள் சிறிதும் இடங்களிலெல்லாம் என் கண்ணும் சுழன்றது. இது ஒவ்வொரு கல்யாண வீடுகளிலும் பஸ் ஸ்டாண்டுகளிலும் வழக்கமாக நடக்கும் ஒன்று. ஆனால் ஒரு பெண்ணை பார்த்துவிட்டான் என்ற பூரிப்பில் என் அம்மா கொஞ்சம் அதிகமாக திட்டமிட்டு அந்த பெண்ணைப் பற்றி விவரங்களை சேகரித்து நாளைக்கு பொண்ணு பார்க்கபோறோம்னு என்முன் வந்து நின்றார்கள். எந்த பொண்ணு என்று கேட்டேன். அதாண்டா கல்யாணத்துல அவளையே பாத்திட்டு இருந்தியே.. ஒரு வகையில எங்களுக்கும் தூரத்து சொந்தகாரங்கதான். நல்லா விசாரிச்சிட்டேன். நாளைக்கு போவோம்னு சொன்னதும் உண்மையில் நானும் சந்தோசப்பட்டுத்தான் போனேன்.

பெண் பார்க்கும் படலம் முடியும் தருவாயில் சம்பிரதாயமாக மாப்பிள்ளையும் பெண்ணும் பேசட்டுமே என்று தனியாக அனுப்பினர். ஒரு பெண்ணுடன் தனிமையில் உறையாடும் முதல் சந்தர்ப்பம்.. மூச்சுவேறு முட்டியது. அவளுக்கு எப்படியிருக்குமோ.. இதைக்கூட தெரிந்துவைக்காமல் எப்படி எழுத்தாளனாக்கப்போகிறாய் என எள்ளியது மனம். ஆகவே மனதை திடப்படுத்திக்கொண்டு என்னைப்பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்துகொண்டேன். அவளது அறிமுகமும் முடிந்தபின் ஏதோ சொல்வதற்காய் விழிப்பவள்போல் தோன்றவே என்ன என்று கேட்டேன். உங்களுக்கு வெளிநாட்டுப் போக வருப்பம் இருக்கா? என்று கேட்டாள். இந்த கேள்வி நான் எதிர்பாராதது.. எனினும் அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், ‘இப்பதான் கதையெழுத வாய்ப்பு கொஞ்சம் தேடி வருது. வெளிநாடு அது இதுனு போனா இங்க இருக்குற வாய்ப்பு தட்டிப்போய்டும். அதோட வெளிநாட்டுக்குப் போனா முதல்ல இருந்து எல்லாம் ஆரம்பிக்கனும்… அதுபோக இங்கயே நான் நல்லாதானே இருக்கேன்.. எனக்கு வெளிநாட்டுக்கு போக என்ன அவசியம்’ என்று சொல்லிவிட்டு திருமணத்தைப் பற்றி ஏதாவது கேட்போம் என வாயெடுக்குமுன்னே அவள் பேசத்தொடங்கினாள்.. ‘என்னை மன்னிசிடுங்க.. என் அப்பா அம்மாட்ட நான் அப்பவே சொன்னேன் எனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையா பாருங்கனு.. என் பிரண்ட்ஸ் எல்லாருமே பாரின்ல செட்டில்லாயிட்டாங்க. நானும் வெளிநாட்டுல செட்டிலானதான் கொஞ்சம் கௌரவமா இருக்கும். அதோட அதுதான் என் கனவும்கூட. அதனால அமெரிக்கா. லண்டன்னுதான் மாப்பிள்ளை பார்க்க சொன்னேன். நீங்க தப்பா நினைக்காதீங்க. உங்களுக்கு ஏத்த வேள நல்ல பொண்ணு உங்களுக்கு கிடைப்பா’ன்னு சொன்னாள். அந்த இடத்தில் என்னால் அவளை அவமானப்படுத்தியிருக்க முடியும். ஆனால் மனம் வரவில்லை. மறுவார்த்தை பேசாமல் திரும்பிவிட்டேன். அத்துடன் அவளை மறந்தும்விட்டேன். இத்தனை நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காதலியுடன் கழித்தேன். என் கதைகளே என் காதலிகள்.

