Wednesday, June 22, 2016

நல்லதோர் வயலின் செய்தே..

'அந்த ஒரு மாற்றம். இருபத்தைஞ்சு வருடங்களின் ஏக்கம். அருகில் வைத்துக்கொண்டு தொலைத்துவிட்டதாக என்னையே ஏமாற்றிக்கொண்டிருந்த ஏமாற்றத்தின் முடிவாக சந்தோசத்துக்கும் நிம்மதிக்குமான தேடல். தேடிப்போகப்போகிறேனா? வாசல்படி தாண்ட முடியுமா? அப்படியா வளர்த்திருக்கிறார்கள். அப்புறம் எப்படி? அதுவாகவே வரப்போகிறது. ஒரு விடுதலை. சிறகடிக்கமுடியாமல் இறக்கைகளுக்குப் போட்டிருந்த விலங்குகளுக்கு விடுதலை. உண்மையில் இது விடுதலைதானா? அல்லது பழகிய சிறையிலிருந்து இன்னும் பாழான சிறைக்கான இடம்மாற்றமா?  எதிர்மறையான எண்ணங்களால் எட்டிப்பார்க்கும் சிறு நம்பிக்கைகூட வற்றிபோய்விடுகிறதே!!' இப்படி நடக்குமா அல்லது அப்படி நடக்குமா என சிறு சஞ்சலமும் பெரும் குழப்பமும் மனதைப்போட்டு ஆட்டிப்படைக்க எப்படி நடந்தாலும் இனி உன்னடியே தஞ்சம் என ஊர் எல்லையிலுள்ள வீரகத்தி விநாயகரிடம் அடைக்கலமானாள் ராதா. எப்போதும் போல இன்றும் அவளது குறைகளை சொல்லி அழ ஒரே ஆதரவு இந்த கல்லுப்பிள்ளையார்தான். இன்னும் முடியவில்லை. ஏதோ குறைகிறது புலம்பித்தீர்ப்பதற்கு. என்ன என்று கூட யோசிக்கவிடாமல் குழப்பியது ஒரு குரல்.

அடடே ஒரு ஆண்மகன்! என்னவாம் அவருக்கு? 'இந்தாருங்க' என்று இரண்டு தடவை என்னை அழைத்தான். ஏன் அவர் அழைப்பதற்கு வேறு யாருமேயில்லையாமா என்றால் உண்மையில் இல்லைதான். கிராமத்து எல்லையில் தனித்து இருக்கும் ஒரு சிறு விநாயகர் கோயிலான அதில் இப்போது தான் மட்டுமே நிற்பதை அவள் உணர்ந்தாள். மெல்ல இரண்டடி எடுத்து வைத்தாள்.

'இங்க மிஸ்டர்.சதாசிவம் வீடு எங்க இருக்குனு தெரியுமா? கிளார்க்கா இருந்து ரிடையர்ட் ஆனவரு..'

ஆமா என்னோட மாமாதான்.. ஆனால் அதை அவள் சொல்லவில்லை. சற்று யோசித்து 'நீங்க?' என்றாள்.

'என் பேரு விஜயசாரதி.. அவரு வீட்டுக்கு பொண்ணு பாக்க வந்திருக்கேன்.'

இப்போதுதான் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் ராதா. வாட்டசாட்டமாக வசீகரத்தோற்றத்துடன் அவன்.. அவர்.. விஜயசாரதிதானே பேர். நேற்று மாமா சொன்ன அந்த விடுதலை.. இல்லை இல்லை மாப்பிள்ளை.. அது வந்து.. அது.. இவர்தானா? இப்ப என்ன செய்வது? ஓடிடுவோமா.. அப்டினா அவருக்கு வீடு எப்படி தெரியும். விலாசம் தெரியாம வேற எங்கயும் போய்டார்னா? எப்படியோ நானும் வீட்டுக்குத்தான் போகணும். திரும்பி பிள்ளையாரைப் பார்த்தாள். சிறு சிரிப்புடன் 'வாங்க நானும் அங்கதான் போறேன்' என்றாள். இருவரும் வெட்டைவெளியான அந்த மண்தரையூடாக கண்ணுக்குத் தெரியும் அளவு தூரத்துலிருக்கும் கிராமத்தை நோக்கி நடந்தார்கள்.

ஒரே ஊர்க்காரி என்றதால பொண்ணு எப்படிப்பட்டவங்க என்று தன்னிடமே இவர் கேட்டால் என்ன செய்வது என்று ராதா யோசித்தாள். சொல்லி சமாளிக்க ஒரு வார்த்தையுமே கிடைக்கல. பேசாம உண்மைய சொல்லிடுவோமா என்று தனக்கு வலது பக்கத்தில் ஆறடி இடைவெளியில் நடந்து வந்துகொண்டிருந்த அவனைப் பார்த்தாள். அவன் கையிலிருந்த மொபைலிலேயே கவனமாயிருந்தான். பேசுவது வேறு நிமிர்ந்து பார்க்ககூட இல்லையே.. நாமளே பேசிடுவோமா? நமக்குத்தான் கேட்பதற்கு எக்கச்சக்கமாக இருக்கிறதே.. அவன் ஏதும் தவறாக நினைத்துவிட்டால்? ஏன் என்று வாயைமூடிக்கொண்டு மீண்டும் அவனைப் பார்த்தாள். அவள் மனது சிரித்தது.

அதுதான் வீடு என்று ராதா அவனுக்கு காட்டினாள். கொஞ்சம் பழசான நடுத்தரமான வீடு. ஏழ்மையானவர்களோ என அவன் ஒரு கணம் நினைக்கமுன் சுற்றியிருந்த மற்றைய வீடுகளையும் பார்த்தான். எல்லாமே சராசரியாக ஒரே மாதிரியாக இருந்ததால் பொதுவாக இங்கே வீடுகள் இதே அம்சத்துடன்தான் இருக்கும் என தீர்மாணித்தான். வீட்டு சுற்றுப்புறத்தை நோட்டமிட்டவாறே வாசலில் காலெடுத்து வைத்தான். அதற்குள் அவனைத்தாண்டிச் சென்ற ராதா தன்னிடமிருந்த சாவியால் கதவைத்திறந்து அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

'இந்த வீட்டு சாவி எப்பிடி உங்ககிட்ட?'

'இது எங்க வீடுதான்'

'அப்ப அந்த பொண்ணு?'

'அது.. நான்தான்.' என்று தயங்கியவாறே கூறிவிட்டு அவனது முகத்தைப் பார்த்தாள்.

அவனோ ஆச்சரியமோ அசடு வழிதலோ இல்லாமல் சாதாரணமாக 'ஓ.. அப்படியா?' என்றுவிட்டு வீட்டிற்குள் வந்து ஒரு கதிரையில் அமர்ந்து முன்பு போலவே அந்த மொபைலில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். வீட்டில் யாரும் இல்லை. மாமா கொஞ்சத்துல வாறேன்னுட்டு போனவர இன்னும் காணல. என்னதான் பெண்பார்க்கவந்தவன் என்றாலும் ஒரு அந்நிய ஆணோடு தனியாக வீட்டில் இருப்பது பதட்டத்தை கொடுத்தது. மெல்ல நகர்ந்து தன் அறைக்கு சென்றாள். இவன் எப்பேற்பட்டவனாக இருப்பான்? மனைவியின் கருத்துகளுக்கு மரியாதை கொடுப்பானா? இல்லை மறுகாதில் வெளியே விடுவானா? யோசித்துக்கொண்டே கண்ணாடிப் பக்கம் திரும்பினாள். அவளது பிம்பம் 'என்ன இப்டி இருக்க? சீக்கிரமா அலங்கரிச்சிக்க' என்று உசுப்பிவிட தன்னிடம் இருக்கும் ஒரு அழகான புடவைக்குள் தாவினாள். இப்ப பாரு எப்பிடி இருக்கு என்று கண்ணாடியிடம் கேட்டாள். போ போ அவர் மயங்கி விழப்போகிறார் என்று கண்ணாடியும் அவளைப் பார்த்து சிரித்தது. இப்படியேவா போறது? ஆ.. காப்பி போட்டுக்கொடுப்போம். அடுப்புடன் சேர்ந்து சில நினைவுகளும் எரிந்தன.

பெற்றோரை இழந்த நிலையில் மாமாவிடம் அடைக்கலம் புகுந்த அந்த சிறுமி அவருடைய மனைவியால் துன்புறுத்தப்படுவோம் என நினைத்துப்பார்த்திருப்பாளா? பள்ளிக்கூடமா.. அப்படி என்னதான் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று எழும் கேள்விக்கு பதிலே காணாமல் படிப்பை தொலைத்த கதையைத்தான் மறப்பாளா.. மாமாவின் பிள்ளைகளுக்கு கிடைக்கும் சலுகைகள் தனக்கும் வேண்டும் என அவள் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் ஒரு பெண்பிள்ளைக்கென செய்யவேண்டிய சில கடமைகளையாவது தனக்காக செய்தார்களா? சமையல் செய்யும் அவளுக்கே மிஞ்சாது சாப்பாடு... கால் அமுக்கிவிட்டாலும் எட்டிஉதைக்கும் அத்தையுடன் படும்பாடு.. இந்த வீட்டையே சுற்றிவரும் செக்குமாடு.. இதானே என் வாழ்க்கை.

காப்பியை அவனிடம் நீட்டினாள். அவள் முகத்தைப் பார்க்காமல் மொபைலைப் பார்த்தபடியேவாங்கி குடித்தான். அவள் சற்று விலகி நின்றாள். பார்க்கவேமாட்டேன்கிறான். அலங்காரம் எல்லாம் விண். பேசாமல் அறைக்குள்ளேயே சென்றுவிடுவோமா.. மாமா வந்தவுடன் அவருடனேயே பேசட்டும். நமக்கென்ன வந்தது. ரொம்பத்தான் பண்றாரு. அறைக்குள் சென்றும் மனம் குமுறினாள். நான் என்ன பேயா பிசாசா.. பொண்ணு பார்க்க வந்துட்டு போனைப் பார்த்துட்டு இருந்தா? நிறுத்தி.. அவளைப் பற்றி அவளே நினைத்து தலையில் தட்டிக்கொண்டாள். இப்படியெல்லாம் நீ பேசுவியா என்று சிரித்தாள். வெளியே லேசாக தலையை நீட்டிப் பார்த்தாள். அவன் அங்கே இல்லை. எங்கே போனான். பின் வாசலடியில். எதைப் பார்த்து சிலைபோல் நிற்கிறான். அவன் அருகில் மெல்ல நடந்தாள்.

