Saturday, April 9, 2016

அவளும் நானும்...


உடலைத் தாங்குவதை விட உயிரைத்தாங்குவது சிரமமாகும்போது தற்கொலை எண்ணம் உண்டாகிறது. ஆயுள் முழுவதும் கஷ்டப்படுவதுக்கு பதிலாக ஐந்து நிமிடம் கஷ்டப்படுவது பெரிதாக இருக்காது. உலகம் முழுவதும் கோழைத்தனம் என்றும் செய்பவர்களுக்கு வீரச்செயலாகவும் தெரியும் தற்கொலைக்கு எண்ணிக்கை அதிகமாக்க என்னை தயார் செய்தேன். இது முட்டாள்தனம் என்றால் அந்த முட்டாள்களில் நானே முதலாமவன் ஆகிறேன். இது தப்பிக்கும் வழி என்றால் தம்பிரான் புண்ணியம் என்று தப்பித்துக் கொள்கிறேன். வாழுறதை விட சாகுறதுக்குதான் அதிக தைரியம் வேண்டும் என்றான் ஒருவன். சாகுறதுக்கு இருக்குற தைரியத்துல வாழ்ந்து பார்த்துவிடு என்றான் இன்னொருவன். கனவுகள் கலைந்து வாழவும் பிடிக்காமல் தைரியம் இல்லாததால் சாகவும் துணியாமல் இரண்டிற்கும் நடுவில் வாழ்வா சாவா சதுரங்கம் ஆடினேன். வாழத்தான் வேண்டும் என்ற பக்கத்தில் வலுவான வாதங்கள் இல்லை. இனி வாழ்ந்தும் பயனில்லை. சாவு என்ற கருப்பு ராணி சந்தோசம் என்னும் வெள்ளை ராணியை வெட்டிவிட்டு உயிர் என்னும் வெள்ளை ராஜாவிற்கு செக் வைத்தது. கருப்பு வென்றுவிட்டது. இனி என் இருப்பு எதற்கு?

போயும் போயும் இந்தாளுகிட்ட மாட்டிகிட்டேனே. சாவை விடக்கொடுமையானது தன்னை புத்திசாலியென்று நினைத்துக்கொண்டு சிலர் பண்ணும் அறிவுரையை சகித்துக்கொண்டு கேட்பது. கார் ஒட்டுபவர் மதன். நான் பணிபுரியும் அலவலகத்தின் பொதுமுகாமையாளர். அவருக்கு அருகில் நான் உட்கார்ந்திருந்தேன். எங்கள் இருவருக்கும் நடுவில் அமைதி உட்கார்ந்திருந்தது. வழக்கமாக அலுவலகத்தில் நான் செய்யும் சிறு பிழையைக்கூட கண்டுபிடித்து மணிக்கணக்காக நிற்கவைத்து விளாசும் மனுசன் இன்று நான் தற்கொலைக்கு முயன்று அதில் தோற்று இவர்மூலமாக காப்பாற்றப்பட்டு அவர் பக்கத்தில் குற்றவுணர்வுடன் அமர்ந்திருக்கும்போது வாயே திறக்காமல் கார் ஓட்டிக்கொண்டு இருந்தார். அவர் பார்க்கும் பார்வைக்கே என்னால் பதில் பார்வை பார்க்கமுடியவில்லையே இதில் வாய்திறந்து கேள்விகேட்டால் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே 'என்ன காதல் தோல்வியா?' என்று கேட்டார்.

இல்லை என்றா சொல்லமுடியும்... நிஜத்தில் தொலைந்து நினைவில் மட்டும் நிறைந்தவளை, நண்பர்களாக நல்லமுறையாகப் பழகி பின் காதலைசொன்னபோது காணாமல் போனவளை, அலுப்பூட்டூம் அறிவுரைகளை அவள் சொல்லும்போதுமட்டும் அழகாக்கியவளை. கண்களில் கனவுகளையும் கால்களில் காற்றையும் பூட்டியவளை, அவளை நினைத்து காதலிக்கவைத்து அந்த காதல்தோல்வியைக்கூட பெருமைப்பட வைததவளை. இல்லை என்றா சொல்லமுடியும். ஆம். காதல் தோல்விதான். நட்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத அற்பனின் அறிவுத்தோல்வி. பதின்மூன்று வருடங்கள் பள்ளியில் படித்ததை வாசல் தாண்டியதும் மறந்தவன் அவளுடன் பகிர்ந்த பத்து நொடிகளையேனும் மறக்கமுடியாமல் தவிக்கும் மறதித்தோல்வி. ஆயிரம் பெண்களைக் கடந்தபோதும் அசராத மனம் அவள்  போனபோது ஆடிப்போனதே அந்த தன்னம்பிக்கைதோல்வி. அவள் என்னை ஒரு மேகமாக நினைத்து கடந்துபோயிருந்தாலும் நான் அவளை வானமாக நினைத்து அழுது அழிந்துபோனேனே அந்த வாழ்க்கைதோல்வி. இத்தனையும் இந்த இரும்பு இதயத்திடம் சொல்லி ஆறுதலா பெறமுடியும்? அவனவன் வலிக்கு அவனவனே உரிமையாளன். அடுத்தவன் வெறும் வேடிக்கையாளன் மட்டுமே.

'ஏன் என்னைப் பிடிக்கல'

'பிடிக்கலனு இல்ல..எனக்கு இப்ப காதல் வேணாம்..'

'நான் காத்திருக்க தயாரா இருக்கேன்.'

'எனக்காக நீ ஏன் காத்திருக்கணும். இங்க பாரு ஆதி. எனக்குனு எவ்ளவோ கனவுஇருக்கு. அததேடித்தான் என் வாழ்க்கை. உன் லட்சியங்கள தேடி நீ போ.சாதிச்சு காட்டு.'