நினைவுகளிலிருந்து மீண்ட மனது இருப்பது லண்டன் விமானநிலையம் என்றுணர்ந்தது. சற்று தூரத்தில் அவள். அவளே அவள். கொஞ்சம் குண்டாகியிருந்தாள். கையில் ஒரு குழந்தை. ஒரு வெள்ளையனுடன் உரையாடல். என்னைப் பாரப்பாளா என்ற நப்பாசையில் சூழ்நிலையை மறந்து அவளையே பார்துகொண்டிருந்தேன். முதல்நாள் அந்த திருமணவீட்டில் பார்த்தேனே… அதுதான் நினைவு வந்தது. அவள் பார்க்கவில்லை. ஆனால் அந்த வெள்ளையன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். ஏன் என்று தெரியவில்லை. சரி அவள் பார்க்கவில்லை. விழாக்குழுவினரோடு புறப்படுவோம் என்று திரும்பும்போது அந்த வெள்ளையன் என்னருகில் வந்தான். அவளும் அவனைத்தொடர்ந்து வந்தாள். நீங்கள் எழுத்தாளர் வாசகதாசன்தானே என்று ஆங்கிலத்தில் கேட்டான். யார் இவன் என்று புரியாமல் ஆமாம் என்றேன். உடனே சந்தோசத்தில் குதிப்பவனைப்போல சிரித்துகொண்டு கையைக்கொடுத்து, உங்கள் கதைகளை படித்திருக்கிறேன் என்றான். ஆச்சரியம்தான். என் வெற்றி வெள்ளையனிடம்வரை சென்றிருக்கிறது என்று அங்கே ஒரு சிறு பூரிப்பு. தன்னைப்பற்றியும் அவனுக்கு என் கதைகள் எவ்வாறு அறிமுகம் ஆனதென்பதையும் கூறிய அவன் பின்னால் நின்ற அவளைக்காட்டி தன் மனைவி என்றான். அதிர்ச்சியில் உறைந்துதான் போனேன். வெளிநாட்டில் சொகுசாக வாழ ஆசைப்பட்டவள்தான், அதற்காக வெள்ளைக்காரனையே மணம் முடிப்பாள் என்று நினைக்கவில்லை. இந்த காலத்தில் அது ஒன்றும் தவறில்லைதான். இருந்தாலும் இந்த பெண்களின் மனநிலை திருமணத்தில் அடைந்திருக்கும் மாற்றத்தையறிய விரும்பினேன். அவளது கணவன் அந்த வெள்ளையன் என்னிடம் ஆட்டோகிராப்பும் சில போட்டாக்களும் எடுத்தபின் நான் அவளிடம் திரும்பி என்னை ஞாபகம் இருக்கா என்று கேட்டேன். அவள் குழம்பிய விதத்திலேயே மறந்துவிட்டாள் என்பதை அறிந்து நான் எப்படி அவளுக்கு தெரிந்தவன் என்பதை கூறினேன். தமிழில்.

ஒரு நிமிடம் திகைத்தவள் தன்னை சுதாரித்துக்கொண்டு ஆஹ் நீங்களா? நம்பவேமுடியல. நீங்க சொன்னமாதிரியே பெரிய ரைட்டர் ஆயிட்டீங்க… பாராட்டுவிழால்லாம் எடுக்குறாங்க. ரொம்ப சந்தோசம் என்றாள். இப்போது என்னகு அது முக்கியமில்லை. அவளது நிலையை அறிய சூசகமாக நீங்களும்தான் சொன்னமாதிரியே வெளிநாட்டு மாப்பிள்ளைய பிடிச்சிட்டீங்க… எப்பிடி இவரை கண்டுபிடிச்சீங்க? இண்டர்நெட்லயா? என்றேன். சற்று தயங்கிவிட்டு நான் கல்யாணம் பண்ணது ஒரு தமிழரைத்தான். இங்க வந்த கொஞ்சகாலத்துல நாங்க பிரிஞ்சு டைவர்ஸ் பண்ணிகிட்டாப்புறம் இவரைக் கல்யாணம் செஞ்சிகிட்டேன். ரொம்ப சாதாரணமா அவள் சொல்லிமுடித்ததை தாங்கிக்கொள்ளத்தான் சிரமமாக இருந்தது. அதான் உங்க இஷ்டப்படியே வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைச்சாரே.. பிறகென்ன பிரச்சினை? ஏன் விவாகரத்தெல்லாம் என்று நானும் சாதாரணமாக கேட்பதைப்போல கேட்டேன்.
அவருக்கு கொஞ்சங்கூட பொறுப்பில்ல. நாங்க வாழ்ற காலம் எப்படி? இருக்கிற இடம் எப்படினு தெரியாம தன்னேட இஷ்டத்துக்கே பண்ணிட்டுருந்தார். இங்க உழைக்குற காசு இங்க செலவுக்கே போதாது. இவரு அம்மா தங்கிச்சினு ஊருக்கே அனுப்பிட்டு இருந்தார். அவங்களும் இதான் சாக்குனு நல்லா பணம் பறிச்சாங்க. சொந்த நாட்டுல இருக்குற உறவுக்காரங்களுக்கு உதவி செய்யுறது தப்பில்லதான். அதுக்காக நம்மள சுத்தி இருக்குற சமூகத்துக்கு உடன்படாம ஊரையே நினைச்சிட்டுருக்குறவர் எதுக்கு லண்டன் வரணும்? ஒருநாள் அவர் தங்கச்சி பையனுக்கு காது குத்துறதுக்கு அனுப்ப காசில்லாம நான் ஒருவாரம் ஷாப்பிங் பண்ண வச்சிருந்த பணத்தை கொடுத்துட்டாரு. நானும் பொறுமையாத்தான் இருந்தேன். முடியாத பட்சத்துலதான் விவாகரத்து பண்ணேன். அப்புறம் கூட வேல பாத்த இவரைக்கட்டிக்கட்டேன். என்ன இருந்தாலும் பாரினர்ஸ் பாரினர்ஸ்தான். எனக்கு அப்பிடி ஃப்ரீடம் கொடுக்குறாரு. இவரோடு வாழத்தான் பிடிச்சிருக்கு. அதுபோக அவரும் இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டதா கேள்விப்பட்டேன். இந்த நாட்டுல அதெல்லாம் சகஜம்தானே.