அவன் பருகிய காப்பி கப் கழுவி பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. நாகரீகமானவன். அவன் பார்த்துக்கொண்டிருந்த மூலையில் தன்னுடைய பழைய வயலின் இருந்தது. ஆசையாக வாங்கியது. வயலின் என்றால் உயிராச்சே. நல்லா வாசிக்கவும் கற்றுக்கொண்டாயிற்று. ஆனால் வாசிக்கத்தான் உரிமையில்லை. வாங்கிய வயலின் வீட்டின் பின்பக்க குப்பைகளோடு குடிபுகுந்தது. வீட்டு வேலை செய்யவே இவளுக்கு நேரமில்லை இந்த கேட்டுல வயலினோட உட்கார்ந்துட்டா.. இவ வாசிச்சுதான் மழை வரப்போகுது.. இது அத்தை கடைசியாக தன்னை வயலினோடு பார்த்தபோது கூறிய வார்த்தைகள். அதற்கு பிறகு இப்போதான் அந்த வயலினையே பார்க்கிறாள். அவன் திரும்பி அவளை கோபமாகப் பார்த்தான்.

'இது யாரோடது?'

'என்னோடதுதான்.'

'அருமை தெரியாட்டி அத ஏன் வாங்குறீங்க? எங்கயோ யாருக்கோ தன்னோட இசையால சந்தோசம் கொடுக்கவேண்டிய இந்த வயலின் இங்க வெய்யில்லயும் மழையிலயும் குப்பைக்குள்ள இருந்து அழியணுமா?'

அதே ஆவேசத்துடன் போய் அந்த வயலினை எடுத்தான். ஒட்டியிருந்த அழுக்குகளை சுத்தம் செய்தான். இனி இது எங்கிட்டத்தான் அப்பிடினு திரும்பி சொல்ல வந்து நீர் வழியும் அவளது விழியில் சிக்கி சற்று திகைத்து நின்றான்.

'ஏன் அழுறீங்க?'

அவள் ஓடிவந்து அவன் தோளில் சாய்ந்தாள். அவன் நிலைகுழைந்தான். அட இது எதிர்பார்க்காததுதான். விலக்கவும் அவகாசம் கொடுக்காமல் அவள் அழுதுகொண்டே இருந்தாள். என்ன இந்த பொண்ணு இப்பிடி பண்றாளே.. தள்ளிவிட்டுடுவோமா?

'அழியுற நிலையிலதான் இருக்கு. ஆயிரம் கனவுகளை சுமந்து பூமிக்கு வந்து அனாதையா போகவழியில்லாம அடைக்கலம் தந்தவங்ககிட்டயும் அன்பில்லாம அவங்கள தாண்டி போகவும் முடியாம கொடுமையான வாழ்க்கையில சிக்கித் தவிக்குது. இப்போ உங்க கையில இருக்கு. நீங்களாவது..' என்று முடிப்பதற்குள் வாசலில் ஏதோ சத்தம் கேட்டு தன்னிலைக்கு வந்தவள் சட்டென அவனிடம் இருந்து விலகி அறைக்கு ஓடினாள். நடுவில் ஒருக்கா திரும்பி பார்த்தா பார்வையில் ஆயிரம் கேள்விகளுடன். என்கிட்ட என்ன பதில் இருக்கு? அவள் வயலினைப் பற்றியா இப்படி அழுதுவிட்டுப் போகிறாள்? அவள் கண்ணீரால் நனைந்த சட்டையுடனும் கையில் பிடித்த வயலினுடனிம் ஹாலுக்கு செல்கிறான். அங்கே அவனது உயரதிகாரி சங்கர் இருந்தார். இவனைப் பார்த்ததும் சிரித்து அட அட வாங்க எப்போ வந்தீங்கனு வரவேற்றார். பக்கத்தில் ஒரு வெற்றிலைவாய் ஆசாமி. அவளது மாமா..அந்த சதாசிவமாக இருக்ககூடும். அவன் போய் இருக்கையில் அமர்கிறான்.

'ஏன்மா.. வாசல பூட்டிட்டு கோயிலுக்கு போய்ட்டு வர இவ்ளோ நேரமா? நாங்க காத்திருந்து அலுத்துட்டு அப்பொறம் காலாற நடந்துட்டுவந்தோம்..சரி சரி கொஞ்சம் முன்னுக்கு வா' என்று அந்த சதாசிவம் அழைக்க சற்றுமுன் நடந்த சம்பவத்தால் அடைந்த நாணத்திலிருந்து விலகாமல் அவர்கள்முன் கொலுபொம்மைபோல வந்து நின்றாள் ராதா. விஜயசாரதி அமர்ந்திருந்தான். அவள் இதழில் தானாகவே ஒரு சிறுநகை அரும்பியது. அப்பொறம் மாமா.. அவருக்குப் பக்கத்தில் ஒரு வயசானவர். அவனின் உறவுக்காரராக இருக்கக்கூடும். வந்ததற்கு அவருக்கும் ஒரு வணக்கத்தை வைத்தாள்.

'ராதா ரொம்ப அடக்கமான பொண்ணு. அதிகம் படிக்கலதான். ஆனா அன்பா அரவணைப்பா நடந்துக்குவா.' தன்னைப்பற்றிய மாமாவின் வார்த்தைகளால் நிஜமாகவே பூரிப்படைந்த அவள் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள். அவன் எந்தவிதமான உணர்ச்சியும் காட்டாமல் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தான். 'வீட்டுல மத்தவங்க எல்லாம் ஊர்த்திருவிழாவுக்குப் போயிருக்காங்க. அதான் பெரிசா ஏற்பாடு செய்யமுடியல' என்று தொடர்ந்த சதாசிவம் ராதாவைப்பார்த்து 'மாப்பிளைக்கு காப்பி கொடும்மா' என்று சொல்ல 'ஏற்கனவே கொடுத்துட்டேன் மாமா' என்று மெல்லியகுரலில் பதிலளித்தாள். 'என்னம்மா சொல்ற? வீடு பூட்டியிருந்ததால நானும் மாப்பிளையும் ஏரியை சுத்திப்பாத்துட்டு இப்பதானோ வாறோம்..நீ என்ன காப்பி கொடுத்துட்டேனு சொல்ற?' என்று நிறுத்த ராதா புரியாமல் குழம்பியை பார்வையோடு விஜயசாரதியைப் பார்த்தாள். சதாசிவம் அவளது பார்வையை கவனித்து ஏதோ தப்பு நடந்திருக்கவேண்டுமென ஊகித்து 'இவர்தான்மா மாப்பிள்ளை..சங்கர். ஒரு பெரிய கம்பெனில பெரிய உத்தியோகம் பாக்குறாரு. உன்னைப் பார்த்தும் பிடிச்சிருக்குனு சொன்னாரு. தம்பி அவருக்கு கீழ வேல பாக்குறவரு. மாப்பிளக்கு உறவுக்காரங்க யாரும் இல்லாததால தம்பியக் கூட்டிட்டு வந்தாரு' என்று மாமா சொல்வது கனவாக இருந்துவிடக்கூடாதா என அவள் மனம் தவித்தது. அவள் அழுவது அவளுக்கே தெரியவில்லை. ஏன் மாமா இப்பிடி பண்ணீங்கனு கத்தணும்போல இருந்திச்சு. அவனைப் பார்த்தாள். அவன் பார்வையில் வெறுமைதான் இருந்தது. எந்தப் பதிலும் இல்லை.

'எனக்கு வசதி நிறைய இருந்தாலும் இந்த வயசுல என்னை கவனிக்க யாரும் துணையா இல்லை. ராதாவயும் உங்களயும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, கூடிய சீக்கிரம் கல்யாணத்தை வச்சிக்கலாம்'னு அந்த பெரியவர் கூறுவதையும் அதற்கு தன் மாமா சிரிச்சிக்கிட்டு தலையாட்டுவதையும் விரக்தியோடு பார்த்தாள் ராதா. இவ்வளவும்தான் என் வாழ்க்கையா வினாயகா..என்னை ஏமாத்திட்டியே என்று அவள் சோர்ந்துபோகும்போது அங்கே இன்னொரு இதயமும் துவண்டுபோயிருந்தது.

'நான் என்ன தப்பு செய்தேன். ஏன் என் மனம் வலிக்கிறது? பொண்ணு பார்க்க வந்திருக்கேனு சொன்னேன். ஆனா எனக்குத்தான் பொண்ணு பார்க்க வந்திருக்கேனு சொன்னேனா? நான் அவளை ஏமாத்திட்டேனா? இல்லை அவளா நினைத்து ஏமாந்ததற்கு நான் பொறுப்பா?'

இதற்குமேல் அனுமதிக்கூடாதென்று எழுந்து அவளிடம் போய் 'நான் எனக்கு பொண்ணுபார்க்க வரல. ஆனா எனக்கு பொண்ணு கிடைச்சிருச்சு. உனக்கு சம்மதம்னா இப்பவே என்கூட வா' என கை நீட்டிய அவனை இன்னுமே நம்பிக்கையில்லாமல் பார்த்தாள். இதுவும் கனவுதானா? 'எவன்டா அவன் ஊர்பைர் தெரியாதவன் என் வீட்டு படியேறி திமிராப் பேசுற'னு மாமா சண்டைக்கு வரவும்தான் அவள் சுய நிலைக்கே வந்தாள். அவனை நிஜமாத்தான் சொல்றியா என்ற அர்த்தத்துடன் பார்தாள். அவன் அவளது மாமாவின் பக்கம் பொறுமையாக திரும்பி 'உங்ககிட்ட ஒன்னே ஒன்னு கேக்குறேன். உங்க சொந்த பொண்ண இப்பிடிப்பட்டவருக்கு கட்டிக்கொடுப்பீங்களா?' அவன் கேட்ட திடீர் கேள்வியால் அடுத்த அடி வைக்கமுடியாமலும் அடங்காத கோபத்தால் பின்வாங்கவும் முடியாமல் அதே இடத்தில் இருந்தார். அதே பொறுமையுடன் சங்கரிடம் திரும்பி 'ஸாரி சார். உங்களுக்கு பொண்ணு பார்க்கத்தான் வந்தேன். ஆனா வயசாகியும் கல்யாணம் ஆகாம கஷ்டப்படுற எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்க. அப்பிடி இல்லாட்டி கல்யாணம் ஆகி கணவனை இழந்து ஒரு துணைக்காக ஏங்குறவங்கங்களும் நிறைய இருக்காங்க. அந்தமாதிரி உங்க வயசுக்கு பொருத்தமா ஒரு பொண்ணைப் பாருங்க சார்.. அதுக்கும் நான் துணைக்கு வாரேன். இப்பிடி சின்னபெண்ணு வாழ்க்கையை வீணாக்கி நீங்களும் நிம்மதி இழந்து வாழவேணாம் சார்' என்று கூறிவிட்டு பதில் எதிர்பார்க்காமல் ராதாவின் பக்கம் திரும்பினான். சட்டென மாமாவின் காலில் விழுந்த ராதா நான் போய்ட்டு வாரேன் மாமா என்றாள். ஒரு கையில் அவளது கையைப் பிடித்து மறு கையில் அவளது வயலினையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான் விஜயசாரதி.