'ஆனா என் லட்சியமே நீதான்.'

'போடா'

கடைசியாக அவளோடு பேசிய வார்த்தைகள் கண்முன் வந்துபோகவும் மதன் கார் பிரேக் போடவும் சரியாக இருந்தது. எங்கே? மதனின் வீடாக இருக்கவேண்டும். இங்கே ஏன் என்னைக் கூட்டிவரவேண்டும். காதலில் தோற்று வாழ்க்கையில் தோற்று இப்போது தற்கொலையிலும் தோற்று தோல்வியை மொத்தக் குத்தகைக்கு எடுத்து வந்திருக்கேன். அதை சொல்லி குத்திக்காட்டவா.. இல்லை அறிவுரை சொல்லி இன்னும் அழவைக்கவா..
அவனது வீட்டிற்குள் சென்றதும் அழைத்து ஒரு இருக்கையில் அமரவைத்தான். அழகாகவும் ரசனையாகவும் வடிவமைக்கப்பட்டிருந்த அவனது வீட்டில் கண்களை அலைபாயவிட்டபோது அவனது திருமண புகைப்படம் தென்பட்டது. நன்றாகத்தான் இருந்தது. கொஞ்சம் வினோதமாகவும். விளங்கவில்லையே என்று உற்றுப் பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. அதேநேரம் கையில் தேநீருடன் வந்த அந்த பெண்மணி தேநீர்க்கோப்பையை என்னிடம் தந்துவிட்டு மதனுக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்தார். அவனின் மனைவிதான். இரண்டு கால்களும் சூம்பிபோய் சக்கரநாற்காலியில் தஞ்சமடைந்திருந்தார். மதனின் மனைவி ஒரு அங்கவீனரா? எங்கள் அலுவலகத்திலேயே அழகிலும் திறமையிலும் அனைவரையும் கவர்பவன் அவன். அவனது தகைமைக்கு எப்பேர்பட்ட பெண்ணும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது மதன் என் முகத்திற்கு முன்னால் சொடுக்கு போட்டான். இங்கே அவனது வீட்டிற்கு மீண்டும் திரும்பியவனாக அவனை ஆச்சரியத்தோடு பார்த்தேன்.

'தற்கொலை செய்றவங்க எல்லாம் வெட்கமில்லாதவங்க..' என்றான்.

'உயிரே போகப்போகுது.. இதுல வெட்கத்த மட்டும் வச்சு என்ன செய்யப்போறோம்.' என்றேன். இருவருமே சிரித்துவிட்டு என்னை ஆறுதலோடு பார்த்தார்கள். எனக்குள் ஏதோ வித்தியாசம் உணர்ந்தேன்.

'அண்ணா.. இவரு கார்ல வரும்போதே போன் பண்ணி உங்கள பத்தி சொல்லிட்டாரு. காதல் தோல்வியால தற்கொலை பண்றவங்கதான் உண்மையாவே அதிகமா வாழ ஆசைப்பட்டவங்களா இருப்பாங்க. அந்த ஆசைய ஏன் ஒரு தோல்வி நிர்மாணிக்குது. நாங்க ரெண்டுபேரும் காதலிச்சிட்டு இருக்கும்போது எனக்கு இப்பிடி ஆயிடுச்சு. அவங்க வீட்ட எதிர்த்து என்னை கல்யாணம் பண்ணாரு.என்னால ஒண்ணும் செய்யமுடியாது. ஏன் வாழணும்னு நானும் நின்ச்சிருக்கேன். ஆனா ஒவ்வொரு நாள் எழும்பும்போதும் அவர் சின்னப்பிள்ளை மாதிரி சிரிக்குறத பாக்குறது எவ்வளவு சந்தோசம் அதுக்காகத்தான் நான் வாழுறேன்.'

சொல்லிவிட்டு பெருமையா மதனைப் பார்த்தார். எனக்கு என்னமோ செய்தது.

அவன் எழுந்து கதவைத் திறந்தான். என்னைப் போக சொல்கிறானா? நான் எழுந்து கதவைநோக்கி சென்றேன். 'இனி நீ தற்கொலை செய்ய நினைக்கமாட்டேனு தெரியும். எப்பிடி வாழுறதுனு மட்டும் யோசி' என்றான். அவனது வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் மனது இலகுவானது. என்னை மனச்சிறையில் அடைத்துவிட்டு சிறகுவிரித்து பறந்து சென்ற அவளும் சரி, இத்தனை நாள் இவ்வளவு உன்னதமான வாழ்வை வாழ்கிறான் என அடையாளம் காணப்படாத மதனும் சரி, என்னிடம் ஒரே ஒரு முறை பேசினாலும் உள்ளத்தை உலுக்கிச் சென்ற சகோதரி..  மதனின் மனைவி.. அனைவருக்குமே வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்ற கலை நன்றாக தெரிந்திருக்கிறது. கிடைத்தவற்றில் திருப்திபடவும் பிடித்தவற்றில் முழுமைபடவும் தெரிந்தவர்களாலேயே வாழ்க்கையை இனிமையாக்கமுடியும். எப்படியோ இன்னைக்கு நான் சாகல. இயற்கையோ அல்லது விபத்தோ எப்பயாவது நான் சாகத்தான் போறேன். அதுவரைக்கும் நான் வாழுவேன். அவளை மறக்கமுடியுமா? மறக்கப்போறேனு நான் சொன்னேனா? என்னையறியாமல் என் உதடுகள் ஒரு பழைய பாடலை முனுமுனுத்தது 'நானென்றால் அது அவளும் நானும்.'

No comments:

Post a Comment