இதற்குமேல் அந்த வெளிநாட்டு பிரதாபங்களை கேட்க மனசில்லாமல் விழாவிற்கு நேரமானதாக சொல்லி விடைபெற்றேன். அவள் கூறியது ஒரு பெண்ணின் கருத்து அவ்வளவுதான் என்று விடமுடியவில்லை. தமிழகத்தில் பிறந்து வெள்ளைக்காரியாக ஆசைப்பட்ட ஒரு பெண்ணின் வாக்குமூலம் என்று எடுத்துக்கொள்ளலாம். அது ஒரு பெண்ணோடு முடிந்துவிட்டால் நான் இவ்வளவு யோசிக்கத்தேவையேயில்லை. ஆனால் தொடரும் பட்சத்தில் சமூகத்திற்கு இந்த மனப்பாங்கை எச்சரிப்பது ஒரு எழுத்தாளனின் கடமையல்லவா? விழா முடிந்து எனக்கான அறையில் தனிமையாக சிந்திக்க ஆரம்பித்தேன்.

உயிருக்கு கேடு என்பதை அறிந்தே புகைப்பிடிப்பது, நாள்தோறும் ஆயிரக்கணக்கான விபத்துகளை செய்திகளில் படித்துவிட்டுங்கூட வாகனங்களில் குடித்துவிட்டு போவது போன்று தாங்களாக தெரிந்தே செய்கிற முட்டாள்தனங்களில் ஒன்று வரதட்சணை. காலங்காலமாக நம் இனம் பின்தங்கி இருப்பதற்கு முக்கிய காரணம். ஆனால் காலமாற்றம் செய்த ஒரு சில நல்லவிடயங்கிளில் ஒன்று வரதட்சணைத் திருமணங்கள் இன்று பெருமளவு குறைந்திருக்கின்றன. ஆனால் மாறாக பெண்களின் வரதட்சணைகள் அதிகரிக்க தொடங்கிவிட்டன. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதே ஷாப்பிங் என்பது மாறி ஷாப்பிங்கே அத்தியாவசியம் என்ற நிலை வந்துவிட்டது. திருமணத்துக்குப் பின் அந்த ஆண் தன் பெற்றோர் சகோதரர்களிடம் நெருக்கம் காட்டுவதை பெண்கள் இப்போது விரும்புவது இல்லை. விவாதம் முற்றிவிட்டால் விவாகரத்து என்றாகிவிட்டது. திருமணத்துக்குமுன் தனக்கு செலவுசெய்யத் தகுதியானவனா என்று பார்க்கும் பெண்களைவிட இவனுடன் இறுதிவரை வாழமுடியுமா என்று பார்க்கும் பெண்கள் மிகக்குறைவு. விவாகரத்து என்று ஒன்று இருப்பதால் முதலில் திருமணம் செய்து பார்ப்போம் பிடிக்காவிட்டால் விலகிவிடலாம் என்ற மனப்பான்மை நிலவுவதையும் மறக்கமுடியாது. வெளிநாட்டு மாப்பிள்ளை என்றவுடன் வெளிநாட்டு வாழ்க்கைதான் அவர்கள் கண்ணில் தெரிகிறது. வெளிநாட்டில் அவர்கள் படும் வேதனையை அறிந்தால் எந்த பொண்ணும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்படமாட்டாள். ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்ற நிலை மாறி அயோத்தியில் இருப்பவனே சீதைக்கு ஏற்ற ராமன் என்று ஆகிவிட்டது. இருக்கும் இடத்தை நல்லா வைத்திருக்கும் பெண்கள் போய் நல்ல இடத்தில் இருக்கவேண்டுமென நினைக்கும் பெண்கள் வந்துவிட்டார்கள். நன்றாக வாழவேண்டியது உங்கள் உரிமை. ஆனால் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமையல்லவா? மரத்தை வெட்டிவிட்டு அதில் குடையை செய்து வெயில்காய ஆசைப்படுவது நல்லாதா? ஒரு தமிழனாக எனக்கு அது உறுத்துவதால் இந்த கருவை வைத்து ஒரு கதை படைக்க காகிதத்தையும் பேனையையும் எடுத்தேன்.

No comments:

Post a Comment