Saturday, April 30, 2016

தோத்தவங்க...

பிடிக்கலனு சொல்லி விட்டுட்டு போன பழைய காதலிக்கு முன்னால இப்போ நான் ஒரு முதலாளி. அவளோட புருஷன், நான் தனிமனுசனா கட்டி உருவாக்கின என்னோட கம்பெனில இப்போ ஒரு அஸிஸ்டன்ட் மேனேஜர். காதலுக்காக அவ காலடில காத்திருந்த காலம் போய் கண்ணை தொடைச்சிகிட்டு ஏதாவது செய்யனும்னு கிளம்பினதோட பலன்தான் இந்த மாபெரும் கணனித்தொழில்நுட்ப சாம்ராஜ்ஜியம். நானும் காதலிச்சேன். கவிதையெல்லாம்கூட எழுதினேன். கவிதையை பிடிச்ச அவளுக்கு என்னை மட்டும் பிடிக்கல. அவ விட்டுட்டு போனபிறகுதான் நான் யார்னு எனக்கே தெரிஞ்சிது. என்னைப் பத்தி நான் சொன்னேன். அவளுக்கு புரியல. சரி அப்ப என்னைப் பத்தி இந்த உலகத்தையே சொல்லவைப்போம். அப்பவாவது அவளுக்கு புரியுமானு... இப்ப புரிஞ்சிருக்கும். இதோ என் கம்பெனி ஆண்டுவிழாவில் தன் கணவனோடு அவள். என்னை பார்த்துக்கொண்டிருந்தாள். பார்க்கத்தானே வேணும். அதுக்காகத்தானே இந்த பகீரதப்போராட்டம். உன்னை ராணி மாதிரி வச்சுப்பேனு நான் அழுதேன். அந்த கண்ணீரை உதாசீனப்படுத்திட்டு உயர்ரக மாப்பிள்ளைக்கு உறுதுணையானாள். ஆனா இப்ப என் மனைவி உண்மையிலேயே ஒரு ராணி. இவளை மாதிரி பல பெண்கள் பக்கத்துல நின்னு புகைப்படம் எடுக்கணும்னு ஆசைப்பட்ற அளவு ராணி. அதயும் பார்க்கட்டும். வேற எதயாவது விட்டுட்டேனா? ஆஹ் சம்பளத்தை உயர்த்தி தர சொல்லி கேட்ட அவ கணவனுக்கு இன்னைக்கு அவ கண்ணு முன்னால போனஸ் கொடுக்கப்போறேன்.

பிடிக்கலனு சொல்லி விட்டுட்டு போன பழைய காதலிக்கு முன்னால இப்போ நான் ஒரு நோயாளி. உன்னை பைத்தியமா காதலிக்குறேன்னு அவ முன்னால போய் சொன்னப்போ காதல் என்ற ஒரு விசயம் மட்டுமே இல்லாம அவ கண்டிப்பா சாதிக்ககூடிய ஒரு அட்டவணை ஒண்ணு சொன்னா. அது அடுத்த பதினைஞ்சு வருசத்துக்கான கணக்கு. அத முடிச்சுட்டு அதுக்கு அடுத்த இருபது வருசத்துக்கான கனவுனு அதவிட பெரிய இன்னொரு அட்டவணை சொன்னா. அத கண்டிப்பா சாதிக்கணுமாம்.கனவுகளை சுமக்குற இதயத்துல காதலுக்கு இடமில்லைனு சொல்லிட்டு போய்ட்டா. அவ போய்ட்டா. ஆனா நான் எப்பிடி மறப்பேன். எனக்கும்தானே கனவு இருக்கு. அவகூட சாகுறவரைக்கும் சந்தோசமா வாழணும்னு. அப்போ என் கனவு என்ன ஆகுறது? அழுது வடிந்த கண்ணீரில் ஆறாய் ஓடினேன். என் கடலுடன் கலக்கமுடியாமல். போதைக்கு அடிமையாயிட்டேனு எல்லாரும் சொன்னாங்க. அந்த போதைவஸ்துக்கள் அவளது ஞாபகங்கள் அளவுக்கு வலிமையானவையல்ல. உடம்புல எத்தனையோ வியாதி வந்து குடியேறின. தற்கொலை செய்றவனுக்குகூட ஒருநாள் சாவுதான் ஆனா காதலிக்குறவனுக்கு ஒவ்வொரு நொடியும் மரணம். ஆனா அதுகூட பரவாலனு இப்ப தோணுது. இது தேறவே தேறாதுனு கிட்டத்தட்ட அழுகிப்போற உடலோட என்னை ஆஸ்பத்திரில சேர்த்தாங்க. இத்தனை வருஷம் கழிச்சு அவளை ஒரு டாக்டரா இங்க பார்த்தேன். இதோ இதே ஆஸ்பத்திரிலதான். இன்னொரு விசயம் தெரியுமா? அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சாம். அவ புருஷனும் இதே ஆஸ்பத்திரிலதான் டாக்கடராம். கேக்கவே எவ்ளோ சந்தோசமாயிருக்கு.

இத பார்க்கவே எவ்ளோ சந்தோசமாயிருக்கு. போனஸ் வாங்குற அலுவலகர்கள் வரிசையில கடைசியில இருக்கான் ஒருத்தன். இவன் எல்லாம் ஒரு ஆளானு சொல்லி அவனோட பொண்டாட்டியால உதாசீனமா தூக்கியெறியப்பட்டவன் இப்ப அவனுக்கு சம்பளம் கொடுக்குற எஜமான். அவளுக்கு நிச்சயமா வயிறெறியும். மிஸ் பண்ணிட்டமேனு அழக்கூட வாய்ப்பிருக்கு. அதப் பாக்குற வக்கிரபுத்தியா உனக்குனு ஏதாவது ஆள்காட்டிவிரல் என் பக்கம் திரும்பினா... ஆமா வக்கிரபுத்திதான். காதல் வந்ததுக்கு நானா காரணம்? காதலிக்கும்போது என்கிட்ட காசில்லாம இருந்ததுக்கு நானா காரணம்? புது புது டிசைன் வர வர பழைய செருப்பை கழட்டிபோடுற மாதிரி காதல மாத்துற பொண்ணுங்க இருக்குறதுக்கு நானா காரணம்? உண்மையான உணர்விக்கில்லாத மரியாதை பகட்டு வாழ்க்கைக்கு இருக்கே..அதுக்கு நானா காரணம்? தப்பு பண்ணி திருந்துறது தப்பில்ல. பண்ண தப்ப தப்பே இல்லனு சொல்லுறதுதான் தப்பு. தப்பான ஒருத்திய காதலிச்சதுதான் நான் பண்ண தப்பு. என்ன? அப்ப நான் உண்மையா காதலிக்கலனு சொல்றீங்களா? வாற மாசம் வந்தா என் காதலுக்கு எட்டாவது ஆண்டு திவசம். செத்துப்போய் இருந்த தடமே அழிஞ்சு போன ஒன்னு உண்மையா பொய்யானு ஆராயனுமா? அத உங்களுக்கு சொல்லி என்ன பிரயோசனம். புரிஞ்சிக்கவேண்டியவ புரிஞ்சிக்கவேண்டிய நேரத்துல புரிஞ்சிக்கலயே.

என்மேலதான் தப்புனு எல்லாரும் சொல்றாங்க. அவள மறந்திட்டு என் வேலைய பாத்திட்டு நான் போயிருக்கணுமாம். அவள மறக்கமுடிஞ்சிருந்தா மறந்திருப்பேனே.. அவளுக்காக அழுறதுகூட சந்தோசமாயிருந்திச்சு. வாழ்க்கையில தனக்கு என்ன தேவை என்றதுல தெளிவா இருக்குறவங்கதான்
ஜெயிக்குறாங்க. அவளோட லட்சியத்தில அவ தெளிவா இருந்தா. அதுக்காக போராடி அவ ஜெயிச்சா. இன்னைக்கு சமூகத்துல பெரிய டாக்டர். சந்தோசம். அதுக்காக நான் எப்படி தோத்தவனாகமுடியும். எனக்கு என்ன தேவைன்றதுல நான் தெளிவா இருந்தேன். அவதான்... அவ கிடைக்கல. அதனால அவளோட நினைவுகளே போதும்னு வாழ முடிவு பண்ணேன். அதவிட எனக்கு என்னதான் நிம்மதிய கொடுத்திடமுடியும். அதுக்கு எனக்கு இந்த உலகம் கொடுத்த பெயர் வாழத்தெரியாதவன், உருப்படாதவன், முட்டாள். வாழ்கைகயை முழுமையா வாழுறதுக்கு ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு தெரிஞ்சவிசயத்த பிடிச்சவிசயத்த மனப்பூர்வமா நேசிச்சு உணர்வுபூர்வமா அனுபவிச்சு அது ஒன்னே குறிக்கோளா வாழணும். எனக்கு தெரிஞ்சது அவமட்டும்தான்.. பிடிச்சது அவளமட்டும்தான். அந்த வாழ்க்கையை நான் வாழுறேன். அதுல மத்தவங்களுக்கு என்ன பிரச்சினைனே புரியல.

காதலிச்சு தோத்தவன் கடைசிவரைக்கும் கண்ணீர் விட்டுகிட்டேதான் இருக்கணுமா? அப்பதான் அவனோட காதல் உண்மைனு உணர்த்தியதா அர்த்தமா? காதல் யாருக்காக? அடுத்தவங்களுக்கு இதுதான் உண்மைக்காதல்னு பாடம் எடுக்கவா இல்லை நாம சந்தோசமா வாழவா? நாம சந்தோசமா வாழணும்னு ஆசப்பட்டு பண்ற காதல் நம்மயே சவக்குழியில தள்ளினா? இப்பிடி எல்லாக் கேள்விகளும் என் மண்டைக்குள்ள போய் குத்தி குடைஞ்சு செதுக்கி எடுத்த பதில்தான் என் வெற்றி. காதல் என்ற ஒரே விசயத்துல தோத்து வாழ்க்கைய நான் அடைஞ்ச வெற்றிகள் ஆயிரம். என்னை தோக்கடிச்சவ ஆயிரம் பார்வையாளர்களில் ஒருத்தியா இப்ப ஒரு ஓரமா உட்கார்ந்து என் வெற்றியை வேடிக்கை பார்த்திட்டு இருக்கா. காதல் என்னை தோக்கடிச்சது. கோமாளியாக்கியது. ஆனா வாழ்க்கைல வெற்றிபெற்று நான் காதலையே தோக்கடிச்சிட்டேன். வாழக்கிடைக்காத ஒரு அற்புத வாழ்கையையும் எட்டமுடியாத பல அரியவெற்றிகளையும் என்னை ஏளனமா எட்டித்தள்ளிய காதலுக்காக இழக்கப்பார்த்தேன். நல்லவேளை தப்பிச்சேன். ஆனா.. எனக்கு ஒரு நண்பன் இருக்கான். அவனும் என்னை மாதிரி காதல்ல தோத்தவன்தான். ஆனா அந்த மடையன் விட்டுப்போன காதல மறக்காம தன் காதலியையே நினைச்சு போதைக்கு அடிமையாகி வாழ்க்கையையே இழந்து கஷ்டப்படுறான். இப்ப எங்க இருக்கானோ? என்ன பண்றானோ?

நான் என்ன பண்றேன்? என் கல்லறை வாசகத்தின் கடைசிப்பக்கத்தை எழுதிட்டிருக்கேன். கல்லால கல்லறையைக் கட்டினாலும் அதுக்குமேல மென்மையான ரோஜாவ வைக்குறமாதிரி அழிஞ்சு போய்கிட்டிருக்குற என் வாழ்க்கைல அவளோட புன்னகை இதமளிக்குது. இத்தனைக்கும் அவளுக்கு என்னை ஞாபகமே இல்ல. எப்பிடி இருக்கும்? காலம் போனபோக்கில அவள் தடம் பதிச்ச வளர்ச்சியும் என் உடல் இளைச்ச தளர்ச்சியும் அப்பிடி.. ஆனா அதுவும் நல்லதுக்குதான். எத்தனையோ நோயாளிகளுக்கு மருந்தா இருக்குற அவளுக்கு அவளால ஒருத்தன் இப்பிடி ஆயிட்டான்ற குற்றயுணர்ச்சி வேணாமே. மாலைல மறைஞ்சு போனாலும் ராத்திரி வாற நிலவுக்கும் ஒளியை கொடுத்துட்டு போகுதே சூரியன் அந்தமாதிரி பொண்ணு அவ. அவ அப்பிடியே இருக்கட்டும். என்னோட நண்பன் ஒருத்தன் காதல்தோல்வியை சரிகட்டுறேன்னு தொட்ட எல்லாத்தையும் வெற்றியாக்கி இன்னைக்கு அதே காதலிக்கு முன்னால ஒரு தலைவனா இருக்கான். பெரியாளாயிட்டான். அவன் என்னதான் ஒரு சாம்ராஜ்ஜத்தையே ஆண்டாலும் சந்தோசமாவா இருப்பான்? காதல்தோல்வி வலின்றது அவ்ளோ இலகுவா அழியக்கூடியதா? ஆனா நான் சந்தோசமா இருக்கேன். என் காதல் வெற்றியே அவளோட சந்தோசம்தான். அவ ரொம்ப சந்தோசமா இருக்காளே.. அப்போ யாருக்கு வெற்றி? சரி சரி அவ டெஸ்ட் பண்ண வாற நேரம் ஆயிடுச்சு.. இன்னொருநாள் சாவகாசமா பேசுவோம்..நான் சாகாம இருந்தா..

Saturday, April 9, 2016

அவளும் நானும்...


உடலைத் தாங்குவதை விட உயிரைத்தாங்குவது சிரமமாகும்போது தற்கொலை எண்ணம் உண்டாகிறது. ஆயுள் முழுவதும் கஷ்டப்படுவதுக்கு பதிலாக ஐந்து நிமிடம் கஷ்டப்படுவது பெரிதாக இருக்காது. உலகம் முழுவதும் கோழைத்தனம் என்றும் செய்பவர்களுக்கு வீரச்செயலாகவும் தெரியும் தற்கொலைக்கு எண்ணிக்கை அதிகமாக்க என்னை தயார் செய்தேன். இது முட்டாள்தனம் என்றால் அந்த முட்டாள்களில் நானே முதலாமவன் ஆகிறேன். இது தப்பிக்கும் வழி என்றால் தம்பிரான் புண்ணியம் என்று தப்பித்துக் கொள்கிறேன். வாழுறதை விட சாகுறதுக்குதான் அதிக தைரியம் வேண்டும் என்றான் ஒருவன். சாகுறதுக்கு இருக்குற தைரியத்துல வாழ்ந்து பார்த்துவிடு என்றான் இன்னொருவன். கனவுகள் கலைந்து வாழவும் பிடிக்காமல் தைரியம் இல்லாததால் சாகவும் துணியாமல் இரண்டிற்கும் நடுவில் வாழ்வா சாவா சதுரங்கம் ஆடினேன். வாழத்தான் வேண்டும் என்ற பக்கத்தில் வலுவான வாதங்கள் இல்லை. இனி வாழ்ந்தும் பயனில்லை. சாவு என்ற கருப்பு ராணி சந்தோசம் என்னும் வெள்ளை ராணியை வெட்டிவிட்டு உயிர் என்னும் வெள்ளை ராஜாவிற்கு செக் வைத்தது. கருப்பு வென்றுவிட்டது. இனி என் இருப்பு எதற்கு?

போயும் போயும் இந்தாளுகிட்ட மாட்டிகிட்டேனே. சாவை விடக்கொடுமையானது தன்னை புத்திசாலியென்று நினைத்துக்கொண்டு சிலர் பண்ணும் அறிவுரையை சகித்துக்கொண்டு கேட்பது. கார் ஒட்டுபவர் மதன். நான் பணிபுரியும் அலவலகத்தின் பொதுமுகாமையாளர். அவருக்கு அருகில் நான் உட்கார்ந்திருந்தேன். எங்கள் இருவருக்கும் நடுவில் அமைதி உட்கார்ந்திருந்தது. வழக்கமாக அலுவலகத்தில் நான் செய்யும் சிறு பிழையைக்கூட கண்டுபிடித்து மணிக்கணக்காக நிற்கவைத்து விளாசும் மனுசன் இன்று நான் தற்கொலைக்கு முயன்று அதில் தோற்று இவர்மூலமாக காப்பாற்றப்பட்டு அவர் பக்கத்தில் குற்றவுணர்வுடன் அமர்ந்திருக்கும்போது வாயே திறக்காமல் கார் ஓட்டிக்கொண்டு இருந்தார். அவர் பார்க்கும் பார்வைக்கே என்னால் பதில் பார்வை பார்க்கமுடியவில்லையே இதில் வாய்திறந்து கேள்விகேட்டால் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே 'என்ன காதல் தோல்வியா?' என்று கேட்டார்.

இல்லை என்றா சொல்லமுடியும்... நிஜத்தில் தொலைந்து நினைவில் மட்டும் நிறைந்தவளை, நண்பர்களாக நல்லமுறையாகப் பழகி பின் காதலைசொன்னபோது காணாமல் போனவளை, அலுப்பூட்டூம் அறிவுரைகளை அவள் சொல்லும்போதுமட்டும் அழகாக்கியவளை. கண்களில் கனவுகளையும் கால்களில் காற்றையும் பூட்டியவளை, அவளை நினைத்து காதலிக்கவைத்து அந்த காதல்தோல்வியைக்கூட பெருமைப்பட வைததவளை. இல்லை என்றா சொல்லமுடியும். ஆம். காதல் தோல்விதான். நட்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத அற்பனின் அறிவுத்தோல்வி. பதின்மூன்று வருடங்கள் பள்ளியில் படித்ததை வாசல் தாண்டியதும் மறந்தவன் அவளுடன் பகிர்ந்த பத்து நொடிகளையேனும் மறக்கமுடியாமல் தவிக்கும் மறதித்தோல்வி. ஆயிரம் பெண்களைக் கடந்தபோதும் அசராத மனம் அவள்  போனபோது ஆடிப்போனதே அந்த தன்னம்பிக்கைதோல்வி. அவள் என்னை ஒரு மேகமாக நினைத்து கடந்துபோயிருந்தாலும் நான் அவளை வானமாக நினைத்து அழுது அழிந்துபோனேனே அந்த வாழ்க்கைதோல்வி. இத்தனையும் இந்த இரும்பு இதயத்திடம் சொல்லி ஆறுதலா பெறமுடியும்? அவனவன் வலிக்கு அவனவனே உரிமையாளன். அடுத்தவன் வெறும் வேடிக்கையாளன் மட்டுமே.

'ஏன் என்னைப் பிடிக்கல'

'பிடிக்கலனு இல்ல..எனக்கு இப்ப காதல் வேணாம்..'

'நான் காத்திருக்க தயாரா இருக்கேன்.'

'எனக்காக நீ ஏன் காத்திருக்கணும். இங்க பாரு ஆதி. எனக்குனு எவ்ளவோ கனவுஇருக்கு. அததேடித்தான் என் வாழ்க்கை. உன் லட்சியங்கள தேடி நீ போ.சாதிச்சு காட்டு.'

'ஆனா என் லட்சியமே நீதான்.'

'போடா'

கடைசியாக அவளோடு பேசிய வார்த்தைகள் கண்முன் வந்துபோகவும் மதன் கார் பிரேக் போடவும் சரியாக இருந்தது. எங்கே? மதனின் வீடாக இருக்கவேண்டும். இங்கே ஏன் என்னைக் கூட்டிவரவேண்டும். காதலில் தோற்று வாழ்க்கையில் தோற்று இப்போது தற்கொலையிலும் தோற்று தோல்வியை மொத்தக் குத்தகைக்கு எடுத்து வந்திருக்கேன். அதை சொல்லி குத்திக்காட்டவா.. இல்லை அறிவுரை சொல்லி இன்னும் அழவைக்கவா..
அவனது வீட்டிற்குள் சென்றதும் அழைத்து ஒரு இருக்கையில் அமரவைத்தான். அழகாகவும் ரசனையாகவும் வடிவமைக்கப்பட்டிருந்த அவனது வீட்டில் கண்களை அலைபாயவிட்டபோது அவனது திருமண புகைப்படம் தென்பட்டது. நன்றாகத்தான் இருந்தது. கொஞ்சம் வினோதமாகவும். விளங்கவில்லையே என்று உற்றுப் பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. அதேநேரம் கையில் தேநீருடன் வந்த அந்த பெண்மணி தேநீர்க்கோப்பையை என்னிடம் தந்துவிட்டு மதனுக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்தார். அவனின் மனைவிதான். இரண்டு கால்களும் சூம்பிபோய் சக்கரநாற்காலியில் தஞ்சமடைந்திருந்தார். மதனின் மனைவி ஒரு அங்கவீனரா? எங்கள் அலுவலகத்திலேயே அழகிலும் திறமையிலும் அனைவரையும் கவர்பவன் அவன். அவனது தகைமைக்கு எப்பேர்பட்ட பெண்ணும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது மதன் என் முகத்திற்கு முன்னால் சொடுக்கு போட்டான். இங்கே அவனது வீட்டிற்கு மீண்டும் திரும்பியவனாக அவனை ஆச்சரியத்தோடு பார்த்தேன்.

'தற்கொலை செய்றவங்க எல்லாம் வெட்கமில்லாதவங்க..' என்றான்.

'உயிரே போகப்போகுது.. இதுல வெட்கத்த மட்டும் வச்சு என்ன செய்யப்போறோம்.' என்றேன். இருவருமே சிரித்துவிட்டு என்னை ஆறுதலோடு பார்த்தார்கள். எனக்குள் ஏதோ வித்தியாசம் உணர்ந்தேன்.

'அண்ணா.. இவரு கார்ல வரும்போதே போன் பண்ணி உங்கள பத்தி சொல்லிட்டாரு. காதல் தோல்வியால தற்கொலை பண்றவங்கதான் உண்மையாவே அதிகமா வாழ ஆசைப்பட்டவங்களா இருப்பாங்க. அந்த ஆசைய ஏன் ஒரு தோல்வி நிர்மாணிக்குது. நாங்க ரெண்டுபேரும் காதலிச்சிட்டு இருக்கும்போது எனக்கு இப்பிடி ஆயிடுச்சு. அவங்க வீட்ட எதிர்த்து என்னை கல்யாணம் பண்ணாரு.என்னால ஒண்ணும் செய்யமுடியாது. ஏன் வாழணும்னு நானும் நின்ச்சிருக்கேன். ஆனா ஒவ்வொரு நாள் எழும்பும்போதும் அவர் சின்னப்பிள்ளை மாதிரி சிரிக்குறத பாக்குறது எவ்வளவு சந்தோசம் அதுக்காகத்தான் நான் வாழுறேன்.'

சொல்லிவிட்டு பெருமையா மதனைப் பார்த்தார். எனக்கு என்னமோ செய்தது.

அவன் எழுந்து கதவைத் திறந்தான். என்னைப் போக சொல்கிறானா? நான் எழுந்து கதவைநோக்கி சென்றேன். 'இனி நீ தற்கொலை செய்ய நினைக்கமாட்டேனு தெரியும். எப்பிடி வாழுறதுனு மட்டும் யோசி' என்றான். அவனது வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் மனது இலகுவானது. என்னை மனச்சிறையில் அடைத்துவிட்டு சிறகுவிரித்து பறந்து சென்ற அவளும் சரி, இத்தனை நாள் இவ்வளவு உன்னதமான வாழ்வை வாழ்கிறான் என அடையாளம் காணப்படாத மதனும் சரி, என்னிடம் ஒரே ஒரு முறை பேசினாலும் உள்ளத்தை உலுக்கிச் சென்ற சகோதரி..  மதனின் மனைவி.. அனைவருக்குமே வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்ற கலை நன்றாக தெரிந்திருக்கிறது. கிடைத்தவற்றில் திருப்திபடவும் பிடித்தவற்றில் முழுமைபடவும் தெரிந்தவர்களாலேயே வாழ்க்கையை இனிமையாக்கமுடியும். எப்படியோ இன்னைக்கு நான் சாகல. இயற்கையோ அல்லது விபத்தோ எப்பயாவது நான் சாகத்தான் போறேன். அதுவரைக்கும் நான் வாழுவேன். அவளை மறக்கமுடியுமா? மறக்கப்போறேனு நான் சொன்னேனா? என்னையறியாமல் என் உதடுகள் ஒரு பழைய பாடலை முனுமுனுத்தது 'நானென்றால் அது அவளும் நானும்.'

Tuesday, May 5, 2015

மேகமானவள்

கறுப்பானவள், குள்ளமானவள், ஒல்லியானவள்…ஹ்ம்ம்ம் நான் ஏன் இப்படி பிறந்தேன்? அழகான பெண்கள் சூழ்ந்திருக்கும் ஒரு இடத்தில் ஒருநாளாவது மனங்கூசாமல் இருக்கமுடிகிறதா? இப்படியும் ஒரு பெண்ணா என்று எத்தனை கண்கள் என்னை ஏளனமாக பார்க்கிறதோ என்ற படபடப்பிலேயே அனைத்தையும் அணுக வேண்டியுள்ளதே… அழகு என்பது சிவப்புச்சாயத்தில் இல்லை, சிந்தனையிலும் செயலிலுமே இருக்கிறது என மனது எத்தனை முறை ஆறுதல்கூறியும் புத்திக்கு எட்டமாட்டேன்கிறதே… ஹா… உருவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சமூகத்தில் எப்படித்தான் உருவத்தைப் பற்றி அதுவும் ஒரு பெண் கவலைப்படாமல் இருக்கமுடியும். ஒரு பெண் சற்று ஒப்பனை குறைவாக தெரிந்தாலே அடுத்த பெண் அவளது இடத்தைப் பிடித்துக் கொள்ளும் பொல்லாத உலகமிது. அட அவ்வளவேன்… ஒரு ஆணுக்கு திருமணம் பேசும்போது முதல்விடயமே பெண் நல்ல நிறமாக இருக்கவேண்டும் என்றுதானே கேட்கிறார்கள் கறுப்பான ஆண்கள்கூட… அப்படியே யாராவது அதிசயமாக நிறத்தை பார்க்காமல் மனதைப்பார்த்து திருமணம் செய்தாலுமே போயும்போயும் ஒரு கறுப்பியை கல்யாணம் செய்திருக்கிறானே என அவர்களை கேலிபேசும் சாக்கடைசமூகம்.

‘என்னடி.. கண்ணாடிய பாத்துகிட்டே நிக்குற, வெளிக்கிட இவ்வளவு நேரமா? மாப்பிள வீட்டுக்காரங்க வந்து காத்துகிட்டு இருக்காங்க. இந்தா இந்த காப்பியக் கொடுத்துட்டு எல்லாரையும் நமஷ்காரம் பண்ணிக்கோ. இந்த இடமாவது முடியோணும்’

மகளைப் பற்றிய கவலையை மனதில் தாங்கிக்கொண்டு கையில் காப்பியைக் கொடுத்த தன் தாயை பரிவோடு பார்த்த மேகலா ‘இருந்தாலும் உனக்கு ரொம்ப ஆசைதாம்மா’ என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.

பெரிய கூட்டமில்லாமல் ஒரு தாயும் மகனும் மட்டுமே இருந்ததால் பலரது பார்வைகளை ஒரேநேரத்தில் எதிர்கொண்டு மனதிற்குள்ளேயே நெழியவேண்டியிருக்காது என ஒரு பெருமூச்சுடன் அவர்களுக்கு எதிரில் சென்று முதலில் அந்த பெண்ணிற்கு காப்பி கொடுத்தாள். மிகவும் சாந்தமாகத் தெரிந்த அந்த பெண்மணி ஒரு இனிய முறுவலுடன் அதைப் பெற்றுக்கொண்டாள். அடுத்து அமர்ந்திருந்த அந்த ஆள் வைத்தகண் வாங்காமல் மேகலாவையே பார்த்துக்கொண்டிருந்தான். தன்னிடம் வந்த காப்பியைக்கூட அவளைப் பார்த்துக்கொண்டே எடுத்தான். அவளுக்கு ஒருவித கூச்சம் ஏற்பட சற்று பின்வாங்கி அனைவருக்கும் பொதுவாக ஒரு வணக்கம் வைத்துவிட்டு உள்ளே சென்றாள். இப்படி எத்தனை சந்தர்ப்பங்களை திரும்பத் திரும்ப அனுபவித்திருப்பாள். அவள் தந்தை ஊரில் நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருப்பவர். அவருக்காக சும்மா பேச்சுக்கென்று பெண்பார்க்கும் படலங்களை நிகழ்த்திவிட்டு ஏற்கனவே முறைப்பெண் இருக்கிறது அவர்கள் கோபிப்பார்கள், மகனுக்கு இப்பொழுது திருமணத்தில் விருப்பம் இல்லை, இந்த இடம் சரிவராதென்று குடும்ப ஜோசியர் கூறுகிறார் இன்ன இன்னவாறு பலகாரணங்களை கூறிக்கொண்டு ஒவ்வொருத்தரும் நழுவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். காத்துக்காத்து பூத்துப்போன கண்களுடன் பெற்றோரும் முழு முனைப்புடன் அடுத்த வரனை பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். பெற்றோரின் மனது காயப்படக்கூடாதென்பதற்காக தானும் தன்னைப் பார்க்கவருவோரின் முன்பாக ஒரு கொலுபொம்மையாக சென்றுநிற்பாள். அதேபோல தன்னை பிடிக்கவில்லை என்று நிராகரிப்போரின்மீது அவள் கோபம் கொள்வதும் கிடையாது. தனக்கு ரதிபோல ஒரு பெண்ணை மனைவியாக்க கனவுகாணும் கணவான்கள் இப்படி ஒரு கறுப்பியை மணக்க எப்படி முன்வருவார்கள் என மனதை சாந்தபடுத்திக் கொள்வாள். ஆனால் திருமண சந்தையில் ஆண்கள் தங்கள் ஆசைகளை முடிந்தளவு நிறைவேற்றிக்கொள்வதாகவும் பெண்கள் நினைத்தது கிடைக்காவிடில் கிடைத்ததை நினைக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்களோ என அவள் மனம் சிலநேரம் பழுங்கும். திருமணமே செய்யாமல் தனக்கு விருப்பமான சமூகசேவையில் காலத்தைக் கழித்துவிடலாமா என்ற எண்ணம் எழுந்தால்கூட தன் ஒரே பிள்ளையை ஒரு நல்ல பையனிடம் ஒப்படைத்து அவள் சந்தோசமாக வாழ்வதைக் கண்ணாற காண்பதற்கு தவமிருக்கும் பெற்றோருக்காக அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டு மீண்டும் அந்த பெண்பார்க்கும் நாடகத்தில் நாயகியாகச் சென்று நிற்பாள். எப்படியோ இன்று நாடகம் நல்லபடியாக முடிந்தது என அவள் நினைத்துக் கொண்டிருக்கும்போது அவளது தாய் மகிழ்ச்சியோடு ஒடிவந்து அவளைக் கட்டியணைத்தாள்.

‘மாப்பிள்ளைக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்காம். எப்பவேனா கல்யாணத்த வக்கசொல்லிட்டாங்க’ என்று சந்தோசத்தில் திக்குமுக்காடினார்.
இப்படி ஒரு விடயத்தை அவள் கொஞ்சங்கூட எதிர்பார்க்காததால் அதை கேட்டமாத்திரத்திலே கல்லாட்டம் அப்படியே நின்றாள். திருமணம் சம்பிரதாயம் என்பதை தாண்டி தன்னை ஒருவன்…. ஒருவர் பிடித்திருக்கிறது என்று சென்னதுதான் அவளுக்கு அதிர்ச்சி இல்லையில்லை இன்ப அதிர்ச்சியாக உள்ளது. காரணம் தன்னுடன் படிக்கும் சகமாணவிகள் காதலிக்கும் ஆடவர்களோடு நெருங்கிப்பழகும் சந்தர்பங்களை உடனிருந்து பார்க்கும்போது தன்னையே ஆட்கொள்ள ஒருவன் வரமாட்டானா… அவனது ஸ்பரிசத்தின் வெப்பத்தில் குளிர்காயமாட்டோமா என்று ஒரு கன்னியாக கனவுகண்டு அது பலிக்காமல் போன பல சந்தர்ப்பங்களில் மனமெனும் அணை உடைந்து கண்ணீர் எனும் ஆறு பெருக்கெடுக்கும். அட இதுபோல சுத்த தமிழில் கவிதையாக வார்த்தைகளைக் கோர்க்கலாம். ஆனால் வலியை உணரத்தான் முடியும். ம்ம்ம் தெருவில் செல்லும்போதுகூட அவளை அருவருப்புடன் பார்த்து ஒதுங்கும் ஆண்களை நினைக்கும்போது நிறத்தைவைத்துமட்டும் ஒரு பெண்ணை எடைபோடும் இவ்வாறான ஆண்களுடன் பழகுவதைவிட ஒதுங்குவதே மேல் என்று தோன்றும். இன்று…

‘ஏய் மேகலாக்குட்டி.. மாப்பிள்ள உங்கிட்ட தனியாப்பேசணுமாம். போடி போய் பேசு.. கடவுள் இன்னிக்குத்தான் கண்ண தொறந்திருக்கான்.’ என்று வாயெல்லாம் பல்லாக தாய் சொல்லும்போது என்னதான் தன்னை பிடித்திருக்கிறது என்று சொன்னவுடனேயே அந்த மனிதர்மீது ஒரு ஈர்ப்பு வந்ததை அவள் உணர்ந்தாலும் முதன்முறையாக அவரிடம் பேசச்செல்லும்போது ஏனோ இந்த வெட்கத்தை தடுக்கமுடியவில்லை. புரட்சி பேசி என்ன? புதுமைப்பெண் என்று புகழ்ந்துதான் என்ன? இயற்கையாக பெண்பிறவிகள் வாங்கிவந்த வெட்கத்தை எப்படி முழுவதுமாக கலைவது… அதுவும் இந்த இடத்தில் நிச்சயமாக அது முடியாது என்பதை உணர்ந்த மேகலா தடுக்கமுடியாமல் வெட்கத்தில் திளைத்துநின்றாள்.



கம்பீரமான ஒரு இளைஞன் அவள் அருகில் வர அவள் நெற்றி வியர்க்க ஆரம்பித்தது. அந்த ஈரத்தை காயவைக்கும்விதமாக அனல்காற்றாக மூச்சுவாங்கினாள். அவன் வந்து அவள் பக்கத்தில் அமைதியாக நின்றான். பேச்சை தொடங்குவான் என்று எதிர்பார்த்த அவள் அவன் அதை செய்யாததால் ஆச்சரியத்தோடு அவனை நிமிர்ந்து பாரத்தாள். அவன்… அவன் அவளது வெட்கத்தை ரசித்துக்கொண்டிருந்ததை உணர்ந்து அவளது வெட்கம் இன்னும் அதிகமாகி உடல்கூசிப்போனாள். ஒரு சிறு முறுவலுடன் அவன் பேச ஆரம்பித்தான்.

‘என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா?’

‘…………….. ஹ்……. ம்ம்’

‘அப்டினா’

‘…………………………’

‘பிடிக்கலயா’

அவள் வெடுக்கென ‘பிடிச்சிருக்கு’என்றாள்

‘தாங்க்ஸ்… அப்புறம்.. ம்ம்ம் உங்ககிட்ட நிறய பேசணும்னுதான் தோணுது. ஆனா …ம்ம் ஹா. முடியலங்க. நீங்களே ஏதாவது பேசுங்களே ப்ளீஸ்’

‘நான்…. நான் ஒண்ணு கேட்டா தப்ப நினைக்கமாட்டீங்களே?’

‘ம்ம்… என்ன கேளுங்க’

‘அது வந்து… நான் அவ்ளோ அழகில்ல. அதனால….வந்து.. நீங்க எதனால என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னீங்க?’

‘ஏன் உங்கள நீங்களே தாழ்வா நினைக்குறீங்க? ஒருத்தர பிடிக்குறதுக்கும் பிடிக்காததுக்கும் ஆயிரம் விசயங்கள் இருக்கு. நான் சொல்றதால வருத்தப்படாதீங்க. உங்கள பொண்ணுபார்க்க வந்தவங்கல்லாம் டக்குனு உங்கள பார்த்துட்டு நீங்க நிறம் கம்மி அதால பிடிக்கலனுட்டு போயிட்டாங்க. அதுக்குமேல எவ்வளவோ விசயம் இருக்கு. அத பத்தி தெரிஞ்சிக்ககூட அவங்க விருப்பப்பட்டு இருக்கமாட்டாங்க. உங்க அப்பா ரொம்ப நல்லவர். அவர் பொண்ணுங்குறதால மட்டும் இல்லை. உங்கள பார்க்க வர்ரதுக்கு முன்னால தீர விசாரிச்சேன். காரணம் எனக்கு நீங்களும் உங்களுக்கு நானும் பொருத்தமா இருப்போமானு தெரிஞ்சிக்க. குடும்பத்த பொறுப்பா கவனிச்சிக்குறது, பொரியவங்ககிட்ட ரொம்ப மரியாதயா பழகுறது, விருந்தாளிகள நல்லா உபசரிக்குறது, ஆடம்பர செலவுகள தவிர்க்குறதுன்னு உங்ககிட்ட நிறய பிளஸ்பாய்ன்ற் இருக்கு. அதுமட்டுமில்ல. கிட்டத்துல குழந்தங்க போன ஒரு பஸ் விபத்துல மாட்டினப்போ அங்க இருந்த நீங்க அந்த குழந்தங்கள காப்பாத்த கஷ்டப்பட்டது மட்டுமில்லாம உங்க ரத்தத்தகூட தானம் பண்ணி எத்தனயோ உயிரக் காப்பாத்தினீங்க. அதுல என் அக்கா குழந்தையும் ஒண்ணு. இப்பிடி உங்க குணம் எல்லாமே எனக்கு பிடிச்சதனால நீங்க எனக்கு பொருத்தமாயிருப்பீங்கனு நான் முடிவுபண்ணிட்டேன். நான் உங்களுக்கு பொருத்தமான்னு உங்களுக்கு படுதா?’


எத்தனை பெரிய ஆள் இவன்… எல்லாவிடயத்தையும் மேலோட்டமாக பார்த்து நுனிப்புல்மேயும் இந்த சோம்பேறி சமூகத்தில் எப்படிப்பட்ட மனிதன் இவன். அழகு ஒன்றுமட்டும் இருந்தால் போதும் உடனே அடிமையாகிவிடுவோம் என்று அலையும் ஆண்களுக்கு மத்தியில் தன் வாழ்க்கையை தீர்க்கமாக ஆராய்ந்து தெளிவாக முடிவெடுக்கும் இவனைவிடவா இன்னொருவன் பொருந்திவிடுவான்… ஆனால் அப்பொழுதும் அகலாத வெட்க்கத்துடன் ஆமாம் என்பதாக தலையைமட்டும் அசைத்தாள்.

அவன் சிரித்துக்கொண்டு திரும்பி செல்ல ஆரம்பித்தான். அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஏதோ மறந்தவனாக அவன் திரும்பி அவளைப் பார்த்தான். அவளும் என்ன என்பதுபோல கேள்வியாய் அவனைப் பார்த்தாள்.

‘உங்க கண்ணு ரொம்ப அழகாயிருக்கு'

Friday, December 19, 2014

பருக்கை

வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்..
எனது நீண்டநாள் முயற்சிக்குப்பின் நான் வெளியிட்டிருக்கும் எனது குறும்படம் பருக்கை. இதில் என்னுடன் உழைத்த அனைவரையுமே வாழ்நாள் முழுதும் நினைத்துப்பார்க்க கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தயவுசெய்து இந்த குறும்படத்தை கண்ணுற்று உங்கள் கருத்துக்களை பகிரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். என் முதல் முயற்சியில் இருக்கும் குறைகளை ஒப்புக்கொள்கிறேன். இதோ உங்கள் பார்வைக்கு



Tuesday, February 18, 2014

சமைக்கலாம் வாங்க!


ஆரம்பிச்சிட்டா.. இனி கதறக் கதற இத பாத்து தொலைக்கணுமே! இந்த நேரத்திற்கு வேற சேனல்ல செய்தியாவது பாக்கலாமே. என்னதான் ஒரு அப்பாவி கணவனின் குமுறல் அடி வயித்துல நெருப்பைமூட்டினாலும் மனைவியின் முறைப்புக்கு முறுவலோடு பம்முவதே காலங்காலமாக பழகிப்போன ஒன்று. இப்படி சமையல் புரோகிராம் பார்க்குறதுகூட சகிச்சிக்கலாம். ஆனா அதேமாதிரி செய்யுறேன் பேர்வழின்னு தினமும் ஏதாவது செஞ்சுகொடுத்து ரத்தக்கண்ணீர் வர வைப்பாளே. எப்படி இதுல இருந்த தப்பிக்குறதுன்னு யோசிக்குறது முன்னால 'நேயர்களே! இது உங்கள் அபிமான சமைக்கலாம் வாங்க நிகழ்ச்சி.. எல்லா வாரமும் போல இந்த வாரமும் அப்படி என்ன புதுவிதமான உணவோட நம்ம செப் வந்திருக்காருன்னு நீங்க காத்திட்டு இருக்குறது எனக்கு நல்லாவே புரியுது. அதுனால தாமதிக்காம நிகழ்ச்சிக்கு போவோம்' னு அடிக்குரல்ல இருந்து ஒரு தொகுப்பாளினி கத்திட்டு இருந்தா. இவ வேற நம்ம அவஸ்தை புரியாம பில்டப் பண்றாளே.. ஆனா பாக்குறதுக்கு நல்லாதான் இருக்கா!

இப்பகூட கடைசி முயற்சி பண்ணிபாக்கலாம். தப்பிக்குறதுக்கு வாய்ப்பிருந்தா நல்லதுதானேனு மனசு நப்பாசையால அரிச்சதால சின்ன கனகனப்புடன் வாயைத் திறந்தார். 'எனக்கு நீ ஆசையா செஞ்சுதாற சாம்பார், ரசமே வயிறு ரொம்பிடும்.. ஏன்ம்மா இப்பிடி கண்டதையும் சமைச்சு கஸ்டபடுற? நான் இதெல்லாம் கேட்கலயே'... 'அட! உங்களுக்கு என்ன தெரியும்? சாம்பார், ரசம் காலம் எல்லாம் மலையேறிப்போச்சு.. இப்பிடி புதுசு புதுசா செஞ்சி சாப்பிட்றதுதான் ஃபேஷன். அப்பதானே ஆபிஸ்ல எல்லாரும் நீங்க தினமும் புதுசு புதுசா சாப்பாடு கொண்டுவாறீங்கனு சொல்லுவாங்க. அதவிடுங்க பாக்கத்துவீட்டு ஜமுனாவ பாருங்க. இந்த புரோகிராம் பாத்துதான் தினமும் அவ புருஷனுக்கு புதுசா சமைச்சி கொடுக்குறா அதுனால அவ புருஷன் ஆபிஸ்ல அவ சமையலுக்கு எவ்ளோ பாராட்டு தெரியுமா? எனக்கு அப்பிடி பேர் வாங்கி கொடுக்க உங்களுக்கு மனசு வராதே? சும்மா உக்காந்து டி.விய பாருங்க'

அப்ப எல்லாத்துக்கும் அவதான் காரணமா? என்னை இப்பிடி அழ வைக்குறதுக்கே பக்கத்துவீட்டுல வந்து குடியேறியிருக்காளேன்னு புலம்புறதுக்குள்ள சமையல்கார புண்ணியவான் வந்து நிகழ்ச்சியைத் தொடங்கினார். 'இந்த மாதிரியான புதுமையான உணவு எங்கயுமே நீங்க பார்த்திருக்கமாட்டீங்க.. இத சாப்பிட்ட எல்லாருமே ஆஹா ஓஹோனுதான் சொல்லிருக்காங்க.. நானே புகழக்கூடாது.. நான் சொல்லிக்கொடுத்ததும் நீங்களே செஞ்சுப் பாத்து செல்லுவீங்க' னு அந்த நளபாக செப் தொடங்க அந்த அழகான தொகுப்பாளினியும் கூடவே ஆமா சாமி போட்டுட்டு இருந்தா.. நமக்குதான் வயித்துல புளிய கரைச்சிகிட்டு இருந்திச்சு.

முத வேலையா அந்த ஆளு பீன்ஸ், காளான், முட்டைகோஸ், கரட்டு, காலிபிளவர் னு எல்லாத்தையும் சின்ன சின்னதா வெட்டிவச்சு அடுப்ப போட்டு ஒரு சட்டியை வச்சு தண்ணியை ஊத்தி எல்லா காய்கறியையும் ஒண்ணா போட்டான். இது என்னடா காம்பினேஷன்னு குமட்டிட்டு வந்திச்சு. காய்கறி எல்லாம் அவியுற வரைக்கும் வைச்சு கிளறிகிட்டே இருந்தான். நடுநடுவே மானே தேனே பொன்மானே மாதிரி இதுல எல்லா சத்தும் இருக்கு. இத சாப்பிட்டா உடம்பு ஆரோக்கியமா இருக்கும்னு பிட்டு போட்டான். பக்கத்துல இருந்த அந்த தொகுப்பாளினிவேற ஆஹா வாசனையே சூப்பரா இருக்கு. இப்பவே சாப்பிடணும்போல இருக்குனு அதுபாட்டுக்கு ஒரு பிட்டு. அதுசரி அதுக்குதானே அவளுக்கு சம்பளம் கொடுக்குறாங்க. பதினஞ்சு நிமிஷம் ஆச்சு. இன்னம் அவன் அந்த தண்ணியில காய்கறியை கிளறிக்கிட்டுதான் இருந்தான். நான் பாவமா சம்சாரத்த பாத்தேன். அவளும் ஏதோ குழப்பமா என்னை பாத்தா.

இத்தனை நேர அவியலுக்கு பிறகு 'இப்ப அடுத்தது என்ன சார் செய்யபோறோம்'னு அந்த தொகுப்பாளினி கேட்டா. 'காய்கறி எல்லாம் நல்லா அவஞ்சிடுச்சு. இதுல இப்ப இந்த தேங்காப்பால விடணும்'னு ஒரு சட்டி பால ஊத்தினான். 'அட தண்ணி வத்தாம பால விட்றானே'னு எனக்கு பக்கத்துல இருந்து ஒரு சத்தம் வந்திச்சு. நான் அத கேட்கவே இல்ல. ஏன்னா எனக்கு தெரிஞ்சுபோச்சே கடைசியில எனக்குதான் பால்னு. தேங்காப்பால் ஊத்தி அத ஒரு பத்து நிமிஷம் அவிய வச்சு சுவையான கேரளா சூப் தயார்னு சொல்லி  அடுப்பை அணைச்சான். அட அவ்ளோதானா? இவ்ளோ நேரம் சூப்பா செஞ்சிட்டிருந்தான்? கோபமா அப்பிடியே பொண்டாட்டி பாக்கம் திரும்பினேன். அவ என்னை பாக்கவேயில்லையே. 'இந்தாங்க டேஸ்ட் பாருங்க'னு அந்த தொகுப்பாளினிக்கு கொஞ்சம் கொடுக்க அவள் ஆவலா வாங்கி சாப்பிட்டு அப்பிடியே விறைச்சுபோய் நின்னுட்டா. அட பாவமே அந்த பொண்ணு அழுதிடிச்சு. ஆனா அதையும் தாண்டி 'இப்பிடி ஒரு சுவையான உணவு நான் சாப்பிட்டதேயில்ல'னு சொல்லிச்சே பாக்கலாம். எனக்கு சிரிப்பு தாங்க முடியல. என் பொண்டாட்டிக்கு பேச்சே வரல. இனிமே டி.வியே பாக்கமாட்டானு நினைக்குறேன். தலைய தொங்கபோட்டுகிட்டு உள்ள போய்ட்டா. கெட்டதுலயும் ஒரு நல்லாது நடந்திச்சின்னு குதூகலமா தூங்கப்போனேன். இதுல குறிப்பிட்டு சொல்லவேண்டியது என்னன்னா அந்த மொத்த சமையல்லயும் அவன் ஒரு சொட்டு உப்புகூட போடல.


Sunday, November 10, 2013

மஞ்சள் குங்குமம்...

அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாதாமாதம் இடம்பெறும் சுமங்கலி பூஜை மிகவும் பிரசித்தம். நூற்றுக்கணக்கான சுமங்கலிகள் வரிசையாக அமர்ந்து விளக்கு ஏற்றி குங்குமத்தால் அர்ச்சனை செய்வார்கள். அந்த விளக்குபூஜை செய்து அம்மனை வழிபட்டால் அவர்களது மஞ்சள் குங்குமம் நிறைந்து சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அதேபோல அங்கே வரும் பெண்களின் வாழ்க்கையிலும் மங்களம் நிறைந்து முகம் மகிழ்ச்சியாகவே காணப்பட்டனர். மாதாமாதம் வரும் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் இந்த விளக்குபூஜை இந்த மாதம் கனகாவிற்கு மிக முக்கியமானதொன்று. மிகவும் பிரசித்தி பெற்ற அந்த கோயிலில் குருக்களாக பணியாற்றும் சுந்தரேஸ்வரனை திருமணம் செய்து அவள் பங்குபெறும் முதலாவது சுமங்கலி பூஜை என்பதால் மகிழ்ச்சியில் பூத்துகுலுங்கினாள் அவள். குருக்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை குருக்களின் மனைவியான தனக்கும் கிடைக்கும் என்ற பூரிப்பிலும் புதிதாக வந்திருக்கும் குருக்களின் மனைவி இவர்தான் என்று அனைவரும் தன்னைப்பற்றியே பேசப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பிலும் பூஜை எப்போதும் தொடங்கும் என காத்துக்கொண்டிருந்தாள். அவள் காத்துக்கொண்டிருந்த தருணமும் வந்தது.

பட்டுசேலையுடனும் தலைநிறைய பூ வைத்து மஞ்சள் குங்குமம் சூடிக்கொண்டு சிரித்தமுகத்துடன் பல சுமங்கலிப்பெண்கள் கோயிலுக்குள் நுழைந்து அம்மன் சந்நிதானத்திற்கு முன்பாக வரிசையாக அமர ஆரம்பித்தனர். ஒவ்வொருவருக்கும் முன்பாக ஒரு குத்துவிளக்கும் சிறுகிண்ணத்தில் குங்குமமும் வைக்கப்பட்டது. பூஜை தொடங்கும் நேரம் வந்தது. அனைவரும் அம்மனை வணங்கிக்கொண்டு விளக்கை ஏற்றினர். சுந்தரேஸ்வரக்குருக்கள் ஒரு தியானத்தை ஓதிவிட்டு லலிதா சகஸ்ரநாம புத்தகத்தை ஒரு கையில் வைத்துக்கொண்டு மறு கையால் மைக்கை பிடித்துக்கொண்டு 'ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ' என மந்திரத்தை ஆரம்பித்தார். ஒவ்வொரு நாம உச்சாடணத்திலும் பெண்கள் தமக்கு முன்னேயிருந்த கிண்ணத்திலிருந்து இரண்டுவிரல்களால் குங்குமத்தை கிள்ளி விளக்கிற்கு முன்னேயிருந்த வெற்றிலையில் போட்டு அர்ச்சனை செய்தார்கள். 1008 நாமங்களும் நிறைவு பெற்றபின் விளக்கிற்கு தூபதீபம் காட்டினர். அம்மனுக்கு பூஜை நடந்தது. பூஜை முடியும் தருவாயில் வந்திருந்த சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் சிவப்புதுணி கொடுக்க ஆயத்தம் செய்தார்கள்.

மற்றவர்களிடம் மதிப்புகொண்ட ஒரு சுமங்கலிதான் பிரதானமாக இருந்து அனைவரின் தாலிக்கும் குங்குமம் வைத்து மஞ்சள் குங்குமம் கொடுக்கவேண்டும். நான்தானே இந்த கோயில் குருக்களின் மனைவி. நானே அனைவருக்கும் மஞ்சள் குங்குமம் கொடுத்தால் என்ன? அப்போதுதானே மதிப்பாக இருக்கும் என எண்ணினாள் கனகா.

ஒவ்வொரு தட்டுகளிலும் இடம்பெறவேண்டிய துணி, மஞ்சள், குங்குமம், மஞ்சள்கயிறு, வெற்றிலை, பழம் ஆகியவற்றை அடுக்கிக்கொண்டிருந்தார் சுந்தரேஸ்வரக்குருக்கள். அவரிடம் அருகில் சென்று 'இந்த மஞ்சள் குங்குமம் எல்லாம் நானே எல்லாருக்கும் குடுக்கட்டா?' என்றாள். அவருக்கு தூக்கிவாரிப்போட்டது. கோயில்தொண்டே பணியென்று வாழ்ந்துவரும் சிவநாதருடைய மனைவி பார்வதியம்மாளே ஒவ்வொருமுறையும் மஞ்சள் குங்குமம் கொடுப்பார். அவருடைய கையிலே வாங்கினால்தான் மங்களம் நிலைக்கும் என்பது பக்தபெண்பணிகளின் நம்பிக்கை. அந்த பழக்கத்தை மாற்றுவது எப்படி? ஆனால் கேட்பது யார்? புதுப்பெண்டாட்டி... சிறுவயதில் இருந்து செல்லமாக வளர்க்கப்பட்ட அவள் முன்கோபக்காரியாகவும் பிடிவாதக்காரியாகவுமே இருக்கிறாள். தனக்கு மரியாதை கிடைக்காவிட்டால் சட்டென்று உணர்ச்சிவசப்படகூடியவள். சூழ்நிலை புரியாமல் எல்லார்முன்னும் எடுத்தெறிந்த நடந்துவிடுவாளே.. என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினார் குருக்கள். தன் கையால் மஞ்சள் குங்குமம் வாங்கி அனைவரும் தன்னையும் புகழவேண்டுமென்ற கணிப்போடு காத்திருந்தாள் கனகா.

மனைவி சொல்லே மந்திரமாக பாவித்து சுந்தரேஸ்வரரும் பெரியகுருக்களிடம் அனுமதி கேட்கபோனார். ஆனால் தர்மகர்த்தாவின் மனைவி வந்திருப்பதாகவும் அவருக்கு பார்வதியம்மாள் கையால் குங்குமம் வாங்கினால்தான் திருப்தியாக இருக்கும் என்றும் கூறி மறுத்துவிட்டார். சுந்தரேஸ்வரரும் அதோடு மறந்துவிட்டார். ஆனால் தன் கையால் மஞ்சள் குங்குமம் கொடுக்கப்போகிளோம் என ஆசைப்பட்டுக்கொண்டிருந்த கனகா ஒவ்வொரு நொடிப்பொழுதும்தாவலாக இருந்தாள். மஞ்சள் குங்குமம் கொடுக்கவேண்டிய நேரம் வந்தது. அனைவரும் தன்னை மரியாதையாக அழைத்து தன்கையால் கொடுக்கவைக்கபோகிறார்கள் என கனகா ஆசையோடு பார்த்துக்கொண்டிருக்கையில் கோயில் பணியாள் தட்டுகளை பார்வதியம்மாளிடம் கொடுக்க அவர் ஒவ்வொன்றாக ஒவ்வொரு பெண்ணிடமும் கொடுக்க ஆரம்பித்தார். கனகாவிற்கு அவமானமாயிற்று. கோயில் குருக்களின் மனைவி தான் இருக்கும்போது யாரோ ஒரு கிழவியிடம் கொடுத்து மஞ்சள் குங்குமம் கொடுப்பது தனக்கு பெரிய தலைகுனிவாக எண்ணினாள். குருக்களின் மனைவி, புதிதாக திருமணமாகி வந்திருக்கிறாள் என்று தன்னைப்பற்றி அனைவரும் பேசுவார்கள் என எதிர்பார்த்ததும் ஏமாற்றமாய்ப்போனது. அனைவரும் பார்வதியம்மாளின் கைராசியையே புகழ்ந்துகொண்டிருந்தார்கள். எல்லா சம்பவங்களுக்கும் முடிச்சுப்போட்டு தனக்கு இந்த இடத்தில் மரியாதை இல்லை என முடிவுகட்டி தனியாக ஒரு மூலைக்கு சென்று அழ ஆரம்பித்தாள். அழும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்த அனைவரும் 'என்னடா இந்தப்பெண்? நல்ல விசயம் நடக்கிற இந்த இடத்தில இப்பிடி வந்து அழுதுக்கொண்டிருக்கிறாளே' என முகம் சுழித்தனர். சுந்தரேஸ்வரக்குருக்களுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவள் அருகில் மெதுவாக சென்று 'இதுக்குப்போய் இப்பிடியா அழுவ? மானம் போகுது.. வீட்ட போடி' என அதட்டினார். அவரை முறைப்போடு பார்த்து அழுத கனகா 'உம் பொண்டாட்டிக்கு மரியாதை இல்லாம காரியம் நடக்குது. அத கேக்காம என்ன வந்து அதட்டுரீர்?' என ஆவேசமாகி தலையில் இருந்த பூவை இழுத்து கையில் போட்டிருந்த காப்புகளை உடைத்து நகைகளை அறுத்து வீசி புயலடித்ததுபோல சீறினாள். அங்கிருந்த பெண்கள் அனைவரும் உறைந்துபோனார்கள். கோயில் பிரமுகர்களுக்கு முகத்தில் அறைந்தது போல இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் சுந்தரேஸ்வரர் கனகாவை இழுத்துக்கொண்டு போய்விட்டார். அனைவரும் சங்கடத்துடனே வீடு போனார்கள்.

அடுத்தநாள் தர்மகர்த்தாவிடம் மன்னிப்பு கேட்க வந்தார் சுந்தரேஸ்வரர். அவருடைய முகத்தை எப்படி எதிரகொள்வதென தெரியாமல் குழம்பிநின்றார். ஆனால் தர்மகர்த்தவோ குருக்களை தவறாக எண்ணாமல் 'சிறிய பெண். ஏதோ ஆசைப்பட்டுவிட்டாள். நடக்காத கோபத்தில் இப்படி நடந்துவிட்டாள். பரவாயில்லை. அடுத்தமுறை அவளைக்கொண்டே மஞ்சள் குங்குமம் கொடுக்கவைப்போம். கவலைப்படாதீர்கள்' என்றார். சந்தோசமாக வீட்டுக்கு சென்ற குருக்கள் இந்த விசயத்தை கனகாவிடம் பகிர்ந்தார். அவளுக்கு இருப்புகொள்ளவில்லை. முக்கியமாக தான் அவ்வாறு சீற்றத்தோடு நடந்ததால்தான் தனக்கு மரியாதை தேடிவந்தது. இந்த மாதிரி ஆட்களை இப்பிடித்தான் பண்ணவேண்டும் என உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள். தன்னை பார்த்து முகம் சுழித்தவர்களுக்கு அடுத்தமுறை நல்ல பாடம் புகட்டுகிறேன் என இறுமாப்போடு இருந்தாள். அடுத்த பௌர்ணமியும் வந்தது.

வழக்கம்போல எல்லாபூஜையும் முடிந்தபிறகு மஞ்சள் குங்கும தட்டுகளை கனகாவிடம் கொடுத்து கொடுக்க செய்யுமாறு தர்மகர்த்தா சொன்னார். கனகாவும் பெருமையுடன் ஒரு தட்டை எடுத்து முதலாவதாக இருந்த பெண்ணிடம் கொடுக்க சென்றாள். அந்தப்பெண்ணோ அதை வாங்காமல் விலகி சென்றுவிட்டார். எல்லோருக்கும் அதிர்ச்சி. இப்படி சாமி பிரசாதத்தை அலட்சியப்படுத்துகிறாரே என்று. அடுத்த பெண்ணிடம் கொடுக்க சென்றபோதும் அவரும் வாங்கவில்லை. எந்த பெண்ணுமே கனகாவின் கையால் மஞ்சள் குங்குமம் வாங்க முன்வரவில்லை. கனகாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்ன நிலைமை என்பதை புரிந்துகொள்ளமுடியாமல் 'என்னவாயிற்று.. ஏன் பிரசாதம் வாங்கவில்லை' என அந்த பெண்களிடம் விசாரித்தார் தர்மகர்த்தா. அந்த பெண்களில் ஒருவர் முன்னுக்கு வந்து 'எங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவேண்டுமென்றுதான் நாங்களே இந்த பூஜைக்கு வருகிறோம். ஆனால் கணவன் உயிரோடு இருக்கும்போதே பூவை அறுத்து பொட்டை அழித்து காப்புகளை உடைத்து அமங்களமாக நடந்துகொண்ட இந்த பெண்ணிடமிருந்து மஞ்சள் குங்குமம் வாங்கினால் அதற்கு என்னதான் பலன் இருக்கும்?' என்றார். கனகாவிற்கு மனது உறைத்தது. நிலைமையை சமாளிக்க தர்மகர்த்தா பார்வதியம்மாளை அழைத்து மஞ்சள் குங்குமத்தை கொடுக்கவைத்தார். இடம் பொருள் தெரியாமல் ஆணவமாக நடந்துகொண்டதற்கு ஆயுளுக்கும் மறக்கமுடியாத தண்டனை கிடைத்ததை எண்ணி அழ ஆரம்பித்தாள் கனகா. இம்முறை சமாதானம் பண்ண சுந்தரேஸ்வரர் வரவில்லை.